Published:Updated:

‘மகிழ்ந்தோம்... நெகிழ்ந்தோம்!’

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘மகிழ்ந்தோம்... நெகிழ்ந்தோம்!’
‘மகிழ்ந்தோம்... நெகிழ்ந்தோம்!’

சக்தி யாத்திரை -2

பிரீமியம் ஸ்டோரி
‘மகிழ்ந்தோம்... நெகிழ்ந்தோம்!’

ரண்டு நாள்கள் தாய்வீட்டுக்கு வந்து இளைப்பாறியதுபோன்று அப்படியொரு மகிழ்ச்சி... மனநிறைவு!’
 
`இதுதான் விகடன் ஸ்டைல்... இப்படித்தான் ஓர் ஆன்மிக யாத்திரையை நிகழ்த்தவேண்டும்... அற்புதம்!’

ஆம்! கலந்துகொண்ட வாசகர்களின் மனம் நிறைந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக பரிபூரணம் பெற்றது, சக்தி விகடனின் சக்தி யாத்திரை-2.

மார்கழியில் மாலவன் திருத்தலங்கள் - இரண்டு நாள்கள், ஆறு கோயில்கள் என்று திட்டமிடலுடன், ஜனவரி 11 வெள்ளியன்று அதிகாலையில், விநாயகர் பூஜையோடு விகடன் அலுவலகத்தில் தொடங்கியது யாத்திரை. முதல் யாத்திரையில் கலந்துகொண்டவர்களில் பெரும் பாலானோர், இந்த யாத்திரையிலும் இணைந்தது, சக்தி யாத்திரைக்குக் கிடைத்த அங்கீகாரம்.

செங்கல்பட்டு தாண்டியதும் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டதும் முதல் கோயிலாக  திருமலை வையாவூரை தரிசிப்பது திட்டம். இதற்கிடையே மிக அற்புதமாகத் தொடங்கியது, சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமனின் சொற்பொழிவு!

சொற்பொழிவு என்பதைவிடவும் கலந்துரையாடல் என்றே சொல்ல வேண்டும். இந்தமுறை அவர் பேச எடுத்துக்கொண்ட ` கம்ப ராமாயணம்’ எனும் தலைப்பின் கீழ், ஆழ்ந்த அர்த்தமுள்ள கேள்விகளும் பதில்களும்  ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஆழப்பதிந்து, யாத்திரையை அர்த்தமுள்ளதாக்கின என்றே சொல்லலாம்.

உரையின் ஊடே மகாபாரதக் கதாபாத்திரங்கள் குறித்தும் கேள்விகள்- பதில்கள்! `கர்ணன் பாவம் இல்லையா... அவனுக்கும் எதிராகவா அமைய வேண்டும் பகவானின் வியூகங்கள்’ - வாசகர் ஒருவர் இந்தக் கேள்வியைக் கேட்கும் தருணம், திருமலைவையாவூரை அடைந்திருந்தோம்.

‘மகிழ்ந்தோம்... நெகிழ்ந்தோம்!’

முகம்கொள்ளா பூரிப்புடன் முதல் கோயிலை தரிசிக்க ஆயத்தமானார் கள் வாசகர்கள். அப்போது தான் ஸ்வாமிக்கு அபிஷேகம் நிறைவடைந்து, அலங்காரத்துக்காக திரைபோட்டிருந்தார்கள். அவரை தரிசிக்கக் காத்திருந்த தருணத்தை கசிந்துருகிப் பாடிக் கழித்தார்கள் வாசகியர். குறிப்பாக நிவேதிதை பாடிய அந்த நாராயணன் பாட்டு அற்புதம்! அவரின் குரலுக்கும் பாட்டுக்கும் ரசிகக்கூட்டமே உருவாகிவிட்டது யாத்திரைக்குடும்பத்தில்!

‘மகிழ்ந்தோம்... நெகிழ்ந்தோம்!’திரை விலகி பெருமாள் தன் திருமுகம் காட்டியதும், அப்படியோர் ஆர்ப்பரிப்பு நம்மவர்களிடம். `தென் திருப்பதி எனும் சிறப்பு பெற்ற தலம் இது. திருமலை திருப்பதியில் பெருமாள், அலமேலு மங்கை, மகாலட்சுமி ஆகியோரை தரிசிக்க திருப்பதி, திருச்சானூர், கரவீரபுரம் என மூன்று இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் இங்கே மூவரையும் ஒருங்கே தரிசிக்கலாம். இங்கு, கையில் செங்கோலுடன் காட்சி தரும் சீனிவாசப் பெருமாள் ராஜபோக வாழ்வைத் தரக்கூடியவர். நம் வாழ்வில் அனைத்துச் செல்வ வளமும் அளிக்கும் திருத்தலம் இது’ பட்டாசார்யர் ஸ்வாமிக்கு தீபாராதனை காட்ட, பாதாதிகேசமாக தரிசித்துச் சிலிர்த்தார்கள்.

