Published:Updated:

ஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்!
ஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்!

ஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்!

பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்!

`லயம் தொழுவது சாலவும் நன்று' என்கிறது அழகுத் தமிழ். ஆனால், போற்றித் தொழுது வழிபடவேண்டிய ஆலயங்கள் பலவும், நம்மை அழவைக்கும் நிலையில் சிதிலமடைந்து கிடப்பது வேதனையான விஷயம்.

`எங்கே ஓர் ஆலயம் பாழ்பட்டுக் கிடக்கிறதோ, அங்கே நாகரீகமான சமுதாயம் வாழவில்லை என்றே பொருள்' என மிகுந்த ஆதங்கத்துடன் சொல்லிவைத்திருக்கிறார்கள் பெரியோர்கள். ஆகவே, அன்பர்களே ஆலயம் ஒவ்வொன்றையும் போற்றிப் பாதுகாப்போம்; ஆலயங்களே நம் தேசத்தின் ஆன்மா.

பெரிய புராணம் எண்ணற்ற திருத்தலங்களைச் சிறப்பித்துச் சொல்கிறது. அவற்றில் ஒன்று புத்தூர். வழக்கத்திலுள்ள திருப்பெயர் மணம்தவிழ்ந்த புத்தூர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவில் அமைந்துள்ளது இந்த ஊர்.

ஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்!

சிவபெருமான் முதிய வேதியராக வந்து, சுந்தரரின் திருமணத்தை நிறுத்தி, தடுத்தாட் கொண்ட திருக்கதை தெரியும்தானே? அப்படி அவர், சுந்தரரைத் தடுத்தாட்கொள்ள வாதம் செய்த ஊர் இதுதான். இங்கிருந்தே சுந்தரரை இறையனார் திருவெண்ணெய்நல்லூருக்கு `மூல ஓலையைக் காட்டுகிறேன்... வா’ என்று அழைத்துச் சென்றதாக திருக்கதை நீளும். அந்தக் காலத்தின் ஆட்சி நிர்வாகம் எத்தனைச் சிறப்பாக நடந்தது என்பதை இவ்வூரின் சிறப்பைக்கொண்டே மிக அற்புதமாக விளக்குகிறது பெரியபுராணம்.

இத்தகைய மகத்துவம் நிறைந்த ஊரில், சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாற்றில் பெரும் திருப்புமுனையை உருவாக்கிய தலத்தில் அமைந் திருக்கும் சிவாலயம் கவனிப்பாரின்றி கிடக்கிறது என்றால், இந்தத் தகவலைச் செவிமடுப்போரின் உள்ளம் என்ன பாடுபடும்?!

பதைபதைத்துப் போனது நம் மனம். உடனே புறப்பட்டோம் அந்தத் தலத்தை தரிசிக்க!

கைவிடப்பட்ட புராணப் பொக்கிஷ மாகக் காட்சியளிக்கிறது மணம்தவிழ்ந்த புத்தூரின் சிவாலயம். உள்ளே நுழையும் போதே மனக்குதிரை நம்மைச் சுந்தரரின் காலத்துக்கு இட்டுச்செல்கிறது. ஒவ்வோர் அடியை எடுத்து வைக்கும்போதும்... இங்கேதானே  என் ஈசன் நடந்திருப்பார்; இந்த இடத்தில் நின்றபடிதானே அந்த மலைமகள்நேசன் வாதம் செய்திருப்பார்...இதோ இந்த இடத்தில்தான் தம்பிரான் தோழன் அமர்ந்திருந்திருப்பாரோ... என்றெல்லாம் சிந்தனைகள் எழ உள்ளம் குழைந்தது.

எவ்வளவு அருமையான ஆலயம்... சீரும் சிறப்புமாகத் திகழ வேண்டிய திருக்கோயில், இப்படியா கவனிப்பாரற்று கிடப்பது? ஆங்காங்கே விரிசல் விழுந்து திகழும் சுவர்கள், அவற்றுக்கிடையே வேர்விட்டிருக்கும் செடி-கொடிகள், தரையில் கவனிப்பாரற்று கிடக்கும் சிலைகள்... பார்க்கப் பார்க்க பரிதவித்தது நம் உள்ளம்.

ஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்!

`நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்கப்
பெருங்குடை மிடைந்து செல்லப் பிணங்கு பூங்கொடிகள் ஆட
அருங்கடி மணம் வந்து எய்த அன்று தொட்டு என்றும் அன்பில்
வருங்குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூராமால்’

- என்று பெரியபுராணம் 3 பாடல்களில் புத்தூரை சிறப்பித்துப் பாடுகிறது.

`தூரிய இசைக்கருவிகள் முழங்க, அடியார்கள் வெண் சாமரம் வீசி வர, குடைகளின் நிழலில் பூங்கொடி மகளிர் திருநடனம் புரிந்து வர, சுந்தரமூர்த்தி நாயனார் அழகிய சுந்தரராக மணம் வீசி நடந்தார். அதனால், இந்தப் புத்தூர் திருத்தலம் மணம் கமழ்ந்த புத்தூராக மாறியது' என்கிறார் சேக்கிழார்.

மெள்ள வலம் வரத் தொடங்கினோம். வன்தொண்டர் எனும் சுந்தரரை ஆட்கொண்ட ஈசன், இங்கு வருபவர்களை எல்லாம் ஆட்கொள் வார்; சத்தியமாகப் பேரருள் புரிவார் என்பதை ஆலயமெங்கும் நிறைந்திருக்கும் இறை சாந்நித்தியத் திலிருந்து உணர முடிகிறது.

சுந்தரமூர்த்தி நாயனார் மணமுடிக்கத் தயாரானபோது, ஈசன் அவரை தடுத்து நிறுத்தி அடிமை சாசன ஓலையைக் கொடுத்து அழைத்துச் சென்றதால், இந்த தலம் ‘ஓலை’ என்றும் அழைக்கப் பட்டதாக ஊரார் சொல்கிறார்கள். அபூர்வமாக சில ஆலயங்களில் மட்டுமே ஈசன் சந்நிதி மேற்கு நோக்கி அமைந்திருக்கும். இங்கும் ஈசன் மேற்கு முகமாகவே அருளுகிறார். அகத்தியர் தனது யாத்திரையின்போது வழிபட்ட ஆலயங்களில் புத்தூர் ஆலயமும் ஒன்று என்கிறார்கள்.

ஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்!

ஆலய சுற்றுப்பாதையில் கணபதி, முருகப் பெருமான், துர்கை, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், தென்முகக் கடவுள், லிங்கோத்பவர், பிரம்மா, காலபைரவர், நவகிரகங்கள் என சகல பரிவார தெய்வங்களும் வீற்றிருக்கிறார்கள். தெய்வ மூர்த்தம் ஒவ்வொன்றும் அழகான வேலைப்பாடுகள் கொண்டவை. குறிப்பாக, கோயிலில் சரக்கொன்றை மரத்தின் கீழ் அருளும் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பெரிய விஷ்ணு துர்கையின் சிலை நேர்த்தியான வடிவழ கோடுத் திகழ்கிறது. அதேபோல், இந்த ஆலயத்தைச் சுற்றிலும் கிடைத்த மேலும் பல தெய்வச் சிலை களை ஓரிடத்தில் குவித்துவைத்துள்ளனர்.ஆலயத்துக்கு வெளியே சோழர் காலத்து நந்தி சிலை ஒன்றும் உள்ளது.

வலத்தை நிறைவு செய்து கருவறையை நோக்கி நகர்ந்தோம். கருவறையில் சொக்கநாதப் பெருமானும், மீனாட்சியம்மையும் ஏகாந்தமாக அமர்ந்து அருளாசி புரிகிறார்கள். கருவறைக்கு வெளியே இடதுபுறமாக, தடுத்தாட் கொண்டீஸ்வரர் லிங்கத் திருமேனியாக வீற்றிருக்கிறார். அவர் அருகிலேயே முதிய வேதியர் வடிவிலான ஈசன் புன்னகையோடு எழில்கோலம் காட்ட, சுந்தரரும் காட்சியளிக்கிறார்.

 வேறெங்கும் காண்பதற்கரிய அந்த அற்புத தரிசனத்தைக் கண்டு, மெய்யுருகி நின்றோம். உள்ளத்தை அகலாக்கி, கண்ணீரை நெய்யாக்கி பக்தி எனும் தீபமேற்றி வேண்டினோம்... `ஐயனே, தடுத்தாட்கொண்ட மெய்யனே... எம்மையும் ஆட்கொள்வாய்’ என்று மனமுருகப் பிரார்த்தித்து வணங்கினோம்.

`ஆவதிது கேண்மின் மறையோர்! என் அடியான் இந்
நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது” என்றான்
தேவரையும் மாலயன் முதன் திருவின் மிக்கோர்
யாவரையும் வேறு அடிமை யாவுடைய எம்மான்'

ஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்!

சகல தேவர்களுக்கும் தலைவனான ஈசனே, `சுந்தரன் எனக்கு அடிமை' என்று முழங்கிய திருத்தலம் இது. வெகுண்டெழுந்த சுந்தரர் ‘பித்தனோ மறையோன்’ எனப் பாடிய இடம் இது. ‘பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக என்று எப்படியானாலும் நீ எனக்கு ஆட்பட்டவன்' என ஈசனே உறுதி அளித்த கோயில் இது.

ஈசன், சுந்தரரின் மணத்தைத் தடுத்து நிறுத்திய தால், மணம் தவிர்த்த புத்தூர் என்று பெயர்பெற்ற ஊர் இன்று மணம் தவிழ்ந்த புத்தூராக மாறியுள் ளது.  இதனாலே இந்த ஆலயம் திருமண வரமருளும் தலமாகவும் மாறியுள்ளது. இந்த இடத்தில் ஒரு திருக்கதையை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஈசனிடம் வாதம் புரிந்து தோற்ற சுந்தரர் அவரோடு செல்ல ஆயத்தமானார். இதனால், சுந்தரரின் கரம் பற்றக் காத்திருந்த செங்கமலப் பூங்கோதை தவித்துப்போனார். அவருக்கு ஆறுதல் சொல்லி சுந்தரர் கிளம்பினார். திருவெண்ணெய் நல்லூரில் ஈசன் சுந்தரரை ஆட்கொண்ட செய்தியைக் கேள்விப்பட்டதும், பூங்கோதை வழக்கு நடந்த தலத்துக்குச் சென்று ஈசனிடம் முறையிட்டார். ஈசன், பூங்கோதையை அவர் பிறந்த ஊரான புத்தூருக்குச் சென்று தவமியற்றி தன் திருவடியை வந்து சேரும்படி பணித்தார். அதுமட்டுமல்ல, புத்தூர் ஆலயம் வந்து வழிபடுபவர்களுக்குத் திருமண வரம் அருளுவதாகவும் ஈசன் பூங்கோதைக்கு வாக்களித்தாராம்.

அதன்படியே, செங்கமலப்பூங்கோதையும் ‘என்னை மணம் புரியும் பொருட்டு எனக்காக ஸ்வாமியையே எதிர்த்துப் பேசிய ஆலால சுந்தரரே எல்லாப் பிறவியிலும் மணாளன்’ என்று வைராக்கியம் மேற்கொண்டு, புத்தூர் சிவாலயத்திலேயே தவமியற்றி சிவபதம் எய்தினார் என்கிறார்கள் இந்த ஆலய நிர்வாகிகள். சிவனடி சேர்ந்த பூங்கோதை, கயிலாயத்தில் சுந்தரரைக் கரம்பற்றினார் என்றும் ஒரு தகவல் சொல்கிறார்கள்.

ஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்!

சடங்கவி சிவாசார்யரின் திருமகளாக அவதரித்து, கண நேரமே கரம் பற்றிய சுந்தரரையே மனதில் வரித்துக்கொண்டு நல்லருள் பெற்ற செங்கமலப்  பூங்கோதையையும் மனமார வேண்டிக்கொண்டோம் (கமலஞானப் பூங்கோதை என்றும் இவர் அழைக்கப்படுகிறார்). சடங்கவி சிவாச்சாரியார் வழி வந்தவரே அருணந்தி சிவாசார்யர் என்றும்  ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

முன்பொரு காலத்தில் இந்த ஆலயத்துக்கு அருகே பிரமாண்டத் திருக்குளம் இருந்ததாகவும், அதில் சுந்தரர் வந்த தேர், குதிரை எல்லாம் சென்று மறைந்ததாகவும் கூறப் படுகிறது.

இத்தனைச் சிறப்புகள் இருந்தும் என்ன பயன்... அனு தினமும் வழிபாடுகள் தடையின்றி நடைபெற வேண்டாமா, அன்று நடந்த விழாக்களும் வைபவங்களும் குறைவின்றி தொடரவேண்டாமா?

ஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்!அன்பு வாசகர்களே நீங்கள் அறியாது ஒன்றுமல்ல. `சீரும் சதமல்ல செல்வமும் சதமல்ல தேசத்திலே யாரும் சதமல்ல... ஈசனே நின்தாள் ஒன்றே சதமென்று இருப்பவர்களுக்கு சந்தோசம் விலகுவதே இல்லை' என்கின்றன ஞானநூல்கள்.

அவ்வகையில் சிவத்தை சிந்தையில் நிறுத்தி , அவனருளும் ஆலயத்துக்கான திருப்பணியில் பங்கேற்பது எப்பேர்ப்பட்ட  பாக்கியம்?! சிவாலய திருப்பணிக்கு ஈவது, 32 வகை அறங்களுள் சிறப்பானது என்கின்றன புராணங்கள். தடுத்தாட்கொண்ட இந்த ஈசன் கோயிலின் திருப்பணிக்கும் அள்ளிக்கொடுங்கள் அல்லது கிள்ளிக்கொடுங்கள். எதுவுமே முடியாவதர்கள், உங்கள் சுற்றத்தாரிடம் இந்த ஆலயம் பற்றி சொல்லிக்கொடுங்கள். முடிந்ததை ஆலயத் திருப்பணிக்கு தாருங்கள்! ஏனென்றால் மாடு, மனை, வீடு, வாசல் என்று ஆயிரம் சேமிப்புகள் நமக்கு இருந்தாலும் இக-பரம் இரண்டிலும் நமக்கு நற்றுணையாகும் சேமிப்பு இதுபோன்ற சிவப்புண்ணியமே!

- மு. ஹரி காமராஜ்,

படங்கள்: பெ.ராகேஷ்

பக்தர்கள் கவனத்துக்கு...

ஸ்வாமி: அருள்மிகு சொக்கநாதர் தடுத்தாட்கொண்டேஸ்வரர்

அம்பாள்: மீனாட்சியம்மை

ஸ்தல விருட்சம்: பூவரசு

திருத்தலச் சிறப்பு: சுந்தரை சிவனார் தடுத்தாட்கொண்ட தலம்.

பிரார்த்தனைச் சிறப்பு:
இந்த ஆலயம் திருமண வரமருளும் தலமாகவும் மாறியுள்ளது. விதி வசத்தால் மதியிழந்து தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டவர்கள், இங்கு வந்து இந்த தடுத்தாட் கொண்டேசனை வணங்கினால் நலம் பெறுவார் என்கிறது தல புராணம்.

எப்படிச் செல்வது..?: கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவில் ஆனத்தூர் வழியில் மணம் தவிழ்ந்த புத்தூரில் ஆலயம் அமைந்துள்ளது. பண்ருட்டி லிருந்து அரசூர் செல்லும் பாதையில்  மணம் தவிழ்ந்த புத்தூர் என்னும் பேருந்து நிலையத்தில் இறங்கி ஆலயம் செல்லலாம். விழுப்புரத்திலிருந்து இந்த ஊர் 15 கி.மீ தொலைவில் உள்ளது.

வங்கிக் கணக்கு விவரம்:

A/c Name: SUNDARAR
VAZHIPAADU MANDRAM,
A/c.No: 2754101014798
Bank Name: Canara Bank
Branch: Panruti
IFSC No: CNRB0002754

மேலும் விவரங்களுக்கு: டி. குமார்: 9751988901

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு