
படங்கள்: ஆர்.அகிலன்
நம்பிக்கைதான் வழிபாட்டின் ஆணிவேர். நான்கு புறமும் கதவுகள் அடைக்கப்பட்டு, விளிம்பில் தவிக்கிற ஒருவருக்கு இறுதி நம்பிக்கையாக இருப்பது தெய்வம்தான். தன் உடைமைகள் அபகரிக்கப்பட... ‘அதற்குக் காரணமானவர்களை நீதான் தண்டிக்க வேண்டும்’ என்று காசு வெட்டிப்போட்டு வருகிற ஒருவன், அதன்மூலம் ஆறுதலடைகிறான்.
‘என் நோயை நீதான் தீர்க்க வேண்டும்’ என்று உப்பு வாங்கிக் கொட்டுகிற ஒருவன், அதன்பின் உளவியலாக அந்த நோயின் உள்மனத் தாக்கத்திலிருந்து வெளியே வந்து நம்பிக்கையைப் பற்றிக்கொள்கிறான். பூசாரிகள் ஆவேசமடைந்து அள்ளி வீசுகிற திருநீறும், தெய்வத்தின் பாதத்திலிருந்து எடுத்துத் தரப்படுகிற ஒரு வாழைப்பழமும் மருந்தாவது, நம்பிக்கையின் பலனால்தான்.

‘இதோ இந்தப் பொம்மைத் தொட்டிலை உன் நிழலில் கட்டுகிறேன்... என் மடியை நிறைத்து வை’ என்று ஒரு பெண் செய்யும் வேண்டுதல், அவளது உள்ளத்தைக் குளிர்வித்து கருப்பையை மலரச் செய்கிறது. எவ்வளவு சிறந்த மருந்தாயினும் அதை நம்பிக்கையோடு கலந்து அருந்தவில்லையென்றால் நிச்சயம் பலனளிக்காது.
சாணி தெளித்து வாசலில் கோலமிடுவது முதல் அலகு குத்தி காவடி சுமப்பது வரை எல்லாவற்றையும் காரண காரியத்தோடுதான் நம் முன்னோர் வடித்து வைத்திருக்கிறார்கள். வாழ்க்கையில் எதிர்ப்படுகிற எல்லா இடர்களையும் கடந்து வாழும் நம்பிக்கையை மீட்டெடுத்துத் தரும் வல்லமை மிக்கவை, நம் முன்னோர் உருவாக்கிய சடங்குகளும் வழிபாடுகளும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணிக்கு அருகிலிருக்கிறது முடச்சிக் காடு என்கிற எங்கள் கிராமம். இங்கு நடக்கிற பொங்கல் வழிபாடு அடுத்த ஓராண்டு வாழ்தலுக்கான நம்பிக்கையையும் மனத்திடத்தையும் வழங்கிவிடும். புதுமசகு தீட்டப்பட்ட சக்கரம்போல வாழ்க்கை இடரில்லாமல் நகரும். முற்றுமுழுதாக இயற்கையைக் கொண்டாடும் வழிபாடு. இதுநாள்வரை இடைவிடாது உதித்து, வேளாண்மை காத்து, உயிர்களை வாழ்விக்கிற சூரியனுக்கு செய்யும் வழிபாடுதான் பொங்கலின் முதன்மை. அதிகாலை எழுந்து குளிர்நீரில் குளித்து, புத்தாடை உடுத்தி சாணம் மெழுகப்பட்ட வாசலில் செங்கற்களை அடுக்கி பொங்கல் வைப்பார்கள். சூரியனின் முதற்கதிர் பூமியில் விழும் நேரம், சரியாகப் பொங்கி நிறைக்கும் பானை. ‘பொங்கலோ பொங்கல்’ என்ற இணைந்த குரல்கள் சூழலை புத்துணர்வடையச் செய்யும்.
பெரும்பாலான பகுதிகளில் பொங்கலன்று, வெண் பொங்கலும் சேர்த்து வைப்பார்கள். கூடவே, கருணைக்கிழங்கு போட்டு புளிக்குழம்பு செய்வார்கள். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், வாழைக்காய், பறங்கிக்காய் என நம் பாரம்பர்யக் காய்கறிகள் கொண்டு நிறைய தொடுகறிகள் செய்வார்கள். இயற்கைக்கும் மூத்தோர்களுக்கும் பெரிய இலையில் படையலிட்டு பச்சை தெரியாத வகையில் கறிகாய்களை அள்ளி வைத்து நிரப்புவார்கள். இத்தனை காலம் எங்கள் குலம் காத்து நிறைவு தந்த மூத்தோர்களுக்கான படையல். வழிபாடு முடிந்ததும் ஒவ்வோர் இலையையும் ஒவ்வொரு வாரிசுக்குத் தருவார்கள். முக்கால் பாகத்தைச் சாப்பிட்டுவிட்டு கால் பாகத்தை ஈ, எறும்பு, பறவைகள் சாப்பிட வெளியில் வைப்பார்கள்.

மாட்டுப்பொங்கல் இன்னும் இயற்கையின் பிணைப்போடு நடக்கும். ஊரின் பொதுத்திடலில் ஒரு மரத்தடியைத் தேர்வு செய்வார்கள். அங்கு மண்ணைக் குவித்து மேடாக்குவார்கள். நடுவில் தென்னம்பாளையை பாதியளவு செதுக்கிவிட்டு இறையுருவாக்கி வைப்பார்கள். கன்னிப்பூ, சாமந்தி, செம்பருத்தியென அந்தப் பகுதியில் கிடைக்கும் மலர்களைக் கொய்து மாலையாக்கி, அந்த உருவுக்குச் சூடுவார்கள். அவ்வளவுதான். இயற்கையெனும் பெரும் சக்தியும் மூதாதைகளின் தூய ஆன்மாவும் அந்த உருவுக்குள் நுழைந்து சக்தி பெற்றுவிடும். அன்றைய பொழுதுக்கு அதுதான் கிராம தெய்வம்.
மாலையில் ஊரிலிருக்கும் கால்நடைகளை யெல்லாம் குளிப்பாட்டி அலங்கரித்துக் கொண்டுவந்து அந்தத் திடலில் கட்டுவார்கள். நேரம் செல்லச் செல்ல அந்தத் திடல் மனிதர்களாலும் கால்நடைகளாலும் நிரம்பிவிடும். தெய்வத்துக்கு எதிரே, கால்நடைகள் வைத்திருப்பவர்களெல்லாம் வரிசையாகப் பொங்கல் வைப்பார்கள். பொங்கலென்றால், சர்க்கரைப் பொங்கலல்ல... வெண் பொங்கல். கனன்றெரியும் அந்தத் தீயில் கிராமமே ஜொலிக்கும். சிறுவர்கள் ஓடிப்பிடித்து விளையாட, இளவட்டங்கள் கண்களால் காதல் பேசுவார்கள். வயதானவர்கள் தங்களது தண்டட்டி ஆட பழங்கதைகளைப் பேசிக்கொண்டே அடுப்பெரிப்பார்கள். பெண்கள் தலைசூடியிருக்கும் பூக்கள், ஊருக்கே ஒரு புதிய வாசனையைத் தெளிக்கும்.
இரவு 12 ஆகும். பொங்கிய பானைகள் வரிசையாக இறக்கி வைக்கப்பட்டிருக்கும். கால்நடைகள் ஆசுவாசமாக அமர்ந்து அசை போட்டுக் கிடக்கும். ஊரின் பூசாரி, வாயில் துணியைக் கட்டிக் கொண்டு வழிபாட்டு வேலைகளில் துரிதமாவார். ஒரு பக்கம் தேங்காய்களை துருவித் தள்ளுவார்கள். இன்னொரு பக்கம் பலாப்பழங்கள் வெட்டப்படும். சிலர் பேரீச்சையில் விதைகளைக் களைவார்கள். முந்திரி, திராட்சை, வாழைப்பழங்களும் தட்டுகளில் குவிந்திருக்கும்.
தென்னம்பாளைத் தெய்வத்தின்முன் ஐந்தாறு இலைகளைப் போடுவார் பூசாரி. பானைகளிலிருந்து வெண்பொங்கலை அள்ளி இலையில் வைப்பார். ஒரு பானை தீர்ந்ததும் அந்த சாதத்துக்கு மேல் வாழைப்பழங்களை அடுக்குவார். அதன் மேல் அடுத்த பானை சாதம் வைக்கப்படும். அதற்கு மேல் பலாப்பழம் அடுக்கப்படும். இப்படி ஒவ்வொரு பானை சோற்றுக்கு நடுவிலும் சர்க்கரை, தேங்காய்ப்பூ, திராட்சை, முந்திரி, பேரீச்சைகளை அள்ளித் தூவுவார்கள். இறுதியில், தெய்வத்தின் முன்பு மிகப்பெரும் உணவுக்குவியல் முளைத்திருக்கும். பூசாரி வாய்கட்டி தெய்வத்துக்கு ஆரத்தி காண்பிப்பார். கால்நடைகளுக்கும் வழிபாடு நடக்கும். ஆண்களும் பெண்களும் தனித்தனியாக வழிபடுவார்கள்.

ஆண்கள் கீழே விழுந்து வணங்கும்போது முறைப்பெண்கள் மஞ்சள் நீரை அள்ளி ஊற்றுவார் கள். பெண்கள் வணங்கும்போது ஆண்கள் பதிலடி தருவார்கள். அந்த வெளியே சிரிப்பாலும் மகிழ்ச்சியாலும் புத்தாடை உடுத்திக்கொள்ளும்.
அடுத்து, ஒரு மண்பாண்டத்தில் நெருப்பிட்டு மிளகாய் போட்டு அந்தத் திடலைச் சுற்றிவந்து கால்நடைகளுக்கும் மக்களுக்கும் திருஷ்டி கழிப்பார்கள்.
இது முடிந்ததும் உணவுக் குவியலின் நான்கு புறமும் நான்கு பேர் அமர்வார்கள். அந்த நான்கு பேரும் ஊருக்குப் பொதுவானவர்கள். எந்தப் புகாருக்கும் உள்ளாகாதவர்கள். ஆளுக்கொரு மூலையிலிருந்து சாதத்தையும் பழங்களையும் சேர்த்துப் பிசையத் தொடங்குவார்கள்.
இந்த சாதத்துக்குப் பெயர், ஆயங்கலைச் சோறு. பெயரைச் சொன்னாலே தித்திக்கிறது. வாழையிலைச் சாறிறங்கி அவற்றோடு பழங்களும் தேங்காயும் சர்க்கரையும் சேர்ந்து கொண்டாட்ட உணவாகவும், இயற்கை படிந்த பிரசாதமாகவும் இருக்கிற இந்த ஆயங்கலைச் சாதத்துக்கு இணையென்று சொல்ல எதுவுமில்லை.
முதல் உருண்டை சாதம், கால்நடைகளுக்கு ஊட்டப்படும். தாய்ப்பால் குடித்து திட உணவுக்கு மாறும் குழந்தைகளுக்கு முதல் உணவாக இந்த சாதத்தை ஊட்டுவார்கள். பிறகு கிராமத்தினர் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். வெவ்வேறு பிரச்னைகளால் வதங்கிக்கிடக்கும் மக்களுக்கு உயிர்ச்சோறாக மாறி தெம்பூட்டும் இந்த ஆயங்கலைச் சோறு.
மறுநாள் காலை மாடுகளின் கழுத்தில் துண்டோ, காசோ, தங்கமோ, கரும்போ... இயன்றதைக் கட்டி அவிழ்த்துவிடுவார்கள். இளைஞர்கள் அவற்றோடு மல்லுக்கட்டிப் பறிக்க முயல்வார்கள்.
பொங்கல் ஒரு பொதுப்பெயராக இருந்தாலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் வெவ்வேறு விதமாகக் கொண்டாடப்படும். ஆயினும், உயிர்ப்பும், ஒளியும், வண்ணமும், வனப்பும் எல்லா இடங்களிலும் ஒன்றுபோலிருக்கும். இதுமாதிரிப் பண்டிகைகளும் வழிபாடுகளும்தான் கிராமத்தின் ஜீவனை இன்னும் பசுமையாய் வைத்திருக்கிறது. வாழ்க்கை மீது நம்பிக்கையையும் உருவாக்குகிறது!
- மண் மணக்கும்...
-வெ.நீலகண்டன்
மாப்பிள்ளை கோலத்தில் மகேஸ்வரர்!

மத்தியப் பிரதேச மாநிலம் கனுரஹோவில் உள்ளது மதங்கேஸ்வரர் ஆலயம். இங்குள்ள லிங்கத் திருமேனி சுமார் 7 அடி உயரம் உள்ளது.
மதங்கேஸ்வரர் என்றால், 'மரணத்தை வென்றவர்' என்று பொருள். இங்கு, மகாசிவராத்திரி அன்று நடைபெறும் சிவ- பார்வதி திருக்கல்யாண வைபவம் பிரசித்தியானது.
மகாசிவராத்திரி அன்று சிவலிங்கத் திருமேனியை மாப்பிள்ளைக் கோலத்தில் அலங்கரிக்கின்றனர். அப்போது, காவி வேட்டி, வெள்ளைத் துண்டு, பூமாலை, கிரீடத்துடன் திகழும் லிங்கத் திருமேனியைக் காண கண்கோடி வேண்டும். அன்று இரவு முழுவதும் பூஜைகள் நடைபெறும்.
அதிகாலை வேதியர்கள் லிங்கத்தின் மீது உதிரிப்பூக்களை சொரிவர். அத்துடன் திருமணச் சடங்கு முடியும்.
- வத்சலா சதாசிவன், சென்னை-64