மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பே தவம் - 13

அன்பே தவம் - 13
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம் - 13

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படம்: கே.ராஜசேகரன் - ஓவியம்: பாலகிருஷ்ணன்

அன்பே தவம் - 13

பாரதப் போர் முடிவுற்றது. குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் பூரண அமைதி! தர்மன் அரியணை ஏறிவிட்டான்; அறம், ஆட்சி பீடத்தில் அமர்ந்துவிட்டது. கண்ணன், பாண்டவர்களிடமிருந்து விடைபெறுகிற தருணம். அப்போது ஓர் உருவம் தயங்கித் தயங்கி கண்ணனை நோக்கி வந்தது. `யார் அது?’ கண்ணன் உற்றுப் பார்த்தான். அது, பாண்டவர்களின் தாய் குந்தி. வந்தவள், கண்ணனைப் பார்த்துக் கைகூப்பினாள்.
 
``அத்தை, என்னிடம் வர ஏன் இவ்வளவு தயக்கம்? எதையோ கேட்க வேண்டும் என்று நினைக்கிறாய், எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேள்.’’

அன்பே தவம் - 13

``எனக்கு ஒரு வரம் வேண்டும்.’’
 
``என்ன வரம்?’’
 
``கண்ணா… எனக்குக் கவலைகள் வேண்டும். கஷ்டங்கள் வேண்டும்…’’ சட்டென்று தயக்கத்தை உடைத்துக்கொண்டு வெளிவந்தன குந்தியின் வார்த்தைகள்.

பதறிப்போனான் கடவுள் கண்ணன். ``என்ன அத்தை இது! நீ படாத கஷ்டங்களா? உன் தலைமகன் கர்ணனைக்கூட அவன் இறந்த பிறகுதான் ஊரறிய மடியில் கிடத்தி, உன்னால் அழ முடிந்தது. உன் மற்ற பிள்ளைகளும் பல ஆண்டுகள் காட்டில்தான் வாழ்ந்தார்கள். பேரப் பிள்ளைகளைத் தொலைத்தாய். தீய பிள்ளைகளைப் பெற்றவர்கள் கஷ்டப்படுவார்கள். ஆனால், நல்ல பிள்ளைகளைப் பெற்றிருந்தும், வாழ்நாள் முழுவதும் நீ துன்பப்பட்டாய். வெயிலில் அலைந்து களைத்த உனக்கு இளைப்பாற இப்போதுதான் நிழல் கிடைத்திருக்கிறது. இப்போது ஏன் கஷ்டத்தை வேண்டுகிறாய்?’’

``எனக்குக் கவலைகள், துன்பங்கள், துயரங்கள் வந்த நேரத்திலெல்லாம்  `கண்ணா…’ என்று உன்னை அழைப்பேன்.  நீ உடனே ஓடி வருவாய். என் அருகிலிருப்பாய். என் இன்னல் தீரும். ஆக, கஷ்டங்கள் என்னோடிருந்தால் நீயும் என் அருகிலிருப்பாய். அதற்காகத்தான் அந்த வரம் கேட்கிறேன்’’ என்றாள் குந்தி.

கஷ்டங்கள், கவலைகள் எதற்கு? திருவள்ளுவர் சொல்கிறார்...

அன்பே தவம் - 13`தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.’

நம் கவலை விடைபெற வேண்டும்; நீங்க வேண்டும்; கண்ணீர் மாற வேண்டும். அதற்கு என்ன வழி? தனக்கு உவமை இல்லாத, பிறப்பு இறப்பு இல்லாத இறைவனின் திருவடிகளைப் பணிய வேண்டும். 

நம் உடல் எடை குறைவதற்கு மருத்துவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள்,  நடக்கச் சொல்கிறார்கள். ஆனால், நம் இதயத்தின் சுமையான கவலைகளைக் குறைக்க என்ன செய்வது? நம் மூளைப்புலமும் சிந்தனைப்புலமும் அறத்தின் பாதையில் நடந்தால், கவலைகள் நம்மை அணுகாது. 

நமக்கு நிறைய ஆசைகள். உதாரணத்துக்கு ஒன்று... கடைவீதி வழியே போகிறோம். ஒரு கடையில், நறுமணத்தோடு இனிப்பு மிகுந்த அல்வா காத்திருக்கிறது; நம் கண்ணைப் பறிக்கிறது; சுண்டியிழுக்கிறது; `வா… வா...’ என்றழைக்கிறது. நாம் கடைக்குள் நுழைகிறோம். அல்வாவை வாங்கிச் சாப்பிடுகிறோம். திரும்ப அடுத்த நாள் அந்த வழியே போகிறபோது, அதே அல்வா அழைக்கும். `பணம் இருக்கிறதா?’ என்று பையைத் தடவிப் பார்ப்போம். உள்ளே நுழைவோம். ஒரு கட்டத்தில் அது பழக்கமாகவே ஆகிவிடும். முதல் நாள் அல்வாவை நாம் சாப்பிட்டோம். பிறகு அல்வா நம்மைச் சாப்பிட ஆரம்பித்துவிடும். இப்படித்தான் ஆசை என்ற வலைக்குள் சிக்கிக்கொள்கிறபோது நாம் சிரமங்களைத்தான் சந்திக்கவேண்டியிருக்கும்.
 
தேவர்களும் அசுரர்களும் போட்டி போட்டுக்கொண்டு பாற்கடலைக் கடைந்தார்கள்.  எதற்காக? இறவாமையைத் தருகிற, முதுமையை ஒத்திப் போடுகிற மருந்தான அமுதம் தங்களுக்கே வேண்டும் என்பதற்காக. ஒருபுறம் தேவர்கள்; மறுபுறம் அசுரர்கள். பாற்கடலைக் கடைந்தபோது முதலில் அமுதம் கிடைக்கவில்லை. ஆலகால விடம்தான் கிடைத்தது. உலகத்தை, உயிர்க்குலத்தை அழிக்கிற அந்த நஞ்சு பெரிய பிரளயமாக, பொங்கிப் பெருகிப் பரவியது. அமுதத்தைப் பெறுவதற்கு ஆலாய்ப் பறந்தவர்கள், ஆலகால விடத்தைக் கண்டவுடன் காணாமல் போனார்கள்.  

அன்பே தவம் - 13

யார் இந்த விடத்திடமிருந்து உலகத்தையும் உயிர்க்குலத்தையும் காப்பது? எல்லோரும் திகைத்து நின்றார்கள். உலகத்தின் தலைவன், `தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன்’ என்பவனான இறைவன்தான் அந்த விடத்தை உண்டான். உலக உயிர்க்குலத்தைக் காப்பாற்றுவதற்காக நஞ்சை உண்டான். அந்த விடம், அவன் தொண்டையிலேயே தங்கிவிட்டது. அதனால்தான் அவனுக்கு `திருநீலகண்டன்’ என்று பெயர். கருத்திருக்கிற கண்டத்துக்கு உரியவன். அந்த வடிவம், தியாகத்தின் வடிவம். அது, தலைமைப் பண்புக்குரிய ஒட்டுமொத்த அடையாளம்.  

உலகத்தையே வெல்லப் புறப்பட்டான் அலெக்ஸாண்டர். பாலைவனப் பகுதியில் அவன் படை பயணம் செய்துகொண்டிருந்தது. கொளுத்தும் வெயில்; சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்று.  இந்தச் சூழலில் அலெக்ஸாண்டரின் நா வறண்டு போனது. தண்ணீருக்குத் தவித்தது அவன் நாக்கு. அவன் தாகத்தை உணர்ந்த வீரர்கள், பல மைல் தூரம் பயணம் செய்து, ஒரே ஒரு குவளைத் தண்ணீரைக் கொண்டு வந்தார்கள். அதை ஆவலோடு வாங்கிய அலெக்ஸாண்டர், கொஞ்சம் திரும்பிப் பார்த்தான். அவனைப்போலவே ஆயிரக்கணக்கான வீரர்கள் தாகத்தில் தவித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அவ்வளவுதான்... தன் கையிலிருந்த குவளையைப் பாலைவன மணலில் வீசி எறிந்தான்.

``வீரர்களே… புறப்படுங்கள்...’’ என்று ஆணையிட்டான். 
 
படை வீரர்கள் தண்ணீர் அருந்தியவர்கள்போல, தாகமெல்லாம் தீர்ந்ததுபோல உற்சாகமாகப் புறப்பட்டார்கள். தன் தொண்டர்களுக்குக் கிடைக்காத எதுவும் தனக்குக் கிடைத்தால், அது வேண்டாம் என்று நினைப்பதுதான் உண்மையான தலைமைப் பண்பு. தனக்கு, தனக்கு என வைத்துக்கொள்வதல்ல, மனிதர்களை அடிமைப்படுத்துவதல்ல, அதிகாரத்தை ஏவி ஏவல் செய்வதற்கான ஆட்களை வைத்துக்கொள்வதல்ல தலைமைப் பண்பு. அன்பால் மனிதகுலத்தோடு பின்னிப் பிணைந்து, தன் கீழே இருக்கிற தொண்டர்களையெல்லாம் அரவணைப்பதுதான் தலைமைப் பண்பு. அதுதான் இன்றைய சமூகத்துக்குத் தேவைப்படுகிறது. கருணையும் அன்பும் ஒன்றாகக் கலக்க வேண்டும்.

மெய்ப்பொருள் நாயனார் என்ற அடியவர். சிவனடியார் திருவேடத்தைக் கண்டாலே, நெருப்பிலிட்ட மெழுகைப்போல மனம் கரைந்து உருகுபவர். திருவெண்ணீறு தரித்த கோலத்தவரைக் கண்டால், `அவர்கள்தாம் சிவபெருமான்’ என்று விழுந்து விழுந்து வணங்குவார். அவர் வீரத்தில் வல்லவர்; நெஞ்சின் ஈரத்திலும் நல்லவர். 

முத்தநாதன் என்பவனால் மெய்ப்பொருள் நாயனாரைப் போரில் வெல்ல முடியவில்லை.   `எப்படி இவரை வெல்வது?’ எனச் சிந்தித்து ஒரு தந்திரம் செய்தான். உடைவாளை ஏடுகள்போல் ஒரு துணியில் சுற்றிக்கொண்டு, அவரைச் சந்திப்பதற்குச் சிவவேடப் பொலிவோடு போனான். நீண்ட சடை, நல்ல வெண்ணீற்றுக்கோலம், உருத்திராட்சம் அணிந்து போனான். சிவனே, சிவனடியார் வேடம் தரித்துவிட்டானோ என எண்ணி, விழுந்து வணங்கத் தோன்றும் தோற்றம்.

முத்தநாதன் அரண்மனைக்குள் நுழைந்தான். காவலர்கள் தடுத்தார்கள். ``இப்போது மன்னர் மெய்ப்பொருள் நாயனார் ஓய்வில் இருக்கிறார். செல்லக் கூடாது’’ என்றார்கள்.

காவலாளிகளைத் தள்ளிவிட்டு, ``உங்கள் மன்னருக்கு நான் ஆகமத்தை உணர்த்த வந்திருக்கிறேன்…’’ என்று துணியில் சுற்றிவைத்திருந்த உடைவாளை `ஆகமம்’ என்று காட்டிவிட்டு முத்தநாதன் உள்ளே போனான். மெய்ப்பொருள் நாயனார், தன் வாழ்க்கைத்துணையோடு இருந்த அறைக்குள் நுழைந்தான். 

அவனைப் பார்த்ததும் மன்னர், ``என்ன வேண்டும்?’’ என்று கேட்டார்.

``உங்கள் நாயகன் எடுத்துச் சொன்ன ஆகமப் பொருளை உங்களுக்கு உணர்த்த வந்திருக்கிறேன்.’’

“நான் செய்த பெரும்பாக்கியம். அமருங்கள்’’ என்று சொல்லி, அந்தப் போலித் துறவியை  பீடத்தில் அமர்த்திவிட்டு, அவன் காலடியில் அமர்ந்தார் மன்னர். ``ஆகமப் பொருளை உணர்த்துங்கள்’’ என்று கைகட்டி, வாய் பொத்தி, தலைகுனிந்து நின்றார். 

அப்போது முத்தநாதன் என்ன காரியம் செய்தான்? வாளை எடுத்து மெய்ப்பொருள் நாயனார் உடலில் செருகினான். ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அந்தக் காட்சியை சேக்கிழாரால் வார்த்தைகளால் கூற முடியவில்லை. `வன்முறை’ என்ற அந்தச் செயல்பாட்டை, சொல்லாமல் தவிர்க்கிறார் சேக்கிழார். இந்தக் காட்சியைப் பெரியபுராணத்தில் அப்படியே அவர் எழுதவில்லை. `நினைந்த அப்பரிசே செய்ய…’ என்று குறிப்பிடுகிறார். ஒரு படுகொலை நடந்துவிட்டது. அதை, அந்த வன்முறையை `நினைத்ததை அப்படியே செய்துவிட்டான்’ என்கிறார். ஆனால், மெய்ப்பொருள் நாயனாரை, `மெய்த்தவ வேடமே மெய்ப்பொருளெனத் தொழுது வென்றார்’ என்று சுட்டிக்காட்டுகிறார். தன்மீது ஆயுதத்தைச் செருகி, உயிரை எடுத்தவனைத் தொழுது வென்றார் மெய்ப்பொருள் நாயனார். சேக்கிழார் வார்த்தைகளின் இனிமையைப் பாருங்கள். 

ஆக, வெற்றி யாருக்கு? வாளை எடுத்துச் செருகியவனுக்கா… செருகப்பட்ட வாளை உள்வாங்கிக்கொண்டு, சிரித்துக்கொண்டே அவனை மன்னித்தவருக்கா? இங்கே தோற்றவர், வென்றவர் ஆகிறார். அகிம்சைக்குக் கிடைத்த வெற்றி. 

உலகத்தின் முதல் அகிம்சாவாதியாக மெய்ப்பொருள் நாயனார் நமக்குக் காட்சி தருகிறார். `சிவவேடப் பொலிவோடு இருப்பவர்தான் நமக்குக் கடவுள்’ என்ற அவரது கொள்கையின் வெளிப்பாடு நமக்குப் புரிகிறது.

அந்த நேரத்தில், தத்தன் என்ற மெய்க்காவலாளி உள்ளே நுழைய, ``தத்தா… இவர் நமர்.  நம்மவர். இவரைப் பாதுகாப்பாகக் கொண்டு போய் ஊர் எல்லையில் சேர்த்துவிடு…’’ என்று முத்தநாதனைப் பாதுகாப்பாக அனுப்பிவைத்து, தத்தன் அவனை ஊருக்கு வெளியே கொண்டுபோய் விட்டுவிட்டதை வந்து சொன்ன பிறகு, தன் உயிரை விட்டார் மெய்ப்பொருள் நாயனார். எவ்வளவு பெரிய பெருந்தன்மை; தோற்றவர், வென்றவர் ஆவது எவ்வளவு பெரிய நிலைப்பாடு!

புத்தரை ஒருவர் தன் வீட்டுக்கு உணவருந்த வரச் சொல்லிப்  பலமுறை அழைத்தார். ஒருநாள் புத்தர் அவர் இல்லத்துக்குச் சென்றார். அன்று அவர் விஷக்காளான் செடியை உணவாக சமைத்து அவருக்குப் பரிமாறினார். உணவருந்துவதற்கு முன்னர், தான் சாப்பிடப் போவது விஷம் நிறைந்தது என்பதை உணர்ந்த புத்தர், தன் சீடர்களிடம், ``இவன்தான் புத்தருக்கு கடைசியாக உணவளித்த பாக்கியவான் என்று உலகுக்கு அறிவியுங்கள்’’ என்று சொன்னார்.

`பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்’ என்கிறார் திருவள்ளுவர். நண்பன் நஞ்சை, விஷத்தைத் தருகிறான். குடிப்பதா... வேண்டாமா? திருவள்ளுவர் சொல்கிறார்... `உறவா... நட்பா... உயிரா என்ற கேள்வி வைக்கப்பட்டால், நட்புக்காக, உறவுக்காக விஷத்தை அருந்தி உன் உயிரைத் தியாகம் செய்.’

பகைவரை வெல்வது எளிது, இயல்பு. ஆனால், துரோகத்திடம் தோற்றுப்போவதுதான் இயல்பினும் இயல்பு. துரோகம் வென்றதாகத் தெரியும். ஆனால், வரலாற்றில் பதிவு செய்யப்படாது. 

அந்த வகையில், தியாகத்தின் வடிவமாக, அகிம்சையின் இருப்பிடமாக, கருணையின் இருப்பிடமாக இருந்த மெய்ப்பொருள் நாயனார், திருநீலகண்டராக உலகத்தை வாழவைப்பதற்காக ஆலகாலத்தை உண்ணச் சித்தமாக இருந்த உலகத்தின் தலைவன் சிவபெருமானின் திருவடிகளில் சரணடைந்தார்.  அந்த அன்புநெறி, அகிம்சை நெறி இந்த மண்ணில் தழைக்க வேண்டும்.

(புரிவோம்...)  

அன்பே தவம் - 13

இது வரலாற்று வெற்றி!

து 1988-ம் வருடம். தென் கொரியாவின் பூசன் (Busan) நகரத்தில் ஒலிம்பிக் படகுப் போட்டி. படகுகள் புயலெனச் சீறிப் போய்க்கொண்டிருந்தன. அந்தப் போட்டியில் கனடாவைச் சேர்ந்த லாரன்ஸ் லெமியக்ஸ் (Lawrence Lemieux) என்ற இளைஞரும் கலந்துகொண்டார்.  வெற்றிக்கோட்டைத் தொடும் இடத்தை அவருடைய படகு நெருங்கிக்கொண்டிருந்தது. அவர் எல்லைக் கோட்டைத் தொடுவதற்கான இடத்தருகே வந்தபோது அது நடந்தது. வெற்றிக் கோட்டைத் தொட சில விநாடிகளே (Fraction of Seconds) இருந்தன. அந்த நேரத்தில் அடித்த சூறைக்காற்றில், அவருக்கு அடுத்து வந்த சிங்கப்பூரைச் சேர்ந்த படகோட்டியும் அவருடனிருந்த இன்னொருவரும்  தடுமாறி, தண்ணீரில் விழுந்தார்கள். லாரன்ஸ் லெமியக்ஸ் ஒரு நொடிகூட யோசிக்கவில்லை. தன் படகிலிருந்து தண்ணீரில் குதித்தார். இருவரையும் நீரிலிருந்து இழுத்துக் காப்பாற்றினார். அன்றைக்கு ஒலிம்பிக் படகுப் பந்தயத்தில் பதக்கம் பெறவேண்டிய லாரன்ஸ் லெமியக்ஸ் தோற்றுப்போனார். ஆனால், ஒலிம்பிக் வரலாற்றில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துவிட்டார். இதுதான் தோல்வியை வெற்றியாக மாற்றுகிற வரலாறு.