Published:Updated:

மன்னார்போளூர் ஸ்ரீஅழகு மல்லாரி கிருஷ்ணசுவாமி ஆலயம்! - ஒரு நெகிழ்ச்சி தரிசனம்

ருக்மிணி பிராட்டியார் பகவானின் திருவடிகளில் துளசி தளங்களைத் தூவி தியானிக்க, சீதையாக உருமாறித் தோன்றினார். சத்யபாமாவின் கர்வமும் அடங்கியது. இதன் காரணமாகவே ராமபிரானுக்கு தனிக் கோயில் அமைந்துள்ளது.

மன்னார்போளூர் ஸ்ரீஅழகு மல்லாரி கிருஷ்ணசுவாமி ஆலயம்! - ஒரு நெகிழ்ச்சி தரிசனம்
மன்னார்போளூர் ஸ்ரீஅழகு மல்லாரி கிருஷ்ணசுவாமி ஆலயம்! - ஒரு நெகிழ்ச்சி தரிசனம்

கிருஷ்ணாவதாரம் மற்றும் ராமாவதாரத்துடன் தொடர்புடைய கோயில் ஒன்று ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், சூலூர்ப்பேட்டைக்கு அருகிலுள்ள மன்னார்போளூர் என்ற தலத்தில் இருப்பதாகவும், ராமாவதாரத்துடன் தொடர்புடைய கோயில் என்றாலும், அந்தக் கோயிலில் ஶ்ரீகிருஷ்ணர்தான் பிரதானம் என்றும் நம்மிடம் தெரிவித்தார் ஒரு நண்பர். இரண்டு அவதாரங்கள் தொடர்புடைய அந்த ஆலயத்தைத் தரிசிக்கலாமே என்று அந்த நண்பருடன் புறப்பட்டுச் சென்றோம்.

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து சூலூர்ப்பேட்டைக்கு ரயிலில் சென்று, அங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள மன்னார்போளூருக்கு ஆட்டோ மூலம் சென்றோம்.

பயணத்தின் போதே அந்த ஆலயம் தொடர்பான புராண நிகழ்ச்சிகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியவற்றிலிருந்து ஒன்றுக்கொன்று தொடர்புடைய புராண நிகழ்ச்சிகளின் சங்கமத் தலமாக அந்த ஆலயம் அமைந்திருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. 

முதல் நிகழ்ச்சி...

பூர்ணாவதாரமாகப் போற்றப் பெறும் கிருஷ்ணனுக்கும்கூட ஒருமுறை பழிச்சொல் ஒன்று வந்து சேர்ந்தது! ஆனால், அதன் பின்னணியில் பொதிந்து கிடக்கும் உண்மையைத் தெரிந்துகொண்டால், தனது பக்தனுக்காக எத்தகைய இழிச்சொல்லையும் பகவான் ஏற்றுக்கொள்வான் என்னும் நம்பிக்கை நமக்குப் பிறக்கிறது!

அப்படி கிருஷ்ணனுக்கு என்ன இழிச்சொல் ஏற்பட்டது? அதன் பின்னணி என்ன?

துவாபரயுகம்... பாரத யுத்தம் எல்லாம் நடப்பதற்கு முந்தைய காலம். அக்காலத்தில் சத்ராஜித் என்பவன் பாரதத்தின் ஒரு பகுதியை ஆட்சி செய்து வந்தான். அவன் சூரிய பகவானை எண்ணித் தவமியற்றினான். தன்னிடத்தே பக்தி செலுத்தி கடுந்தவம் புரியும் சத்ராஜித்தின் பக்தியினால் மகிழ்ச்சி மிகக் கொண்ட சூரியபகவான், அவனுக்குக் காட்சி அளித்து, "சத்ராஜித்! உன் மனப்பூர்வமான பக்தியினைக் கண்டு மனம் மகிழ்ந்தோம். உன் பக்திக்குப் பரிசாக இந்த சியமந்தக மணியை உனக்குத் தருகிறோம். இந்த மணியானது ஒரு நாளைக்கு உனக்குத் தேவையான தங்கத்தைத் தரும்" என்று கூறி சத்ராஜித்தின் கையில் சியமந்தக மணியை வைத்து மறைந்தார்.

தனக்குச் சூரிய பகவானால் அளிக்கப்பெற்ற சியமந்தக மணியை ஒரு பொன் மாலையில் பதித்து அணிந்து கொண்ட சத்ராஜித் தினசரி அந்த மணியின் மூலம் தேவையான தங்கத்தைப் பெற்று வந்தான்.

அந்த மணி தன்னிடம் இருந்தால் அதன் மூலம் உலகம் முழுமைக்கும் நன்மை ஏற்படுமே என்று கருதிய கிருஷ்ணர், சத்ராஜித்திடம் அந்த மணியைக் கேட்டார். ஆனால், அந்த மணி தன் தவத்தை மெச்சி சூரியபகவான் தனக்கு அருளியது என்று சொல்லி, சியமந்தக மணியைக் கொடுக்க மறுத்துவிட்டான்.

சத்ராஜித்திடம் இந்தப் பதில்தான் கிடைக்கும் என்பதை எதிர்பார்த்தே வந்தாரோ என்னவோ ஒன்றும் பேசாமலே சென்றுவிட்டார் கிருஷ்ணர். ஒருமுறை சத்ராஜித், தான் அணிந்துகொண்டிருந்த மணியைத் தன் தம்பி பிரசேன ஜித்துக்குக் கொடுத்தான். அதை அணிந்துகொண்டு வேட்டைக்குச் சென்ற பிரசேனஜித் சிங்கத்துக்கு இரையாகிவிட்டான். அவன் கழுத்தில் அணிந்திருந்த சியமந்தக மணி கேட்பாரற்று கிடந்தது. அப்போது அந்த வழியாக வந்த கரடிகளின் அரசரான ஜாம்பவான், வழியில் இருந்த ஒளி பொருந்திய சியமந்தக மணியை எடுத்து வந்து தனது மகளான ஜாம்பவதிக்கு அணிவித்தார்.

சியமந்தகமணியை அணிந்துகொண்டு வேட்டைக்குச் சென்ற தன் தம்பி திரும்ப வரவில்லை என்பது சத்ராஜித்துக்குத் தெரியவந்தது. வீரர்களை நாலாபுறமும் அனுப்பித் தேடும்படிக் கூறினான்.  பிரசேனஜித் கிடைக்கவில்லை.

சத்ராஜித்துக்கு கிருஷ்ணர் பேரில் சந்தேகம் ஏற்பட்டது. ஏற்கெனவே தன்னிடம் சியமந்தக மணி கேட்டு, அதை அவனுக்குத் தராத காரணத்தால், கிருஷ்ணர்தான் தன் தம்பியைக் கொன்று, சியமந்தக மணியை அபகரித்துச் சென்றிருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தவனாக கிருஷ்ணரைப் பழித்துப் பேசினான். விஷயம் தெரிந்த கிருஷ்ணர் மனம் வருந்தினார்.

தன் மீது சுமத்தப்பட்ட பழிச்சொல்லைப் போக்கிக்கொள்ள விநாயகப் பெருமானுக்கு சதுர்த்தி விரதமிருந்து வழிபட்ட கிருஷ்ணர், வழிபாட்டின் பலனாக நாரத மகரிஷியின் மூலம் தான் தேடி வந்த சியமந்தக மணி கரடிகளின் அரசனான ஜாம்பவானின் மகள் ஜாம்பவதியிடம் இருக்கும் விவரத்தைத் தெரிந்துகொண்டார். 

ஜாம்பவானின் இருப்பிடத்துக்குச் சென்றார். ஜாம்பவதி அணிந்திருக்கும் சியமந்தக மணியை தனக்குத் தருமாறு கேட்டார். கேட்பது பரம்பொருளின் அம்சமான கிருஷ்ணர் என்பதை அறியாத ஜாம்பவான், சியமந்தக மணியைக் கவர வந்தவராகவே எண்ணி, அவரை யுத்தத்துக்கு அழைத்தார். ஜாம்பவானின் அழைப்பினை ஏற்று கிருஷ்ணரும் யுத்தத்துக்குத் தயாரானார்.

கிருஷ்ணருக்கும், ஜாம்பவானுக்கும் இருபத்தொரு தினங்கள் வெற்றியோ, தோல்வியோ இன்றி உக்கிரமான மல்யுத்தம் நடந்தது.
அனைவரையும் மல்யுத்தத்தில் வெற்றி கண்டுவிடும் தன்னால், இத்தனை நாள்களாகப் போரிட்டும் கிருஷ்ணரை வெற்றி கொள்ள முடியவில்லையே என்று நினைத்த அளவில், 'தன்னுடன் போரிடும் கிருஷ்ணர் மகாவிஷ்ணுவின் அவதாரம்தான்' என்ற ஞானம் பிறந்தது. 
கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, கிருஷ்ணர் தேடி வந்த சியமந்தக மணியை அவருக்குக் கொடுத்ததுடன், தன் மகள் ஜாம்பவதியைத் திருமணமும் செய்துகொடுத்தார்.

சத்ராஜித்திடம் சென்று சியமந்தக மணியைக் கொடுத்துவிட்டு நடந்ததைக் கூறினார். 

அவசரப்பட்டு கிருஷ்ணர் மீது பழிச் சொல் கூறியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, தன் மகள் சத்யபாமாவைத் திருமணம் செய்து கொடுத்து, சியமந்தக மணியையும் சீராகக் கொடுத்தான்.

இறைவனின் அவதாரமான கிருஷ்ணர் ஏன் இப்படியெல்லாம் தம்மை வருத்திக்கொண்டு ஜாம்பவானுடன் மல்யுத்தம் செய்யவேண்டும்?
அதன் பின்னணியில் ராமாயணத்தில் நடைபெற்ற சம்பவம் அமைந்திருக்கிறது.

அந்தச் சம்பவம்...

ராமாயண காலம்...  ஶ்ரீராமன் பட்டாபிஷேகக் கோலம் கொண்ட நேரம். ராவண வதத்தில் தமக்கு உதவிகள் புரிந்த சுக்ரீவன், அனுமன், போன்றவர்களுக்குப் பல வகையான பரிசுகளைக் கொடுத்து கௌரவித்த ராமபிரான், ஜாம்பவானைப் பார்த்து, "நீ வேண்டுவது என்ன?" என்று கேட்க, ஜாம்பவான், "ஐயனே! நான் தங்களுடன் மல்யுத்தம் செய்ய வேண்டும்!" என்றார்.

ஜாம்பவான் கூறியதைக் கேட்ட ஶ்ரீராமன், "இப்போது அதற்குச் சாத்தியப்படாது. உனது விருப்பம் எனது அடுத்த அவதாரமான கிருஷ்ணாவதாரத்தில் நிறைவேறும்" என்று அருளினார்.

ராமாவதாரத்தில்  ஜாம்பவானுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவே இன்று கிருஷ்ணர் தம்மை அவப்பெயர் அடையும் நிலைக்கு ஆளாக்கிக்கொண்டார்.

ஜாம்பவதியையும், சத்தியபாமாவையும் ஒருசேர மணம் செய்து கொண்டதும், ஜாம்பவானுடன் கிருஷ்ணர் போரிட்டதுமான தலம்தான் இதோ இப்போது நாம் தரிசித்துக்கொண்டிருக்கும் மன்னார்போளூர் திருத்தலம். கிருஷ்ணருக்கு ஜாம்பவான் சியமந்தக மணியை அர்ப்பணித்த தலம் என்பதால், இந்தத் தலம் மணிமண்டப க்ஷேத்திரம் என்ற புகழினைப் பெற்றது.

ஜாம்பவானுடன் கிருஷ்ணர் மற்போரில் ஈடுபட்டதால் இந்தத் தலம் மல்லஹரி போரூர் என்று பெயர் பெற்று, நாளடைவில் மன்னார்போளூர் என்று ஆகிவிட்டது. 

சூலூர்ப்பேட்டை - காளஹஸ்தி சாலையில் காளிந்தி நதியின் கரையில், அமைதியான சூழலில், அழகாகத் திகழும் கிராமத்தில், மூன்று நிலைகளையுடைய ராஜகோபுரம் நம்மை அருளும் ஞானமும் பெற்றிட அழைக்கிறது.

ஆலயத்தினுள் நுழைந்த நம்மை வரவேற்ற  கோயில் அர்ச்சகர் நமக்கு ஆலயத்தைச் சுற்றிக் காட்டியதுடன் பல்வேறு தகவல்களையும் தெரிவித்தார்.

''அரியக் கலைகளின் பொக்கிஷமாகத் திகழும் இந்தக் கோயில் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாகவும், தொடர்ந்து வேங்கடகிரி ஜமீன்தாரர்கள் நிர்வகித்து வந்த இந்தக் கோயில் 1800-ம் ஆண்டு தொடக்கத்தில் அரசாங்கத்தின் பொறுப்பில் விட்டுவிட்டனர். தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. 1965-ல் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இந்தத் தலத்துக்கு வந்து இங்குள்ள கிருஷ்ணனின் அழகிலும், அருளிலும் ஆகர்ஷிக்கப் பெற்றவராய் மூன்று வாரங்களுக்கு மேல் தங்கியிருந்தார்'' என்றார்.

கருவறை நுழைவாயிலில் இருபுறமுள்ள துவார பாலகர்களில் இடதுபுறமுள்ள ஜயனுக்கு அருகில் சுக்ரீவனும், வலப்புறமுள்ள விஜயருக்கு அருகில் ஜடாயுவும் இருக்கிறார்கள். கருவறையை நெருங்கும்போதே, பெரும் அருளொளி நம் கண் வழி புகுந்து, இதயத்தை ஆனந்தத்தில் அமிழ்த்தியது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.

ஆம்! வலப் புறத்தில் சத்யபாமாவும், இடப் புறத்தில் ஜாம்பவதியும் நிற்க, சங்கு சக்கரதாரியாக வலது காலை முழங்காலுக்குக் கீழே லேசாக மடக்கி ஒய்யாரமாகச் சாய்ந்தபடி, குழலூதும் திருக்கோலத்தில் ஐந்தடி உயரத்தில் அந்த அழகுக் கண்ணனின் தோற்றப் பொலிவு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று என்பது மட்டுமின்றி, நமக்குள் அருளொளி நிரப்புவதிலும் நிகரற்ற திருக்கோலம் என்றும் சொல்லலாம்.

அழகின் வடிவான அந்த ஆயர் குலக் கொழுந்தினைத் தரிசித்த நிறைவில் வெளிவருகிறோம். சந்நிதிக்கு நேரெதிரில் அஷ்ட நாகாபரணங்கள் தரித்தவராய், கூப்பிய கரங்களுடன் ஒன்பதடி உயரத்தில் ஆஜானுபாகுவாகக் காட்சியளிக்கிறார் கருடாழ்வார். சாதாரணமாகக் கருவறையில் இருக்கும் மூர்த்தத்தை விட கருடாழ்வார் உயரம் குறைவாகத்தான் இருக்கவேண்டும்.  ஆனால், இங்கே நேர்மாறாக இருப்பதுடன், கருடாழ்வாரின் கண்கள் கலங்கி, கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களை நனைப்பது போல் திகழ்கிறார். 

கருடாழ்வாரின் கலங்கிய நிலைக்குக் காரணம் என்ன என்பது பற்றி ஆலயத்தைச் சுற்றிப் பார்த்த பின்னர் நமக்குப் புரியவே செய்தது.
கருடாழ்வாரை தரிசித்த பிறகு பிராகாரம் வலம் வருகிறோம். பிராகாரத்தில் அருள்மிகு சௌந்தரவல்லித் தாயார் என்ற திருப்பெயர் கொண்ட ருக்மிணி தாயார் வர அபய ஹஸ்தங்களுடன் பத்மாசனக் கோலத்தில் அன்பும் அருளும் தவழ காட்சி தருகிறார்.
தாயாரைத் தரிசித்த பின்னர், கருவறைக்கு நேர் பின்புறத்தில் இருக்கும் க்ஷேத்திர பாலகனான ஜாம்பவான் சந்நிதியைக் காணலாம். ஒன்பதரை அடி உயரத்தில் ஆஜானுபாகுவாய்க் கூப்பிய கரங்களுடன் திகழும் ஜாம்பவானின் முகத்தில் பக்தியும், பெருமிதமும் ஒருசேர மிளிர்வதைக் காணமுடிகிறது.

ஜாம்பவான் சந்நிதியைக் கடந்து சென்றதும் நாம் திகைத்து விட்டோம். காரணம், தனியான ஒரு துவஜஸ்தம்பத்துடன் தனிக்கோயில் இருப்பதே ஆகும். 'ஒரே பிராகாரத்தில் இரண்டு துவஜஸ்தம்பங்களுடன் இரண்டு தனி ஆலயங்களா?' என்ற வியப்புடன் உடன் வந்தவரைக் காரணம் கேட்டோம்.

"அது இரண்டு யுகங்களின் - இரு அவதார நாயகர்களின் சங்கமக் காவியம்!" என்றவர் அந்த வரலாற்றை நமக்குச் சொல்லத் தொடங்கினார். விஸ்வரூப கருடாழ்வாரின் கலக்கத்துக்குக் காரணமும் நமக்குத் தெரிய வந்தது.

என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும், ஒருவனுக்குக் கர்வம் ஏற்பட்டுவிட்டால் விரைவில் வீழ்ச்சி ஏற்பட்டுவிடும் என்பதை நமக்கு எடுத்துக் கூறும் நிகழ்ச்சி அது...

கருடனுக்கு, 'தான் பகவானை சுமந்து செல்கிறோம். தன்னை விட வேறு யாருக்கும் அந்தச் சிறப்பு இல்லை' என்ற எண்ணத்தில் கர்வம் ஏற்பட்டது. அதேபோல் சத்யபாமாவும், 'தன்னைப் போல் கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துபவர் வேறு யாருமில்லை' என்ற எண்ணி கர்வம் கொண்டாள்.

கிருஷ்ணர்,  ஜாம்பவானுக்குத் தாம் பட்டாபிராமனாக தரிசனமளிக்கத் திருவுள்ளம் கொண்டார். அதற்கு ஆஞ்சநேயரும், சீதாபிராட்டியும் வேண்டுமல்லவா? அவர் தமது இச்சாமாத்திரத்திலேயே அதை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், கர்வம் கொண்டிருந்த இருவரின் கர்வத்தை பங்கம் செய்து ஆட்கொள்ள விரும்பினார்.

கிருஷ்ணர் முதலில் கருடாழ்வாரை அழைத்து, இமாலயத்திற்குச் சென்று, அங்குத் தவமிருக்கும் அனுமனை அழைத்து வரச் சொன்னார். கருடாழ்வார் விசுவரூபமெடுத்து இமாலயத்துக்குச் சென்றார். 

அங்குத் தவத்தில் இருந்த அனுமனைப் பார்த்து, "அனுமனே! நீ மல்லஹரி போரூருக்கு வந்து ஶ்ரீகிருஷ்ணரை தரிசிக்க வேண்டும்" என்றார். அனுமனோ, "நான் ஶ்ரீராமனைத் தவிர மற்ற யாரையும் தரிசிக்க மாட்டேன்" என்று மறுத்துவிட்டார். கோபம் கொண்ட கருடாழ்வார் அனுமனைத் தாக்க முனைந்தார்.  அனுமனோ கருடாழ்வாரை விட பெரிய அளவில் விஸ்வரூபமெடுத்து கருடாழ்வாரை அச்சுறுத்தி அனுப்பிவிட்டார். அதன் காரணமாகவே கருடாழ்வார் கலங்கிக் கண்ணீர் வழியக் கிருஷ்ணரிடம் முறையிடுவது போல் காட்சி தருகிறார்.

பின்னர், கிருஷ்ணர் கருடாழ்வாரைப் பார்த்து, "நீ மறுபடியும் சென்று அனுமனை ஶ்ரீசீதா ராமரைத் தரிசிக்க வேண்டுமென்று அழைத்து வா!" என்று சொல்லி அனுப்பினார்.

அதன்படி கருடாழ்வார் சென்று அனுமனை அழைத்து வந்தார். அடுத்து சத்யபாமாவின் கர்வபங்கம்.

பகவான் கிருஷ்ணர் தம்மை ஶ்ரீராமனாக மாற்றிக் கொண்டு சத்யபாமாவை அழைத்துத் தம்மருகில் சீதையின் உருவம் கொண்டு நிற்கச் சொன்னார். ஆனால், எவ்வளவு முயன்றும் சத்யபாமாவால் சீதையாக மாற முடியவில்லை. பின்னர், கிருஷ்ணர் ருக்மிணி பிராட்டியாரை வரவழைத்து சீதையாக நிற்கச் சொன்னார். ருக்மிணி பிராட்டியார் பகவானின் திருவடிகளில் துளசி தளங்களைத் தூவி தியானிக்க, சீதையாக உருமாறித் தோன்றினார். சத்யபாமாவின் கர்வமும் அடங்கியது. இதன் காரணமாகவே ராமபிரானுக்கு தனிக் கோயில் அமைந்துள்ளது.

சந்நிதியில் வலப் புறம் சீதாபிராட்டியுடனும், இடப் புறம் லட்சுமணனுடனும் ஶ்ரீராமர் திருக்காட்சி தருகிறார். சந்நிதிக்கு நேரெதிரில்  அஞ்சலிஹஸ்தராக ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.

ஶ்ரீசீதா ராமரைத் தரிசித்து திரும்பும்போது நம்முடன் வந்த பட்டாசாரியார் ஒரு மூலையைக் காட்டி, "இதுதான் ஜாம்பவான் குகை இருந்த இடம். அதற்குள் பிராணவாயு இல்லாத காரணத்தினால் அதை மூடிவிட்டார்கள்" என்று குறிப்பிட்டார். 

அதற்கு அருகிலேயே ஒரு தனி மண்டபத்தில் ஶ்ரீராமாநுஜரின் சந்நிதி இருக்கிறது. தேவகியின் செல்வனையும் கோசலை மைந்தனையும் ஒருசேரத் தரிசித்த மனநிறைவுடன் ஆலயத்திலிருந்து புறப்பட்டோம்.

உங்களின் கவனத்துக்கு...

தலத்தின் பெயர்: மன்னார்போளூர்
இறைவன்: ஶ்ரீசத்யபாமா - ஜாம்பவதி சமேத ஶ்ரீஅழகு மல்லாரி கிருஷ்ணசுவாமி
                      ஶ்ரீசீதாபிராட்டி சமேத ஶ்ரீகோதண்டராமர்
தாயார்: ஶ்ரீசௌந்தரவல்லித் தாயார் 
விமானம்: ஆனந்த விமானம் (திருப்பதியைப் போன்று)
திருவிழாக்கள்: ஶ்ரீகிருஷ்ணஜயந்தி, ஶ்ரீராமநவமி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, மார்கழி பாவை உற்சவம்.
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 12 வரை பிறகு மாலை 4 முதல் 7 வரை.

எப்படிச் செல்வது? 

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில்நிலையத்திலிருந்து சூலூர்ப்பேட்டைக்கு ரயிலில் சென்று அங்கிருந்து சுமார் 5 கி.மீ.தொலைவிலுள்ள மன்னார்போளூருக்கு ஷேர் ஆட்டோ மூலம் செல்லலாம்.