Published:Updated:

பாகை மேவிய தோகை மயில் முருகன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாகை மேவிய தோகை மயில் முருகன்!
பாகை மேவிய தோகை மயில் முருகன்!

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் - படங்கள்: தி.குமரகுருபரன்

பிரீமியம் ஸ்டோரி
பாகை மேவிய தோகை மயில் முருகன்!

சூரர்களை வாகை சூடிய வடிவேலன் பகையை மாற்றி பாகை என்ற திருத்தலத்தில் அருளாட்சி செய்கிறான். அங்குள்ள குமரப் பெருமான் திருக்கோயிலின் திருக்கதவம் எப்படி பிரகாசிக்கிறது தெரியுமா?

செந்நிறமான பவளம், பச்சை நிற மரகதம், மஞ்சள் நிறப் பொன், வெண்ணிறமான வைரம் முதலான மணிகளை அதில் பதித்துள்ளார்கள். அற்புதமான உயர்ந்த கோபுரம், மதில்கள் சூழ அழகு முருகனின் அருள் தரும் திருக்கோயில் காட்சியளிக்கிறது. அங்கே குமரேசப்பெருமானை பிரம்மனும், திருமாலும், சிவபிரானும் நாள்தோறும் அன்றலர்ந்த மலர்களை அணிவித் துப் போற்றுகிறார்களாம். இப்படி ஓர் அரிய காட்சியைப் பார்த்து அனுபவிக்கிறார் அருணகிரி நாதர்.

‘பாடு நான் மறையோனும் தாதையாகிய மாலும்
பாவை பாகனும் நாளும் தவறாதே
பாக நாண் மலர் சூடுஞ் சேகரா மதில் சூழ்தென்
பாகை மாநகர் ஆளும் குமரேசா!’


வளம்மிக்க வயல்களும், சோலைகளும், வாவி களும், நிறைந்து விளங்கும் இந்தத் தலம் `தட்சிண சிவகங்கா நதி' எனும் குசஸ்தலை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

பாகை மேவிய தோகை மயில் முருகன்!

பாகசாலை என்றழைக்கப்படும் இவ்வூர், சென்னை - அரக்கோணம் பஸ் மார்க்கத்தில் பேரம்பாக்கத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், சென்னை-அரக்கோணம் ரயில் வழியில் மணவூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.  புகழ்பெற்ற ரத்தின சபை எனும் மணி அம்பலத்தில் ஊர்த்துவ தாண்டவம் ஆடும் நடராஜ பெருமான் விளங்கும் திருஆலங்காடு திருக்கோயில் இத்தலத்தின் அருகிலுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலவர் ஸ்ரீபாலசுப்ரமண்யர் ஒரு முகம் நான்கு திருக்கரங்கள் கொண்டு (கமண்டலம், ஜபமாலை) பிரம்மசாஸ்தா வடிவில் கம்பீர மாகக் காட்சியளிக்கிறார். தொண்டை மண்டலத்துக் குரிய புராதனமான சிற்ப அமைப்புடன் கூடிய எழிற்கோலம்.
 
ஒரு காலத்தில் பாதிரி மரங்கள் இந்தத் திருக்கோயிலைச் சூழ்ந்து காணப்பட்டதால், இம்முருகனை ‘பாதிரி ஐயா' என்று அழைப் பார்களாம். உற்சவர் ஒரு முகம் நான்கு கரங்களுடன் வள்ளி, தேவசேனை அம்மையுடன் திகழ்கிறார்.இங்குள்ள முருகனது வாகனம் `மந்திரமயில்’ என்றழைக்கப்படுவது சிறப்பாகும். தெற்கு பிராகாரத்தில் விநாயகர், வடக்குப் பிராகாரத்தில் வள்ளி-தேவசேனா சமேத சுப்ரமண்யர் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

இத்திருக்கோயிலின் வளர்ச்சியிலும் மேம்பாட் டிலும் மிக்க ஆர்வம் கொண்டு  `ஸ்ரீபாலசுப்ரமண்ய சுவாமி வழிபாட்டு மன்றம்' என்ற அமைப்பை நிறுவி, இறைப்பணியும் சமூக நலப்பணிகளும் ஆற்றி வருபவர், சிவத்திரு தி.மெய்கண்ட சிவம் எனும் முருகனருள் தொண்டர். இம்மண்ணின் மைந்தரான இவர் தமிழக அரசின் உதவி தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு சார்புச் செயலராக இருந்து பணிநிறைவு பெற்றவர்.

இவ்வாலயத்தின் அறங்காவலர் குழுத்தலைவராகவும், திருப்பணிக் குழுத்தலைவராகவும் விளங்கி, கடந்த 35 ஆண்டுகளாக இந்தத் திருக்கோயிலுக்குப் பல திருப் பணிகளை திட்டமிட்டு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ராஜகோபுரம் கொடிமரம், திருமடைப்பள்ளி, அன்னதானக் கூடம், பாதுகாப்புப் பெட்டகம் முதலான மாபெரும் திருப்பணிகளை நிறைவு செய்து 2006-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நிறைவுபெற்றுள்ளது.

இத்தலத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மாசிப் பெருவிழாவையொட்டி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் நடைபெறு கிறது. இந்த வருடம், வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மாசிப் பெருவிழா தொடங்குகிறது. இதில் எட்டாம் திருநாளில், முருகப்பெருமான் திருக்கல்யாணம் ஊஞ்சல் சேவையுடன் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இம்மன்றத்தினர், இத்தலத்தில் அமைந்துள்ள திருவுடை நாயகி சமேத திருமூலநாதசுவாமி திருக்கோயிலுக்கும் திருப்பணிகள் செய்வித்து 2010-ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் செய்துள்ளனர்.

தினமும் மூன்று கால பூஜையுடன் மாதாந்திர கிருத்திகை, மகா ஸ்கந்த சஷ்டி உற்சவம், புத்தாண்டு விழா, பங்குனி உத்திரம் போன்ற நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பாகை மேவிய தோகை மயில் முருகன்!

வினையறுக்கும் வேல் பூஜை

இந்தக் கோயிலில், 2002-ஆம் ஆண்டு ஐந்து அடி உயரம் கொண்ட பஞ்சலோக நெடுவேல் ஒன்றை பிரதிஷ்டை செய்து, வருடம்தோறும் மாசி மாதத்தில், முறையாகக் கலசங்கள் நிறுவி, வேத மந்திரங்கள் முழங்க, ‘வினையறுக்கும் வேல் பூஜை’ மிகவும் அற்புதமாக நடைபெற்று வருகிறது. நம் வினைகள் அனைத்தையும் வேரறுக்கும் வேல் பூஜை இந்த வருடம் பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி ஞாயிறன்று நடைபெற உள்ளது.

பிரார்த்தனைச் சிறப்பு...

கிருத்திகை தோறும் அங்க பிரதட்சணம் - அதாவது ஆறு கிருத்திகை தொடர்ந்து வந்து வழிபட்டு, 108 முறை அங்க பிரதட்சணம் செய்து, தாமரை நூல் திரியிட்டு, பசு நெய் தீபம் ஏற்றி, ஒரு மண்டலம் வழிபாடு செய்தால், பாகை முருகன் அருளால் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்று  பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். அருணகிரிநாதர், ‘ஆடல் மாமத’; ‘ஈளைசுரம்’; ‘குவளை பொருதிரு’ என்று தொடங்கும் மூன்று திருப்புகழ்ப் பாடல்களில் இந்தத் தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். இந்தத் தலத்தில் தனியாக விநாயகர், திரௌபதி, மாரியம்மன், திருமால் கோயில்களும் அமைந்துள்ளன.

“பவள மரகத கநகவயிரக பாடகோபுர அரிதேரின்
பரியும் இடறிய புரிசை தழுவிய பாகை மேவிய பெருமாளே”


- எனும் அருணகிரியாரின் அற்புதத் திருப்புகழைப் பாடி, நாமும் தோகை மயிலில் வரும் பாகை முருகனை வழிபட்டு இன்புறுவோம் வாருங்கள். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு