ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

தந்தனத்தோம்.. தைபொங்கல்..!

தந்தனத்தோம்.. தைபொங்கல்..!

தந்தனத்தோம்.. தைபொங்கல்..!
தந்தனத்தோம்.. தைபொங்கல்..!
##~##
'த
மிழ் மாதங்களிலேயே ரொம்ப எளிமையான ஒற்றை எழுத்து கொண்ட மாதம், தை மாதம்தான்! தை முதல்நாள், வீடுகள் வெள்ளையடிச்சு சுத்தமா, பளிச்சுன்னு அழகா இருக்கும். அந்த அழகு, மனசுக்குள்ளேயும் பரவும். உச்சியிலேருந்து நம்மை காபந்து செய்ற சூரிய பகவான் முதல் நம்ம வீட்டுத் தொழுவத்துல இருக்கற பசுமாடு வரை எல்லாருக்கும் எல்லாத்துக்கும் நன்றி சொல்ற பெருவிழா இது!'' என, பொங்கல் திருநாள் பற்றிக் கேட்டதும் உற்சாகத்துடன் சொல்கிறார் சுப்பு ஆறுமுகம். கிராமிய இசையான வில்லுப் பாட்டுக்குச் சொந்தக்காரர். இன்னும் சொல்லப் போனால், அந்தக் கலையை அழியாமல் இன்றளவும் பாதுகாத்து வருபவர்.

சுமார் அறுபது வருடங்களாக,  கிராமம் மற்றும் நகரங்களுக்குச் சென்று, தன் வில்லிசை மூலமாகவும் கணீர்க் குரலின் வழியாகவும் நல்ல பல கருத்துக்களை எடுத்துரைக்கும் சுப்பு ஆறுமுகத்துக்கு வயது 84.

''போகி, காணும் பொங்கல்னு பண்டிகைகள் எல்லாமே, ஏதோ விவசாயிகள் மட்டுமே கொண்டாடற விசேஷங்கள்னு நிறையப் பேர் நினைச்சுக்கிட்டிருக்காங்க. இந்த உலகத்துல சாப்பிடாதவங்கன்னு யாராவது இருக்காங்களா என்ன? அப்ப, சாப்பிடறவங்க எல்லோருமே கடவுளுக்கும் விவசாயிகளுக்கும் நன்றி சொல்ற இனிமையான விழாதான் தை மாதப் பிறப்பு! அவ்வளவு ஏன்... எங்க வில்லுப் பாட்டுல கூட, பொங்கலையும் தை மாத சிறப்புகளையும் சொல்றதுக்கு, நிறைய பாடல்கள் இருக்கு.  

தந்தனத்தோம்.. தைபொங்கல்..!

'தந்தனத்தோம் என்று சொல்லியே...’னு பாட ஆரம்பிப்போம் நாங்க! இந்த தந்தனத்தோம்னா, தன்னைத் தந்தோம்னு அர்த்தம். அதாவது, தனக்காக மட்டும் இல்லாம மத்தவங்களுக்காக விவசாயம் செய்ற விவசாயியை இதுக்கு உதாரணமா சொல்லலாம். இன்னிவரைக்கும், வெள்ளந்தியான கிராமத்து மக்களோட ஈரமும் வீரமும்தான் எங்களை மாதிரியான கலைஞர்களை, இன்னும் உயிர்ப்போட வாழ வைச்சுக்கிட்டிருக்கு'' என்று சொல்லி நெகிழ்கிற சுப்பு ஆறுமுகத்துக்கு நெல்லைச் சீமைதான் பூர்வீகம்.

''திருநெல்வேலி பக்கத்துல சத்திரம் புதுக்குளம்தான் என் ஊர். வில்லிசைக்கு பிறப்பிடம்னே இந்த ஊரைச் சொல்லலாம். இந்த வில்லிசைதான் எனக்கு சோறு போட்டுச்சு; நாலு ஊருக்கும் பேருக்கும் தெரியற மாதிரி என்னை பிரபலப்படுத்துச்சு; குறிப்பா, காஞ்சி மகா பெரியவாகிட்ட நெருங்கிப் பேசற, பழகற பாக்கியம் கிடைச்சதே, இந்த வில்லிசையாலதானே?! அந்தக் கிராமங்களும் வில்லிசையும் இல்லாட்டி, இன்னிக்கி இந்த சுப்பு ஆறுமுகத்தை ஒருத்தருக்குக் கூட தெரிஞ்சிருக்காது' என்கிறார்.  

ராமாயணம், மகாபாரதம், தொல்காப்பியம், பகவத்கீதை என்பது மட்டுமின்றி, முதியோர் கல்வி, மரம் வளர்ப்பு, சிறுசேமிப்பு என அத்தியாவசியத் தேவை களையும் வில்லுப்பாட்டில் கொண்டு வந்து, கிராம மக்களுக்கு மிக எளிமையாகப் புரியச் செய்திருக்கிறார் சுப்பு ஆறுமுகம்.  

தந்தனத்தோம்.. தைபொங்கல்..!

''அடுத்தவங்ககிட்ட போய் தன் பிரச்னையைச் சொல்றதை கௌரவக் குறைச்சலா நினைக்கற கிராமத்து சனங்களுக்கு தெய்வம்தான் துணை. திக்கற்றவர்க்கு தெய்வமே துணைன்னு சும்மாவா சொன்னாங்க. அதிலேயும் குல தெய்வம்னா அது குடும்பத்துல ஒருத்தர் மாதிரியான நினைப்பு அவங்களுக்கு! எங்களோட குலதெய்வம் இசக்கியம்மன். வகைவகையான அலங்காரங்கள், படாடோப நைவேத்தியங்கள் எல்லாம் அவளுக்குத் தேவையில்லை.  சின்னதா, கொஞ்ச நேரம் இந்த வில்லுப் பாட்டை வாசிச்சாப் போதும்...அப்படியே குளிர்ந்து, போயிருவா தாயி! இசைக்கு இசைபவள். அதுதான் இசக்கி அம்மன்னு மருவிருச்சு. திருநெல்வேலின்னா இசக்கியம்மன், பேராச்சியம்மன். மதுரைப் பக்கம் போனா எல்லையம்மன், காளியம்மன். திருச்சிக்கு வந்துட்டோம்னா மாரியம்மன்... இப்படி பேரும் ஊரும் மாறினாலும் சின்னதா இசை

அமைச்சு நாலு வரி பாடினாப் போதும்; ஒரு மண் சட்டியில பொங்கல் வைச்சு நேர்ந்துக்கிட்டா போதும்... நம்ம ஒட்டுமொத்த சந்ததியையே செழிக்கச் செஞ்சுருவா அம்மன்! இப்பவும் ஊர்லநாட்ல, முதல் விளைச்சல்ல ஒரு கைப்பிடி எடுத்து காவல்தெய்வத்துக்கோ குலதெய்வத்துக்கோ கொடுத்துட்டுக் கும்பிடுவாங்க. எத்தனையோ கோயில்கள்ல, கச்சேரி பண்ணியிருக்கேன். ஆனாலும் என் முதல் கச்சேரி, எங்க குலதெய்வமான இசக்கியம்மன் கோயில்லதான் நடந்துச்சுங்கறதுல அப்படி யரு பூரிப்பு, மனசுக்குள்ளே!''- என்று

நெக்குருகிச் சொல்கிறார் சுப்பு ஆறுமுகம்.   வில்லுப்பாட்டு போன்ற கிராமிய வாத்தியங்களை ரொம்பவே ரசித்துக் கேட்பாராம் காஞ்சி மகாபெரியவா. தனது கச்சேரிகள் பலவற்றை, முடியும் வரை இருந்து கேட்டு ரசித்துப் பாராட்டி ஆசி தந்திருக்கிறார் என்பதை பெருமிதம் பொங்கத் தெரிவிக்கிறார் இவர்.

சுப்பு ஆறுமுகம் ஈடுபட்ட வில்லிசையில், தற்போது அவரது மகன், மகள், மருமகன் மட்டுமல்லாது, பேரன் கலைமகனும் பங்கெடுக்கிறார். நாலாவது தலைமுறையாக தனது குடும்பம் வில்லுப்பாட்டில் ஈடுபடுவதில் சுப்பு ஆறுமுகத்துக்கு ரொம்பவே பெருமிதம்.  

''தைத் திருநாளின் முதல்நாள்... பொங்கல் பண்டிகை அன்னிக்கி, நிறைஞ்ச வயிறோட, நிறைஞ்ச மனசோட, எல்லாரும் எல்லார் கிட்டயும் 'உங்க வீட்ல பொங்கல் பொங்கியாச்சா?’னு கேக்கறோம். 'சாப்பிட்டாச்சா?’னு அக்கறையா விசாரிக்கிறோம். 'வாங்க, நம்ம வீட்ல சாப்பிடலாம்’னு அன்பாக் கூப்பிடறோம். இந்த அன்பும் அக்கறையும் நல விசாரிப்புகளும் தைத் திருநாள்னு இல்லாம, எல்லா நாளும் எல்லா மனிதர்கள்கிட்டயும் இருந்துட்டா... உலகத்துல ஒரு பிரச்னையும் இருக்காது'' என்கிறார் உறுதியுடன்!  

கிராமங்கள் இருக்கற வரைக்கும் வில்லிசையும் இருக்கும்; சுப்பு ஆறுமுகத்தின் புகழும் நிலைத்திருக்கும்!