Published:Updated:

பெண்கள் வணங்கவேண்டிய ஏழு அற்புத ஆலயங்கள்!

பெண்கள் வணங்கவேண்டிய ஏழு அற்புத ஆலயங்கள்!

பெண்கள் வணங்கவேண்டிய ஏழு அற்புத ஆலயங்கள்!
பெண்கள் வணங்கவேண்டிய ஏழு அற்புத ஆலயங்கள்!
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பெ
ண்கள் இல்லாத உலகமும் இல்லை; அவர்களுக்குப் பிரச்னைகள் இல்லாத தேசமும் கிடையாது. ஒரு பெண்ணானவள் பிறந்தது முதல் ஆயுள் பரியந்தம் வரை, பல பருவங்களைக் கடக்கிறாள். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய ஏழு பருவங்களைக் கடந்து, எடுத்த இந்த வாழ்க்கையை நிறைவு செய்வதற்குள், அவளுக்குத்தான் எத்தனை எத்தனைப் பிரச்னைகள்? எவ்வளவு துயரங்கள்? இவை அனைத்தையும் போக்குகிற ஏழு தலங்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ளன என்பது தெரியுமா உங்களுக்கு?

சிவ தரிசனத்துக்கு ஏங்காதவர்கள் இருக்கிறார்களா, என்ன? ஆனானப்பட்ட பார்வதிதேவியே கணவரின் தரிசனத்துக்காக ஏங்கினாள், தவித்தாள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?

கணவனின் சொல்லை மனைவி கேட்க வேண்டும்; அவளின் அறிவுரையை கணவன் ஏற்கவேண்டும். அப்படி வாழ்தலே இனிய இல்லறத்துக்கான வழி என்பதை சிவ-பார்வதி நமக்கு உணர்த்தியுள்ளனர். தட்சனின் யாகத்துக்குச் செல்லவேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் உமையவள் சென்றாள், அவமானத்தைச் சந்தித்தாள். ஆவேசத்துடன் ஹோமாக்னியில் விழுந்தாள் என்பதை அறிவோம்தானே?! அப்போது அவளின் அவயவங்கள் விழுந்த இடம், சக்தி பீடங்களாக போற்றப்படுகின்றன. பிறகு மனைவியை மன்னித்து, விஸ்வரூப தரிசனத்தைக் காட்டியருளினார் சிவனார். அதிர்ந்து போனாள் தேவி. அந்தத் தரிசனத்தில், ஏழு வித பரிபூரண சிவச் சின்னங்கள் கிடைக்கப்பெறாமல் அழுதேவிட்டாள்.

பெண்கள் வணங்கவேண்டிய ஏழு அற்புத ஆலயங்கள்!

அந்த ஏழு சிவச் சின்னங்கள் என்ன தெரியுமா? சிவனாரின் சிரசில் உள்ள கங்காதேவி, மூன்றாம்பிறை, நெற்றிக்கண், கழுத்தைச் சுற்றியிருக்கிற நாகம், உடுக்கை, திரிசூலம், திருப்பாதங்களில் உள்ள திருக்கழல் என சிவனாருக்கே உண்டான ஏழு சின்னங்களை அவளால் தரிசிக்க முடியவில்லை. அந்த ஏக்கமே துக்கமாகிப் போனது அவளுக்கு!

சக்தியின் சோகத்தை அறிந்த சப்த மாதர்கள் திருக்கயிலாயத்தின் ஆதிமூல துவார பாலகி தேவியருடன் உமையவளைத் தரிசித்து, பூவுலகில் பெண்களுக்கு அருளக்கூடிய ஏழு திருத்தலங்களை எடுத்துரைத்தனர். 'இந்தத் தலங்களில் வழிபட்டதால்தான் சிவனருள் கிடைத்தது எங்களுக்கு’ என்று பெருமையுடன் தெரிவித்தனர்.

கணவரை முழுமையாக அறிந்து உணர்ந்தால்தானே அவருக்கு இணையாகவும் துணையாகவும் கருத்தொருமித்து வாழமுடியும்? கணவரின் சோதனையும் திருவிளையாடலும் இந்த உலகுக்கு ஏதோவொன்றை உணர்த்துவதற்காகத்தான் என்பதைப் புரிந்துகொண்ட பார்வதிதேவி, பூவுலகத்துக்கு வந்தாள்.

பெண்கள் வணங்கவேண்டிய ஏழு அற்புத ஆலயங்கள்!

சப்த மங்கைகள் ஏழு பேரும் வழிபட்ட தலங்களுக்குச் சென்று, சிவனாரை நினைத்து மனமுருகித் தவமிருந்தாள். அங்கே, ஒவ்வொரு தலத்துக்கும் சென்று சிவபெருமானை வழிபட வழிபட... பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என ஏழு நிலைகளில் தன்னைத் தானே கண்டு உணர்ந்து சிலிர்த்துப் போனாள் தேவி. நிறைவில், ஏழு சிவச்சின்னங்களுடன் அவளுக்குத் திருக்காட்சி தந்தருளினார் சிவபெருமான். நெக்குருகி நின்ற தேவி, 'இதென்ன சோதனை! இத்தனை காலமாக எதற்காக இப்படியரு அலைக்கழிப்பு?’ என வேதனையுடன் கேட்டாள்.

உடனே சிவனார், 'பூலோகத்தில் உள்ள பெண்கள், இந்தத் தலங்களுக்கு வந்தால், அவர்களுக்கு ஏழு பருவங்களில் உள்ள சகல பிரச்னைகளையும் தீர்த்தருள்வாய்’ என அருளினார். அதன்படி, சிவனாருடன் இந்தத் தலங்களில் இருந்தபடி, தன்னை நாடி வரும் பெண்களுக்கு, சகல தோஷங்களையும் பாபங்களையும், பிரச்னைகளையும் சிக்கல்களையும் தீர்த்தருள்கிறாள் உமையவள்.

அநவித்யநாத சர்மா என்பவர், சிவனாரின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். சதாசர்வ காலமும் சிவநாமத்தையே சொல்லிக்கொண்டிருப்பார். 'என்னை ஆட்கொள்ள மாட் டாயா என் சிவனே! எங்களுக்கு முக்தி தந்து அருள மாட்டாயா, இறைவா?’ என்று மனைவியுடன் காசியம்பதி யில் வணங்கி வழிபட்டார். பிறகு, ஒவ்வொரு தலமாக வழிபட்டு, நிறைவாக ராமேஸ்வரம் தலத்துக்குச் சென்று வழிபடவேண்டும் என்று திட்டம். அப்படி வழிநெடுக சிவத் தலங்களுக்குச் சென்றவர், சோழ தேசத்துக்கு வந்தார்.

கணவரின் முகத்தில் சந்தோஷத்தைக் காணாமல் தவித்துப் போனாள் அவரின் மனைவி. 'தேவி! என் கணவரின் சந்தோஷம்தான் எனக்குச் சந்தோஷம். அவரின் சிறு துயரம்கூட, எனக்குப் பெரிய துக்கமாக ஆகிவிடும். என் கணவருக்கு அருள் செய்யம்மா! எங்களை உன் திருவடியில் சேர்த்துக்கொள்!’ என்று கண்ணீர் விட்டு, மனமுருகிப் பிரார்த்தித்தாள்.

பெண்கள் வணங்கவேண்டிய ஏழு அற்புத ஆலயங்கள்!

அன்றிரவு, அவளின் கனவில் தோன்றிய ஸ்ரீகாசி விசாலாட்சி, தான் வழிபட்டு அருள்பெற்ற ஏழு தலங்களைச் சொல்லி, அங்கே சென்று வழிபடப் பணித்தாள். நெக்குருகிப் போனவள், அநவித்யநாத சர்மாவை எழுப்பி விவரம் சொல்ல... இருந்த இடத்தில் இருந்தபடி காசி தலம் இருக்கும் திசை பார்த்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார் அவர். மனைவியும் நமஸ்கரித்தாள்.

விடிந்தும் விடியாததுமான வேளையில், பார்ப்பவர்களிடம் எல்லாம் வழி கேட்டு, அந்த ஏழு தலங்களுக்கும் சென்றனர். அருகில் உள்ள தீர்த்தக் குளங்களில் நீராடி, சிவபூஜை செய்தனர். அவர்கள் இருவருக்கும், ஒவ்வொரு தலங்களிலும் பெண்ணின் ஒவ்வொரு பருவத்தின் உருவமாக வந்து, காட்சி தந்தாள் தேவி. இவை எதையும் அறியாமல், சிவ பூஜையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தவர்கள், தொடர்ந்து 48 நாட்கள் அங்கேயே தங்கி, நித்திய பூஜைகளைச் செய்து வந்தார்கள். நிறைவு நாளில், ஏழு பருவங்களின் உருவங்களுடன் ஏழு தேவியராக இருக்க.... அருகில் விஸ்வ ரூபமாக சிவபெருமான் திருக்காட்சி தந்தார் என்கிறது ஸ்தல புராணம்.  

சப்த மாதர்கள் வழிபட்டுப் பாபங்கள் நீங்கப் பெற்றனர். அவர்களின் வழிகாட்டுதலால், பார்வதிதேவி இங்கே தவம் செய்து, பேரருள் பெற்றாள். அத்துடன் அநவித்யநாத சர்மா தம்பதிக்கு திருக்காட்சி தந்து, அவர்களை ஆட்கொண்டார் சிவபெருமான்... என இன்னும் எத்தனையோ பெருமைகளைக் கொண்ட அந்த சப்தமங்கைத் தலங்கள், தஞ்சாவூர்-பாபநாசத்துக்கு அருகே இன்றைக்கும் உள்ளன.

சக்கரமங்கை, அரிமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை எனப் போற்றப்படுகிற அந்த ஏழு தலங்களைத் தரிசிப்போமா?

பெண்கள் வணங்கவேண்டிய ஏழு அற்புத ஆலயங்கள்!


சிவ நேத்ர தரிசனம்  (சக்கரப்பள்ளி)

ஞ்சை- கும்பகோணம் சாலையில், சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள அய்யம்பேட்டை என்னும் ஊருக்கு அருகில் உள்ளது சக்கரப்பள்ளி. புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு வரும் முதல் பிரதமை திதியில், பிராம்மியானவள் இங்கே வழிபட்டாள். பார்வதிதேவி சிவனாரின் நெற்றிக் கண்ணைத் தரிசித்து அருள்பெற்றாள். தவிர, மகாவிஷ்ணு தன் சக்கராயுதத்தைப் பெற்ற திருத்தலம் இது. மேலும், சக்கரவாகப் பறவை வடிவில், அம்பிகை வழிபட்டாள் என்றொரு தகவலும் சொல்கிறது ஸ்தல புராணம்.

ஸ்வாமி - ஸ்ரீசக்ரவாகேஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீதேவநாயகி. அற்புதமான ஆலயத்தில் அழகுறக் காட்சி தருகின்றனர் இறைவனும் இறைவியும்! பிரதமை திதி நாளில், இங்கே வந்து வணங்குவது சிறப்பு.

கங்கா தரிசனம்  (அரிமங்கை)

ய்யம்பேட்டை கோயிலடி பேருந்து நிலையத்தில் இருந்து, சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது அரிமங்கை. சப்த மங்கையரில் ஒருவரான மகேஸ்வரி, துவிதியை திதி நாளில் வழிபட்ட தலம். இங்கே, பார்வதிதேவி சுயம்பு மூர்த்தத்தை வழிபட... சிவ - கங்கை தரிசனம் கிடைக்கப் பெற்றாள். ஸ்வாமி - ஸ்ரீஹரிமுக்தீஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீஞானாம்பிகை.

திரிசூல தரிசனம்  (சூலமங்கலம்)

ய்யம்பேட்டையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது சூலமங்கலம். திருதியை நாளில், கௌமாரி வணங்கி அருள் பெற்ற திருத்தலம். சூலமங்கலம் சுயம்பு மூர்த்தத்தை வணங்கித் தொழுத வேளையில், பார்வதிதேவி சிவனாரின் திரிசூல தரிசனத்தைப் பெற்றாள்.

ஸ்வாமி - ஸ்ரீகீர்த்திவாகீஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீஅலங்காரவல்லி. இங்கே, அஸ்திர தேவர் சந்நிதி உள்ளது சிறப்பு. சகல தெய்வங்களுக்குமான அஸ்திரங்களை வார்த்துத் தரும் மூர்த்தி இவர். இவரை வணங்கினால், எதிரிகள் தவிடுபொடியாகிவிடுவார்கள்.

திருக்கழல் தரிசனம்  (நந்திமங்கை)

ய்யம்பேட்டையை அடுத்துள்ளது நல்லிசேரி. ஒரு காலத்தில் நந்திமங்கை என அழைக்கப்பட்ட திருத்தலம் இது. சப்த மாதாக்களில் ஒருவரான வைஷ்ணவிதேவி, சிவனாரைத் தொழுது அருள் பெற்ற திருவிடம். பார்வதிதேவி இங்கே தவம் செய்ய... தன் திருக்கழல் தரிசனத்தைக் காட்டியருளினார் சிவபெருமான்.

'சிவனாரின் திருக்கழல்தானே நம் மீது படுகிறது. அவரின்  திருப்பாதம் நம் மீது எப்போது படும்’ என நந்திதேவர் ஏங்கினாராம். பிறகு, இந்தத் தலத்தில் ஆயிரத்தெட்டு பிரதோஷ பூஜைகளை சிவனாருக்குச் செய்ய... மகிழ்ந்த சிவனார், தன் திருப்பாத ஸ்பரிசத்தை நந்தியம்பெருமானுக்குத் தந்தருளினார் என்கிறது ஸ்தல புராணம்.

ஸ்வாமி - ஸ்ரீஜம்புகேஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி.

பெண்கள் வணங்கவேண்டிய ஏழு அற்புத ஆலயங்கள்!


உடுக்கை தரிசனம்  (பசுமங்கை)

ஞ்சை - பாபநாசத்தை அடுத்துள்ளது பசுபதிகோவில். காமதேனு மற்றும் வராஹி தேவி வழிபட்ட இந்தத் தலத்தில், ஸ்ரீபார்வதிதேவி வழிபட்டு சிவனாரின் உடுக்கைத் தரிசனம் கிடைக்கப் பெற்றாள். பசுமங்கை எனும் தலம், பிறகு பசுபதிகோவில் என மாறியதாம்!

ஸ்வாமி  - ஸ்ரீபசுபதீஸ்வரர். அம்பாள் - ஸ்ரீபால்வள நாயகி. இந்தத் தலத்துக்கு வந்து வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெறலாம். தீய சக்தி அண்டாமல் நம்மைக் காத்தருள்வார் இறைவன் என்பது ஐதீகம்!

பிறை தரிசனம்  (தாழமங்கை)

பசுபதிகோவிலுக்கு அருகில் சுமார் 1 கி.மீ. தொலைவில், மெயின் சாலைக்கு அருகிலேயே அமைந்துள்ளது தாழமங்கை திருத்தலம். இந்திராணி எனப்படும் மாகேந்திரி, வழிபட்டுப் பாபம் நீங்கிய தலம் இது. உமையவள் கடும் தவம் புரிந்து, மூன்றாம்பிறையுடன் சிவனாரைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றாள். ஸ்வாமி - ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீராஜராஜேஸ்வரி.

ஸ்ரீராஜராஜேஸ்வரி எனும் திருநாமத்துடன் அம்பிகை அருள்பாலிக்கும் தலங்கள் மிகக் குறைவு. மூன்றாம்பிறை நாளில் இங்கு வந்து வழிபட்டால், குடும்பத்தில் சாந்தம் குடிகொள்ளும். கணவனும் மனைவியும் கருத்தொருமித்து வாழ்வர்.

நாக தரிசனம்  (திருப்புள்ளமங்கை)

தஞ்சை- பசுபதிகோவிலுக்கு அருகில், சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்புள்ளமங்கை. சாமுண்டிதேவி, அஷ்டநாக மூர்த்திகளுடன் இங்கே சிவலிங்கத் திருமேனிக்கு முப்பது கோடி நாகலிங்கப் புஷ்பங்கள் சார்த்தி வணங்கி, அருள் பெற்ற திருவிடம் இது. ஸ்ரீபார்வதிதேவி கடும் தவம் செய்ததன் பலனாக, சிவபெருமானை கழுத்தில் நாகாபரணத்துடன் தரிசித்துப் பூரித்தாள்.

ஸ்வாமி - ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீஅல்லியங்கோதை என்கிற சௌந்தரநாயகி. இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், நாக தோஷம் நீங்கும், திருமண பாக்கியம் கைகூடும், சகல ஐஸ்வரியங்களுடன் சந்ததி சிறக்க வாழலாம் என்கின்றனர்.

பெண்கள் வணங்கவேண்டிய ஏழு அற்புத ஆலயங்கள்!

இந்த ஏழு தலங்களையும் ஒரே நாளில் தரிசிக்கலாம். காசியம்பதியில் இருந்து வந்த அநிவித்யநாத சர்மா மனைவியுடன் வழிபட்டார், அல்லவா? அப்போது 48-ஆம் நாள் பூஜையின்போது, இறைவனுக்கு திருப்பல்லக்கு தயார் செய்து, சக்கரப்பள்ளியில் இருந்து மற்ற தலங்களுக்கு தூக்கிச் சென்றாராம். பிறகு அந்தந்த ஊர்க்காரர்களின் உதவியால், அந்தத் தலத்து இறைவனும் இறைவியும் திருப்பல்லக்கில் பின்னே வர... ஏழு தலங்களின் மூர்த்தங்களும் ஏழு பல்லக்கில் பவனி வந்ததாம்!

பெண்கள் வணங்கவேண்டிய ஏழு அற்புத ஆலயங்கள்!

பிறகு, அடுத்தடுத்த காலங்களிலும் ஏழூர்த் திருவிழாவாக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தற்போது, பங்குனி மாத சித்திரை நட்சத்திர நாளில், விமரிசையாக நடந்தேறும் இந்த விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொள்வார்கள். தற்போது புள்ளமங்கை, பசுமங்கை, நல்லிசேரி ஆகிய தலங்களில் மட்டுமே பல்லக்கு இருக்கிறது என்கிறார்கள். மீதமுள்ள நான்கு தலங்களுக்கும் திருப்பல்லக்கு திருப்பணியை எவரேனும் செய்து கொடுத்தால், அந்தத் தலங்களின் மூர்த்தங்களும் ஜோராகப் பல்லக்கில் பவனி வரும் என ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர், ஊர்மக்கள்.

பூப்படையும் தருணத்தில் உள்ள சிறுமி, கல்லூரியில் படிக்கிற மாணவி, திருமணத்துக்கு காத்திருக்கிற இளம்பெண், குழந்தையை ஈன்றெடுத்து வளர்த்து வருபவர், தன் மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்து வைக்கிற வயதை அடைந்தவர், பேரன் பேத்திகளைப் பார்த்துக் கொஞ்சி மகிழ்கிறவர் என எந்த வயதினராக இருந்தாலும், பெண்கள் இங்கு வந்து ஏழு தலங்களையும் அங்கே குடிகொண்டிருக்கிற சிவ- பார்வதியையும் வணங்கித் தொழுதால், அவர்கள் ஒரு குறையுமின்றி, நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வார்கள் என்பது உறுதி.

ஒருவீட்டின் இதயமாகத் திகழ்பவர்கள் பெண்கள். அவர்கள் நன்றாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்கமுடியும். அவர்கள் மனநிறைவுடன் வாழ்ந்தால்தான், நம் அடுத்தடுத்த சந்ததியும் வாழையடி வாழையென வாழ்வாங்கு வாழும்!

இந்தப் பூமியில் பிறந்த பெண்கள் அனைவரும் வணங்கித் தொழவேண்டிய திருத்தலங்கள் இவை. வணங்குங்கள்; வளம்பெறுங்கள்!

படங்கள்: இ.ராஜவிபீஷிகா