Published:Updated:

மாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்!
மாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்!

மாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

`மாசியில் நீராடல் பங்குனியில் தேரோடல்’ என்பது முதுமொழி. மாசி மாதத்தில் ஆறுகள், கடற்கரைகளில் நீராடி ஈசனை வழிபடுவது என்பது பெரும்பேறு அளிக்கும் புண்ணிய காரியங்கள் என்று அறிவுறுத்துகின்றன ஞானநூல்கள். குறிப்பாகக் காவிரி ஆற்றில் நீராடுவது மிகவும் விசேஷம்.

மகாசித்த புருஷரான அகத்தியரே மாசி மாதத்தில், காவிரியில் நீராடி வரம்பெற்ற திருக் கதையை மிக அற்புதமாக விவரிக்கின்றன புராணங்கள். இந்தக் கதை நிகழ்ந்த காரணத்தால் மூன்று க்ஷேத்திரங்களின் மகிமைகள் இந்தப் பூவுலகுக்குத் தெரியவந்தன.

ஆம்! கடம்பர் கோயில், திருவாட்போக்கி, ஈங்கோய்மலை ஆகிய மூன்றும்தான் அந்த க்ஷேத்திரங்கள். அகத்தியரின் காலம்தொட்டே மாசி நீராடல் அதுவும் காவிரியில் நீராடல் தொடங்கியிருந்தது என்பதை நமது புராண நூல்கள் கூறுகின்றன. அதிலும் இந்த மூன்று திருத்தலங்களையும் ஒரேநாளில் முறையே காலை, நண்பகல், மாலை என்ற வரிசைப்படி தரிசித்து வழிபடுவது சிறப்புக்குரியதாகும். இதனால், முற்பிறப்புகள் தொட்டு இப்பிறவி வரையிலும் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக விலகும்; சகல விதமான வளங்களும் நன்மைகளும் வாய்க்கும் என்பது ஆன்றோர் வாக்கு. இந்த ஒருநாள் தரிசனத்தை அகத்திய மாமுனியே தொடங்கி வைத்துள்ளார் என்பது கூடுதல் விசேஷம். வாருங்கள் அதுபற்றிய கதைக்குள் செல்வோம்!

மாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்!

காவேர மகரிஷியின் பெண்ணாக அவதரித்த காவிரி, அகத்திய மாமுனிவரின் கமண்டலத்தை அடைந்ததையும், விநாயகப்பெருமான் காகமாக உருமாறி வந்து அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரியைப் பெரும் நதியாய் பெருகியோடச் செய்த கதையையும் நாம் எல்லோருமே அறிவோம்.

அப்படி, காகம் விரித்த நதி என்பதாலும் காவேர மகரிஷியின் மகள் என்பதாலும் அந்த நதிப்பெண்ணுக்குக் காவிரி எனும் திருப்பெயர். பாவங்கள் தொலைய கங்கை என்றால், பித்ருக்கள் காரியத்துக்குக் காவிரி எனக் கொண்டாடுகின்றன ஞான நூல்கள். இதன் கரை நெடுகிலும்தான் எத்தனை எத்தனை கோயில்கள்-தலங்கள்?!

திரேதாயுகத்தில் ஆதிசேஷனுக்கும் வாயு பகவனுக்கும் இடையே `தங்களில் பெரியவர் யார்’ என்ற வாக்குவாதம் எழுந்தது. இருவரும்   தங்களது வல்லமையைக் காட்ட பெரும் போட்டியில் ஈடுபட்டனர். மகாமேரு மலையை சுற்றிவளைத்து இறுக்கிக்கொண்டார் ஆதிசேஷன். வாயு பகவான் தனது ஒட்டுமொத்த பலத்தையும் பிரயோகப்படுத்தி மேருவை அசைக்க பெருங்காற்றாக வந்து மேருவைத் தாக்கினார்.

அப்போது அந்த மலையிலிருந்து வைரம், மரகதம், மாணிக்கம், சிவப்பு மற்றும் நீல கற்கள் சிதறி விழுந்தன. அவற்றில் மரகதம் வீழ்ந்த இடமே ஈங்கோய்மலை ஆயிற்று. இதையொட்டியே இங்கு கோயில் கொண்டிருக்கும் சிவபிரானுக்கு மரகதாலேசுவரர் என்று திருப்பெயர் வந்தததாம். அதுபோல், வைரம் விழுந்த இடம் திருப்பாண்டிக் கொடிமுடி, மாணிக்கம் விழுந்தது திருவாட்போக்கி, நீலம் விழுந்த இடம்  பொதிகை மலை, சிவப்புக் கல் விழுந்தது  திருவண்ணாமலை என்கிறது புராணம்.

இவற்றில், நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல் கடம்பர் கோயில், திருவாட்போக்கி, ஈங்கோய்மலை ஆகிய மூன்றும் ஒரேநாளில் தரிசிக்கப்பட வேண்டிய தலங்களாயின. மூன்றில் திருஈங்கோய்மலை காவிரியின் வடகரையில் உள்ளது.மற்ற இரண்டு தலங்களான திருவாட்போக்கியும், கடம்பந்துறையும் காவிரியின் தென்கரைத் தலங்கள். இனி அகத்திய மாமுனி இந்த மூன்று தலங்களையும் தரிசித்த திருக்கதையைக் காண்போம்.

கணபதியின் திருவருளால் காவிரி கமண்டலத்திலிருந்து கவிழ்ந்து பெருகியோடியதைக் கண்ட அகத்தியர், செய்வதறியாது கலங்கினாராம். அப்போது ஈசன் அசரீரியாக “குறுமுனிவா! நம் பக்தனான நீ, லலிதா சக்திபீட தலத்துக்குச் சென்று தவம் செய்ய வேண்டும் என்பது விதி. எந்த இடத்தில் காவிரி, பரிபூரண அகண்ட காவிரியாகச் செல்கிறதோ, அந்த இடத்தின் நடுவில் - காவிரியின் வடக்குப் பக்கத்தில் உள்ள மரகதாசலமே சாயாபுர சக்தி பீடமாகும். உத்தமமான அந்த இடத்துக்குச் சென்று நீ தவம் செய்!’’ என்று அருள்பாலித்தார்.

சிவக்கட்டளைப்படி தாமதிக்காமல் பயணத்தைத் தொடர்ந்த அகத்தியர், அகண்ட காவிரியின் ஆரம்ப தலமாகிய திருமுக்கூடல் (மதுக்கரை) எனும் இடத்தை அடைந்தார். அங்கு, சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அதன் பிறகு, மத்திய அகண்ட காவிரிக்கு வந்தார்.

அந்தப் பகுதியில் காவிரியின் தென்கரையில் திகழும் திருவாட் போக்கி, கடம்பந்துறை தலங்களை காலை மற்றும் மதிய வேளையிலும், வடகரையில் உள்ள ஈங்கோய்மலை ஈசனை மாலையிலும் தரிசித்து வழிபட ஆவல்கொண்டார் அகத்தியர். அதன்படி காலையில் காவிரியில் நீராடிய அகத்தியர் (குளித்தலைக்கு அருகில்) கடம்பரை தரிசித்தார். உச்சிப்பொழுதில் ஐயர்மலைக்குச் சென்று சொக்கரை தரிசித்தார். மாலைப் பொழுதில் மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரரின் திருக்கோயிலை அடைந்தார். ஆனால், அங்கே கோயிலின் கதவுகள் சாத்தப்பட்டிருந்தன.

மாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்!

இதனால் அகத்தியரின் மனதில் கவலை குடிகொண்டது. ‘‘இந்த மூன்று திருத்தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது விசேஷம் ஆயிற்றே. ஆனால், நம்மால் அவ்வாறு தரிசிக்க முடியாமல் போய் விட்டதே!’’ என்று வருந்தினார்.

அப்போதும் ஈசன் அசரீரியாக வழிகாட்டினார்.

“அகத்திய முனிவனே கவலைப்படாதே! தட்சகன் எனும் நாக அரசன், இந்த மரகத மலையின் மீது ஒரு புறத்தில், ‘சர்ப்ப நதி’ எனும் வாய்க்காலாக உருமாறிச் சென்று மத்திய அகண்ட காவிரியில் மூழ்குகிறான். அந்த இடம் மகா புனிதமான தீர்த்தம் ஆகும். நீயும் அந்தத் தீர்த்தத்தில் மூழ்கி நீராடு. பின்னர், மனிதர்கள் எவரும் உன்னை அறிந்துகொள்ள முடியாதபடி, ஈ வடிவம் கொண்டு கோயிலுக்குள் நுழைந்து பூஜை செய்வாயாக!’’ என்றது அசரீரி.

குறுமுனியின் முகம் மலர்ந்தது. குறிப்பிட்ட தீர்த்தத்துக்குச் சென்று  நீராடினார். தொடர்ந்து, மனித வடிவம் நீங்கி ஈயாக வடிவம் கொண்டார். அப்படி, அகத்தியரின் உருவம் மாறுவதற்குக் காரணமாக இருந்த ‘சர்ப்ப நதி’ அன்று முதல் ‘கொண்ட உருமாறி’ என்று வழங்கப்பட்டது. பிறகு அதுவே மருவி, ‘கொண்டா மாறி’ என்று சொல்லப்படுகிறது.

சிவனார் குறிப்பிட்டபடியே, மரகத மலையில் அன்று முதல் அகத்தியர் ஈ வடிவமாக இருந்து தவம் செய்யும் காரணத்தால், அது ‘ஈங்கோய்மலை’ எனப் பெயர் பெற்றது. `ஈ’ வடிவம் கொண்ட அகத்தியர், பூக்களிலிருந்து தேனைச் சேகரித்து வந்து, அந்தத் தேனாலேயே சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தார். இதனால் மகிழ்ந்த மரகதேஸ்வரர், அகத்திய மாமுனிவருக்குக் காட்சி தந்ததுடன், பல வரங்களையும் வாரி வழங்கினாராம். வேறொரு விசேஷத் தகவலும் உண்டு.
மகாயோகினியான லோபமுத்திரை, திருஈங்கோய்மலையில் அகத்தியருக்குத் துணையாக இருந்து வருவதுடன், அரூபமாக ஸ்ரீசக்ர ராஜ பூஜையும் தவமும் செய்து வருகிறாராம்.

அகத்தியர், ஈங்கோய்மலைக்கு வந்து பூஜை செய்தது, மாசி மாதப் பௌர்ணமி திருநாளன்று தான்.  ஆகையால், அந்தத் தினத்தில் காவிரியில் நீராடி ஈங்கோய் மலையில் ஸ்வாமி தரிசனமும் வழிபாடும் செய்வது மிக மிக விசேஷம். அதேபோல், மாசிமக நாளில் மேற்சொன்ன மூன்று ஆலயங்களையும் தரிசிப்பது வெகு விஷேசம்.

இந்த மூன்று திருத்தலங்களையும் சேர்த்துப் பார்த்தால் சிவன் கோயில்களில் இருக்கும் சோமாஸ்கந்த திருவடிவைப் போல இருக்கும்.  ஆகவே இந்தத் தலங்களை மூன்றையும் சேர்த்து, ‘சோமாஸ்கந்த க்ஷேத்திரம்’ என்று சிறப்பித்துச் சொல்வார்கள்.

1. ஐயர்மலை எனப்படும் திருவாட்போக்கி
சிவபெருமானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலம்.

சித்திரையில் சூரியன் பூஜிக்கும் சிவத்தலங்களில் இதுவும் ஒன்று.  சுயம்புத் திருமேனியராக அருள்கிறார் ரத்னகிரீஸ்வரர். அம்பாள்: கரும்பார்குழலி. ஸ்வாமிக்கு அபிஷேகிக்கப்படும் பால் கெடுவதில்லை என்பது இத்தலத்தின் விசேஷம். குலதெய்வம் தெரியாதோர் இந்த இறைவனையே குலதெய்வமாக ஏற்று வழிபடும் மரபு, இந்தப் பகுதியில் உண்டு.

2. கடம்பர் கோயில்
என வழங்கப்படும் குளித்தலை முருகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தலம். செவ்வாய்தோஷம் தீர, இந்தத் தலத்தின் முருகனையும் செவ்வாயையும் வழிபட்டுச் செல்கிறார்கள்.  இங்கு அருளும் சிவனாரின்  திருப்பெயர் கடம்பவனேஸ்வரர்; அம்பாள் - முற்றிலாமுலையம்மை. சப்தகன்னியர்கள் அருள்பெற்ற தலம் இது. கருவறையில் சுவாமியின் பின்புறம் சப்தகன்னியர்கள் அருள்கிறார்கள்.

3.  மரகதாசலம் எனும் திரு ஈங்கோய்மலை - அம்பாளுக்கு முக்கியத் துவம் கொண்ட திருத்தலமாக விளங்குகிறது.

இந்த மூன்று தலங்களிலும்  ஈங்கோய் மலை ஸோமாஸ்கந்த க்ஷேத்திரத்தில் ஒன்றாக விளங்குவதுடன், சக்தி க்ஷேத்திரங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. ஆம்! சக்தி பீடங்களில், ஈங்கோய்மலை ‘ளம்’ எனும் எழுத்துக்கு உரியதாக இருக்கிறது. இந்தத் தலத்தின் பிரதான சக்தி - லலிதாம்பிகை. அம்பிகையின் திருமுக ஜோதியின் நிழல் விழுந்த இடம் என்பதால் ‘சாயாபுரம்’ என்ற திருப்பெயரும் உண்டு.

திருக்கயிலாயத்திலிருந்த ஒன்பது சித்தர்கள் இங்கு வந்து தவம் செய்து, சிவபெருமானிடம் வேண்டி வரங்கள் பலவற்றையும் பெற்றார்கள். இங்கேயே ஸித்தி அடைந்தார்கள் என்றும் புராணத் தகவல் உண்டு. சித்த புருஷரான போகர், பழநியில் தண்டாயுதபாணியைப் பிரதிஷ்டை செய்வதற்கு முன்னால், இந்தத் திருத்தலத்துக்கு வந்து,  சமாதி யோக நிஷ்டையில் இருந்தார். போகரின் சமாதிக் கோயில் இந்த மலையின் அடிவாரத்தில் இன்றும் உள்ளது.

மாசி மகத்தன்று இந்த மூன்று தலங்களுக்கும் சென்று வழிபட்டு வரம் பெற்று வாருங்கள். முதல் தரிசனம் கடம்பர்கோயிலில் எனும்படி பயணத்திட்டத்தை வகுக்கலாம். திருச்சி - ஈரோடு பாதையில் சுமார் 31 கி.மீ. தொலைவில் உள்ளது குளித்தலை கடம்பர் கோயில். அங்கிருந்து மணப்பாறை செல்லும் பாதையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாட்போக்கி(ஐயர்மலை). இவ்வூரிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலுள்ளது திருஈங்கோய் மலை.

அகத்தியர் தரிசித்து அருள்பெற்ற திருத்தலங்களில் நீங்கள் செய்யப்போகும் தரிசனமும் வழிபாடும் உங்களுக்கு மகத்தான வரத்தையும் வாழ்வையும் பெற்றுத் தரட்டும்.

- சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

ஓவியங்கள்: பத்மவாசன்

மாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு