மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்?

கேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்?

கேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்?

கேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்?

? ஆதிசேஷனின் அம்சமான பலராமரைத் தசாவதாரங்களில் ஓர் அவதாரமாகச் சொல்கிறோம். ஆனால், ஆதிசேஷனின் அம்சமாக அவதரித்த லட்சுமணனை ஏன் தசாவதாரத்தில் சேர்த்துச் சொல்வதில்லை?

- என்.சிவகுமார், பெங்களூரு

எங்கும் நிறைந்த பரம்பொருள், பக்தர்களைக் காக்கவும் தீயவர் களை அழிக்கவும் அவதாரம் எடுப்பதாகக் கூறியுள்ளார். ஓர் அலுவலகத்தில் முதன்மை அதிகாரியின் கட்டளைப்படியே அனைத்து செயல்களும் நடை பெறும். கடவுளின் அவதார விஷய மும் அப்படியே.

அவர், தன்னை எப்படி வெளிப்படுத்தி பக்தர்களைக் காப்பாற்றவேண்டும் என்று எண்ணுகிறாரோ அதன்படியே நடந்துகொள்கிறார். கடவுளின் அவதார நோக்கத்துக்கும் அவருடைய செயல்களுக்கும் நாம் அர்த்தம் கண்டுபிடிக்க முடியாது. பட்டிமன்றங்களோ அல்லது விவாத மேடைகளோ, நமக்குக் கடவுளின் அருளைப் பெற்றுத் தராது.

நம் தர்மத்தில் சீடனின் சந்தேகத்தைக் குருவானவர் தெளிவுபடுத்தவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அவை நம் பயணத்தைக் கடவுளை நோக்கிச் செலுத்தக்கூடியவையாக இருக்கவேண்டுமே தவிர, பின்னோக்கிப் பயணிக்க வைப்பவையாக இருக்கக் கூடாது. கடவுளின் அவதார விசேஷங்களைக் கடவுளின் பிரசாதமாக எடுத்துக்கொண்டு, பரிபூரணச் சரணாகதி அடைந்துவிட்டால், இறைவனின் அருளை எளிதாகப் பெற்றுவிடலாம். ஏன், எப்படி என்று ஆராய்ச்சி செய்வதில் தவறில்லை. ஆனால், எதற்கும் பயன் தராத ஆராய்ச்சிகள் தேவையில்லை என்பதே நம் கருத்து. இதுபோன்ற ஆராய்ச்சிகளும் அனுமானங்களும் உண்மையை உணர்வதிலிருந்து நம்மைத் தள்ளிவைத்துவிடும்.

? சாப்பிடும்போது, வடக்கு நோக்கி உட்காரக்கூடாது என்கிறார்களே... இதுகுறித்து சாஸ்திரத்தின் அறிவுரை என்ன?

கேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்?


எம்.ராமநாதன், சென்னை - 28

ஆம்! வடக்கு நோக்கி தலைவைத்து படுப்பதும், உணவு உட்கொள்வதும் கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு திசைக்கும் ஒரு சக்தி உண்டு என்று நமக்கு வழிகாட்டும் ஞானநூல்கள், ஒவ்வொரு திசைக்கும் உரிய தேவதைகளையும் கணித்துக் கூறியிருக்கின்றன. இந்தக் காரியத்தை இந்தத் திசையை நோக்கிச் செய்ய வேண்டும்; இந்தத் திசையைப் பார்த்து செய்யக் கூடாது என்றும் மிகத் தெளிவாகக் கட்டளையிட்டிருக்கின்றன.

‘உணவு’ என்பதே ‘கடவுள்’ என்று வேதங்கள் கூறுகின்றன. உள்ளே இருக்கக்கூடிய பரம்பொருளுக்கு நிவேதனமாகச் சமர்ப்பிக் கவும் நாம் இவ்வுலகில் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்திடவும் உணவானது மிகவும் முக்கியம். அமர்ந்துகொண்டுதான் உணவு உட்கொள்ளவேண்டும். அதுவும் தரையில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். நடுவில் நீர் பருகுவதையும் தவிர்க்கவேண்டும். இப்படிப் பல கட்டளைகளை நமக்கு சாஸ்திரம் கூறியிருக்கிறது. அவற்றின்படி நம் முன்னோர்கள் வாழ்ந்ததால்தான் நல்ல ஆரோக் கியத்துடனும் செம்மையான மனம் பெற்றவர் களாகவும் வாழ்ந்தார்கள்.

ஒரு காரியத்தைச் செயல்படுத்தினால்தான் அதன் பலனை நம்மால் அனுபவிக்க முடியும். வெறும் வார்த்தை ஜாலங்களினால் பயன் ஒன்றும் ஏற்படாது. இனிப்பு என்பதை நாம் உண்ணாத வரையிலும் அதன் சுவையை நம்மால் உணரமுடியாது. அதேபோல், நம் தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைக் கடைப்பிடித்து நடக்கும்போதுதான், அவற்றின் பலாபலன்களை அனுபவித்து உணரமுடியும்.

? ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால், கல்யாணம் உள்ளிட்ட சுபகாரியங்களைச் செய்யலாமா?

-எம்.ஏ.நாராயணன், மயிலாடுதுறை


இரண்டு அமாவாசை ஒரே மாதத்தில் ஏற்பட்டால், அந்த மாதத்தை ‘மலமாஸம்’ என்று கூறுவார்கள். அந்த மாதத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்வதில்லை.

எப்படி விதை விதைக்கச் சரியான காலமும் இடமும் அவசியமோ, அதேபோல் திருமணம் போன்ற சுபகாரியங்களையும் உரிய காலத்தில்தான் செய்யவேண்டும். அப்போது, அந்த தம்பதிக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் நற்பலன்கள் கைகூடும். காலம் அறிந்து காரியங்களைச் செய்வது நம் மரபு மட்டுமல்ல, நம் கடமையுமாகும்.

சிலர், ‘நாங்கள் நல்ல நேரம் பார்த்தே திருமணம் செய்துகொண்டோம். ஆனால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை’ என்றும், வேறு சிலர் ‘நாங்கள் நல்ல நேரமெல்லாம் பார்க்கவில்லை. ஆனாலும், எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது’ என்றும் கூறலாம். ஒருவருடைய கர்ம வினைகளும், மற்றும் பல காரணங்களும்தான் ஒரு பலனைத் தீர்மானிக்கின்றன.

எனவே, வீணாக வாதம் செய்வதைத் தவிர்த்து, நம் முன்னோர்களின் வழியில் மரபுகளைக் கடைப்பிடித்து நல்ல பலன்களை அடையலாம். சாஸ்திரங்களில் கூறப்பட்டவை, இந்தப் பிறவிக்கு மட்டுமல்ல, நமது முற்பிறவி சார்ந்த  தீவினைகளைப் போக்குவதற்கும் உதவும். அதேபோல், வரும் பிறவிகளிலும் நமக்கு நல்லவழி காட்டுவதுடன், பிறவியில்லாத ஆனந்த நிலையான மோட்சத்தை அளிப்பதற்கும் உதவி புரியும். 

எனவே, இதுபோன்ற முக்கியமான காரியங் களில், நம்முடைய சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள முறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

? முதல் நாள் பிற்பகலுக்கு மேல் வந்து மறுநாள் மதியம் வரையிலும் அமாவாசை இருந்தால், முன்னோர் களுக்கு எந்த நாளில் தர்ப்பணம் கொடுப்பது நல்லது?


-எஸ்.சத்தியமூர்த்தி, புதுக்கோட்டை


திதி நிர்ணயம் என்பது மிகவும் நுணுக்கமானது. ‘வைத்யநாத தீக்ஷியம்’ அல்லது ‘ஸ்ம்ருதி முக்தா பலம்’ எனும் நூலில், திதிகளை நுணுக்கமாக நிர்ணயிப்பது பற்றியும், திதிகளுக்கு உரிய கிரியை களை எந்த நாளில், எப்படிச் செய்யவேண்டும் என்பது பற்றியும் மிகச் சிறப்பான முறையில் விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன.

போதாயன சூத்திரத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அமாவாசை என்று குறிப்பிட்டிருக்கும் நாளுக்கு முன்தினத்தில் - போதாயன அமாவாசையன்று தர்ப்பணங்களைச் செய்யவேண்டும். இவை அனைத்து மாதங்களிலும் சமமாக வருவதில்லை. பல நாள்களில் ‘சர்வ அமாவாசை’ என்று குறிப்பிட்டிருக்கும். அதுபோன்ற நாள்களில் அனைவரும் முன்னோர்களுக்கான தர்ப்பணங்களைச் செய்யவேண்டும்.

தாங்கள் கடைப்பிடிக்கும் பஞ்சாங்கத்தின் படியும்  தங்களின் வாத்தியார் கூறும் அறிவுரைப்படி யும் தர்ப்பணம் போன்றவற்றைச் செய்வதே நல்லது.  சில விஷயங்களைப் பொதுப்படையாகக் கூற இயலாது. அவரவர் வழக்கப்படி, திதிகளின் தன்மையைப் பொறுத்து விரதங்களையோ, பூஜைகளையோ, தர்ப்பணாதிகளையோ கடைப் பிடிப்பது முழுமையான பலன்களைத் தரும்.

 ? நீண்டதூரப் பயணம், உடல்நலக் குறைவு... இதுபோன்ற சூழலில் மானசீகமாக சந்தியாவந்தனம் செய்யலாமா?

-மு.சிங்காரவேலன், திருவாரூர்

‘சந்தியா வந்தனம்’ செய்யவேண்டும் என்று விதிக்கப்பட்டவர்கள், உலக நன்மையைக் கருதி, தவறாமல் செய்யவேண்டிய மிக முக்கியமான கிரியை ஆகும். எப்படி மூச்சுக்காற்று இல்லாமல் வாழ முடியாதோ, அதேபோன்று சந்தியாவந்தனம் செய்யாதவர், அவருடைய தன்மையை இழந்த வராகவே கருதப்படுவார். சந்தியாவந்தனம் செய்யாமல் செய்யக்கூடிய தீர்த்த யாத்திரைகளும் நாம சங்கீர்த்தனங்களும் முழுமையான பலனைத் தராது. எனவே, சந்தியாவந்தனம் செய்ய விதிக்கப்
பட்டவர்கள், உலக நன்மையைக் கருதி கண்டிப் பாகக் கடைப்பிடிக்க வேண்டும். தீட்டு போன்ற காலங்களில்கூட குறைந்தபட்சமாக அர்க்யம் மற்றும் ஜபத்தைச் செய்யவேண்டும்.

`உடல் நலமின்மை' போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் செய்ய முடியவில்லை என்றால் அதில் தவறு இல்லை. ஆனால், மானசீகமாகச் செய்யமுடியும் சூழல் இருந்தால், அப்போது குறைந்தபட்ச கிரியைகளையாவது செய்து பரதேவதையின் அருளைப் பெறுவது அவசியம்.

பிரயாணம் செய்யும்போது அந்தச் சூழ்நிலைக் குத் தக்கபடி சந்தியா வந்தனம் செய்யலாம். ‘மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்பர். நாம் நினைத்தால் செய்ய முடியாதது எதுவும் இல்லை. வெளியூர்களுக்குச் செல்லும்போது நமக்குத் தேவையானவற்றை எடுத்துச் செல்வோம்தானே? அதுபோல், நம் உடலுக்கும், உள்ளத்துக்கும், இயற்கைக்குமே வலிமையைத் தரக்கூடிய சந்தியா வந்தனத்தைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும்.

? எங்கு சென்றாலும் மூன்றுபேராகச் செல்லக் கூடாது என்கிறார்களே... ஏன் அப்படி?

-எம்.சிவராமகிருஷ்ணன், சென்னை - 101

ஒரு காரியத்தைக் குறித்து, இந்த பயன் வேண்டும் என்ற நோக்குடன் செய்யும் பயணங்களுக்கே இதுபோன்ற நியதிகள் பொருந்தும்.

ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் மூன்று நண்பர்கள், தங்கள் வீடுகளுக்கு ஓர் ஆட்டோவில் வருகிறார்கள் எனும்போது இது பொருந்தாது. எனவே, காரியங்களை அனுசரித்தே விதிமுறைகள் மாறுகின்றன. இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க முடியும். அதே விதி நான்கு சக்கர வாகனத்துக்குப் பொருந்தாது. சில சட்டங்கள் பொதுவானவை; மற்றும் சில சட்டங்கள் வேறுபடும்.

குறிப்பிட்ட ஒரு குறிக்கோளை அடைய வேண்டும் என்று எண்ணிப் புறப்படும்போதுதான், மூன்றுபேர் செல்லக்கூடாது என்ற விதி ஏற்புடைய தாக இருக்கும். பொதுவான விஷயங்களில் ஏற்புடையதல்ல.

- பதில்கள் தொடரும்...

 `காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ  சண்முக சிவாசார்யர்

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்'  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002