Published:Updated:

வேறு எங்கும் காணக் கிடைக்காது! - எட்டு ஊர் சுவாமிகள் சந்திப்புடன் குளித்தலையில் களைகட்டிய தைப்பூசம்

வேறு எங்கும் காணக் கிடைக்காது! - எட்டு ஊர் சுவாமிகள் சந்திப்புடன் குளித்தலையில் களைகட்டிய தைப்பூசம்
வேறு எங்கும் காணக் கிடைக்காது! - எட்டு ஊர் சுவாமிகள் சந்திப்புடன் குளித்தலையில் களைகட்டிய தைப்பூசம்

தைப்பூச விழாவையொட்டி கரூர் மாவட்டம் குளித்தலையில் 8 ஊர் சிவன் கோயில்களின் சாமிகள் சந்திப்பு, தீர்த்தவாரி, விடையாற்றி உற்சவம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இந்த விழாவில் ஆன்மீக இன்பம் பெற்றனர்.

இந்த ஆண்டு தைப்பூசத்தையொட்டி குளித்தலை முற்றிலா முலையம்மை, உடனுறை கடம்பவனேசுவரர், ராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்தியார்சுனேசுவரர், பெட்டவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்தியார்சுனேசுவரர், அய்யர்மலை சுரும்பார்குழலி உடனுறை ரெத்தினகிரீசுவரர், திருஈங்கோய்மலை மரகதம்பாள் உடனுறை மரகதாசலேசுவரர், கருப்பத்தூர் சுகந்தகுந்தாளம்மன் உடனுறை சிம்மபுரீசுவரர், முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திரமவுலீசுவரர், வெள்ளூர் சிவகாமி உடனுறை திருக்காமேசுவரர் ஆகிய 8 ஊர் சிவன் கோயில்களின் உற்சவமூர்த்திகள் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றுக்குக் கொண்டு வரப்பட்டனர். காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

பின்னர், ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து 8 ஊர் சாமிகளும் அந்தந்த கோவிலுக்கு புறப்பட்டு செல்ல, விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. குளித்தலை காவிரி கரையில் அஷ்டமூர்த்திகளின் சந்திப்பு நடைபெற்றது. இதையடுத்து,முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேசுவரர் உள்ளிட்ட மற்ற கோவில்களின் உற்சவர்களுக்கு காவிரி ஆற்றுப்பகுதி, பஸ் நிலையம், கடம்பர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. ஒவ்வொரு சாமிக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், அந்தந்த ஊர்களுக்கு சாமிகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர். விடையாற்றி உற்சவத்தில் 8 ஊர் சாமிகளை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், 8 ஊர்களுக்கும் செல்கிற வழியெங்கும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அந்த பகுதி பக்தரான சுந்தர் என்பவர், "இதுபோல் 8 ஊர் சிவன்கள் சந்திக்கும் நிகழ்வை காணக்கிடைக்கும் பாக்கியம் வேறு எங்கும் கிட்டாதது. இந்த குளித்தலை கடம்பனேஸ்வரர் கோயில் தைப்பூச திருவிழா மிகவும் பிரச்சித்திப் பெற்றது. இது ஏறத்தாழ 1500 ஆண்டுகள் பழமையான சிவதலமாகும். இந்த சிவ தலமானது வடக்கு நோக்கி அமைந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

குளித்தலையைச் சுற்றியுள்ள 7 ஊர்களின் சிவாலயங்களில் இருந்தும் அம்பாள் சமேத பெருமான் திருத்தேரில் அலங்கரிக்கப்பட்டு உற்சவமாக தைப்பூசத்தன்று கடம்பனேஸ்வர் கோயிலின் எதிரே உள்ள காவிரித்துறையில் கூடுவர். அம்பாள் உடனுறை கடம்பவன நாதரும் உற்சாகமாக அவர்களோடு உற்சவராக பங்கேற்பார். மறுநாள் திருஈங்கோய்நாதர் அம்பாளுக்கும், கடம்பவனேஸ்வரருக்கும் பெண் கேட்கும் படலம் நடக்கும். அப்போது அர்ச்சகர் ஒருவர் தும்மி விட,'சகுனம் சரியில்லை,அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம்' என்றபடி கலைந்துவிடுவர். இந்த இரண்டு நாள்களும் எட்டு ஊர் மக்களும் காவிரிக்கரையில் கூடி இருக்க,திருவிழா களைக் கட்டும்" என்றார் உற்சாகமாக.