பிரீமியம் ஸ்டோரி
‘சிராத்த நாராயணர்’

செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் அமைந்துள்ள நென்மேலி அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் பித்ருக்களுக்கானப் பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள உற்சவ பெருமாள் சிரார்த்த நாராயணர் என்றே வணங்கப்படுகிறார். இங்குள்ள திருக்குளம் ஜீயர் குளம் எனப்படுகிறது. இங்கு பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்தால் ஏழு புண்ணிய நகரங்களிலும் பூஜித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள். இதனால் இந்த தலம் ‘சௌலப்ய கயா’ என்றும் போற்றப்படு கிறது. வெகு காலத்துக்கு முன்னர் வாழ்ந்த நாராயண சர்மா - சரசவாணி தம்பதிகள் இந்த பெருமானுக்கு பல திருப்பணிகள் செய்து வழிபட்டு வந்துள்ளனர். தங்களுக்கு இறுதி காரியம் செய்ய பிள்ளை இல்லையே என்ற  ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்டு மாண்டனர். அப்போது இந்த பெருமாள் அவர்களுக்காக ஈமச் சடங்குகள் செய்தார் என தலவரலாறு கூறுகிறது.

அதுமட்டுமல்ல அவர்களின் வேண்டு கோளுக்காக வாரிசுகளற்ற எல்லா தம்பதி களுக்கும் இந்த பெருமாள் இன்றும் ஈமச் சடங்குகள் செய்வதாக ஐதீகம். அதனால் உச்சி காலத்தில் மட்டும் வெண்பொங்கல், தயிர் சாதத்துடன் எள் - பிரண்டை துவையலை பெருமாள் ஏற்றுக்கொள்கிறார். வரும் தை அமாவாசை, மாசி மக நாள்களில் இங்கு வந்து சிரார்த்த நாராயணரை தரிசித்து தங்களது பித்ருக்களுக்காக சிரார்த்த சம்ரக்ஷணம் செய்தால் அவர்கள் ஆன்மா முக்தி அடைந்து உங்களுக்கு ஆசி தருவார்கள் என்பது நிச்சயம்.

பித்ருக்களை திருப்தி செய்யாத எவரும் முக்தி அடைவதில்லை என்பது ஆன்றோர் வாக்கு. தமிழகத்தில் ராமேஸ்வரம், திருப்பூவனம், பவானி கூடுதுறை, திருவரங்கம் என பல தலங்கள் பித்ருக்களுக்கு ஈமச் சடங்குகள் செய்ய இருக்கிறது. சென்னைக்கு அருகில் அனுமந்தபுரம், அச்சிறுபாக்கம், திருப்புட்குழி, நென்மேலி போன்ற தலங்களும் உள்ளன. இங்கு சென்று உரிய முறையில் நம் முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து வழிபட்டு நலம் பெறுவோம்.

- ஆர். நந்தினி, மதுரை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு