Published:Updated:

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

பிரீமியம் ஸ்டோரி

ஐயப்பமார்கள் அவசியம் படித்தறிய வேண்டிய அற்புதக் கதை!

தேவ லோகம் மகிஷியின் வசப்பட, தேவர்கள் கலங்கினார்கள். அமிர்தத்தை உண்டதால் தேவர்களுக்கு மரணம் இல்லாத வாழ்வு கிடைத்துவிட்டது. ஆனால், மகிஷியின் கொடுமைகளைவிட மரணமே மேல் என்று தோன்றியது தேவர்களுக்கு.

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

அவர்களை ஆற்றுப்படுத்திய தேவகுரு ஓர் உபாயம் சொன்னார். அதன்படி, தேவர்கள் ஐயனின் திருச்சபையை நாடி விரைந்தார்கள். அங்கு தேஜோமயமான பொன்னம்பலத்தில் அமர்ந்து அருளாட்சி செய்து கொண்டிருந்த ஐயன் முன் தங்கள் குறைகளைக் கூறி முறையிட்டார்கள்.

அப்போது அங்கு தோன்றிய சிவனார், “மகனே! அதர்மத்தின் உருவான மஹிஷியை அழிப்பது, தர்ம ஸ்வரூபனான உன்னால் மட்டுமே முடிந்த செயல். அதனால் விரைவில் நீ மானிடனாக புவியில் அவதரிப்பாய்” என்று வாழ்த்தினார். ஐயனும் பூவுலகம் செல்ல தீர்மானித்தார். அவருக்குத் தந்தையாகும் பாக்கியம் யாருக்குக் கிட்டும்? அதற்கு, ஐயன் ஏற்கெனவே ஓர் ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.

அவதாரத்தின் முன்னோட்டம்


பாண்டிய தேசத்தில், தென்கரந்தாபுரி எனும் கிராமத்தில் தாமிரபரணி தீரத்தில் ஐயன் மீது மாறாத பக்தியுடைய ஓர் அந்தணன் வாழ்ந்து வந்தார். விஜயன் என்று அழைக்கப்பட்ட அவர், தவறாது செய்த தர்ம காரியங்களால் தர்மதீரன் என்று போற்றப்பட்டார். அனைத்து வளங்களையும் குறைவின்றி பெற்ற அவருக்குப் பிள்ளை இல்லாத குறை இருந்தது.

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...அதன்பொருட்டு, சாஸ்தாவை தொழுது வந்தார் விஜயன். இந்த நிலையில் துறவி ஒருவர் அந்தணரின் இல்லம் தேடி வந்தார்.

“அந்தணனே வருந்தாதே. உன் தவம் ஈடேறும் காலம் நெருங்கியதாலேயே ஐயன் என்னை இங்கே அனுப்பி வைத்திருக்கிறார். பரம்பொருளான ஐயனின் தாரக மந்திரத்தை நான் உனக்கு உபதேசம் செய்கிறேன். அதனை ஜபித்துக் கொண்டு மேற்கு திசை நோக்கிச் செல்வாய். அங்கே, ஆகாய கங்கையே பூவுலகில் இறங்கி பம்பை நதியாகப் பாய்வதைக் காண்பாய். அதில் நீராடி, மேலும் தொடர்ந்து மலைக்கு மேல் செல்வாய். அங்கே ஓர் யோகினி உனக்கு வழிகாட்டுவாள்” என்று கூறி, விஜயனுக்கு சாஸ்தாவின் மூல மந்திரத்தை உபதேசித்தார் துறவி.

அதன்படியே மேற்கு நோக்கி பயணித்து, பம்பையில் நீராடியபிறகு, யோகினியை தரிசித்தார் விஜயன். அவரிடம்,  ``வடக்கு நோக்கி சற்று தூரம் தாண்டி, ஐயனை வானவர் பூஜை செய்வதற்காக உருவாக்கிய தேவகங்கை அருவி போல் பாயும் இடத்துக்குச் செல்வீராக'' என்று பணித்தாள் யோகினி. தேவ கங்கையின் வேகத்தைத்  தாங்க வேதியரால் இயலாது என்பதால், அவரிடம் ஒரு கும்பத்தைக் கொடுத்து அனுப்பினாள் யோகினி.

அவள் சொன்னபடியே குறிப்பிட்ட அருவியை அடைந்த விஜயன், அருவி நீரை நோக்கி கும்பத்தை நீட்டினார். நீரின் வேகம் தாளாது கும்பம் விழுந்து சிதறியது. நீர்க்குடம் விழுந்த இடம் குழிவுற்றது. ஐயனின் கருணையை எண்ணி வியந்தபடி அந்த இடத்தில் தேங்கிய நீரில் முழுகி எழுந்தார் விஜயன்.

அப்போது, அவருடைய கர்மவினைகளாகிய ப்ராரப்தம், ஸஞ்சிதம், ஆகாம்யம் ஆகிய மூன்றும்,  மூன்று பறவைகளாக உருக்கொண்டு அவரின் உடலினின்று வெளிவந்து, விண்ணில் பறக்க முயன்று முடியாமல் தரையில் வீழ்ந்தன. வேதியரின் பாவங்கள் அடியோடு தொலைந்தன.

அடுத்த கணம், அந்த வேதியரின் முன் ஒரு சின்னஞ்சிறு குழந்தையாக வில்லும் சரமும் ஏந்தி, சிலம்பும் சலங்கையும் குலுங்க, அபய ஹஸ்தத்துடன் புன்னகை புரியும் முகத்துடன் ஐயன் தோன்றினார். காணக்கிடைக்காத கடவுளைக் கண்ணாரக் கண்ட விஜயன் பேச்சற்ற வனாக, செயலற்றவனாக தன்னை மறந்து ஐயனைத் தொழுது நின்றார்.

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

“விஜயா! உன்னால் உருவான இந்த குளம், கும்பம் உடைந்து உருவானதால் ‘கும்ப தளம்’ எனும் பெயருடன் தீர்த்தமாக, உலகோர் உறும் துயர் தீர்க்கும் மருந்தாகட்டும்” என்று உரைத்தார்.

வரத்தினை பெற்று மகிழ்ந்த வேதியன், தாரகப் பொருளின் தத்துவ வடிவத்தினை காட்டியருள வேண்டினார். மூவருக்கும் தேவருக்கும் காணக்கிடைக்காத கோலம், அவருக்குக் கிட்டியது!

“என் உண்மை வடிவை காண வேண்டி எமை வேண்டிய பக்தனே! உன் ஊனக் கண்களால் எனை என்றுமே காணமுடியாது. நான் தரும் திவ்ய பார்வையால் என்னைக் காண்பாய்” என்று கூறிய ஜகத்குருநாதன், தன் அருளால் விஜயனின் அஞ்ஞானம் நீக்கி ஞானக்கண்ணினை அளித்தார். அதைக் கொண்டு வானளாவிய பகவானின் திருவடிவைக் கண்டார் விஜயன். ஆதியந்தம் இல்லாத பெருஞ்ஜோதியே வடிவம். அண்ட சராசரமும் அதில் ஒரு பகுதி.

மூவர், தேவர், அசுரர், அமரர், மறையவர், மாமுனிகள், விண்ணோர், மண்ணோர், யக்ஷர், கின்னரர், ஜடமும் - ஜீவன் முக்தரும் என சகல உலகங்களில் வாழும் சர்வ பூதங்களும் பூதநாதனின் அவ்வடிவத்தின் அங்கங்களாயினர். தரணிவாழ் உயிரனைத்தும் தலைவனின் தேகத்துள் திரும்பத் திரும்ப மறைந்தும் தோன்றியும் வெளிப்பட்டன.

கதிரவனும், கனலும், சந்திரனும் மூன்று கண்களாயினர். நாசியாக நாரணியும், குறுநகையாக கௌரியும், நாக்காக வாக்தேவியும் அமைந்தனர். சிரசு ஸத்யலோகமானது. கண்டம் வைகுண்டமானது; கடிமார்பு கயிலாயமானது; ஓங்காரம் ஒலியானது.

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

அயனும், அமரேந்திரனும், சகல தேவாதி தேவரும், பரமேஸ்வரனும், பரந்தாமனும் அவர்கள் எடுத்த அவதாரங்களும் பராயகுப்தனின் தேகமெங்கும் வியாபித்திருந்தனர். அதல, விதல, பாதாளங்கள் ஐயனின் இடைக்குக் கீழே கால் வரை பரவியிருந்தன. பலகோடி பிரமாண்டங்களும் அங்கு நிலை பெற்றிருக்கும் புவனங்களும் ஐயனது தேஜஸில் தோன்றியவண்ணம் இருந்தன.

கோடி சூர்ய பிரகாசம் கொண்ட ஐயனின் தோற்றம், விச்வமெலாம் கடந்த ஜோதியாக நொடிக்கு நொடி கூடிக்கொண்டே போக, திவ்ய பார்வையைப் பெற்றிருந்தும், தொடர்ந்து அதனைக் காண முடியாமல் விஜயனின் கண்கள் கூசிட, பார்வையை இழந்ததுபோலாகி மயக்கமுறும் நிலையை அடைந்தார் விஜயன்.

“ஐயனே! தங்கள் விச்வரூபத்தைக் காணும் சக்தி எவருக்கும் இல்லை. ஆகையால் கருணாநிதியான தாங்கள், பழைய திருவடிவில் அருளவேண்டும்” என்று வேண்டினார். உடன் ஐயனும் கோடி கோடி தேஜோமண்டல ஸ்வரூபமான தன் தோற்றத்தை விடுத்து, பழைய வடிவில் காட்சியளித்தார்.

மேலும், “விஜயா! உனக்கு வேண்டிய வரம் என்ன?” என்று கொஞ்சு மொழியில் கேட்டார்.

குழந்தைப் பேற்றினை கேட்க வந்த விஜயன் குழந்தை வடிவில் வந்த கடவுடளைக் கண்டதும் அவர் மேல் காதல் கொண்டு, “ஐயனே! நீயே எனக்கு மகனாகப் பிறக்கவேண்டும்” என்று வேண்டினார். கருணைக்கடலான சாஸ்தா, அவனுக்கு வரமளித்தார்:

“விஜயா! நீ விரும்பிய வரத்தினை உனது அடுத்த பிறவியில் அருளுகிறேன். இப்பிறவியில் ஒரு நற்புத்திரனைப் பெற்று உன் வம்சம் தழைத்தோங்கச் செய்வாய்.

அடுத்தப் பிறவியில் நீ அரச குடும்பத்தில் மன்ன னாகப் பிறந்து, இதே பம்பையாற்றங்கரைக்கு வருவாய். அங்கே, நானே உன்னிடம் குழந்தையாக வருவேன். என்னை, பெற்ற பிள்ளையாக வளர்க் கும் பாக்கியம் உனக்குக் கிட்டும்” என்று அருளி மறைந்தார்.

மணிகண்டனாக அவதரித்த மஹாசக்தி

கவனால் ஆட்கொள்ளப்பட்ட விஜயன், மறு பிறவியில் உலகோர் போற்றும் பாண்டிய வம்சத்தில், ராஜசேகர பாண்டியன் என்ற அரசனாகப் பிறந்தார்.

அப்பிறவியிலும் பிள்ளையில்லா குறையுடன் இறைவனை வேண்டி வந்த ராஜசேகரன், முன்னர் நடந்த நிகழ்ச்சிகள் ஏதும் அறியாதவராக, தன் குறையை எண்ணி வருந்தி வந்தார். விதி -  அதன் போக்கில் நம்மை அழைத்துச் செல்லும் எனும்படி, காட்டிலுள்ள விலங்குகளை வேட்டையாடப் புறப்பட்ட மன்னன், பம்பை ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தார்.

அவதாரத்துக்கான முன்னோட்டத்தை ஏற்கெனவே ஏற்படுத்திவிட்ட பகவான் பூதநாதன், தேவர்கள் துயரம் தீர்க்கும் தீர்மானத்துடன், ஒளி மயமான ஒரு சிசுவின் வடிவை எடுத்துக் கொண்டு ஸாக்ஷாத் ஆகாச கங்கையே பூவுலகில் நதியாகப் பாயும் பம்பையின் கரையில் தோன்றினார்.

அவதார நோக்கத்துக்காகப் புறப்பட்ட தன் மகனுக்கு, நவரத்தின மணிமாலையை கழுத்தில் அணிவித்து ஆசீர்வதித்து அனுப்பினார் பரமேஸ்வரன்.

வேட்டையை முடித்த களைப்பில் மாலை வேளையில் குளித்து இறைவனை நாடி தியானத்தில் இருந்த மன்னனை, ஒரு குழந்தையின் அழுகுரல் எழுப்பியது. அதிசயிக்கத்தக்க வகையில், காட்டுக்குள் கேட்கும் குழந்தையின் குரலைக் கேட்டு திகைத்த, மன்னன் அழுகுரல் வரும் திசை நோக்கி விரைந்தான்.

அவன் சென்றடைந்த இடத்தில், திடீரென ஓர் ஒளி தோன்றியது. அங்கே கழுத்தில் ரத்தின மாலையுடன், கோடி சூர்ய பிரகாசத்துடன், தங்கத்துக்குள் பதித்த வைரம் போல ஜொலித்தபடி ஓர் ஆண் குழந்தை படுத்துக்கொண்டிருந்தது.

கை, கால்களை உதைத்துக்கொண்டும், அழுது கொண்டும் இருந்த அந்தக் குழந்தையைக் கண்ட மன்னன் மெய்சிலிர்த்துப் போனான். குழந்தை பாக்கியம் இல்லாத அந்த மன்னன் ஒருவிதமான குழப்பத்துடன், குழந்தையை வாரி எடுத்தான். அடுத்த நொடி... குழந்தை அழுகையை நிறுத்தியது. மன்னனின் முகத்தையே பார்த்தது. பிறகு சிரித்தது. நெக்குருகிப் போனான் மன்னன்.

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

திடீரென அங்கு முனிவர் ஒருவர் தோன்றினார்.

“மன்னா! இவன் அருந்தவத்தால் தோன்றிய அற்புதன். பிள்ளையில்லாத நீ இவனை உன் மகனாக வளர்த்து வா.

கழுத்தில் நவரத்தின மணிமாலை கொண்ட இவனை மணிகண்டன் என்றே பெயரிட்டு அழைத்து வா. இவனது பன்னிரண்டாவது வயதில், இவனது மகத்துவம் தானே வெளிப்படும். இது தெய்வ ரகசியம்” என்று கூறி மறைந்தார்.

மன்னனும் வேறு யோசனையே இல்லாமல் குழந்தையை அரண்மனைக்குக் கொண்டு சென்றான். மகாராணியின் ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை. குழந்தையை அள்ளி எடுத்து நெஞ்சில் வைத்துக்கொண்டாள்.

``இது நம் குழந்தை. பிள்ளை இல்லாத நமக்கு, இறைவனே தந்த அருட்கொடை'' என்று ஆனந்தக்கண்ணீருடன் குழந்தையை கொண்டாடினாள்.

அந்தக் குழந்தை, வந்த நேரமே... எல்லோருக்கும் சொல்லொணா மகிழ்ச்சி உண்டானது. குழந்தையை ஒரு முறை கண்ணால் கண்டவர்களும் ஆனந்தம் கொண்டார் கள். இந்த உலகத்துக்கே இந்தக் குழந்தையால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கப் போகின்றன என்பதை அன்று யாரும் அறிந்திருக்கவில்லை.

சீரும் சிறப்புமாக வளர்ந்த மணி கண்டன், “அம்மா!” என்று கூப்பிட்ட பருவத்தில், ராணி கருவுற்று அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அவனுக்கு ராஜராஜன் என்று பெயரிட்டு ஆனந்தம் அடைந்தார்கள்.

இந்த இலையில் மணிகண்டனின் குருகுல வாசம் தொடங்கியது.

தன்னிடம் கல்வி பயில வந்திருக்கும் மணி கண்டன், சாதாரணச் சிறுவனல்ல; அவன் ஓர் அவதார புருஷன் என்பதை, அவனின் குருநாதர் உணர்ந்துகொண்டார். அவரிடம் அனைத்துப் பயிற்சிகளையும் வித்தைகளையும் விரைவாகவும் சிறப்பாகவும் கற்றுக்கொண்டான் மணிகண்டன்.

கல்வி நிறைவுற்று கிளம்பும் வேளையில் தன் குருநாதருக்குப் பொன்னும் பொருளுமாக அள்ளி வழங்கி, குருதட்சணை சமர்ப்பிக்க முன்வந்தான். ஆனால், குருநாதரோ குருதட்சணையாக வேறொரு வரத்தைக் கேட்டார்.

ஐயன் மணிகண்டனும் அவர் கேட்டபடியே வரம் அளித்து மகிழ்ந்தான்.

அப்படியென்ன வரம் கேட்டார் குருநாதர்?!

- புராணம் தொடரும்.. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு