மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 23

ரங்க ராஜ்ஜியம் - 23
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 23

ஓவியம்: ம.செ

‘பாதியாய் அழுகிய கால் கையரேனும்
பழிதொழிலும் இழிகுலமும் படைத்தா ரேனும்
ஆதியாய் அரவணையாய் என் பாராகில்
அவரன்றோ யாம் வணங்கும் அடிகளாவார்
சாதியால் ஒழுக்கத்தால் மிக்கா ரேனும்
சது மறையால் வேள்வியால் தக்கோ ரேனும்
போதினான் முகன் பணியப் பள்ளி கொள்வான்
பொன்னரங்கம் போற்றாதார் புலையர் தாமே!’

- திருவரங்கக் கலம்பகத்தில்

பிள்ளைப் பெருமாளையங்கார்

ரங்க ராஜ்ஜியம் - 23

ரண்மனையிலிருந்து புறப்பட்ட மன்னன் குலசேகரன், மகள் இளையுடன் திருவரங்கம் அடைந்தான். அரங்கன்மீதான பக்தியில் திளைத்தான். மறந்தும் தானொரு அரசன் என்று எவர் உணரும்படியும் நடக்கவில்லை. தொண்டர்களில் ஒருவனாய் பன்னிரு திருமண் காப்புடன் அரங்கனைத் தினம் ஆராதித்தவன், ஏனைய திவ்ய தேசங்களுக்கும் சென்று வந்தான். அவன் விருப்பப்படியே இளையை அந்த அழகிய மணவாளன் ஆட்கொண்டான். குலசேகரனோ அரங்கன் குடிகொண்ட ஆலயங்களில் சந்நிதி வாசல் படியாய் கிடக்கவே விரும்பினான். அவன் விருப்பங்கள் பாசுரங்களாகின.

`ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும், மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே...’

- என்று பாடினான். மலைகளில் சிறந்தது திருமலை. அம்மலையில் உள்ள ஒரு சுனையில் ஒரு மீனாய்ப் பிறந்துவிட்டால், அம்மலையை விட்டு அகலாமல் அங்கேயே கிடக்கலாம். எங்கும் செல்ல விரும்பினாலும் செல்ல இயலாது. இப்படி, தன்னை மாலுடன் இணைத்துக்கொள்ள விரும்பியவன், `சுனை நீர் ஒருக்கால் வற்றிவிட நேர்ந்தால் மீனாய் எப்படி வாழ இயலும்’ என்றும் கேட்டுக் கொள்கிறான். பின்னர், வேங்கட மலையில் மரமாகப் பிறக்க எண்ணுகிறான். ஆனால், மரம்கூட வெட்டப்படலாம் அல்லவா?!

இப்படி, `எப்படிப் பிறந்தால் நீடித்து நிலைக்க முடியும்’ எனும் சிந்தனைக்கும் அதன் சார்புடைய கேள்விகளுக்கும் ஆளானவன், நிறைவாகப் பாடினான்...

`செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா
நின்கோயிலின் வாசல் அடியாரும், வானவரும்
அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன்
பவளவாய் காண்பேனே’ என்கிறான்.

ஆம்! அந்த மாலவன் திருச்சந்நிதி முன்னால், பக்தர்கள் பாதம் ஒவ்வொரு நொடிப்போதும் படும் திருவாசல் படியாகவே பிறக்க விரும்புகிறான்.

எவ்வளவு உயரிய பக்தி?

அந்தத் திருமாலோடு இரண்டறக் கலந்து மீண்டும் பிறவாமையைக் கூடத் தாராளமாக வேண்டலாம். அதுதானே அடியார் விருப்பமும்? ஆனால் அப்படி ஒரு விருப்பத்தை விடவும், இகபர சுகங்கள் கொண்ட இந்திரபதவி முதலான விஷயங்களைவிடவும் மேலான பெரும் பேற்றினை விரும்பினான் குலசேகரன்.

ஆம்! ஒரு கற்படியாக மாறி மாலவன் திருச்சந்நிதி முன் கிடந்து, அடியவர் பாதங்களைத் தாங்கி நிற்கும் பேற்றினை விரும்பிய குலசேகரன், மாலவனின் மனதையும் நெகிழ்த்துகிறான். தன் செல்வத்தையெல்லாம் நந்தசோழன் போலவே திருவரங்க ஆலயத்துக்கே செலவழித்துச் `சேனை வென்றான் திருமண்டபம்’ எனும் மண்டபத்தைக் கட்டி, ஆலயத்துக்கு ஜீர்ணோத்தாரணமும் செய்வித்தான். இவனது இக்கைங்கர்யம் மற்றும் தன்னிகரில்லாத பக்திக்குப் பிரதியாக, திருவரங்க ஆலய மூன்றாம் சுற்றுக்குக் `குலசேகரன் திருச்சுற்று’ எனும் பெயருண்டாயிற்று.

இந்தச் சுற்றில்தான் ஆலயக் கிணறு உள்ளது. இது வைகுண்டத்தில் பாய்ந்திடும் விரஜை நதிக்கு ஈடானது. இந்தச் சுற்றில்தான் திருநடை மண்டபம் முதல் மடைப்பள்ளி அன்ன மூர்த்தி, ஒற்றைக் கருடன் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், நெய்பால் கிணறுகள் மற்றும் பலிபீடம் - கொடிமரம் உள்ளன.

திருவரங்க வரலாற்றில் `ஆலயத்து ஆர்யபட்டாள் வாசல்’ எனப்படும் பகுதிக்கு பின்னால், நாம் அறிந்துகொள்ள ஓர் உருக்கமான சம்பவம் உண்டு. மூன்றாம் திருச்சுற்றுக்கும், நான்காம் சுற்றுக்கும் இடைப்பட்ட வாயிலே ஆரிய பட்டாள் வாயில் என்றழைக்கப் படுகிறது. இப்பெயர் வந்திடக் காரணம் ஒரு வங்கதேச அரசன்!

ந்நாளில் `கௌடம்’ எனும் பெயரில் வங்கதேசம் விளிக்கப்பட்டது. இத்தேசத்தை ஆண்டு வந்த அரசன், வடநாட்டு அயோத்தியிலிருந்து திருவரங்கனின் பிரணவாகார விமானம் திருவரங்கம் சென்றதை அறிந்தான். அதன் சிறப்பைக் கங்கைக்கரை யோகியர் மூலமும் ஞானியர் மூலமும் கேட்டறிந்தவன், அரங்கனை தரிசிக்க விரும்பினான்.

“நம் தேசத்தின் பிரபு நம்மைவிட்டுப் பிரிந்து தெற்கே சென்று விட்டார். அங்கே, அவர் எப்படிக் கொண்டாடப்படுகிறாரோ? நாம் சென்று அவரைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுவோம். முடிந்தால் அவரைத் திரும்ப இங்கே கொண்டு வந்துவிடுவோம்” - என்று மானுடர்க்கே உண்டான அகம்பாவத்தோடும், அதே நேரம் பக்தி மேலிடவும் எண்ணியவன், பெரும் சீர்ப்பொருள்களோடு அவற்றைச் சுமந்திடும் ஒட்டகங்கள் சகிதம் திருவரங்க யாத்திரை புறப்பட்டான்.

பாவம் அந்த மன்னன். திருவரங்கத்தில், பெரும் சோதனை காத்திருப்பது அவனுக்குத் தெரியாது!

அவன் எம்பெருமானை அறிந்தவிதத்திலும் புரிந்த விதத்திலும் நிறைய கோளாறுகள் இருந்தன. எம்பெருமானுக்குப் பக்தி உருக்கமும் `தான்’ எனும் அகந்தையற்ற அன்பு நெருக்கமுமே கணக்கு. `தான்’ எனும் உணர்வு சிறிதளவு இருந்தாலும் சரி...  அறிந்தோ, அறியாமலோ அது எவ்விதத்தில் ஏற்பட்டிருந்தாலும், அந்தச் செருக்கு நீங்கும் வரை அவருக்கு அனுக்கிரகிக்கமாட்டார் அரங்கன். அதேநேரம், அவர்களின் செருக்கை நீக்கிட, அவரவர் சூழலுக்கும் தன்மைக்கும் ஏற்ப திருவிளையாடல்கள் நிகழ்த்தி பாடமும் கற்பிப்பார்.

அவ்வகையில், இந்த வங்காள மன்னனைச் சோதிக்க திருவுளம் கொண்டார்.

திருவரங்கம் வந்துசேர்ந்த வங்கதேசத்து அரசன், மரியாதை நிமித்தமாக சோழன் தன்னைச் சந்திக்கவரவில்லையே என்று முதலில் வருந்தினான். பிறகு கோபித்தான். அதேபோல், அரங்கன் ஆலய முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் தனது வருகையை அறிவித்து, அவர்கள் தன்னைக் காண வரும்படி செய்தான்.

ரங்க ராஜ்ஜியம் - 23

திருவரங்கத்திலிருந்த அனைத்து சத்திரங்களையும் பொன்னை அள்ளி வீசி தன்வயப்படுத்திக்கொண்டான். மட்டுமின்றி, திருவரங்கனுக்குத் தான் அளிக்க விரும்பிய  ஆடையணிகள் தொட்டு முத்துச்சிவிகை, பொற்குடம், வெள்ளிக்குடம், வைர பாதுகை நவமணி ஆரம் என்று சகலத்தையும் காவலர் புடை சூழ ஒரு கண்காட்சி போல் அடுக்கிவைத்து, அனைவரும் காணும்படிச் செய்தான்.

அவனோடு வந்த யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், பசுக்கள் திருவரங்க ஆலய மாடவீதிகளை அடைத்துக்கொண்டு நின்றன. தெருவில் நடமாட இடமில்லாதபடி இவனது கூட்டத்தால் திருவரங்கம் பிதுங்கி வழிந்தது. அதுமட்டுமின்றி, அந்தக் கூட்டத்தார் திருவரங்கத்தில் வாழும் மக்களை இளப்பமாகக் கருதிப் பேசினர்.

“எங்கள் அரசர் மட்டும் இச்சோழ தேசத்து அரசராய் இருக்கும் பட்சத்தில் இந்த ஆலயம் அவ்வளவுமே பொன்னால் வேயப்பட்டிருக் கும். உங்கள் சோழன் இம்மட்டில் எம்முன் மிகச்சிறியவன். அவன் மக்களாகிய நீங்களும் அவனைப் போலவே இருக்கிறீர்கள். எங்கள் நாட்டுக்கு வந்து பாருங்கள். எங்களின் தரை தவழும் பாலகன்கூடப் புரவியைக் கண்டால் தாவி ஏறிவிடுவான். அத்தனை வீரம் மட்டு மல்ல... அவ்வளவு செல்வச் செழிப்புடைய தேசம் எங்கள் தேசம்...” என்று கித்தாப்பாய் வாயளந்தனர்.

திருவரங்கத்தாரும் சளைக்கவில்லை.

“ஏ வடவா... எங்களை என்னவென்று நினைத்தாய்? இங்கே பகட்டுக் கெல்லாம் இடமே கிடையாது தெரிந்துகொள். பொன்னாலே நகை செய்து உடம்பெங்கும் பூட்டிக் கொண்டு செல்வது செழிப்பல்ல. பன்னிரு திருமண் காப்புடன் எம்பெருமானை நினைந்து உருகியபடி செல்வதே இங்கே செழிப்பான செயல்பாடு. இங்கிருக்கும் ஆலயக் கதவுகளும்கூடத் திருமண் காப்புக்கே தாழ் திறக்கும். அதன் முன் தங்கம் வைரம் எல்லாம் கூட அற்பங்களே” - என்று பதில் கூறினர்.

இவர்கள் இப்படியிருக்க, வங்க அரசன் ஆலய ஸ்தானீகர்களை அழைத்து “ஆகமப்படி எல்லாம் நடக்கின்றனவா... அயோத்தியில் இருந்தபோது எம்பெருமான் கொண்டாடப்பட்டது போல், இங்கே தெரியவில்லையே” என்றான்.

“அப்படியெல்லாம் இல்லை. எங்களிடம் எந்தக் குறையுமில்லை. எங்களை அந்த அரங்கன் குறையோடு வைத்திருக்கவுமில்லை” என்றனர்.

“போகட்டும்... நான் எம்பெருமானுக்கென ஏராளமான சீர் வரிசையைக் கொண்டு வந்திருக்கிறேன். அவற்றை எம் குழாமோடு எடுத்துவந்து, எம்பெருமானின் பார்வையில் படும்படி அர்த்த மண்டபத்தில் அடுக்க விரும்புகிறேன்” என்றான். “நல்லது. ஆயினும் அதற்கு அரங்கனே சம்மதம் தரவேண்டும்’’ என்றனர் ஸ்தானீகர்கள்.

“இது என்ன விந்தை. அவன் சம்மதிப்பது என்றால் அது எப்படி?” அந்த வங்காளத்தான் விடைத்தான்.

“நாங்கள், உங்களின் விருப்பத்தைத் தெரிவிப்போம். இப்படிச் சொல்வதுகூடத் தவறுதான். அவனுக்குத் தெரியாமல் எந்த ஒன்றும் நடக்கமுடியுமா என்ன? இதோ இங்கே நீங்கள் பேசுவதை, நாங்கள் சொல்வதைகூட அவன் பார்த்தபடியேதான் இருக்கிறான்; கேட்ட படியேதான் இருக்கிறான்! அவன் சர்வக்ஞன் அல்லவா?

இருப்பினும் இப்படி நாங்கள் அவனிடம் விண்ணப்பிப்பது ஆலய நடைமுறை. அதற்கு அவன் செவிசாய்த்து ஏற்றுக்கொள்ளச் சொன்னால் ஏற்றுக்கொள்வோம். இல்லாவிட்டால்... அவன் விரும்பாத ஒன்றை அவனுக்குத் தர நாம் யார்?”

“எல்லாம் சரி... அவன் தன் முடிவை எப்படித் தெரிவிப்பான்?”

“அது, நாம் பூ கட்டிக் கேட்கும் போதே தெரிந்துவிடும். அவனுக்கு உகந்த துளசி, அவனுக்கு உகந்த தாமரை என்று இரண்டையும் எடுத்து அதைக் கட்டுவோம். அவன் முன் பிரார்த்தனை செய்து போட்டு, சிறு குழந்தையை விட்டு எடுக்கச் சொல்வோம். நாம் எதை விரும்பினோமோ அது வந்துவிட்டால் அவன் சம்மதித்து விட்டான் என்று பொருள்.”

“எளிமையான வழிதான். இருப்பினும் கோடானுகோடி செல்வத்தை ஏற்கவும் இப்படி யொரு வழிமுறை தேவையா?”

“கோடானு கோடிகள் பெரிதாய் தெரிவது நமக்குத்தான்; அவனுக்கு எம்மாத்திரம்? கோடிகளைக் கொட்டிக் குவிக்கும் திருமகளே அவன் மார்பில் இருந்தபடி அருள்பாலித்திடும்போது, கோடிகளைக் கண்டு மனம் மயங்க அவன் என்ன நம்மைப் போல் சாமான்யனா? அவன் வரையில், பொன்னும் பொருளும் பெரிதல்ல - அது ‘உன் முன் எனக்கும் பெரிதல்ல’ என்று கருதி, அதைச் சமர்ப்பிக்கும் பக்தியே பெரிது...”

“நானும் பக்தியைப் பெரிதாய்க் கருதியதால் அல்லவா, என் கௌட (வங்காள) தேசத்திலிருந்து செல்வங்களைச் சுமந்து வந்திருக்கிறேன்.”

‘கூடவே `நான்’ எனும் செருக்கையும் சேர்த்தல்லவா சுமந்தபடி இருக்கிறீர்கள்?’ - என்று ஸ்தானீகர் கேட்க நினைத்து, பின் வேண்டாம் என்று கருதி, ``யாராய் இருந்தாலும் எதுவாய் இருந்தாலும் இங்கே நடைமுறை இதுவே” என்றார். வங்க அரசன் யோசிக்கத் தொடங்கி விட்டான். (இவன் பெயர், இவனது மாட்சி எதுவும் பெரிதாய் பதிவாகவில்லை. காரணம், இவனது செருக்கும் வடக்கு தெற்கு எனும் பேத உணர்வுமே).

“நீங்கள் எவ்வளவு யோசித்தாலும் அரங்கன் விரும்பினாலன்றி உங்கள் பொருள்களை ஆலய நிர்வாகம் ஏற்காது”

- என்று இறுதியாகவும் உறுதியாகவும் கூறப்பட்டது.

பூக்கட்டி கேட்கும் முறைக்குச் சம்மதிக்கலாம் என்றால், அதில் ஒரு இடையூறு தென்பட்டது வங்க அரசனுக்கு. ஒருவேளை எம்பெருமான் மறுத்துவிட்டால், அது பெரும் அவமானமாகிவிடுமே? தன்னிடம் ஏதோ பிழை இருப்பதாய்த் தன்னைச் சார்ந்தவர்களே கருதத் தொடங்கிவிடுவார்களே... என்று அந்த மன்னன் தன்னை மையமாக வைத்தே சிந்தித்தான். அசைக்க முடியாத நம்பிக்கை இருந்திருந்தால், `அரங்கன் சித்தம்’ என்று துணிந்திருப்பான். அந்தத் துணிவு அவனுக்கு வரமறுத்தது. தடுமாறினான்; தவித்தான்.

பின்னர் அரை மனதாய் அரங்கன் அனுமதிக்குச் சம்மதித்தான்.

திருச்சந்நிதிக்கு முன் அவன் வந்து நின்ற நிலையில் ஸ்தானீகர்கள், சோழ அரசன் சார்பாய் ஆலயத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட காப்பாளர்கள், அன்றாடம் அரங்கன் முன் வேதம் ஓதிடும் வைணவ தாசர்கள், அவர்களை நெறிப்படுத்திடும் ஜீயர் என்று அனைவரின் முன்னிலையில், அரங்கனிடம் உத்தரவு கேட்கப்பட்டது.

அரங்கன் தந்த உத்தரவு என்ன தெரியுமா?

- தொடரும்...

  - இந்திரா சௌந்தர்ராஜன்

படம்: என்.ஜி.மணிகண்டன்

இல்லத்தரசி!

ரங்க ராஜ்ஜியம் - 23

ஒரு பெண் தன்னில் தானே அரசு செலுத்திக்கொள்கிறாள்.ஓர் அரசு என்றால் நால்வகைப் படை (யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை) இருத்தல்வேண்டும். பெண்ணிடமும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என நால்வகைக் குணங்களே நால்வகைப் படைகளாயிருந்து அவளைக் காக்கின்றனவாம்.

அரசுக்கு நல்ல அமைச்சர்கள் வேண்டும். அவ்வகையில், பெண்ணுக்கு அவளின் ஐம்புலன்களே அமைச்சர்கள். அரசுக்கு அணியாக முரசம் வேண்டாமா? பெண் தன் காலில் அணியும் சிலம்பும் மெட்டியுமே முரசோசை எழுப்புவதாயுள்ளன.அரசுக்கு வேலும், வாளும், வில்லும் ஆயுதம். பெண்ணின் இரு கண்களே அத்திறம் கொண்டதாயுள்ளன. அனைத் துக்கும் மேலாக பெண்ணின் மதிவதனமே வெண்கொற்றக் குடையாய் திகழ்கிறது. இதை, புகழேந்திப் புலவர் தமயந்தியைக் குறித்த பாடலில் குறிப்பிடுகிறார்.

‘நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சர்
ஆர்க்கும் சிலம்போ அணிமுரசா
வேற்படையும் வாளுமே கணணா
வதனைமதிக் குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு’

(புலவர் கீரனின் உரையிலிருந்து...)

- என்.ராஜலக்ஷ்மி, சென்னை-4