Published:Updated:

‘வணங்கினேன்... விடியல் பிறந்தது!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘வணங்கினேன்... விடியல் பிறந்தது!’
‘வணங்கினேன்... விடியல் பிறந்தது!’

வாசகர் இறையனுபவம்

பிரீமியம் ஸ்டோரி
‘வணங்கினேன்... விடியல் பிறந்தது!’

சிறுவயதிலேயே தந்தையை இழந்த எனக்கு அண்ணனே தந்தையாக இருந்து படிக்கவைத்துக்  காப்பாற்றி வந்தார். கல்லூரி படிப்பை முடித்த பிறகும் நிரந்தரமான வேலை எதுவுமின்றித் தவித்து வந்தேன். எப்போதும் கோபம், தீய பழக்கங்கள் என்று வளர்ந்து வந்தேன். கடவுள் நம்பிக்கை கொஞ்சமும் கிடையாது. வீட்டில் எந்த வழிபாடு செய்தாலும் கேலியும் கிண்டலும் செய்து வீட்டில் உள்ளவர்களை நோகடிப்பேன். 

இந்த நிலையில் யாரோ ஜோதிடர் ‘திருமணம் நடந்தால் நல்ல வேலை கிடைக்கும்’ என்று கூறினார் என்பதற்காக எனக்குத் திருமணமும் செய்து வைத்தார்கள் என் அண்ணனும் அண்ணி யும். அதன்பிறகு, ஏதேதோ வேலை கிடைத்தும் ஒன்றும் நிலைக்கவில்லை. என்னுடைய முன்கோபமும் முரட்டுச் சுபாவமும் எந்த வேலையையும் நிலையாக இருக்கவைக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.

தொடர்ந்து, ஓர் ஆண் குழந்தை பிறந்த சூழலிலும் வருமானம் எதுவுமின்றி நானும், என் மனைவியும், பிள்ளையும் அண்ணனுக்கு பாரமாகவே இருந்து வந்தோம். ஆனாலும் அவர்கள், எங்களை எவ்வித கவலைக்கும் ஆளாகாமல் வைத்துக்கொண்டார்கள். 

‘வணங்கினேன்... விடியல் பிறந்தது!’

நாளாக நாளாக எனக்குள் உறுத்த ஆரம்பித்தது. 2002-ம் ஆண்டில் நண்பர்களோடு இணைந்து தொழில் தொடங்கலாம் என்று தீர்மானித்து, அண்ணனிடம் ஆலோசித்தேன்.

என்னுடைய எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றும் அவர், உடனே உற்சாகமளித்து 2 லட்ச ரூபாய் பண உதவியும் செய்தார். கடுமை யான வறுமைச் சூழலிலும் அண்ணியாரின் நகை களை அடகு வைத்துத்தான் அந்தப் பணத்தை அளித்தார்.

எனக்குத் தெரியாத எலெக்ட்ரானிக் விற்பனைத் தொழிலில் நண்பர்களை நம்பி இறங் கினேன். ஆனால், ஒரு வருடம் கடந்த நிலையிலும் வருமானம் வரவில்லை. கிடைக்கும் பணம் கடை வாடகை, மின் கட்டணம், போக்குவரத்து செலவு என்று தீர்ந்து விட்டதாகச் சொல்வார்கள் நண்பர்கள்; உண்மையும் அதுதான்.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒருநிலையில் `கடையை மூடிவிடலாம் நாங்கள் வேறு வேலைக்குப் போகிறோம்’ என்று நண்பர்கள் கூற, எனக்கோ கடையை  மூடச் சம்மதம் இல்லை. அவர்களோ அவர்களின் பங்கைக் கொடுத்தால் விலகிவிடுவதாகக் கூறிவிட்டார்கள். ஏற்கெனவே 2 லட்ச ரூபாய் கடன் வேறு கழுத்தை நெரித்தது. ஆகவே, வேறுவழியின்றி கடையை விட்டுவிட்டேன்.

கடன் நெருக்கடி, வேலை இல்லாத சூழல், மனைவி மக்களின் எதிர்காலம் குறித்த பயம் எனத் தவித்துக்கிடந்த நான், ஒருநாள் `தற்கொலையே முடிவு’ எனவும் தீர்மானித்துவிட்டேன். அதற்காக முனையும் தருணம்... யதேச்சையாக கண்ணில் பட்டது ஷீர்டி ஸ்ரீசாயியின் திருவுருவப் படம். அந்தப் படத்தின் முன்னே தீபம் சுடர் விட்டுக் கொண்டிருக்க, அதன் ஒளியில் பிரகாசித்த பாபாவின் திருமுகம் ஒரு புன்னகையோடு என்னை `அருகில் வா’ என்று அழைப்பதுபோல் தோன்றியது.

நானும் அவரை நெருங்கினேன். வாழ்வில் முதன்முறையாக என் கரங்கள் இணைந்து குவிந்தன. மடை திறந்த வெள்ளமாகக் கண்ணீர் வடிந்தது. சாயிநாதரின் கருணை மிக்க முகம் எனக்கு ஆறுதலைத் தந்தது. ‘இத்தனை நாள்கள் நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறக்கவில்லை’ என்பதாக அவரின் புன்னகை உணர்த்தியது.

சில நொடிப் பொழுதுகள்தான் எதிர்மறை எண்ணங்கள் அப்படியே அமுங்கிப்போக, உள்ளத்தில் ஒரு துடிப்பு-நம்பிக்கை தொற்றிக் கொண்டதை என்னால் உணர முடிந்தது. அந்தக் கணத்தில் சாய்நாதரைப் பற்றிக்கொண்டேன்.

வெகு நேரம் அழுததால் மனம் லேசாகித்  தெளிவுபெற்றது. தற்கொலை எண்ணம் எத்தனை அசிங்கமானது என்று உணர்ந்தேன். மனைவி, மக்களை விட்டுவிட்டுப்  போவது எத்தனைத்  துரோகம் என்று உணர்ந்தவன் அந்த எண்ணத்தை அடியோடு துடைத்தெறிந்து விட்டு, நிம்மதியாக படுக்கச் சென்றேன். அடுத்தடுத்த நாள்களிலேயே  புதுப்புது வாய்ப்புகள் வாழ்வில் பிடிப்பு என பேரானந்த சம்பவங்கள் என்னை மெள்ள மெள்ள ஆக்கிரமிக்கத் தொடங்கின.

இன்று வரை எவரிடமும் இந்தச் சம்பவத்தை பகிர்ந்ததில்லை. வாசகர் அனுபவத்தில் எழுதினால், என்னைப்போலப் பலரும் பயன் அடைவார்களே என்றுதான் எழுதுகிறேன். இன்று ஒரு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறேன். கூட்டுக்குடும்பமாக அமோகமாக வாழ்கிறேன். எல்லாம் சாயிநாதரின் பேரருள்!

நாத்திகம் மறைந்து ஆத்திகம் மலர்ந்த அந்த இரவுப்பொழுதே, என்னைப் பொறுத்த வரையிலும் அற்புதமான விடியல் தருணம் என்பேன். சாயிநாதன் தாள் சரணம்! குழப்பமான நேரத்தில் என்னை தெளிவடைச் செய்த சாயிநாதரை என்றென்றும் மறவேன்.

- எம். சிவகுருநாதன், கடலூர்

 ‘வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை’

‘வணங்கினேன்... விடியல் பிறந்தது!’

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டுக்கு அருகில் அமைந்திருக்கிறது செட்டிபுண்ணியம்; வைணவ திருத்தலங்களில் பிரசித்திபெற்றது. இங்கு ஸ்வாமி தேசிகருக்கு, ஸ்ரீஹயக்ரீவர் திருக்காட்சி கொடுத்ததுடன், சகல கலைகளிலும் மேன்மை அடையும்படி அருள்பாலித்தார் என்கிறது தலபுராணம்.

ஸ்ரீவரதராஜ பெருமாள் மூலவராகவும், ஸ்ரீயோக ஹயக்ரீவர் உற்சவராகவும் அருளும் இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டால், கல்வியில் நல்ல முறையில் தேர்ச்சி பெறலாம் என்பது ஐதீகம்.

ஆண்டுதோறும் இந்தக் கோயிலில், `பள்ளி மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களோடு  தேர்ச்சி பெறவேண்டும்' எனும் சங்கல்பத்தோடு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டும், வரும் 3.2.19 ஞாயிறு அன்று (காலை 6 முதல் 7.30 மணி வரை) விசேஷ வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை நடைபெற உள்ளது. பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமியின் திருவருளைப் பெற்று வரலாம். பூஜையின் பொருட்டு திருக்கோயிலின் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் (திருக்கோயில் தொடர்புக்கு: 99429 93770).

- பி.ரங்கநாதன், செங்கல்பட்டு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு