பிரீமியம் ஸ்டோரி

விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்
    வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும்
அண்ணா மலையுறையும் அண்ணல் போலும்
    அதியரைய மங்கை யமர்ந்தார் போலும்
பண்ணார் களிவண்டு பாடி யாடும்
    பராய்த்துறையுள் மேய பரமர் போலுந்
திண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த்
    திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே

திருவாதிரை மங்கலம்!

பிற்காலச் சோழர்கள் தழைத்தோங்கி திகழ்ந்த காலம். எட்டுத்திக்கிலும் சோழ மறவர்கள் தங்களின் வாளின் திறனை நிரூபித்துக்கொண்டிருந்த வேளையில், அந்தத் தேசத்தின் சிற்பிகளோ கலையையும் கற்பனையையும் கொட்டி பல பேராலயங்களை நிர்மாணித்து, தங்களின் சிற்பத்திறனை மெய்ப்பித்துக்கொண்டிருந்தார்கள்.

அப்படி அவர்களால் திருப்பணி கண்ட பெரும் சிவாலயங்களில் ஒன்றுதான் திருவாதிரை மங்கலம் அருள்மிகு சிவலோகநாதர் ஆலயம். திருவாரூர் - கங்களாஞ்சேரி - நாகூர் வழித்தடத்தில் உள்ள சூரனூர் பஸ் நிறுத்தத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்தச் சிவாலயம்.

திருவாதிரை மங்கலம்!

கடந்து சென்ற மார்கழியின் ஒரு வைகறையில் அந்தக் கோயிலுக்குள் நாம் நுழைந்தபோது, மேற்காணும் பாடலை அடியவர் ஒருவர் `விண்ணோர் பரவநஞ்சுண்டார் போலும்...' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிக் கொண்டிருக்க, அருகில் கண்களில் நீர்மல்க கரம்கூப்பி நின்றிருந்த பெரியவர் ஒருவர், அடியவரின் பாடலில் ஆனந்தமாய் லயித்திருந்தார். திருச்சாய்க்காடு திருத் தலத்தின் இறைவனைப் போற்றி திருநாவுக்கரசர் பாடியருளிய அற்புதமான பதிகம் அது. அந்தப் பதிகத்தை இந்தத் தலத்தில் பாடி அடியவர்கள் வழிபடுவதற்கு ஒரு காரணம் உண்டு. அதுபற்றி அறியுமுன், பெரியவரைத் தெரிந்து கொள்வோம்.

அவர் பெயர் ராதாகிருஷ்ணன்; வயது 81. ஆரம்பகாலம் தொட்டு சக்தி விகடனின் தீவிர வாசகர் என்பதில் நமக்குப் பெருமிதமே.  ஆம்! ஓர் அரசாங்கம் எடுத்துச் செய்யவேண்டிய வேலையை, பலபேர் ஓர் அமைப்பாய் ஒருங்கிணைந்து நிறைவேற்றக்கூடிய பெரும்பணியை,   தனியொரு வராய் செய்துமுடித்திருக்கிறார் இந்தப் பெரியவர்.

ஆம்! பலகாலமாக சிதிலமுற்று திகழ்ந்த இந்தச்  சிவாலயம் சீர்பெற்றதும் குடமுழுக்குக் கண்டதும் இந்தப் பெரியவரின் முயற்சியாலேயே என்று சிலாகித்துச் சொல்கிறார்கள் சுற்றுவட்டாரத்து பக்தர்கள்.

திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப்பெற்தாம், திருவாதிரைமங்கலம்.நாவுக்கரசர், திருச்சாய்க்காடு பதிகத்தில் வரும், ‘விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்’ என்ற பாடலில், ‘அதியரைய மங்கையமர்ந்தார்’ என்று இத்தலத்தைக் குறிப்பிடுகிறார். 

திருவாதிரை மங்கலம்!

மேலும், ஏழைத் தாண்டகத்தின் மூன்றாம் பதிகத்தின் முதல் பாட லிலும் நான்காம் பாடலிலும், ‘அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். திருவாதிரைமங்கை என்ற பெயரில் வேறு தலங்கள் காணப்படாததாலும், கோயிலின் பழைமையைக் கொண்டும், பெயர் மருவியிருக்கக்கூடும் என்ற காரணத்தினாலும் இந்தத் தலத்தை வைப்புத் தலமாக ஏற்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

திருப்பெயரின் பின்னணியில், இந்தத் தலத்தில் திருவாதிரை விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாகவும் அதன் காரணமாக இந்தத் தலத்துக்கு, ‘திருவாதிரைமங்கலம்’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது.

இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான், சிவலோகநாதர், சங்கரநாயகி, பலிபீடம், சண்டிகேசுவரர், தட்சிணாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களைப்  பிற்காலச் சோழர்களின் காலத்தவை என்கிறார்கள். கருவறை விமானம் எண்பட்டை வடிவில் திராவிடக் கட்டடக் கலையைச் சார்ந்திருக்கிறது.

இத்தகு சிறப்புகளைக்கொண்ட சிவலோகநாதர் திருக்கோயில் கால வெள்ளத்தால் சிதிலமடைந்துபோனது. எப்படியாவது கோயிலைப் புனரமைக்கவேண்டும் என்றும் விரும்பினார், முதியவர் ராதாகிருஷ்ணன். மகனிடமும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அவரும் தந்தைக்கு உதவி செய்ய, மகன் கொடுத்த நிதியுதவி மற்றும் தனது ஓய்வூதியப் பணம் முழுவதையும் திருப்பணிக்கே செலவிட்டார். பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டபோதும், சோர்வடையாமல், பெரும் உழைப்புடன்  2013-ல் திருப்பணிகளைத் தொடங்கி, 2016-ல் கும்பாபிஷேகத்துடன் நிறைவு செய்தார். தற்போது, புதுப் பொலிவுடன் விளங்குகிறது திருக்கோயில்.

திருப்பணியின்போது பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நடராஜர் மற்றும் அம்பாள் ஐம்பொன் சிலைகளும் ஆலயத்தின் தொன்மையை உறுதிசெய்கின்றன. கோயிலுக்கு எதிரில் திருக்குளம் அமைந்துள்ளது. கோயிலுக்குள் பலிபீடத்தைக் கடந்து சென்றால், நந்திதேவர் காட்சி அருள்கிறார். அவரை தரிசித்து நகர்ந்தால், மகா மண்டபத்தின் இடப்புறத்தில் விநாயகர், வலப் புறத்தில் வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமான் சந்நிதிகள் அமைந்துள்ளன.ஆனை முகத்தோனுக்கும் ஆறுமுகத்தோனுக்கும் நடுவில் ஐயன் சிவலோகநாதர், வட்ட வடிவ ஆவுடையாராகக் கிழக்கு நோக்கித் திருக்காட்சி அருள்கிறார். ஐயனின் திருமேனி ஒளி பொருந்தி காணப்படுகிறது.

திருவாதிரை மங்கலம்!இந்த இறைவனை பங்குனி மாதத்தின் முதல் 20 நாள்கள், காலை 6 முதல் 8 மணி வரை, சூரியன் தன் ஒளிக் கிரணங்களால் ஸ்பரிசித்து வழிபடுவது, இந்த ஆலயத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும்.

சுவாமி சந்நிதிக்கு எதிரில் அன்னை சங்கரநாயகி சந்நிதி அமைந்துள்ளது. நின்ற திருக்கோலத்தில், மேலிரு கரங்களில் ருத்திராட்சம், தாமரை ஏந்தி, கீழ் வலக்கரம் அபயம் காட்ட, இடக் கரத்தினை இடுப்பில் வைத்த வண்ணம் எழிலாகக் காட்சி அருள்கிறாள். கருவறையைச் சுற்றிலும் தட்சிணாமூர்த்தி, துர்கை, சண்டிகேசர் காட்சி தருகின்றனர். நவகிரக சந்நிதி வடகிழக்கில் அமைந்திருக்கிறது. துர்கை மற்றும் நவகிரகங்கள் புதிய பிரதிஷ்டை ஆகும்.

இந்தக் கோயிலுக்குப் பிரதோஷ நாள்களில் வந்து சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கி, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும், நோய்கள் தீரும் என்பதும் நம்பிக்கை. நீங்களும் ஒருமுறை திருவாதிரைமங்கலத்துக்குச் சென்று ஆதிரைக் கடவுளை வணங்கி வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள்.

 -பனையபுரம் அதியமான் 

படம்: க.சதீஷ்குமார்

திருவாதிரை மங்கலம்!

கல்வெட்டு காட்டும் பாடல்!

கி.பி.18-ஆம் நூற்றாண்டில் மராட்டியர்கள் ஆட்சிக் காலத்தில் முன்மண்டபம், மகாமண்டபம் கட்டப்பட்டன என்கிறார்கள். 

திருவாதிரை மங்கலம்!

அதேபோல், இங்கிருந்த இரண்டு கல்வெட்டுகள் ஒன்றில் இந்தத் தலம் திருவாதிரை மங்கலம் என்றும் இறைவி சங்கரநாயகி என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டு சுமார் 600 வருடங்கள் பழைமையானதாகும். கல்வெட்டு முழுமையாகக் கிடைக்காத நிலையில், இந்த வரிகள் இந்தத் தலத்தினைப் புகழும் பாடல் கொண்ட கல்வெட்டாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார், தொல்லியல் அறிஞர் கி.ஸ்ரீதரன்.

பக்தர்கள் கவனத்துக்கு...

ஸ்வாமி: அருள்மிகு சிவலோகநாதர்

அம்பாள்: அருள்மிகு சங்கரநாயகி

தலமரம்:  செங்காலி மரம்

தீர்த்தம்: திருக்கோயில் எதிரேயுள்ள சிவகங்கைத் தீர்த்தம்

விழாக்கள்: இந்தத் தலத்தில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. தவிர, திருவாதிரை, மாதக்கிருத்திகை, விநாயகர் சதுர்த்தி, மகாசிவராத்திரி, குருப்பெயர்ச்சி, தீபாவளி, பொங்கல் ஆகிய விழாக்களும் ஆகம விதிப்படிக் கொண்டாடப்படுகின்றன. மாதக் கிருத்திகையை ஊர்மக்கள் முறை வைத்துக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

தரிசன நேரம்: காலை 10 முதல்  நண்பகல் 12 மணி வரை; மாலை 5 முதல் இரவு 7 மணி வரை

எப்படிச் செல்வது?: திருவாரூர் - கங்களாஞ்சேரி - நாகூர் வழித்தடத்தில் உள்ள சூரனூர் பஸ் நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது.  தேவாரத் தலங்களான திருவிற்குடிக்கு  தெற்கே 5 கி.மீ தொலைவிலும்,  திருப்பயத்தங்குடிக்கு தென்கிழக்கே 3 கி.மீ தொலைவிலும்  அமைந்துள்ளது. இதன் அருகே  திருச்செங்காட்டங்குடி,  திருப்புகலூர்,  திருக்கண்ணபுரம் ஆகிய திருத்தலங்களும்  அமைந்துள்ளன.

தொடர்புக்கு: வி. இராதாகிருஷ்ணன் 96599 85735 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு