பிரீமியம் ஸ்டோரி

`தறாத காரியம் சிதறாது’ என்பது முன்னோர் வாக்கு. ஆனால், இன்றைய உலகில் எங்கும் பதற்றம் எதிலும் பதற்றம். கணப்பொழுதில் ஆத்திரத்துக்கு ஆட்படுகின்றனர் பலரும். இதனால் வாழ்க்கையே வீணாகிப் போகும். பொறுமை மற்றும் நிதானத்தை வலியுறுத்தும் திருக்கதை ஒன்றுண்டு. பீஷ்மர் சொன்ன அந்தக் கதையை நாமும் அறிவோமா?

பதறாத காரியம் சிதறாது!

‘`சிரகாரி! சிரகாரி! சீக்கிரம் வா’’- கத்திக் கூப்பிட் டார் முனிவர். தந்தையின் குரல் கேட்டதும் ‘இதோ வந்துவிட்டேன்’ என்று ஓடோடி வந்து நின்றான் சிரகாரி.

அங்கே... கண்கள் சிவக்க நின்றுகொண்டிருந்த முனிவர், ‘`மகனே! என் பேச்சை நீயாவது கேள். உன் தாயாரின் போக்கு அறவே பிடிக்கவில்லை. அவளைக் கொன்றுவிடு’’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியேறினார்.

சிரகாரி பதைபதைத்தான். ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. ஆனால், பெற்ற தாயை அல்லவா கொல்லச் சொல்கிறார் தந்தை’ என்று கலங்கினான்.சிரகாரி இளமையின் வேகத்துக்கு வயப்படாமல், எதையும் நிதானமாக சிந்தித்து செயலாற்றுபவன். எனவே சிந்தனையில் ஆழ்ந்தான்.

‘நமக்குச் சகல வித்தைகளையும் சொல்லிக் கொடுப்ப வர் தந்தை. எனவே தந்தையே தலைசிறந்த குருவாகிறார். பிள்ளைக்கு எல்லாமாக இருக்கக்கூடியவர் தந்தை; ஆகவே, அவருடைய சொல்லை மீறக் கூடாது. அவர் சொன்ன சொல்லை ஆராயக் கூடாது. பிள்ளை செய்த அனைத்துப் பாவங்களுக்கும், அந்தப் பிள்ளையானவன், தந்தையை மகிழ்ச்சிப்படுத்துவது ஒன்றுதான் உண்மையான பரிகாரம். தந்தையின் திருப்தியில், எல்லா தேவதைகளும் திருப்தி அடை கின்றனரே!’ இப்படியான சிந்தனைகள் எழுந்து அடங்கிய மறுகணம், தாயாரின் முகமும் அவள் பெருமைகளும் நினைவுக்கு வந்தன!

‘இந்த உலகில் அனைவரும் பிறப்பதற்கு ஆதாரம் தாயார்தான். துன்பப்படும் ஜீவன்களுக்கு துன்பத்தைப் போக்கி, அனைவருக்கும் சுகத்தையும் நிம்மதியையும் தருபவள். வயோதிகத்தை அடைந்தாலும்கூட ஒருவனுக்கு ஒரு குறையும் இன்றி அரவணைப்பவள் தாயார்.

பதறாத காரியம் சிதறாது!

பேரன், பேத்திகள் எடுத்து, நூறு வயதை அடைந் தவனாக இருந்தாலும்கூட தாயாரும் அருகில் இருந்து விட்டால், அவன் இரண்டு வயதுக் குழந்தையாகி விடுவான்! தாயார் இருக்கும்வரை ஒருவன் குழந்தை; அவள் இறந்த பின்னரே கிழவனாகிறான். முக்கியமாக... தந்தையை நமக்கு அறிமுகம் செய்பவளே தாய்தானே?! எனவே தாயைக் கொல்வது மகா பாவம்’ என்று தாயாரின் பெருமைகளை யோசித்தான்.

அதே நேரம், முனிவருக்குள்ளும் அமைதி; தெளிவு!

‘அடடா! என்ன பாதகம் செய்துவிட்டேன்? மனைவி என்பவள், இல்லத்தில் முடங்கியபடியே வீட்டுக் கவலைகளால் சூழப்பட்டவளாயிற்றே. அவளைப் பாதுகாக்க வேண்டிய நானே படுகொலை செய்யச் சொல்லிவிட்டு வந்திருக் கிறேனே! துயரக் கடலில் மூழ்கிவிட்ட நான் எப்படி கரையேறுவேன்' என்று மனம் நொந்த முனிவர், `எதையும் ஆராய்ந்து செயல்படும் சிரகாரி அவளைக் கொன்றிருப்பானா?!’ எனும் கேள்வியோடு, ஆஸ்ரமம் நோக்கி ஓட்டமும்  நடையுமாக வந்தார்; பதற்றத்துடன் சிரகாரியை அழைத்தார்.

தன் தாயாருடன் வந்த சிரகாரி, தந்தையை வணங்கினான். மனைவியைக் கண்ட முனிவர், மானசீகமாக அவளிடம் மன்னிப்பு வேண்டினார்; மகனை அப்படியே ஆரத் தழுவிக்கொண்டார்.

அவசரமோ பதட்டமோ இன்றி சிந்தித்து செயல்பட்ட சிரகாரியின் செயலால் அந்தக் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.

ரத சப்தமியும் பீஷ்மாஷ்டமியும்!

பதறாத காரியம் சிதறாது!

கெளரவ சபையில் பாஞ்சாலிக்கு அநீதி இழைக்கப் பட்டபோது, அதை தட்டிக்கேட்காமல் இருந்ததனால் ஏற்பட்ட வினை, யுத்தக்களத்தில் அம்புப்படுக்கையில் கிடந்த பீஷ்மரின் மனதை வாட்டி வதைத்தது.

வியாச முனிவர் வந்து எருக்கன் இலைகளின் மகிமையை பீஷ்மருக்கு எடுத்துரைத்து, அவற்றால் பீஷ்மரின் மேனியை அலங்கரிக்க, கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதியடைந்தார் பீஷ்மர். அப்படியே தியானத்தில் ஆழ்ந்தவர், அந்த நிலையிலேயே முக்தியும் அடைந்தார்.

‘அவருக்கு யார் பித்ருக் கடன் செய்வது?’ என்று தர்மர் வருந்தினார். அதையறிந்த வியாசர், ‘`தர்மரே! வருந்தவேண்டாம் ஒழுக்கம் தவறாத நேர்மையான பிரம்மச்சாரிக்கும் தூய்மையான துறவிக்கும் பித்ருக் கடன் அவசியமே இல்லை.
 
மட்டுமின்றி, வருங்காலத்தில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும். ரத சப்தமி அன்று தங்கள் உடலில் எருக்கன்  இலைகளை வைத்துக்கொண்டு குளிக்கும் மக்கள், தங்களுடைய பாவங்களிலிருந்து விடுபடுவார்கள். பீஷ்மருக்கு நீர்க்கடன் அளித்த புண்ணியமும் அவர்களுக்குக் கிடைக்கும்’’ என்றார்.

எனவே, ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும்.
 
மேலும் ரதசப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி  என்பர். அன்று புனிதநீர் நிலைகளுக்குச் சென்று, பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும்  செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.

- சுபா கண்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு