பிரீமியம் ஸ்டோரி

காற்று, ஒளி எல்லாவற்றுக்கும் வேகத்தைக் கணக்கிடும் மனிதனால் இருட்டின் வேகம் என்னவென்று சொல்ல முடியுமா? `குழந்தையைப்போல் உறங்கு’என்கிறார்கள் பெரியவர்கள். உண்மையில், குழந்தைகளுக்கு ஒவ்வோர் இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு முறை விழிப்பு வந்துவிடும். பிறகு ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? இப்படி விடை தெரியாத கேள்விகள் எத்தனையோ உண்டு. அவற்றைப் போன்றதுதான் நற்சிந்தனையும். மகான்களும் முனிவர்களும் `நல்லதை நினை, நல்லதைச் செய்’ என்று திரும்பத் திரும்ப அறிவுரை சொல்வதற்குக் காரணம் நமக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால், அவை தரும் பலனை அவர்கள் நன்கு அறிந்துவைத்திருந்தார்கள்.

அவர் ஒரு ஜென் துறவி. அவரைப் பார்க்க ஒரு மளிகைக் கடைக்காரர் வந்ந்தார். அவரைத் துறவிக்கு நன்றாகத் தெரியும். வந்தவரின் முகத்தைப் பார்த்து அவர் ஏதோ கவலையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார் துறவி.

‘மர்ம முடிச்சு’

மளிகைக் கடைக்காரர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். ``ஐயா, நம்ம ஊர்ல புதுசா ஒரு சூப்பர் மார்க்கெட் கடை திறந்திருக்காங்க. `எல்லா சாமானும் மலிவான விலையில கிடைக்கும்’னு அறிவிப்பு வேற செஞ்சிருக்காங்க. அவ்வளவு பெரிய கடையோட என்னால போட்டி போட முடியாது. கடையை இழுத்து மூடவேண்டிய நிலைமை வந்துடும் போலருக்கு. எங்க குடும்பம் மூணு தலைமுறையா இந்த மளிகைக்கடையைத்தான் நடத்திவந்திருக்கு. எனக்கு வேற எந்தத் தொழிலும் தெரியாது. இப்போ என்ன செய்யறதுன்னே தெரியலை.’’

``இப்போ உனக்கு அந்த சூப்பர் மார்க்கெட் முதலாளி மேல வெறுப்பு வந்துடுச்சு. மனசுக்குள்ள அவரைத் திட்டித் தீர்க்குறே... இல்லியா?’’

``ஆமா ஐயா. ஒரு சாதாரண மனுஷன் அப்படித்தானே இருப்பான்... நான் வேற என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?’’

``நான் சொல்றபடி செய். கடையைவிட்டு வெளியே போகும்போது உன் கடையைப் பார்த்து அது நல்லா இருக்கணும்னு நினைச்சு அதை வாழ்த்து; அதேபோல அந்த சூப்பர் மார்க்கெட்டைப் பார்க்கும்போதெல்லாம் அதையும் மனசார வாழ்த்து.’’

``என்னது... அந்தக் கடை நல்லா இருக்கணும்னு வாழ்த்தணுமா?’’

``ஆமாப்பா. உன்னுடைய நல்ல எண்ணம், நீ சொல்ற வாழ்த்து உனக்கே திரும்பக் கிடைக்கும். யாருக்காவது கெடுதல் நினைச்சா, அதுவும் திரும்ப வந்துடும்...’’

மளிகைக் கடைக்காரர் துறவி சொன்னதை அப்படியே கடைப் பிடித்தார். ஆறு மாதங்கள் கழித்து, துறவியிடம் வந்தார். ``ஐயா, நான் நினைச்ச மாதிரியே கடையை மூடவேண்டியதாகிடுச்சு.’’

``அப்புறம்?’’

``ஆனா ஒரு பிரச்னையும் இல்லை. இப்போ அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு நான்தான் இன்சார்ஜ். முன்னாடி கடை நடத்தினதைவிட அதிக வருமானம். இப்போ ரொம்ப நல்லாயிருக்கேன்...’’

பாலு சத்யா

ஒரு துளி சிந்தனை

`நேற்று என்பது வரலாறு; நாளை என்பது மர்மம்; இன்று என்பது கடவுளின் பரிசு. அதனால்தான் இன்றை `Present’ என்கிறோம்

- ஜோன் ரிவர்ஸ். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு