Published:Updated:

அன்பே தவம் - 15

அன்பே தவம் - 15
பிரீமியம் ஸ்டோரி
அன்பே தவம் - 15

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படம்: எஸ்.சாய் தர்மராஜ் - ஓவியம்: பாலகிருஷ்ணன்

அன்பே தவம் - 15

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படம்: எஸ்.சாய் தர்மராஜ் - ஓவியம்: பாலகிருஷ்ணன்

Published:Updated:
அன்பே தவம் - 15
பிரீமியம் ஸ்டோரி
அன்பே தவம் - 15
அன்பே தவம் - 15

யற்கை விவசாயத்தின் தாய்வீடு இந்தியா. குறிப்பாகத் தமிழகம், இயற்கை விவசாய வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆல்பர்ட் ஹோவர்டு (Albert Howard) என்பவர் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்தார். இந்திய மண்ணில் இயற்கை விவசாயத்தைத் தொடங்கு வதற்குக் கால்கோளிட வந்தார். அவர் அறிவியல் தொழில்நுட்ப அடிப்படை யோடு இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டபோது, இந்திய உழவர்களிடம் அது இயல்பாகவே இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். ஆராய்ச்சிக் கூடங்களின் விவசாய முறைக்கும், இந்திய விவசாய முறைக்கும் பெரும் இடைவெளி இருந்ததை உணர்ந்தார். உண்மையில், இந்திய விவசாயிகளே அதிக விளைச்சல் பெற்றார்கள். நம் விவசாய முறையைப் பார்த்து பிரமித்துப்போன ஆல்பர்ட் ஹோவர்டு திறந்த மனதோடு, `இந்திய உழவர்களும், இந்தியாவில் வாழும் பூச்சிகளும்தான் எனக்குப் பேராசிரியர்கள். அவர்களிடமி ருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம்’ என்று சொன்னார். சொன்னதோடு நிற்கவில்லை; இந்தியாவின் இயற்கை விவசாயத்தைக் கற்றுத் தேர்ந்தார். அதை எளிமையாக விளக்கும், `ஓர் உழவாண்மை ஆவணம்’ (An Agricultural Testament) என்ற அற்புதமான நூலை உலகத்துக்குக் கொடையாகத் தந்தார்.  

அன்பே தவம் - 15

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழகம் எல்லா வளங்களும் நிறைந்த பகுதி.  காடுகள் நிறைந்த இயற்கையின் தோட்டம். ஆனால், இன்று எப்படி இருக்கிறது? நெரிசல் நிறைந்த இன்றைய மதுரை மாநகரத்துக்கு ஒரு காலத்தில், `கடம்ப வனம்’ என்று பெயர். கடம்ப மரங்கள் நிறைந்திருந்த மதுரையில் இன்றைக்குக் கடம்ப மரம் எங்கே இருக்கிறது? மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் தங்கப் பட்டையிட்டு, ஒரு பட்டுப்போன கடம்ப மரம் மட்டும் காட்சிப் பொருளாக இருக்கிறது. அழிந்துபோன கடம்ப மரங்களை இனி நாம் டிஸ்யூ கல்ச்சர் (Tissue Culture) முறையில்தான் மீட்டெடுக்க வேண்டும். இப்படி அழிந்துபோன தாவரங்கள் ஏராளம். அவற்றைக்  காக்கத் தவறிவிட்டோம். 

அன்பே தவம் - 15மரங்கள் நம் வாழ்வின் வரங்கள். தொட்டில் முதல் இடுகாடுவரை அவை நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. அழும் குழந்தைக்குத் தொட்டிலாக, எல்லோருக்கும் கட்டிலாக, நோயுற்றோருக்கு மருந்தாக, பசித்தோருக்கு விருந்தாக, மணமாலை சூட்டுவோருக்கு மலர் மாலைகளாக, வாழ்வின் இறுதிப் பயணத்தில் இடுகாட்டில் எரியும் விறகாக... எல்லா  நிலைகளிலும் மரங்களும், அதன் பாகங்களும் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன.  இவற்றையும் தாண்டி, கரியமில வாயுவை உட்கிரகித்துக்கொண்டு, நாம் வாழத் தேவையான உயிர்வளியைத் தருகிற மரங்கள் நம் உயிர் காப்பாற்றுபவை. நாம் அவற்றைக் காப்பாற்ற வேண்டாமா?

ஒருமுறை நம் மகாசன்னிதானம் `திருமடத்துக்கு சிவகங்கை மன்னர் வருகிறார். விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்!’ என்று ஆணையிட்டார்கள். அதன்படி, மிகச் சிறப்பான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. மன்னரின் வரவை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்க, நேரம் சென்றதே தவிர, மன்னர் வந்தபாடில்லை. கடைசியாக, அவர்கள் வந்தார்கள்; கழனிகளில் உழுது, விவசாயம் செய்த விவசாயிகள். அழுக்குப் படிந்த உடைகளோடும், சேற்றிலும் சகதியிலும் புரண்ட கால்களோடும் வந்திருந்த அந்த ஏழை விவசாய மக்களைப் பூரண கும்ப மரியாதையோடு, மாலையிட்டு வரவேற்றார்கள் மகாசன்னிதானம். அவர்களுக்கு விருந்தும் அளித்தார்கள். `மன்னருக்கு அளிக்கவேண்டிய விருந்தை இவர்களுக்கு அளிக்கிறீர்களே?’ என்று யாரோ கேட்டபோது, `இவர்கள்தாம் நம் நாட்டு மன்னர்கள்’ என்று சொல்லி மனம் கனிந்து சிரித்தார்கள் மகாசன்னிதானம். 

ஆஸ்திரேலியாவிலிருந்து பில் மொல்லிசன் (Bill Mollison) என்ற பேராசிரியர் இந்தியாவுக்கு வந்திருந்தார்.  பழங்குடி மக்களின் வாழ்க்கைமுறை, நம் விவசாயம் குறித்தெல்லாம் ஆராய்வதற்காக வந்திருந்தவர், ஒரு காட்டுப் பகுதிக்குச் சென்றார். அங்கே இயற்கை விவசாயம் செய்துகொண்டிருந்தவர் களிடம், `உழவு செய்யாமல், ரசாயன உரத்தைப் பயன்படுத்தாமல், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்காமல் செய்கிற உங்கள் விவசாய முறைக்கும், செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்திச் செய்கிற விவசாய முறைக்கும் என்ன வேறுபாடு?’ என்று கேட்டார்.   

அன்பே தவம் - 15

அந்தப் பழங்குடி மக்களின் தலைவர் சொன்னார்... `எங்கள் விவசாய முறை இயற்கைத் தாயின் மடியிலிருந்து பால் குடிப்பதுபோல. செயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்திச் செய்யும் விவசாயம் தாயின் மார்பகத்தை அறுத்து, ரத்தத்தைக் குடிப்பதுபோல.’ மெய்சிலிர்த்துப்போனார் பில் மொல்லிசன். இயற்கை விவசாயம் நம்மை வாழவைக்கிறது. `நவீனம்’ என்ற பெயரில் செய்யப்படும் விவசாயம் உணவை, காற்றை, நீரை, மண்ணை நஞ்சாக்குகிறது. அதன் மூலம் உற்பத்திசெய்யப்படும் பொருள்களால் கொடிய நோய்கள், மனித உலகத்துக்குப் பரிசாகத் தரப்படுகின்றன.

மேலப்பட்டி, சிங்கம்புணரிக்கு அருகிலுள்ள கிராமம். அங்கிருக்கும் தென்னந்தோப்பில் மூன்று ஏக்கர் நிலத்தில் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையமும்,  கேரள மாநிலம் காசர்கோடு தென்னை ஆராய்ச்சி நிலையமும் இணைந்து சில நெட்டைரகக் கன்றுகளை நடவுசெய்தார்கள். 18 நாடுகளைச் சேர்ந்த 250 நெட்டைரகக் கன்றுகள் அவை. மேலும், இங்கிருக்கும் பத்து மரங்களை அடையாளம் கண்டு, அவற்றின் கன்றுகளையும் நடவுசெய்தார்கள். அந்தப் பத்து மரங்களின் கன்றுகளோடு பல்வேறு நாடுகளின் நெட்டைரகக் கன்றுகள் மகரந்தச் சேர்க்கை செய்து, வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய புதிய கலப்புரகங்களை உற்பத்தி செய்யும் செயல்திட்டம் அது. திட்டத்தின் காலம் பத்தாண்டுகள். இந்தத் திட்டம் வெற்றிகரமாக ஏழு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்த வெற்றிக்குப் பின்னே ஒரு சோகமும் உண்டு.  

இந்தத் தோப்பைப் பராமரித்து வந்தவர்  இயற்கை விவசாய ஆர்வலர் மோகன்லால். நம் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மனநிறைவுக்காக இந்தத் தோப்பில் பணியாற் றினார். வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த தோப்பில், நீர் சிக்கன முறையான சொட்டு நீர்ப்பாசனத்தை நடைமுறைப்படுத்தினார். 2,000-த்துக்கும் மேற்பட்ட புதிய கன்றுகளை நடவுசெய்தார். தினந்தோறும் அவர் மரங்க ளோடு கலந்துரையாடுவார். வாட்டமுற்றிருக்கும் மரங்களிடம் நலம் விசாரிப்பார். மரங்களுக்கும் உயிர்ப்பு, உணர்வு உண்டு என்பதற்கு அடையாளம், அவர் மரங்களோடு கொண்டிருந்த நட்பு.

அங்கே ஒருமுறை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. தோப்புவீட்டின் மேல்மாடியில், திறந்தவெளியில் இரண்டு நாள்கள் உணவின்றி, உறக்கமின்றி, சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்த நிலையில் தங்கியிருந்தார் மோகன்லால். பிறகு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மரங்களை முடிந்தவரை காப்பாற்றும் அரும்பணியைச் செய்தார். குடும்பத்தைத் துறந்து, வாழ்வைப் பசுமைக்கு அர்ப்பணித்துக்கொண்டார். அவர் மறைந்தபோது, பல நாள்கள்வரை அங்கிருந்த மரங்களிடம் வாட்டமும் ஏக்கமும் தெரிந்ததை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. 
 
நம் குன்றக்குடி திருமடத்திலும் இயற்கை விவசாயப் பண்ணை அமைக்கப்பட்டது.  திருமடத்தின் காய்கறிப் பண்ணையில் குளிர்ந்த மலைச்சரிவுகளில் பயிரிடப்படும் பீட்ரூட், கேரட், நூக்கல் போன்றவற்றை, வறண்ட தட்ப வெப்பநிலையுள்ள நமது பகுதியிலும் பயிர் செய்து, அபார மகசூல் காட்டினார்கள். பண்ணையில் பணியாற்றிய பணியாளர் ராமசாமி அதற்குக் காட்டிய ஆர்வம் அபாரமானது.  

`உலகின் சர்க்கரைக் கிண்ணம்’ என்று அழைக்கப்படும் நாடு கியூபா. ஒரு சந்தர்ப்பத்தில் அமெரிக்கா, கடும் பொருளாதார நெருக்கடியை கியூபாவுக்குத் தந்தது. ஆனாலும், தடைகளைத் தாண்டி சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையைப்போல உயிர்த்தெழுந்தது கியூபா. எப்படி? அந்த நாடு, இயற்கை சார்ந்த விவசாயத்துக்கு முழுமையாக மாறியதுதான் அதற்குக் காரணம். 
 
பொருளாதார நிபுணர் ஜே.சி.குமரப்பா, அவருடைய `நிலைத்து நீடிக்கவல்ல பொருளாதாரம்’ (Economy of Permanence) என்ற நூலில் நம் பொருளாதார முறைகளை அலசி ஆராய்ந்திருக்கிறார். அந்த நூலுக்கு காந்தியடிகள் முன்னுரை எழுதியிருக்கிறார்.  ஜே.சி.குமரப்பா பட்டியலிடும் பொருளாதார நிலைகளில் சில...

ஒட்டுண்ணிப் பொருளாதாரம்: சில செடிகள், பிற செடிகளின் சாற்றை உறிஞ்சி, ஒட்டுண்ணிகளாக அவற்றின் வீழ்ச்சியில் தங்களை வளர்த்துக்கொள்ளும். அதாவது, இந்தியாவின் பொருளாதாரத்தை ஒட்டுண்ணியாக இருந்து ஆங்கிலேயர்கள் சுரண்டிச் சென்றதைப் போன்றது  ஒட்டுண்ணிப் பொருளாதாரம். 

அடாவடிப் பொருளாதாரம்: மாந்தோப்புக்குள் புகுந்த குரங்கு மாங்கனிகளைக் கடித்துத் தின்று, வீணாக்கும். அந்தக் குரங்கு மாமரத்தை வளர்ப்பதற்கு விதையிடவில்லை; உரம் இடவில்லை; தண்ணீர் ஊற்றவில்லை. எதுவும் செய்யாமல் பலனை மட்டும் அனுபவிக்கிறது. வலிமை படைத்தவர்கள் ஏழைகளைச் சுரண்டுவது போன்றது இந்த அடாவடிப் பொருளாதாரம். 

வணிகப் பொருளாதாரம்: தேனீக்கள், தேனையும் மகரந்தத்தையும் சேமிக்கிற பணியில் கருவுறுதல் நடைபெறும். சுயநலத்துக்காகச் செய்யும் அந்தப் பணியில் பொதுநலமும் இணைந்திருக்கும்.  உழவர்கள், கைவினைஞர்கள் இந்த வணிகப் பொருளாதாரத்தின் பட்டியலில் அடங்குவார்கள். 

பொதுநலப் பொருளாதாரம்: பூவிலிருந்து சேகரித்ததை சுவைமிக்க தேனாக்கும் பணியைத் தேனீக்கள் அடைகட்டிச் செய்கின்றன. இது, நம் நாட்டில் தொழில்புரிவோர் சங்கங்களின் செயல்பாடு போன்றது. 

சேவைப் பொருளாதாரம்: தாய்ப்பறவை, தன் குஞ்சுக்கு இரைதேடப் பல மைல் தூரம் பயணிக்கும்; தன் குஞ்சைக் காப்பாற்றுவதற்காக உயிரைப் பணயம்வைத்துப் போராடும். வருங்காலத் தலைமுறை வாழ வேண்டும் என்று தாய்ப் பறவைக்கு இருக்கிற அக்கறையைப் போன்றது சேவைப் பொருளாதாரம். தேசம் வளர வேண்டும் என்ற எண்ணம்கொண்ட நீடித்த பொருளாதாரம்.  

இவற்றைப் பட்டியலிட்டு, `பிறருக்கு உதவிசெய்வது ஒன்றுதான் பொருளாதாரத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும்’ என்று ஜே.சி.குமரப்பா தொலைநோக்குப் பார்வையோடு, தன் நூலில் அடையாளம் காட்டினார். 

ஆனால், நம் விவசாயப் பொருளாதாரம் நலிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நம் இளைஞர்கள் அந்நிய நாட்டில் பணிசெய்வதைப் பெருமை என்று கருதுகிறார்கள். தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டமான சிவகங்கையிலிருந்து பல இளைஞர்கள் அயல்நாடுகளில் பணிக்குச் சென்றிருக்கிறார்கள். நம் மாவட்டத்தில், டாக்டர் சேது குமணன் என்ற நடுத்தர வயதைத் தாண்டிய நல்ல மனிதர் ஒருவர் இருக்கிறார். விவசாயப் பட்டதாரிகள் பெருக வேண்டும், அவர்கள் தன்னார் வமுள்ள விவசாயிகளாக வளர வேண்டும் என்ற நல்லெண்ணம் அவருக்கு உண்டு. அதற்காகவே 300 ஏக்கர் நிலத்தில், தன் தந்தையின் பெயரில் `சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரி’ என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கி, சிறப்பாகச் செயலாற்றிவருகிறார்.

ஒருமுறை நாம் சிங்கப்பூர் சென்றிருந்த போது, நம்மிடம் ஒருவர் கேட்டார்... `உங்கள் தமிழகத்திலிருந்து பல இளைஞர்கள் சிங்கப்பூருக்கு வருகிறார்களே, என்ன காரணம்?’ 

`ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்?’

`எங்கள் சிங்கப்பூரில் எல்லாமே இறக்குமதிதான். தேநீர் தயாரிக்க, பால் டென்மார்க்கிலிருந்து வருகிறது. தண்ணீர் மலேசியாவிலிருந்து வருகிறது. சர்க்கரை பிஜித் தீவிலிருந்து வருகிறது. தேயிலை இலங்கையிலிருந்து வருகிறது. ரொட்டித் துண்டுகள் தாய்லாந்திலிருந்து வருகின்றன. தேநீர் அருந்தும் பீங்கான் பாத்திரம் சீனாவிலிருந்து வருகிறது. ஆக, ஒரு கோப்பைத் தேநீருக்கும், சில ரொட்டித் துண்டுகளுக்கும் நாங்கள் ஆறு நாடுகளை நம்பியிருக்கிறோம். ஆனால், `என்ன வளம் இல்லை எங்கள் திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?’ என்று பாடிக்கொண்டிருக்கிற, காபிக்கொட்டை முதல் கடல் முத்துவரை காலடியில் வைத்திருக்கிற நீங்கள் எங்களை நோக்கி ஏன் வர வேண்டும்?’
  
அவர் கேட்ட கேள்வி நம்மைச் சிந்திக்கவைத்தது. இந்த மண் இளைஞர்களுக்காக, அவர்களின் உழைப்புக்காகக் காத்திருக்கிறது. விவசாயக் கல்லூரிகள் பெருகியிருக்கும் தமிழகத்தில் இயற்கை சார்ந்த விவசாயத்தைப் புதுப்பிக்கவும், அதற்கு உயிர் கொடுக்கவும், வேலைவாய்ப்பைப் பெருக்கிக்கொள்ளவும் இளைஞர்கள் தயாராக வேண்டும்.

`நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!’


என்றார் தமிழ் மூதாட்டி ஒளவை. `உங்கள் மண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.  அது நாடாக இருக்கலாம்; காடாக இருக்கலாம்; பள்ளமாக இருக்கலாம்; மேடாக இருக்கலாம்;  ஆனால் அந்த நிலம் பசுஞ்சோலையாக மாற, செயலாற்றுகிற செயல்வீரர்கள் தேவை.’ இன்றைய இளைஞர்கள் நம் மண்ணை, உயிரூட்டமுள்ள மண்ணாக மாற்றுகிற செயல்வீரர்களாக மாற வேண்டும். அதுதான் தமிழகத்தின் உடனடித் தேவை!

- புரிவோம்...

அன்பே தவம் - 15

1730-ம் ஆண்டு. அது ஒரு செவ்வாய்க்கிழமை. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்திலிருக்கும் கேஜர்லி என்ற கிராமத்துக்குக் கோடாரிகளை ஏந்திய கூட்டம் ஒன்று வந்தது. அப்போது மார்வாரை ஆண்டு கொண்டிருந்த மன்னர் அவர்களை அனுப்பியிருந்தார். எதற்கு? பச்சைப் பசேலென கிராமத்தில் வளர்ந்திருந்த கேஜ்ரி மரங்களை வெட்டுவதற்கு. இதை, அம்ரிதா தேவி என்ற பெண்ணின் தலைமையில் பெண்கள் தடுத்தார்கள். வந்தவர்களை மறித்தார்கள். அம்ரிதா தேவி ஒரு மரத்தைக் கட்டியணைத்துக் கொண்டார். `மரங்களை வெட்டுவதற்கு முன்னர் என்னை வெட்டுங்கள்’ என்றார். அவரைப் பார்த்து மற்ற பெண்களும் கேஜ்ரி மரங்களைக் கட்டிக்கொண்டார்கள். வந்தவர்கள் அத்தனை பெண்களையும் வெட்டி வீழ்த்திவிட்டு, மரங்களையும் வெட்டிவிட்டுப் போனார்கள். மரங்களுக்காக உயிர்த் தியாகம் செய்த அந்தப் பெண்கள் இன்றைக்கும் வரலாற்றில் நீங்காத நினைவாக இருக்கிறார்கள். வனங்களைப் பாதுகாக்கும் அமைப்பான சிப்கோ (Chipko) இயக்கம், அந்தப் பெண்களின் கரங்கள் மரங்களைச் சுற்றி இறுக்கிப் பிடிப்பதைப்போலவே தன் சின்னத்தை வடிவமைத்துக்கொண்டது. மரங்கள் நம் வாழ்க்கையின் வரங்கள் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism