Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - 20 - பிரம்மானந்தம்!

திருவருள் செல்வர்கள்! - 20 - பிரம்மானந்தம்!
பிரீமியம் ஸ்டோரி
News
திருவருள் செல்வர்கள்! - 20 - பிரம்மானந்தம்!

திருவருள் செல்வர்கள்! - 20 - பிரம்மானந்தம்!

“குருஜி! நாம ‘சதாசிவ ப்ரம்மேந்த்ராள்'அதிஷ்டானத்துக்குப் போய்விட்டு வரவேண்டும். தயாராக இருங்கள். ஒருமணி நேரத்தில், வண்டி உங்கள் வீட்டுக்கு வரும்” என்று சொல்லி விட்டுத் தொலைபேசியை வைத்து விட்டார், அடியேனின் மாணவமணி. அடியேனும் மனமொப்பிச் சென்றேன். நெரூர் சென்று, அதிஷ்டானத்தில் தரிசனம் முடித்துத் திரும்பினோம். அற்புதம் நிகழ்ந்தது.

திருவருள் செல்வர்கள்! - 20 - பிரம்மானந்தம்!

ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகளாக, என்ன முயற்சி செய்தும் நிறைவேறாத நற்செயல்கள், தாமாகவே செயல்படத் தொடங்கின. வெகுவேகமாக நடை பெற்றும் வருகின்றன. இது அடியேனின் சொந்த அனுபவம்.

“ஞானிகளும் மகான்களும் அதிஷ்டா னத்தில் (பிருந்தாவனத்தில்) இருந்து, தங்கள் அனுக்கிரகத்தைப் பரிபூரண மாகப் பொழிந்து வருகிறார்கள்” எனக் காஞ்சி ஸ்ரீமகா சுவாமிகள் அடிக்கடி சொல்வது உண்டு. அது, அடியேனின் அனுபவத்தில் உண்மையானது.

பல ஆண்டுகளாக - பலமுறை முயற்சி செய்தும் நிறைவேறாத நற்செயல்களை, அதிஷ்டானத்தை தரிசித்துவிட்டு வந்த சில நாள்களிலேயே நிறைவேற்றி வைத்த, அந்த ஸ்ரீசதாசிவ ப்ரம்மேந்த்ராளைப் பற்றித்தான், இப்போது நாம் தரிசிக்கப் போகிறோம்.

சிவபெருமான் தம் திருவடிகளைப் பூமியில் பதித்து, 64 திருவிளையாடல்களை நடத்திய திருத்தலம்; தெய்வமே சங்கத் தலைமை தாங்கித் தமிழ் வளர்த்த திருத்தலம்; அன்னை மீனாட்சியின் அருளாடல்கள் நிறைந்த திருத்தலம்; மகான்களான ஸ்ரீநீலகண்ட தீட்சிதரும், ‘தேதியூர்பெரியவா’எனப்படும் தேதியூர் ஸ்ரீசுப்ரமண்ய சாஸ்திரிகளும் தரிசித்து அம்பாளைத் துதித்து, குறைகள் நீங்கிய திருத்தலம் எனப் பலவிதங்களிலும் பெருமை பெற்ற மதுரைக்குச் செல்லலாம் வாருங்கள்!

ஆம்! ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராள் அவதரித்த புண்ணிய பூமி - மதுரை (இனி அவரை ‘ஸ்ரீ ப்ரம்மேந்த்ராள்’ என்றே பார்க்கலாம்). பரம்பரை பரம்பரையாக வேதம் கற்று, அதன்படியே வாழ்வையும் நடத்திவந்த, ஆந்திர வைதிக அந்தணர் ‘சோமநாத அவதானி’. அவதானி என்ற சொல்லுக்கு, வேதங்களில் நல்ல பயிற்சி உள்ளவர் என்று ஒருபொருள் உண்டு. அதன்படி, வேதங்களில் நன்கு பயிற்சி பெற்றிருந்த சோமநாத அவதானிக்கும், அவர் பத்தினி பார்வதியம்மைக்கும், அவர்கள் செய்த தவப்பயனாக  மகனாக வந்து அவதரித்தவர் ஸ்ரீப்ரம்மேந்த்ராள்.

ஸ்ரீப்ரம்மேந்த்ராளுக்குப் பெற்றோர்கள் இட்ட பெயர், சிவராம கிருஷ்ணன். சிவபெருமானையும் ராம கிருஷ்ணர்களையும் பற்றிப் பாடப்போகும் குழந்தைக்கு, ‘சிவராம கிருஷ்ணன்’ என்ற பெயர், பொருத்தமாகச் சூட்டப்பட்டது போல இருக்கிறது. என்னதான் பெயர் வைத்தாலும்,செல்லப்பெயர் என்று ஒன்றை வைத்துக் கூப்பிடுவோம். அதன்படி, இவரைச் செல்லமாக, `பிச்சுக்குப்பன்’என்று அழைத்தார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
திருவருள் செல்வர்கள்! - 20 - பிரம்மானந்தம்!

இந்தச் செல்லப் பெயரும் பொருத்த மாகத்தான் சூட்டப்பட்டிருப்ப தாகவே தோன்றுகிறது. ‘பிச்சு’ என்ற சொல்லுக்குப் பைத்தியம் என்பது பொருள். அனைவரும் விரும்பி அலையும் உலக இன்பங்களைத் துச்சமாகத் தூக்கியெறிந்துவிட்டு, பிரம்ம நிலையிலேயே பைத்தியம் பிடித்தாற்போல் திரிவார் இவர் - என்பதை உணர்ந்துதானோ என்னவோ, `பிச்சுக்குப்பன்’என்று செல்லப்பெயரிட்டு அழைத்திருக் கிறார்கள்.

சிறுவயதிலிருந்தே, விநாடி நேரம் கூட நேரத்தை வீணாக்காமல், கல்வியில் கவனத்தைச்  செலுத்திய ஸ்ரீப்ரம்மேந்த்ராள், சம்ஸ்கிருதத்தை முழுமையாக அறிந்தார். வைதிக முறைப்படி, இவருக்கு உரிய வயதில் உபநயனம் நடந்தது; பிரம்மமாகவே மாறப்போகிறவருக்கு பிரம்மோபதேசம் நடந்தது; உரிய வயதில் திருமணமும் நடந்தது. அக்கால வழக்கப்படி, சிறுவயதிலேயே திருமணம் நடந்திருந்தாலும், அது ஸ்ரீப்ரும்மேந்த்ராளின் படிப்புக்கு எந்த இடையூறும் செய்யவில்லை,
திருவிசைநல்லூரில் ராமசுப்பா சாஸ்திரிகள் என்பவரிடம், ஸ்ரீப்ரம்மேந்த்ராள் பாடம் பயின்று வந்தார். அமைதியாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், ஒருநாள்...

“உங்கள் மருமகள் பக்குவம் அடைந்துவிட்டாள்” என்று தகவலைச் சொல்லியபடி, சம்பந்தி வீட்டுக் காரர்கள் வந்தார்கள். வந்தவர்களை வரவேற்று, அவர்களுக்கான உபசரிப்புகளில் வீடு பரபரப்பானது; விருந்து ஏற்பாடு செய்வதில், பார்வதி அம்மையார் மும்முரமாக இருந்தார்.

அந்த நேரத்தில், வெளியில் போயிருந்த ஸ்ரீப்ரம்மேந்த்ராள், வயிற்றுப்பசியுடன் வீடு திரும்பினார்.    வீடு முழுவதும் புதுமுகங்கள் பலர், அங்கும் இங்குமாகப் போவதும்; அவர்களுக்கு உபசாரம் நடப்பதும்; அவ்வப்போது பார்வதி அம்மையார் அடுப்பங்கரைக்குச் சென்று திரும்பு வதும் - எனப் பரபரப்பான சூழ்நிலை யைக் கண்டார் ஸ்ரீப்ரம்மேந்த்ராள். தன்னைப் பார்த்தவுடன் - தாயார் வழக்கப்படி உணவு போடுவார் என எதிர்பார்த்தார். ஆனால், தாயார் இருந்த மும்முரத்தில் அவர் கவனம், ஸ்ரீப்ரும்மேந்த்ராள் பக்கம் திரும்பவில்லை.

“அம்மா! நான் வந்தவுடன் எனக்கு அன்னம் போடுவீர்களே! என்ன ஆயிற்று இன்று?” எனத் தாயாரிடம்  கேட்டார்.

தாயார் பதில் சொன்னார். ``வா...வா! சம்பந்தி வீட்டிலிருந்து வந்திருக்கிறார்கள் பார். உன் மனைவி ருதுவாயிட்டாளாம்; பெரியவளாயிட்டாளாம். அதுதான் பரபரப்பாக வேலை நடக்கிறது. வந்தவர்களை உபசரிக்கவேண்டாமா? இந்த மாதிரி நேரத்தில், சாப்பாடு கொஞ்சம் தாமதமாவது சகஜம்தானே” என்று பதில் சொன்ன தாயார், பழையபடி வேலைகளில் ஈடுபடலானார். தாயாரின் இந்த பதில், ஸ்ரீப்ரம்மேந்த்ராளின் சிந்தனையைத் தூண்டியது.

திருவருள் செல்வர்கள்! - 20 - பிரம்மானந்தம்!

‘இல்லறம் இன்னும் தொடங்கவே இல்லை. அதற்குள்ளாகவே, இன்று உணவுக்குத் தாமதமாகிவிட்டது. இது மேலும் தொடர்ந்தால், விளையக்கூடிய விபரீதங்களைச் சொல்ல முடியுமா? அளவில்லாத துன்பம் அல்லவா உண்டாகும்?

அணுவளவு சந்தோஷத்தைக் காட்டி, ஆயுள் முழுவதும் துன்பக்கடலில் ஆழ்த்தும் இந்தச் சம்சார துக்கமே வேண்டாம். ஆனந்தத்தை அதுவும் பிரம்மானந்தத்தை அனுபவிக்கும் வழியைக் காட்டும் ஞானகுருவை அடையவேண்டும்’ என்ற தீர்மானத்துடன் வெளியேறினார் ஸ்ரீப்ரம்மேந்த்ராள்.

விநாடிநேரத்தில் உண்டான முடிவு இது. இப்படி நடக்குமா என்று சந்தேகப்படவேண்டாம். உயர்வோ தாழ்வோ, எதுவாக இருந்தாலும், அதை அளிக்கக்கூடியது ஒரே விநாடிதான்.  உணர்ந்து தெளிவு பெற்றவர்கள் உயர்ந்தார்கள்; உணர்ந்தும் தெளிவு பெறாதவர்களோ, தாங்களும் தாழ்ந்து அடுத்தவர்களையும் தாழ்த்தினார்கள்.

உதாரணம்... வேடராக இருந்த கண்ணப்பர். மலையில் எழுந்தருளிய குடுமித்தேவர் எனும் சிவபெருமானை தரிசித்த  அதே விநாடியில், அம்பு உருவி வேட்டையாடும் அவர், அன்பு உருவமாக மாறினார். ‘அவனுடைய வடிவெலாம் நம் பக்கல் அன்பென்றும்’ எனச் சிவபெருமானே, கண்ணப்ப நாயனாரைப் பற்றிக் கூறுகிறார்.

பட்டினத்தார்! கோடிக்கணக்கான செல்வம் படைத்தவராக இருந்தும், `காதற்ற ஊசியும் வாராது காணுங்கடை வழிக்கே’ என்று ஓலையில் எழுதியிருந்ததைப் பார்த்த அதே விநாடியில், அனைத்தையும் துறந்துவிட்டுத் துறவியாகப் போனவர். விநாடி நேரம் விளைவித்த நிகழ்வு இது.

திருநீலகண்டர்! சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளால் முதலில் குறிப்பிடப்படுபவர் இவரே! ‘தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டம்’ என மனைவி சொன்ன அதே விநாடியில், `உன்னை மட்டுமல்ல; இனி எந்தப் பெண்ணையும் மனதால்கூட நினைக்கமாட்டேன்’என்று சொல்லி, அப்படியே நடந்த உத்தமர் இவர். இதுவும் விநாடி நேரத்தில் விளைந்ததே!

- திருவருள் பெருகும்.

 -சொல்லின்செல்வன் பி.என்.பரசுராமன்

சிவராத்திரியில் பைரவர் பூஜை!

திருவருள் செல்வர்கள்! - 20 - பிரம்மானந்தம்!

மதுரை- சோழ வந்தான் பாதையில், மதுரையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது திருவேடகம். திருஞானசமந்தர் புனல் வாதம் புரிந்தபோது, அவர் வைகையிலிட்ட ஏடு கரை ஒதுங்கிய தலம் இது. இங்குள்ள ஸ்ரீஏடகநாத ஸ்வாமி ஆலயம் புகழ்பெற்றது.

இங்கு சிவராத்திரி நான்காம் ஜாமத்தில், பைரவருக்கு அபிஷேகம் நடைபெறும். இதுபோன்று சிவராத்திரியில் ஸ்ரீபைரவருக்கு அபிஷேகம் நடக்கும் மற்றொரு தலம் காசி மட்டுமே.  இந்த பூஜையில் கலந்துகொண்டு பைரவரை தரிசித்து வழிபடுபவர்கள், அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவர் என்பது ஐதீகம்.

- ராஜேந்திரன், மதுரை-4