மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பே தவம் - 14

அன்பே தவம் - 14
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம் - 14

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படம்: எஸ்.சாய் தர்மராஜ் - ஓவியம்: பாலகிருஷ்ணன்

அன்பே தவம் - 14

`அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக!’ என்பது சுந்தரப் பெருமானுக்கு அரசு இட்ட ஆணையல்ல, இறைவன் இட்ட ஆணை. `சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்; தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்’ எனப் பாடுவார் திருநாவுக்கரசர். `நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர்’ என்று தம்மைத் தாமே குறிப்பிட்டுக்கொள்வார் ஞானசம்பந்தர். அத்துணைச் சிறப்புடையது தமிழ்மொழி. அது மட்டுமா? ஞானசம்பந்தர், தமிழுக்குத் தந்திருக்கும் அடைவுகளின் பட்டியல் நம்மை பிரமிக்கச் செய்கிற ஒன்று. 

அன்பே தவம் - 14

அருந்தமிழ், ஆரா அருந்தமிழ், இசைமலி தமிழ், இன்புறுந் தமிழ், இன்றமிழ், உருவாகும் ஒண்டமிழ், உரையார் தமிழ், ஏரினார் தமிழ், ஒண்டமிழ், ஒளிர்பூந்தமிழ், கலைமலிதமிழ், கலை வளர்தமிழ், குலமார் தமிழ், குற்றமில் செந்தமிழ், குன்றாத்தமிழ், சங்கமலி செந்தமிழ், சொல்லார் தமிழ், ஞாலம்மிக்க தண்டமிழ், ஞானத்தமிழ், தகைமலி தண்டமிழ், சந்தநிறை தண்டமிழ், சந்தமார் தமிழ், சந்தமார்ந்தழகாய தண்டமிழ், சந்தமாலைத் தமிழ், சந்தமின்றமிழ், சந்துலாந்தமிழ், சீர்மிகுந்த தமிழ், சீரின் மலிசெந்தமிழ், செந்தண்டமிழ், செறிவண்டமிழ், தவமல்கு தமிழ், தன்னார்வம் செய் தமிழ், திருநெறிய தமிழ், துளங்கில் தமிழ், தேனார் தமிழ், நல்லவாய இன்றமிழ், நலங்கொள் தமிழ், நற்றமிழ், நிகரில்லன தமிழ், படமலி தமிழ், பண்ணிய தமிழ், பண்ணாருந் தமிழ், பந்தமார் தமிழ், பரவார் தமிழ், புகழ்நின்ற தமிழ், பரவிய தமிழ், பாரினார் தமிழ், பேரியல் தமிழ், இன் தமிழ், மருவிய தமிழ், மறையிலங்கு தமிழ், மறைவளரும் தமிழ், முடிவில் இன் தமிழ், முத்தமிழ், வளமார் தமிழ், விலையுடை அருந்தமிழ்...

அன்பே தவம் - 14தமிழுக்கு இத்தனை அடைவுகளா... சிறப்புகளா? திருமறைக்காடு. இந்தப் பெயர் இப்போது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. இதன் இன்றைய பெயர் வேதாரண்யம். இங்கிருக்கும் ஆலயத்தின் கதவுகள் திறக்க இயலாமல் அடைபட்டிருந்தன. நாவுக்கரசர் பெருமான், தன் நற்றமிழால் பாடி, மூடியிருந்த கதவுகளைத் திறந்தார். அடைக்கவும் திறக்கவும், ஞானசம்பந்தப் பெருமான் தொடர்ந்து பாடினார்.  தமிழுக்குத் தந்த ஏற்றம், சிறப்பு அது.

சேரமான் பெருமாள் என்ற மன்னர். ஆனாலும், சிவனடியார். அவர் பூசை செய்யும்போது, அதை இறைவன் ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக சிலம்பின் ஒலி கேட்கும். அவரும் பூசையை இறைவன் ஏற்றுக்கொண்டான் என்று திருப்திகொள்வார். ஒருமுறை பூசையின்போது சிலம்பொலி கேட்பதற்குச் சற்றுத் தாமதமானது. சேரமான் பெருமாள், இறைவனிடம் ஐயத்தோடு ``என் பூசையை ஏற்றுக்கொள்ள ஏன் தாமதம்?’’ என்று கேட்டார். 

``வன்தொண்டன் ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி உரைசேர் பதிகம் பாடுதலால் நின்று கேட்டுவர தாழ்த்தோம்’’ என்றான் இறைவன். மாணவர்கள், பள்ளிக்கு வர நேரம் தவறிவிட்டால் தாமதத்துக்குக் காரணம் சொல்வார்கள். அதைப்போல, இறைவன் தன் தாமதத்துக்குக் காரணம் சொன்னான்... ``சுந்தரப் பெருமானின் சுந்தரத் தமிழ்க் கேட்டுச் சொக்கிப்போனேன்.  அங்கேயே என்னை மறந்தேன்.’’ இறைவன் தந்த ஒப்புதல் வாக்குமூலம். 

ஆக, இன்தமிழை இறைவன் விரும்பிக் கேட்கிறான். எப்படியெல்லாம் கேட்கிறான்? ஞானசம்பந்தப் பெருமான், அம்மையின் அமுதுண்டவர். அவருடைய பாடல்கள் எல்லாம் அந்த அமுதைப்போலவே தேனினும் இனிய தீந்தமிழ்ப் பாடல்கள்.  ``எனதுரை தனதுரையாக...’’ என்று குறிப்பிடுகிறார் ஞானசம்பந்தர். அதாவது, `நான் பாடுவதெல்லாம் என் பாட்டல்ல; இறைவனின் அருள்வாக்கு’ என்று பொருள். அதோடு, ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் `திருக்கடைக் காப்பு’ச் சொல்லி, `இந்தப் பத்துப் பாடல்களைப் பாடினால், இந்தப் பலன்களெல்லாம் கிடைக்கும்’ என்று பதினோராவது பாடலில் குறிப்பிட்டார். `துன்பம் நீங்கும்; துயரம் நீங்கும்; அல்லல் விலகும்; ஆணை நமதே!’ என்று அறுதியிட்டுச் சொன்னார். ஆக, நம் அருளாளர்களின் தீந்தமிழ்ப் பாடல்கள், மந்திரங்களாக மனிதகுலத்தின் துன்பத்தை நீக்கியிருக்கின்றன. 

கல்லும் கரைந்துருகும் ஒரு வாசகம், அது திருவாசகம். `யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய், ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே...’ என்று மாணிக்கவாசகர் ஊன் உருக, உயிர் உருக அழுத அழுகை, தேனார் தீந்தமிழ்த் திருவாசகம். மாணிக்கவாசகர் என்ற வண்டு இறைவனின் திருவடி மலர்களில் மட்டும் அமர்ந்து எடுத்த ஞானத்தேன் திருவாசகம். அவருக்கும் பிரிவுத் துயரத்தைத் தந்தான் இறைவன். மாணிக்கவாசகர், தம் கண்ணால் காணத் தன்னைக் காட்டினான்; மறைந்துபோனான். இறைவன் மறைந்துபோன பிறகு, மாணிக்கவாசகருக்குப் பித்துப் பிடித்தது. ஒரு குழந்தை, தன் தாயைப் பிரிந்துவிட்டால் எப்படித் துயருற்று அழுமோ, அதைப்போல அழுதார். 

அன்பே தவம் - 14

பசு, தன் கன்றைப் பார்த்தவுடன் தாய்மை உணர்வு பொங்க, தன் ரத்தத்தைப் பாலாகச் சுரக்கும். நாம், கன்றைப் பசுவின் அருகே விடுவோம். அது முட்டி முட்டிப் பால் குடிக்கும்போது, அதைப் பிரித்துக்கொண்டு போய்விடுவோம். பசு சொரிகிற பாலையெல்லாம் நாம் கறந்து எடுத்துக்கொள்வோம். நமக்குப் பால் வேண்டும் என்றால், கன்றைப் பசுவிடமிருந்து பிரிக்கிறோம். அதைப்போல, உலகத்துக்கு ஞானப்பால் வேண்டும் என்று இறைவன் நினைத்தான். தன் மக்களுக்கு ஞானப்பாலாகிய திருவாசகத்தைக் கொடுப்பதற்காக, மாணிக்கவாசகரின் கண்ணுக்குத் தன்னைக் காட்டி, பிரிந்து போனான். பிரிவுத் துயரத்தில் துன்புற்ற மாணிக்கவாசகரிடமிருந்து நமக்குத் திருவாசகம் கிடைத்தது. ஜி.யு.போப், திருவாசகத்தின் மேல் அவருக்கிருந்த ஈடுபாட்டால், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

இறைவன், மதுரைத் திருவீதியில் மண் சுமந்ததை  `பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்’ என்ற திருவாசகப் பாடல் அழகாக விவரிக்கிறது. உலகத்தின் தலைவன் கொற்றாளாக, கூலியாளாக வந்து மண் சுமந்தான். உதிர்ந்த பிட்டைக் கூலியாகப் பெற்றான். `உழைப்புக்கு உணவு’ என்ற தத்துவம் அப்போதே அரங்கேற்றப்பட்டது. அந்தத் தத்துவத்தை ஆலவாய் அண்ணல் மதுரைக் கடவுள் நிறைவேற்றினான். பிட்டைக் கூலியாகப் பெற்றான். அந்தப் பிட்டை உண்ட பிறகு செய்யவேண்டிய உழைப்பை அவன் செய்யவில்லை. இறைவனுக்குப் பிரம்படி விழுந்தது. இது எதை நமக்குக் காட்டுகிறது? பெற்ற கூலிக்கேற்ற நியாயமான உழைப்பை யார் செய்ய மறுத்தாலும் அதற்குத் தண்டனை உண்டு. `ஆண்டவனாக இருந்தாலும் உழைக்க மறுத்தால் தண்டனை உண்டு’ என்ற தத்துவம் அது. இறைவனே அந்தத் திருவிளையாடலை நிகழ்த்திக் காட்டினான்.

அப்போது மாணிக்கவாசகரின் ஆன்மா, இறைவனிடம் கேட்டது. `நானும் நீயும் உறவுகொண்டிருக்கிறோம், நட்புக்கொண்டிருக்கிறோம், அன்புகொண்டிருக்கிறோம். நான் உன்மீது பக்திகொண்டிருக்கிறேன். நான் கடைக்கோடி ஆன்மா. கடையனினும் கடையன். எனக்குக் கடைத்தேற்றம் கிடைத்துவிட்டது. திருவருள் இன்பம், பேரின்பம் கிடைத்துவிட்டது. உனக்கு என்ன கிடைத்தது?’
 
ஆனால், இறைவன் நினைத்ததோ வேறு. ஒரு கடையூழிக் காலம் வரும்.  பிரளயம் வரும்.  அந்தப் பிரளயத்தில் எல்லா உயிர்களும் ஒடுங்கிவிடும். இறைவனின் சரிபாதியாக இருக்கும் தலைவிகூட இறைவன் திருமேனியில் ஒடுங்கிவிடுவாள். தனியனாய் இருப்பான் இறைவன்.  அப்போது இறைவனின் தனிமைக்கு ஒரு துணை தேவை. அந்தத் துணை திருவாசகம்தான். 

ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர்களைத் தேர்ச்சியடையச் செய்து, அடுத்த வகுப்புக்கு அனுப்புவது ஆசிரியரின் கடமை. அதைப்போல, ஆன்மாக்களை ஈடேற்றுவது  ஞானாசிரியனான இறைவனின் கடமை. அதிலும் ஆன்மா எப்படிப்பட்டதாயினும் ஈடேற்றுவதுதான் அவன் கடமை. ஆனால், மாணிக்கவாசகரின் ஆன்மாவை ஈடேற்ற விண்ணிலிருந்து மண்ணுக்கு குதிரைச் சேவகனாக, கொற்றாளாக வந்தான். மண்ணைச் சுமந்தான். பிரம்படிபட்டான்.  மாணிக்கவாசகர் என்ற ஓர் ஆன்மாவை ஈடேற்றவே இவ்வளவு கஷ்டப்பட்ட இறைவன் உலகத்தின் எல்லா ஆன்மாக்களும் ஈடேற ஒரு வழியைக் காட்டினான்.

யாரெல்லாம் திருவாசகத்தை உணர்ந்து ஓதுகிறார்களோ, அவர்கள் இறைவனின் திருவடி நிழலை அடைய முடியும். அதனால், திருவாசகத்தை உலகத்துக்குத் தந்த மணிவாசகரை ஆட்கொண்டதுதான் தான் பெற்ற ஆதாயம் என்று எண்ணிக்கொள்வானாம் இறைவன்.   

எலும்புச் சாம்பலைப் பெண்ணாக்கி, உயிரோடு எழச் செய்தது, ஞானசம்பந்தரின் ஞானத் தமிழ். அப்பூதியடிகளின் மூத்த திருநாவுக்கரசை உயிர்ப்பித்துத் தந்தது, திருநாவுக்கரசரின் திருத்தொண்டுத் தமிழ். முதலை உண்ட பிள்ளையை மீண்டும் உயிர்ப்பித்துத் தந்தது, சுந்தரரின் சுந்தரத் தமிழ். உலகத்தின் தலைவனைக் கூலியாளாக மண் சுமக்கவைத்தது மாணிக்கவாசகரின் தமிழ். ஒரு மொழியால் உலகத்தில் அறிவைப் பெறலாம்; ஞானத்தைப் பெறலாம்;   வீடுபேற்றை அடைய முடியுமா? முடியும் என்று நிரூபித்ததுதான் மாணிக்கவாசகரின் மணித்தமிழ்.

இப்படிப்பட்ட தெய்வத் தீந்தமிழ், திருக்கோயில்களில் ஓதப்பட வேண்டும். எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் பேசிய மொழி மட்டுமல்ல தமிழ். அது, மக்களின் வாழ்க்கைக்கு இலக்கணம் பேசியது. அதனால்தான் காயப்பட்டு, சேதப்பட்டு, ஒதுக்கப்பட்டு, புறந்தள்ளப்பட்டாலும் இன்று `செம்மொழி’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. செம்மொழி எனச் சிறப்புப் பெற ஒரு மொழிக்கு என்னென்ன தேவை?

தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடுவுநிலைமை, தாய்மைத் தன்மை, பண்பாடு-கலை-பட்டறிவு வெளிப்பாடு, பிறமொழித் தாக்கமில்லா தனித்தன்மை, இலக்கிய வளம், உயர் சிந்தனை, கலை இலக்கிய தனித்தன்மை வெளிப்பாடு-பங்களிப்பு, மொழிக் கோட்பாடு என்ற பதினொரு பண்புகள் தேவை. அந்தப் பதினொரு பண்புகளையும் தமிழ் மொழி பெற்றிருக்கிறது. திருக்குறள் ஒன்று போதும், தமிழ்மொழி செம்மொழி என்று உலகுக்குப் பறைசாற்ற!

- புரிவோம்...

அன்பே தவம் - 14

மிழ்நாட்டுத் திருக்கோயில்களில் தமிழ் அர்ச்சனையை நம் மகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகள் பெருமான் 1961-ம் ஆண்டில் தொடங்கிவைத்தார்கள். தமிழ் அர்ச்சனை கேள்விக்குறியாக இருந்த நிலையில், நம் குன்றக்குடி அடிகள் பெருமான், `தமிழில் அர்ச்சனை உண்டு’ என்பதற்கு 52 சிறு புத்தகங்களில் மேற்கோள்களும், ஆதாரங்களும் எடுத்துக்கொண்டு, 12 திருமுறைகளுக்கு அடையாளமாக 12 வாகனங்களில், 63 நாயன்மார்களுக்கு அடையாளமாக 63 சமயத் தமிழ் அறிஞர்களை அழைத்துச் சென்று அன்றைய முதலமைச்சரும், அறநிலையத் துறை அமைச்சருமான பக்தவத்சலத்தைச் சந்தித்து ஆதாரங்களைக் கொடுத்தார்.

பிறகு, 1961-ம் ஆண்டிலேயே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சர்.பி.டி ராஜன் தலைமையில், மகாசந்நிதானம் முன்னிலையில், பக்தவத்சலம் தொடங்கிவைத்த தமிழ் அர்ச்சனை தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் ஒலிக்க ஆரம்பித்தது. இன்றும் அந்தத் தமிழ் அர்ச்சனை உரத்து ஒலிக்கப்பட வேண்டும் என்பதுதான் பக்தி உள்ளங்களின் பிரார்த்தனை. அந்தப் பிரார்த்தனை நிறைவேறட்டும்!