Published:Updated:

ஊனுடம்பைத் துறந்து சூட்சும சரீரமாக உலவும் மானூர் தெய்வநாயகம் சித்தர்! - ஒரு நெகிழ்ச்சி வழிபாடு

ஒரு நாள் நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. மழையினூடாக நடந்துவந்தார் சித்தர் சுவாமிகள். நல்ல உயரம். கருணைப் பொங்கும் கண்கள். தலைமேல் துண்டைப் போட்டுக்கொண்டு நடந்து வந்தார். ஆனால், என்ன அதிசயம், அவர்மேல் ஒரு துளி மழை கூட விழவில்லை.

ஊனுடம்பைத் துறந்து சூட்சும சரீரமாக உலவும் மானூர் தெய்வநாயகம் சித்தர்! - ஒரு நெகிழ்ச்சி வழிபாடு
ஊனுடம்பைத் துறந்து சூட்சும சரீரமாக உலவும் மானூர் தெய்வநாயகம் சித்தர்! - ஒரு நெகிழ்ச்சி வழிபாடு

ழநி மலை, சித்தர்கள் பலர் வாழ்ந்த மலை. இங்குப் போகர் முதலான சித்தர்கள் வாழ்ந்த குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. பழநிக்கு அருகே உள்ள மானூர் என்னும் ஊரில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த தெய்வநாயகம் சுவாமி எனும் ஒரு சித்த புருஷரின் ஜீவ சமாதி குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் கேள்வியுற்று அங்குச் சென்றோம்.

பழநியிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது, மானூர். மான்கள் அதிக அளவில் துள்ளி விளையாடும் பூமியாக இருந்த ஊர். அதனால் மானூர் என்று பெயர் பெற்றது. `மதுரை வெற்றிலையும் மானூர் கொட்டைப் பாக்கும்' என்னும் வழக்கு மொழி ஒன்றும் உண்டு.  இங்குதான் `தெய்வநாயக சாமிகள்' என்னும் சித்தர் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த தலம் உள்ளது. அவரை `மானூர் தெய்வநாயக சாமிகள்' என்றே சுற்று வட்டார மக்கள் அன்போடு அழைக்கின்றனர். சண்முக நதியின் ஆற்றங்கரையில் அமைந்துள்ள சித்தரின் ஜீவ சமாதி அழகிய மலர்த் தோட்டங்களுக்கு இடையே எழிலுற அமைந்துள்ளது. 

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்த ஊரில் மந்திரவாதி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனைக் கண்டாலே மக்கள் அனைவரும் பயந்து நடுங்குவார்களாம். தனது மாந்த்ரீகத்தின் மூலம் மக்களுக்கு அதிகத் தொல்லைகள் கொடுத்து வந்தான். அவனிடமிருந்து தங்களுக்கு விடிவுகாலம் பிறக்காதா என்று மக்கள் ஏங்கிக்கொண்டிருந்த வேளையில்தான், அந்த ஊருக்குத் தெய்வநாயக சித்தர் வந்தார். 

ஒரு நாள் நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. மழையினூடாக நடந்துவந்தார் சித்தர் சுவாமிகள். நல்ல உயரம். கருணை பொங்கும் கண்கள். தலைமேல் துண்டை போட்டுக்கொண்டு நடந்து வந்தார். ஆனால், என்ன அதிசயம், அவர்மேல் ஒரு துளி மழை கூட விழவில்லை!

அப்போது அந்த மந்திரவாதியும் எதிரே வந்தான். மழையில் நனையாது நிற்கும் அந்த மகானைக் கண்டு வியந்தான். ஆனாலும், அவன் கொண்டிருந்த ஆணவத்தின் காரணமாக அவருக்கு வழிவிட மறுத்தான். வழியை மறித்துக்கொண்டு நிற்கும் மந்திரவாதியைக் கண்டு சித்தர் சுவாமிகள் சிரித்தார். கீழே கிடந்த ஒரு சிறு துரும்பை எடுத்து மந்திரவாதி கையில் வைத்திருந்த மந்திரத் தண்டின் மீது போட்டார். மந்திரத் தண்டு தூள் தூளாக நொறுங்கியது. இதைக் கண்டதும் மந்திரவாதி மனம் வருந்தி அவர் கால்களில் விழுந்து வணங்கினான். இதைக் கண்ட ஊர் மக்களும் மனம் மகிழ்ந்து அவரை வணங்கினர். 

அவர் மக்களிடம் `என் பெயர் தெய்வநாயகம்' என்று அறிமுகப்படுத்திக்கொண்டாலும் மக்கள் அவரை `சாமி' என்றே அழைத்தனர். தான் எங்கிருந்து வருகிறேன் என்பது தேவையில்லாதது என்றும் இனி அங்கேயே தங்கியிருந்து அந்த ஊர் மக்களுக்கு நன்மை செய்யப் போவதாகவும் சித்தர் தெரிவிக்கவும் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தெய்வநாயகம் சுவாமிகள் அதன்பின் பல காலம் அங்கு வாழ்ந்தார். அவர் அங்கு வாழ்ந்த காலத்தில் மக்கள் நோய் நொடியின்றிச் சிறப்பாக வாழ்ந்து வந்தனர். வாழும் காலத்தில் தினமும் ஒரே ஒரு வேளை வெள்ளாட்டுப் பாலை மட்டுமே உணவாக அருந்திவந்தார். வேறு உணவுகள் உண்பதில்லை. எனவே அந்த ஊர் மக்கள் தினம் ஒரு குடும்பம் என முறை வைத்து அவருக்கு வெள்ளாட்டுப் பாலினை வழங்கி வந்தனர். ஒரு நாள் தவறுதலாக வெள்ளாட்டுப் பாலுக்கு பதிலாக செம்மறியாட்டுப் பால் தரப்பட்டுவிட்டது. இதை அறிந்தும் அதைக் குடித்துவிட்டார். அதில் ஏதோ குறிப்பு இருப்பதாக அவர் உணர்ந்தார். பின்பு இறைவனைத் தியானித்துவிட்டு அந்த ஊர் மக்களை அழைத்தார்.

`இங்கிருக்கும் மாவலிங்க மரத்தின் அடியில் நான் ஜீவ சமாதி அடைய இருக்கிறேன். அதற்கான பணிகளைச் செய்யுங்கள்' என்று ஆணையிட்டார்.

இதைக் கேட்ட ஊர் மக்கள் சொல்லமுடியாத துயரத்தை அடைந்தனர். அவரிடம் பலவாறு மன்னிப்புக் கோரினர். தங்கள் பிழை பொறுத்து முடிவை மாற்றிக்கொள்ளும்படி வேண்டினர். ஆனால் அவர் புன்னகை மாறாமல், 

``நான் சமாதிக்குப் பிறகும் எங்கும் செல்லப் போவதில்லை. இந்த ஊன் உடம்பைத் துறந்தாலும் சூட்சும சரீரமாக இங்குதான் இருப்பேன். சாதி, மத,பேதமின்றி மக்கள் அனைவருக்கும் வழிகாட்டுவேன்" என்று கூறினார். 

தெய்வநாயகம் சுவாமிகள் தனது முடிவில் உறுதியாக இருப்பதை அறிந்து வேறு வழியின்றி அவர் ஜீவ சமாதி அடைய ஏற்பாடு செய்தனர். 1825 ஆம் ஆண்டு சித்திரைமாதம் ஒரு வியாழக்கிழமை நன்னாளில் அவர் குறித்த மாவலிங்க மரத்திற்குக் கீழே, அவர் ஜீவசமாதி அடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். கூடியிருந்தவர்கள் கண்ணீரோடு, `அரோகரா' கோஷமிடக் குழிக்குள் இறங்கி ஜீவ சமாதி அடைந்தார். மக்கள் அவருக்கு அந்த இடத்தில் ஒரு நினைவிடம் எழுப்பினர். 

இன்றளவும் இங்குச் செய்யப்படும் வேண்டுதல்களை சாமிகள் கனிவோடு கேட்டு பக்தர்களின் குறைகளை நீக்கி நல்வாழ்வு அளிக்கிறார் என்கின்றனர் இந்த ஊர் மக்கள். நாடு முழுவதுமிருந்து சாதி, மத பேதமின்றி அனைவரும் இங்கு வந்து வேண்டிக் கொண்டு பலன் அடைகிறார்கள். இங்கு நடைபெறும் குருபூஜை வைபவத்திற்கு ஆகும் செலவினை இஸ்லாமிய சமூகத்து மக்களே ஏற்கின்றனர். 

இத்தகைய சிறப்பினை உடையத் தெய்வநாயக சித்தரின் ஜீவ சமாதியை அனைவரும் சென்று தரிசித்து குரு அருளும் திரு அருளும் பெறலாம்.

சிறப்பு பூஜைகள்: மாதாந்திர பௌர்ணமி பூஜை, சிவராத்திரி பூஜை மற்றும் சித்திரை மாதம் நடைபெறும் சுவாமிகளின் குருபூஜை.