திருமலைவையாவூரிலிருந்து செஞ்சி சிங்கவரத்துக்குப் பயணம் தொடங்கியது. இடையே திடுமென வாசகர்களுக்கு ஓர் ஆச்சர்ய பரிசாகக் கிடைத்தது, மதுராந்தகம் ஏரிக்காத்த ராமர் கோயில் தரிசனம். ‘எத்தனையோ முறை இந்த வழியாகப் பயணித்துள்ளோம். ஆனால், ஒருமுறைகூட இந்த ராமனை தரிசிக்க  முடியவில்லையே என்று நினைத்தவேளையில்   ராமனின் தரிசனம் சக்தி விகடனுக்கு ரொம்ப நன்றி’ என்று நெகிழ்ந்தார் வாசகி ராஜலட்சுமி.

கர்ணன் எந்தெந்த சூழல்களில் அதர்மவானாக நடந்துகொண்டான், பாதை நழுவினான் என்பது குறித்த  காரணக் கதைகள் தொடர்ந்து  நீள... மாலை 3 மணியளவில் செஞ்சியை அடைந்தது யாத்திரைப் பேருந்து. 4 மணிக்கு நடைதிறக்கும் என்றார்கள். அதுவரையிலும், பேசும்பெருமாள் எனப் பிரசித்திபெற்ற அந்த ஸ்வாமியின் மகிமை, ராஜாதேசிங்குவுக்கு அவர் அருளிய கதைகள் குறித்த உரையாடலுடன் கழிந்தது பொழுது.

‘மகிழ்ந்தோம்... நெகிழ்ந்தோம்!’

கதைகள் கருத்தைக் கவர்ந்தன என்றால், சிங்கவரம் மலைக்கோயிலின் வனப்பும், குரங்குகளின் குறும்புகளும் வாசகர்களின் கண்களைக் கவர்ந்தன என்றே சொல்லலாம். அங்கு மனநிறைவான தரிசனத்தை நிறைவுசெய்தபிறகு, பயணம் தொடர்ந்தது. இடையிடையே சக்தி விகடன் ஆசிரியரின் கதை சார்ந்த புதிர்களுக்குப் பதிலளித்து, பரிசுகளைப் பெற்றும் மகிழ்ந்தார்கள் வாசகர்கள்.

இரவில் சேலத்தில் தங்கியது யாத்திரைக்குழு. மறுநாள் அதிகாலையிலேயே எழுந்துவிட்ட வாசகர்கள், சேலம் காருவல்லி சின்ன திருப்பதி தரிசனத்துக்குத் தயாரானர்கள். அந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் சுபகாரியங்கள் குறித்து பெருமாளின் சம்மதத்தையும் கேட்டுப் பெறுவார்களாம். கல்யாணத்துக்குப் பெருமாள் பொருத்தம் பார்ப்பதும் இங்கே பிரசித்தம். அழகுத் திருக்கோலம் அற்புத தரிசனம்!

சின்னத்திருப்பதி இப்படியென்றால், துறையூர் மலைக்கோயில் பயணம் பிரமிக்கவைத்தது வாசகர்களை. ஆம், பெரிய பேருந்தில் மலைப் பாதையில் பயணிக்க முடியாது என்பதால், இரண்டு சிற்றுந்துகள் மூலம் மலைப் பயணம் அமைந்தது.
மிரளவைக்கும் பள்ளத்தாக்கு, கொண்டை ஊசி வளைவுகள்... என அந்த மலைப்பாதை மலைக்கவைத்தது என்றே சொல்லலாம். ஆனால், உச்சியில் கோயில்கொண்டிருக்கும் பெருமாளை தரிசித்தமாத்திரத்தில், அந்தப் பிரமாண்டத்தின்முன் அனைத்தும் தூசியாகவே பட்டது. சிலிர்ப்பும் சிறப்புமாக சேவித்தபின் அடிவாரத்தை அடைந்தார்கள் வாசகர்கள்.

தொடர்ந்து பயணம், விடாமல் திருக்கதை உபன்யாசம், திருவரங்கன் உலா வந்த சரித்திரம்... என பயணம்  நீள, திருவரங்கத்தை அடையும்போது இரவு மணி எட்டு. சற்று நேரத்திலெல்லாம் நடைசாற்றப்பட்டுவிடுமே என்ற பதைபதைப்பும் எப்படியாவது திருவரங்கனை தரிசித்துவிட வேண்டுமே பரபரப்பும் தொற்றிக்கொண்டன வாசகர்களிடம்.

தன்னைத் தேடி ஓடி வருபவர்களைஅந்த அரங்கன் கைவிட்டுவிடுவாரா என்ன? பேருந்திலிருந்து இறங்கி ரங்க கோபுரத்தை அணுகும் வேளையில்,  நம் அன்பர்களை எதிர்கொண்டழைக்கவே வந்ததுபோல் திருவீதியிலேயே அரங்கனின் தரிசனம் கிடைக்க சிலிர்த்துப்போனார்கள் வாசகர்கள். ஆம்! மார்கழி உற்சவத்தின்பொருட்டு வீதியுலா கண்டிருந்தார் பெருமாள். அதனால் அப்படியொரு பாக்கியம் கிடைத்தது நம் வாசகர்களுக்கு. 

‘மகிழ்ந்தோம்... நெகிழ்ந்தோம்!’

திருக்கோயிலுக்குள் நுழைந்தால், சமுத்திரமென திரண்டிருந்தது பெருங்கூட்டம். நம் வாசகர்களுக்காகத் திருக்கோயில் நிர்வாகத் தரப்பில் சிறப்புத் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துவைத்திருக்கவே, எளிதாக - மிக இனிதாகக் கிடைத்தது, திருவரங்கனின் திருவருள் தரிசனம்.

கோபுர வாசலிலேயே எழுத்தாளர் இந்திராசெளந்தர் ராஜனும் வாசகர் களோடு இணைந்துகொள்ள, வாசகர்களுக்கு மறக்கமுடியாத மகத்துவமானது ரங்க தரிசனம். திருவரங்கன், ரங்கநாயகித் தாயார்... என திவ்ய தரிசனம் நிறைவுற்றதும், ராயர் மண்டபத்தில் ஆரம்பமானது எழுத்தாளர் இந்திராசெளந்தர்ராஜனுடனான உரையாடல்.

சக்தி விகடனில் வெளியாகும் `ரங்க ராஜ்ஜியம்’, ஆனந்தவிகடனில் வெளியாகும் `இறையுதிர் காடு’ ஆகிய படைப்புகள், சித்தர் அனுபவங்கள், நிகழ்கால ஆன்மிகம், புராண-இதிகாச அற்புதங்கள்... என கேள்வி பதிலாகவும் உபதேச உரையாகவும் அமைந்தது அந்தக் கலந்துரையாடல்.

குறிப்பாக... `வெற்றியின் தொடக்கத்தை எவரிடமும் பகிர்வது கிடையாது; பகிர்ந்து கொள்ளும்போது பாராட்டு கிடைக்கும். அதிலேயே மனம் திருப்தி அடைந்துவிட வாய்ப்புகள் அதிகம். அப்போது, அடுத்த முயற்சியில் ஈடுபடாமல் மனம் முடங்கிப்போகும்’ என்ற இந்திரா செளந்தர்ராஜனின் வார்த்தைகள், தங்களின் மனதில் ஆழப்பதிந்து விட்டதைப் பரவசத்தோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் வாசகர்கள் பலரும்!

சென்னைக்குத் திரும்பும்போதும் கலகலப்புக்குக் குறைவில்லை. ஆன்மிகப் பாடல்கள், அந்தாக்ஷரி, அனுபவப் பகிர்வுகள்... என களை கட்டியது பேருந்து. `யாத்திரை தொடங்கும்போது இருந்த அதே உற்சாகம் அப்படியே இப்போது வரையிலும் நீடிக்கிறதென்றால், அதற்குக் காரணம் சக்திவிகடனின் உபசரிப்பும் உறுதுணையும்தான்’ என்றார் ஒரு வாசகி.

 யாத்திரை உறுப்பினர்கள் என்றில்லாமல், ஒரு குடும்பமாக - உறவுகளாக, ஒருவருக்கொருவர் உதவியாக அமைந்த வாசகர்களும்தான் அதற்குக் காரணம். அவர்களுக்கும் மனதார நன்றியைப் பகிர்கிறோம்.

நிறைவில் வாசகர்கள் ஒட்டுமொத்தமாக நம்மிடம் கேட்ட கேள்வி... ‘‘அடுத்த யாத்திரை எப்போது?’’

'விரைவில்!'

 - படங்கள் - விகடன் டீம்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு