தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 22

ரங்க ராஜ்ஜியம் - 22
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 22

ரங்க ராஜ்ஜியம் - 22

‘தீண்டா வழும்பும் செந்நீரும்
சீயும் நரம்பும் செறிதசையும்
வேண்டா நாற்றம் மிகும் உடலை
வீணே சுமந்து மெலிவேனோ
நீண்டாய் தூண்டா விளக்கொளியாய்
நின்றாய் ஒன்றாய் அடியாரை
ஆண்டாய் காண்டா வனம் எரித்த
அரங்கா அடியேற்கு இரங்காயே


-திருவரங்கக் கலம்பகத்தில் ‘பிள்ளைப் பெருமாளையங்கார்’

ரங்க ராஜ்ஜியம் - 22

லயங்கள் சீரோடும் சிறப்போடும் திகழ்ந்தால்தான் நாடும் மக்களும் நலன்களோடு திகழ முடியும் என்பதை அரசர் பெருமக்கள் உணர்ந்து, அரங்கன் ஆலயத்தை தங்கள் உயிரினும் மேலாகக் கருதிப் பேணி வந்தனர்.

அப்படிப் பேணியவர்களில் சேர மன்னன் திடவிரதனும் ஒருவன். பிள்ளைப்பேறு இல்லாத துன்பம், இவனை ஆலய கைங்கர்யத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்ய வைத்தது.

காரணமில்லாமல் காரியமில்லையே!

திடவிரதனுக்குப் பிள்ளைக்கலி ஏற்படவும் காரணம் இருந்தது - அது முன்வினை; தீரவும் காரணம் இருந்தது - அது, பின் அவன் செய்த ஆலய பரிபாலனம்.

திருவஞ்சைக்களம் எனும் மண்ணை, தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டு திடவிரதன் நாடாண்டபோதிலும், பாண்டிய சோழ மண்டலங்கள் இவனுக்குக் கட்டுப்பட்டே இருந்தன. எனவே, நாடெங்கும் உள்ள அவ்வளவு ஆலயங்களையுமே இவன் பேணினான். பூஜைகள் குறைவின்றி நடந்திடத் தூண்டினான். இதன் எதிரொலியாக திடவிரதனின் குலத்துக்குச் சேகரமாய் வந்து பிறந்தவனே குலசேகரன்.

அப்பாவுக்குத் தப்பாத பிள்ளை என்றால் அது தவறு. அப்பாவை விஞ்சிய பிள்ளையாகவே விளங்கினான் குலசேகரன். அதனால்தான், ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவனாகவும் ஆனான். அந்தணர்களுக்கு இணையாக வேதம், அதன் ஆறு அங்கங்கள், அரச நீதி, தர்மசாஸ்திரம் என்று சகலமும் கற்றான். வீரத்திலும் இவன் குறைந்தவனில்லை!

‘கொல்லிக்காவலன், கடல் நாயகன், கோழிக் கோன் குலசேகரன்’ என்பதெல்லாம் இவன் பெற்ற பட்டங்கள். இவனுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர். இதில் மகன் திடவிரதன் தந்தையின் வீரத்தை அப்படியே பிரதிபலித்தான். மகளோ பக்தியைப் பிரதிபலித்தாள். இந்த மகளின் பெயர் இளை. குலசேகரன் வரையில் தென்புலமே கைவசமிருந்த போதிலும், ஒரு சக்ரவர்த்தியாக தான் திகழ்ந்த போதிலும், அவ்வப்போது ஒரு கேள்வி எழும்பியபடியே இருந்தது.

‘இந்த உலகில் எல்லாம் மாறியபடியே உள்ளன. எதுவும் நிலையாக இல்லை. அதேபோல், உடலிலும் மாற்றங்கள் நிகழ்ந்து மனிதன் முதுமை அடைவதும் தடுக்கப்பட முடியாத ஒன்றாகவே இருக்கிறது. ஏன் அப்படி, இறப்பின்றி வாழ முடியாதா, இல்லை வாழக்கூடாதா?’

இப்படி குலசேகரனுக்குள் ஏராளமான கேள்விகள்!

`இவற்றுக்கெல்லாம் உங்களுக்குத் தெளிந்த விடை கிடைக்கவேண்டும் என்றால், நீங்கள் சத்சங்கங்களில் பங்கு கொண்டு நம்முடைய புராணங்களை அறிந்திடவேண்டும்' என்று உபதேசிக்கப்பட்டது. குலசேகரனும் அறிஞர்களின் சொற்கூடங்கள் மற்றும் ஆன்மிகத்தில் தோய்ந் தவர்களின் உபந்யாசங்களில் கவனம் செலுத் தினான். இங்கேதான் அவன் வாழ்க்கை அப்படியே திசைமாறத் தொடங்கியது.

சத்சங்கங்களில் எம்பெருமானின் அவதார புராணங்களைக் கூறும்போது, ஊன்றிக் கேட்பான் குலசேகரன். ராமாயண உபந்யாசத்தைக் கேட்கும் தருணம், தன்னுள் தான் கரைந்து கண்ணீர் விடலானான். அதை, நடந்து முடிந்த சம்பவமாகவே அவன் கருதவில்லை. அவன் காலத்தில் அவன் கண் எதிரில் நடப்பது போல் கருதத் தொடங்கி விட்டான்!

ரங்க ராஜ்ஜியம் - 22

குறிப்பாக... சீதையின் அணிகலன்களைச் சுக்ரீவன் ராமனிடம் காட்டும் தருணத்தில், அதைக் கண்டு ராமன் கண்ணீர் உகுப்பான். ‘இவை என் சீதை அணிந்திருந்த அணிகலன்களே. இவற்றை இந்த காட்டுக்குள் வீசி எறிந்துவிட்டு, அணிகலன்கள் எவையுமின்றி என் சீதை எப்படித் தான் இருப்பாளோ? அவளை நான் எப்போது காண்பேனோ?’ என்று ராமன் கண்ணீர் விட்டுக் கலங்கி அழுததை உபந்யாசகர் சொல்லச் சொல்ல, குலசேகரன் கண்களிலும் நீர் திரண்டு வந்து அருவியெனக் கொட்டிற்று.

இதைக் கண்ட உபந்யாசகர், குலசேகரனின் பக்தி உள்ளத்தை எண்ணிப் பூரித்தார். பொதுவாய் ராஜ்ஜிய பிரமுகர்கள் மிக மிக சுகமானவர்கள். கண்ணீர் என்பதை அவர்கள் எக்காலத்திலும் விடவே மாட்டார்கள். ஆனால் குலசேகரன் விதிவிலக்கு போல் நடந்துகொண்டான்.

ராமனும் ராவணனும் போரிட்ட வேளையில், ராவணனின் மகன் இந்திரஜித் தானறிந்த மாய வித்தைகளைப் போர்க்களத்தில் காட்டினான்.அவன், சீதையைப் போல் ஒரு மாயப் பெண்ணை களத்தில் நிறுத்தி அவள் கழுத்தையும் வெட்டிக் கொன்று விட்டு, தான் சீதையையே கொன்று விட்டதாக எக்காள முழக்கமிட்டதைக் கண்டு ராமன் மூர்ச்சையானானோ இல்லையோ... குலசேகரன் மூர்ச்சையடைந்தான்! உபந்யாசகரும் இதைக் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அவருக்கே குலசேகரனின் தவிப்பும் லயிப்பும் வியப்பளித்தன.

ஒருமுறை, “உபந்யாசகரே... போதும் உபந்யாசத்தை நிறுத்துங்கள். அங்கே, எம்பெருமான் தன்னந்தனியனாகப் போராடிக் கொண்டிருக் கிறான். அவனுக்கு நாம் உதவவேண்டாமா?

நான் என் படை அவ்வளவையும் திரட்டிக் கொண்டு வருகிறேன். நாளையே எதிரிகள் திரும்பி ஓடப்போவதை இந்தக் காலம் நிகழ்த்தத்தான் போகிறது. தர்மத்தின் தலைவனான ராமச்சந்திர பிரபுவுக்கே இப்படி ஒரு சோதனை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?” என்று யுத்தம் அப்போது நடப்பது போல் கருதிக்கொண்டு குலசேகரன் பேசவும், உபந்யாசகர் நெகிழ்ந்து போனார். பின்னர் `அவையாவும் நடந்து முடிந்த சம்பவம்' என்று குலசேகரனிடம் கூறி ஆற்றுப் படுத்தினார்.
 
ஆனாலும் குலசேகரன் அதை நம்பாமல், ‘இல்லை. நீங்கள் என்னைச் சமாதானப்படுத்தப் பொய் சொல்கிறீர்கள். ராமபிரானுக்கு நாம் உதவத்தான் வேண்டும். அனுமன் உதவலாம், சுக்ரீவன் உதவலாம், நான் உதவக்கூடாதா. எதற்கு இருக்கிறது என் படை” என்று கேட்டு முரண்டு பிடித்தார்.

அந்த அளவுக்கு எம்பெருமானின் பரமபக்தனா கத் திகழ்ந்தான் குலசேகரன்! இதனால், அவன் நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் பன்னிரு திருமண் அணிந்த பரம பக்தர்கள் உலா வந்தனர். அவர்களுக்கு விருந்து அளிப்பதை பாக்கியமாகக் கருதினான் குலசேகரன்!

அதன் எதிரொலியாக அவன் அரண்மனையில் அடியவர் கூட்டம் பெருகி வழியத் தொடங்கியது. இதைக் கண்ட மந்திரிகள் மற்றும் தளபதிகள் தங்களுக்குள் வருந்தத் தொடங்கினர். அரண்மனை கிட்டத்தட்ட பஜனை மடம் போல மாறி வருவதாகவும் கருதினர். அரசாட்சி என்பது வேறு - பக்தி மார்க்கம் என்பது வேறு. குலசேகரன் இரண்டையுமே சரியாகப் பின்பற்றாமல், பக்தி மிகுதியில் குழப்பத்துடன் நடந்துகொள்வதாக ஒரு முடிவுக்கும் வந்தனர்.

இதை இப்படியே விடக்கூடாது - இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரண்மனைக்குள் ஓர் அடியவர்கூட இருக்கக்கூடாது. அதற்கு என்ன வழி என்று யோசித்து இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர். அப்போது ராமநவமி உற்சவத்தை அரண்மனைக்குள்ளேயே கொண்டாட முன் வந்தான் குலசேகரன். எனவே, வழக்கத்தைவிட அடியவர்கள் அதிகம் வந்திருந்து அரண்மனையே  ஆலயவெளி போல ஆகிவிட்டிருந்தது.

இவ்வேளையில்தான் மந்திரிகள் தங்கள் திட்டத்தையும் அரங்கேற்றினர். ஸ்ரீராமனின் திருமேனியில் சாற்றப்பட்ட நகைகளில் ஒரு ரத்தின ஆரத்தைக் காணவில்லை என்று அவர்கள் குலசேகரனிடமும் கூறினர்.

“என்னது... ரத்தின ஆரம் காணாமல் போய் விட்டதா?”

“தவறு மன்னா... காணாமல் போகவில்லை - களவு போயுள்ளது.”

“களவா? என் அரண்மனையிலா?”

“ஆம் மன்னா. முன்பு அரண்மனைக்குள் பிற மனிதர்கள் நுழைய ஒரு கட்டுப்பாடு இருந்தது. நீங்கள்தான் அடியவர்கள் பொருட்டு அதை நீக்கி விட்டீர்களே?”

“அப்படியானால் என் அடியவர்களைக் குற்றம் சாட்டுகிறீர்களா?

“ஏன், அவர்களில் ஒருவர் களவாடியிருக்க கூடாது?”

“இருக்காது... இருக்கவே இருக்காது! மாலடியார் வரையில் தங்கம் வைரமெல்லாம் தூசுக்குச் சமானம். மாலடியார்க்கு அந்த மாலவன் திருவடி நிழலையன்றி இவ்வுலகில் எதுவும் பெரிதில்லை.”

“இது உங்கள் கருத்து. ஆனால் கள்வர்கள் மாலடியார் வேடம் புனைந்தும் வந்திருக்கலாம் அல்லவா?”

“இது உங்கள் கற்பனை..”

“இல்லை... எங்கள் தீர்மானம்.”

“சரி, என்ன செய்யலாம் என்று கூறுங்கள்.”

“அனைவருக்கும் ஓர் உத்தரவிடுவோம். யார் களவாடியிருந்தாலும் சரி அவர்களே முன்வந்து ஆபரணத்தை ஒப்படைத்துவிட வேண்டும். தாங்கள் களவாடவில்லை என்று அவர்கள் கூறினால் நாகக் குடத்துக்குள் கைவிட்டு தங்களை நிரூபிக்கவேண்டும்.''

ரங்க ராஜ்ஜியம் - 22

“என்ன... நாகக்குடமா?”

“ஆம்... அது கள்வர்களைக் கண்டறிய நாம் பின்பற்றும் ஒரு வழி முறை. உண்மை அடியார் என்றால் அவரை அரவம் தீண்டாது. பொய்யானவன் என்றால் நிச்சயம் தீண்டும்.”

- மந்திரி சற்று செருக்கோடுதான் சொன்னார். ஆனால் குலசேகரன் மனம் அதைக் கேட்டு கலங்கியது. மாலடியாரைச் சிறுமைப்படுத்தும் ஒரு பெரும் பாவச்செயலாகவும் தோன்றியது. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தான். அந்த மந்திரிகள் துளியும் யூகித்திராத முடிவு அது!

குலசேகரன், தான் எடுத்த முடிவை தனக்குள் வைத்திருந்து, தன் மந்திரிகள் நாகக் குடுத்தோடு வந்தபோது அதைச் செயல்படுத்தத் தயாரானான். அதற்குள்ளாகவே அரண்மனையை விட்டு அநேக மாலடியார்கள் வெளியேறிவிட்டிருந்தனர்.

அரண்மனையோடும் ஆற்றோடும் விலகி இருப்பதே உத்தமம் என்பதை அவர்கள் புரிந்தும் கொண்டனர். இரண்டிலுமே ஆழம் தெரியாமல் காலை விட்டால் மூழ்கிப் போவது உறுதி என்பதும் புரிந்தது அவர்களுக்கு. இதை எண்ணி பெரிதும் கவலைப்பட்ட குலசேகரன் நாகக் குடத்துடன் எதிரில் வந்த மந்திரிப் பிரதானியைத் தடுத்து நிறுத்தி, அந்தக் குடத்துக்குள் தான் கை விடத் தயாரானான்!

‘`ஐயோ மன்னா...'’ என்று பதறினார் அந்த மந்திரி. அவர் மட்டுமல்ல, அங்கிருந்த அனைவரை யும் அந்தச் செயல் திகைப்பில் ஆழ்த்தியது.

“பிரதானிகளே! அனைத்து மாலடியார் சார்பாகவும் நானே குடத்துக்குள் கையை விடுகின்றேன். மாலடியார் தவறு புரிந்திருந்தால், அரவம் என்னைத் தீண்டி அதை நிரூபிக்கட்டும். அல்லாவிடில் அது தீண்டாது ஒழியட்டும். எக்காரணம் கொண்டும் மாலடியார்க்கு இது போல் ஒரு பெரும் சோதனையை நான் அளிக்கத் தயாராயில்லை” என்று கூறிக்கொண்டே குடத்துக் குள்ளும் கைகளை விட்டுவிட்டான் குலசேகரன்!

ஆனால் அரவம் அவனைத் தீண்டவில்லை. இருப்பினும் மந்திரிப்பிரதானியர் அரவக் கடிக்கு தாங்களே ஆளாகிவிட்டது போல் உணர்ந்தனர். திருதிருவென விழித்து செய்வதறியாது நின்றனர்.

மாலடியார் ஒரு பிழையும் செய்ய வில்லை என்பதும் ருசுவாயிற்று. மந்திரிப் பிரதானியர் குலசேகர மன்னனின் காலடியில் விழுந்து மன்னிப்பு கோரினர். உண்மையில் ரத்தின ஹாரமெல்லாம் காணாமல் போகவில்லை; அது போகவைக்கப் பட்டது!

“மன்னா! மாலடியார்கள் அரண்மனைக்குள் நடமாடுவதை குறைக்கவே நாங்கள் இவ்வாறு செய்தோம்” என்று கதறினர்.

“தாங்கள் ஒரு மன்னர். நாடாளும் பொறுப்பு மிக்கவர். தாங்கள் அதை மறந்து இறைவழி சென்றால் நாடு என்னாவது’ - என்றும் கேட்டனர்.

“அப்படியானால் நாடாளும் மன்னனுக்கு இறைவழி கூடாதா?” - குலசேகரன் திகைப்போடு எதிர்க் கேள்வி கேட்டான்.

“நாங்கள் அப்படிச் சொல்ல வில்லை...”

“வேறு எப்படிச் சொல்கிறீர்கள்?”

“தாங்கள் பெரும் வீரம்  காட்டி சேர சோழ பாண்டிய மண்டலங் களுக்கே அதிபதியாக உள்ளீர்கள். அதேநேரம், எதிரிகள் நம்மை அழிக்கக் காத்திருக்கின்றனர். அவர்கள் உங்களை மாவீரனாகக் காணும் வரைதான் இந்த நாடு நம் நாடாக இருக்கும். அவர்கள் தங்களைப் பற்றற்ற ஓர் அடியவராகக் கருதத் தொடங்கிவிட்டால் நம் நாடு சூரையாடப் படும் ஆபத்து உள்ளது மன்னா!”

மந்திரியர் கருத்து குலசேகரனை கட்டிப் போட்டது. நெடுநேரம் வரை யோசித்தவன் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான். தன் மகன் திடவிரதனை அழைத்து, “மகனே நீதான் இனி இந்த நாட்டுக்கு அரசன். நான் அந்த மாலிடம் என்னைத் தொலைத்துவிட்டவன். என்னால் இனி வில்லும் வாளும் எடுத்து போரிடவோ, ஒரு உயிரைப் பறிக்கவோ இயலாது. எத்தனை பெரும் சக்ரவர்த்தியாக இருந்தாலும் இறுதியில் அவனிடமே சென்று சேரவேண்டும். தவறினால் மீண்டும் பிறந்து உழல வேண்டும். போதும் எனக்கு இந்த அரசவாழ்வு! நான் மாலவன் அடியவனாக எஞ்சியிருக்கும் என் வாழ்நாளைக் கழித்து அவனோடு கலந்து விட முடிவு செய்து விட்டேன்.

இனி, நீ இந்த மந்திரிகள் விருப்பப்படி இந்த நாட்டை ஆட்சி செய்வாயாக. ஒரே ஒரு வேண்டுகோள்.  அடியவர்களை எக்காரணம் கொண்டும் அவமதிக்கவோ, துன்புறுத்தவோ செய்யாதே’' - என்ற குலசேகரன் சொன்னது போலவே மணிமுடி யைத் துறந்தான்; மரவுரி தரித்தான்.

“அப்பா! என்னை விட்டுவிட்டு, தாங்கள் மட்டும் இறைவழி செல்ல லாமா... நான் என்ன பாவம் செய்தேன்” என்று கேட்டாள் குலசேகரன் மகளான இளை.

“மகளே... உனக்கு இளவரசியாக வாழ விருப்பமில்லையா?”

“நான் தங்களை ஒட்டியே நடப்பவள். என்னிடம் இப்படி ஒரு கேள்வியா?”

“உனக்கு வாழ வேண்டிய வயதம்மா?”

“ஆம்... அந்த அரங்கனாகிய அழகிய மணவாளனுடன் வாழ வேண்டிய வயது...”

“மகளே என்ன இது... அரங்கனா உன் மணாளன்?”

“ஆம் தந்தையே... நான் அவனுக்கே என்னை அளித்துவிட்டேன்.”

“இது நந்த சோழனின் மகள் கமலவல்லி பேசிய பேச்சு.”

“அவள் வழியே என் வழி...”

“எனக்கு ஆட்சேபமில்லை... எச்சிலும் மலமுமாய் உண்டு உறங்கி வாழ்ந்து, கிழப்பருவம் கண்டு, எப்போது எமன் வருவான் என்று தினம் தினம் காத்திருந்து, பின்னர் பிரக்ஞையின்றி மறிப்பதல்ல வாழ்வு. நல்ல திடகாத்திரமும்  திரு உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்போதே அவனை அடைந்துவிட முயல்வதே வாழ்வு.”

“சரியாகச் சொன்னீர்கள். கமலவல்லிக்கு இரக்கம் காட்டியவன் எனக்குக் காட்ட மாட்டானா?”

“நம்புவோமம்மா... இன்றே புறப்படுவோம். இனி, திருவரங்கமே நம் வாழ்விடம். திருவரங்கனே நம் வாழ்க்கை இன்பம்!

- குலசேகரன் மகள் இளையுடன் புறப்பட்டு விட்டான்.  

- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன் - படம்: என்.ஜி.மணிகண்டன்

கலியுகத்தில்...

ரங்க ராஜ்ஜியம் - 22

ஸ்ரீமத் ராமாயணத்தில் உத்தர காண்டத்தில், கலியுகத்தில் என்னென்ன நடக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது. அவை:

1. மனம் போனபடி நடப்பதே வழி என்பார்கள். ஒவ்வொருவருக்கும் தனித் தனி நியாயம்.

2. நீதி நூல்கள் படிக்கக் கிடைக்காது.அறங்கள், தீயவர்களின் தூண்டுதல் மற்றும் பேராசையில் நடத்தப்படும்.

3. சுய விளம்பரம் செய்பவன் அறிவாளி ஆவான். போலிகள் புகழும் பெருமையும் பெறுவார்கள்.

4. ஊரார் பொருளைக் கொள்ளையடிக்கும் நபர்கள் கெட்டிக்காரர்கள் ஆவர்.

5. நெறிப்படி நடப்பவர் அறிவிலிகள்.

6. துறவிகள் அநியாயமாக செல்வம் சேர்ப்பர்.

7. ஞானம், தவம் ஆகியவை கேலிக்குள்ளாகும். பொய் பேசுபவர்கள் புலவர்கள்.

8. உண்மையாக உழைப்பவர்கள் ஏழையாக இருப்பார்கள்.

9. தற்பெருமைக்காக தானம் வழங்குவர்.

10. ஆயுதங்கள் முக்கியமாகும். விரசமான நூல்கள் பெருகும். மக்கள் உடலை வளர்ப்பார்கள்; உறுதியை மதிக்க மாட்டார்கள்.

- ஆர்.ராஜலட்சுமி, கரூர்-4.