Published:Updated:

சர்ப்ப தோஷம் நீக்கும்... சகல நன்மையும் கொடுக்கும் நாகேஸ்வரர் கோயில்!

மேகலை இதழ் இதழாகத் தொங்குகிறது. மேகலையை மாட்ட வசதியாக 16 துவாரங்கள் உள்ளன. 16 கோவையுள்ள மேகலைக்குக் `கலாபம்' என்று பெயர். இந்த அணிகலனை அணிந்து ஒயிலாகக் காட்சி தரும் அம்பிகையின் கை விரல் ரேகைகளைக் கூடத் தெளிவாகக் காணமுடிகிறது...

சர்ப்ப தோஷம் நீக்கும்... சகல நன்மையும் கொடுக்கும் நாகேஸ்வரர் கோயில்!
சர்ப்ப தோஷம் நீக்கும்... சகல நன்மையும் கொடுக்கும் நாகேஸ்வரர் கோயில்!

கோவை மாவட்டத் திருத்தலங்களுள் மிகவும் சிறப்புப் பெற்றது, திரு முட்டம் நாகேஸ்வரர் ஆலயம். வீர ராசேந்திரச் சோழனின் காலமான 13 ம் நூற்றாண்டில் இந்தத் திருத்தலம் புதுப்பிக்கப்பட்டு வழிபடப்பட்டது. நவகிரகங்களில் பாவ கிரகங்களான ராகு - கேது ஆகியவற்றால் ஏற்படும் தோஷங்கள் நீங்க பரிகாரத் தலமாகவும் விளங்கும் சிறப்புப் பெற்றது இந்தத் திருக்கோயில்.

ஆதிசேஷன் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் முட்டம். ஆதிசேஷன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட காரணத்தால், இறைவன் அருள்மிகு நாகேசுவரர் என்ற திருப்பெயர் கொண்டார். இந்தத் தலத்து இறைவனை நாரத மகரிஷி, ராகு, கேது ஆகியோரும் வழிபட்டுள்ளனர்.  

தென்கயிலை என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது முட்டம். வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகும் காஞ்சி மாநதி இந்தத் தலத்தின் வழியாகச் சென்று, கூடுதுறையில் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. முட்டத்தில் தொடங்கி கரூர் வரை 36 சிவாலயங்களை சோழ மன்னர்கள் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. முற்காலத்தில் இந்த ஊர், `அமர புயங்க நல்லூர் சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டுச் செய்தியின் மூலம் அறிய முடிகிறது.

கோவையிலிருந்து வெள்ளியங்கிரி செல்லும் சாலையில் சுமார் 27 கி.மீ. தொலைவிலுள்ளது செம்மேடு. செம்மேட்டிலிருந்து பசுமையான வயல்வெளிகளுக்கும் தென்னந்தோப்புகளுக்கும் ஊடாக சுமார் 3 கி.மீ. தொலைவு பயணித்தால், திருமுட்டம் ஆலயத்தை அடையலாம்.

ஆலயத்தில் இறைவன் லிங்கவடிவில் நாகாபரணம் அணிந்த கோலத்தில் திருக்காட்சி அருள்கிறார். அம்பிகையின் திருப்பெயர் அருள்மிகு முத்துவாளி அம்மன். முத்துகளால் ஆன காதணிகளை அணிந்திருப்பதன் காரணமாக அம்பிகைக்கு இந்தப் பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். 

அம்பிகை திரிபுரை அம்சமாக இருக்கிறாள். மதுரை மீனாட்சி அம்மன் சிலையும், முத்துவாளி அம்மன் சிலையும் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அம்பிகையின் எழில் தோற்றமும் அதை மெய்ப்பிக்கிறது. அம்பிகை வலக்கரத்தில் நீலோத்பல மலரை ஏந்தி, முன் கையில் பரியகம் என்னும் ஆபரணம் தரித்து, இரு தோள்களையும் அடுக்கடுக்கான அரும்புகள் பொருந்திய கட்கங்களை அணிந்து, இடையில் மேகலை என்னும் ஆபரணம் அணிந்து எழிலார்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

மேகலை இதழ் இதழாகத் தொங்குகிறது. மேகலையை மாட்ட வசதியாக 16 துவாரங்கள் உள்ளன. 16 கோவையுள்ள மேகலைக்குக் `கலாபம்' என்று பெயர். இந்த அணிகலனை அணிந்து ஒயிலாகக் காட்சி தரும் அம்பிகையின் கை விரல் ரேகைகளைக் கூடத் தெளிவாகக் காணமுடிகிறது. மலர்ந்த முகத்துடன் பூரிப்புடன் காட்சிதரும் அம்பிகையைச் சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கும்போது நடனமாடுவதுபோல் தோன்றும். 

அதேபோல் இந்தக் கோயிலில் அமைந்திருக்கும் தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியின் மடித்து வைத்திருக்கும் இடக் காலை நந்தி வருடிக் கொடுப்பது போல் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அபூர்வமான சிற்பமாகும்.

கோயிலில் கன்னிமூல விநாயகர், முருகப்பெருமான், திருமால், நவகிரகங்கள் ஆகியோரும் காட்சி தருகின்றனர். ஆதிசேஷன் வழிபட்ட இந்தத் தலத்தில் ஐந்து தலை நாக விளக்குத் தூண் உள்ளது. நான்கு கோபுரங்களுடன் அமைந்திருக்கும் இந்தக் கோயிலில் பல கல்வெட்டுகளும், கவின் மிகுந்த சிற்பங்களும் நிறைந்திருக்கின்றன.

தினமும் இங்கு இறைவனுக்கு ராகுகால வேளையில் பாலபிஷேகம் செய்யப்படுகிறது. பசும்பால் மட்டுமே அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. பாலபிஷேகம் செய்வதன் மூலம் தோஷ நிவர்த்தி ஏற்பட்டு நன்மைகள் கைகூடும். கோயிலில் தலவிருட்சமாக வில்வம் உள்ளது. 

ஆதிசேஷன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இறைவனை ராகு, கேது ஆகியோர் வழிபட்டு வரம் பெற்ற காரணத்தால், ஜாதகத்தில் ராகு, கேது தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் உள்ளவர்கள், இந்த ஆலயத்துக்கு வந்து ராகுகாலத்தில் சுவாமிக்கு பசும்பாலினால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், தோஷங்கள் நீங்குவதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். பௌர்ணமி தினங்களில் அம்பிகைக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கி, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

இந்தத் தலத்தில் பிரதோஷம், பௌர்ணமி, கிருத்திகை, அஷ்டமி, அமாவாசை ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சிவனே இங்கு மூலவர் என்பதால் ஆண்டுதோறும் மகாசிவராத்திரிப் பண்டிகை  மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 

இறைவன் : அருள்மிகு நாகேஸ்வரர்
இறைவி : அருள்மிகு முத்துவாளி அம்மன் 
தீர்த்தம் : காஞ்சிமாநதி தீர்த்தம்
தலவிருட்சம் : வில்வம்
தரிசன நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை கோயில் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். மீண்டும்  மாலை 4 மணிக்குத் திறந்து 6 மணிக்கு நடை சாத்தப்படும்.