Published:Updated:

அன்பே தவம் - 16

அன்பே தவம் - 16
பிரீமியம் ஸ்டோரி
அன்பே தவம் - 16

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படங்கள்: கே.ராஜசேகரன், எஸ்.சாய் தர்மராஜ் - ஓவியங்கள்: ம.செ., பாலகிருஷ்ணன்

அன்பே தவம் - 16

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படங்கள்: கே.ராஜசேகரன், எஸ்.சாய் தர்மராஜ் - ஓவியங்கள்: ம.செ., பாலகிருஷ்ணன்

Published:Updated:
அன்பே தவம் - 16
பிரீமியம் ஸ்டோரி
அன்பே தவம் - 16
அன்பே தவம் - 16

`முத்துகள் கடற்கரையில் கிடைப்பதில்லை. உங்களுக்கு அவை வேண்டுமென்றால், நீங்கள் முத்துக்குளித்துத்தான் ஆக வேண்டும்’ என்பது சீனப்பழமொழி. அப்படி, மனிதகுல முன்னேற்றத்துக்காகச் சிக்கலான, சவாலான, கடினமான வேலைகளை எதிர்கொண்டவர்கள்தாம் என்றென்றும் வரலாற்றுப் பக்கங்களை அலங்கரித்துப் போற்றப்படுகிறார்கள்; பல தலைமுறைகள் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள். நம் குன்றக்குடி ஆதீனத்தின் 45-ஆவது குருமகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகள் பெருமான், அப்படிப் போற்றப்படுபவர்களில் ஒருவர். 

அன்பே தவம் - 16

ஆதீனப் பொறுப்பு ஏற்றவுடன் சாதி சமய வேறுபாடின்றி, திருமடத்தின் கதவுகளை எல்லா மக்களுக்கும் திறந்துவிட்டார்கள். ஒருமுறை மயிலாடுதுறையில் மாகேசுவர பூஜை. இறைவனை நினைத்து, அடியார் பெருமக்களுக்கு உணவளிக்கிற நிகழ்வுக்குப் பெயர் `மாகேசுவர பூஜை.’ அன்றைக்குப் பந்தியில் சாதி வேறுபாடுகள் காரணமாக சிலர் தவிர்க்கப்பட்டிருந்தார்கள். இது, நம் மகாசன்னிதானத்தின் கவனத்துக்கு வந்தது. ``அன்பர்கள் அனைவருக்கும் சரிசமமாக உணவருந்தும் நிலை இருந்தால்தான் பங்கேற்பேன்’’ என்று கூறி, உணவருந்தாமல் வெளியேறிவிட்டார்கள்.

அன்பே தவம் - 16கீழ்வெண்மணியில் 44 எளிய மக்கள் எரிந்துபோன கொடிய சம்பவம் நடந்தபோது, நேரில் சென்று பார்த்த முதல் மடத்தின் தலைவர் நம் அடிகள் பெருமான்.

இந்தியா-சீனா யுத்தம் நடந்து கொண்டிருந்த நேரம்... திருவொற்றியூரில் பொதுக்கூட்டம். அந்தக் கூட்டத்தில், தாம் அணிந்திருந்த உருத்திராட்ச மாலையை ஏலம்விட்டு, அதில் கிடைத்த நான்காயிரம் ரூபாயை நம் தேசத்துக்கு யுத்த நிதியாக வழங்கினார்கள் மகாசன்னிதானம். 

மணிவாசகப் பெருமான் ஞான அனுபவம் பெற்ற, `ஆவுடையார் கோயில்’ என்று அழைக்கப்படுகிற திருப்பெருந்துறையில் ஒருமுறை `திருவாசக விழா.’ பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கம்பன் அடிப்பொடி சா.கணேசன் மற்றும் அறிஞர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். விழாவின் ஒரு பகுதியாக திருவாசக ஊர்வலம் நடந்தது. அப்போது, சாலையின் இருபுறமும் திராவிடர் கழகத் தோழர்கள் கறுப்புக்கொடி ஏந்தி, கூடவே வந்தார்கள். கூட்டம் பதற்றநிலையை அடைந்தது. மகாசன்னிதானம் சொன்னார்கள்... ``ஏன் பதற்றப்படுகிறீர்கள்? அவர்களுக்கு விருப்பமான கொடியைப் பிடித்துக்கொண்டு, நமக்கு வரவேற்பளிக்கிறார்கள் என்று எண்ணிக்கொள்ளுங்கள்.’’ அதன் பிறகு கூட்டம் அமைதியானது. எதிர் அணியினரையும், மாற்றுக் கருத்துடையவர்களையும் மாற்றுகிற அன்பின் வலிமை அது.

பெரியாருக்கும் மகாசன்னிதானத்துக்கும் இடையே இருந்தது, கருத்து வேறுபாட்டில் தொடங்கி, பிறகு கனிந்த ஆழங்கால்பட்ட நட்பாக மாறிய உறவு. ஆரம்பத்தில் பெரியாரின் கருத்துகளையும் சிந்தனைகளையும் மறுத்துக் குரல் கொடுத்துவந்தார்கள் மகாசன்னிதானம். ஒருநாள், ஈரோட்டு சென்னியப்ப முதலியார் இல்லத்தில், இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். அப்போது, இருவருக்குமிடையே நடந்த கலந்துரையாடலில் பல கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. 

``கடவுளின் பெயரால் நடக்கும் அவலங்கள் பற்றித்தான் நான் கவலைப்படுகிறேன். எனக்கும் கடவுளுக்கும் சண்டையா என்ன? அவரை நான் பார்த்ததுகூடக் கிடையாது’’ என்றார் பெரியார். இருவரும் பேசிப் பேசி, `மனிதகுல நன்மைக்காக அவரவர் பாதையில் பணி செய்வோம்’ என்று சமரசம் செய்துகொண்டார்கள். 

மகாசன்னிதானம், தம் வாழ்நாளின் இறுதிவரை தமிழகத்தின் பல ஊர்களில் பட்டிமன்றங்கள், கருத்தரங்குகள் மூலம் சமுதாயத்துக்குப் பல நற்கருத்துகளை விதைத்தார்கள். இரவு பத்து மணிக்குத் தொடங்கும் பட்டிமன்ற மேடை, காலை ஐந்து மணிக்கு முடிவடையும். அதிகாலைப் பொழுதில் எப்படி இருள் விலகி வெளிச்சம் வருகிறதோ, அதைப்போல பட்டிமன்றக் கருத்துகளால் மக்கள் மனதிலிருந்த இருள் விலகி வெளிச்சம் தோன்றும் அங்கே தேவையற்ற நகைச்சுவைக்கு இடமிருக்காது. உயர்ந்த கருத்துகளும் அவற்றைச் சரியான முறையில் சொல்கிற முறையும் இடம்பெறும். அவற்றின் நடுவராக மகாசன்னிதானம் விளங்கினார்கள்.
 
சுவாமி விவேகானந்தர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு இந்தியா திரும்பினார். அவரிடம் ``நீங்கள் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பார்த்தீர்கள். நம் நிலையையும் பார்க்கிறீர்கள். நம் மக்களை உயர்த்த ஒரு வழி சொல்லுங்கள்’’ என்று கேட்டார்கள்.  
 
``நம் மக்களை உயர்த்தும் ஒரே வழி கல்வி. அது ஒன்றுதான் இந்த தேசத்தை உயர்த்த முடியும்’’ என்று உரக்கச் சொன்னார் விவேகானந்தர்.  

அன்பே தவம் - 16

`கோயிலைக் கட்டு, கும்பாபிஷேகம் நடத்து. அதைவிடப் புண்ணியம் ஏழைக்கு எழுத்தறிவித்தல். அதுவே கோடி புண்ணியம்’ என்று சொன்னான் பாரதி. அந்தக் கோடி புண்ணியத்தை மகாசன்னிதானம் கல்விப் பணியின் மூலமாகச் சாதித்தார்கள். ஏழை, எளிய மக்களுக்காகக் கல்விக் கதவுகளைத் திறந்துவிட்டார்கள்.

 மண்டைக்காடு... மதவெறித் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த தருணம். 1982-ம் ஆண்டில் குமரிக்கடல், குருதிக்கடலாக மாறியிருந்தது. சொந்தச் சகோதரர்கள் அடித்துக் கொண்டார்கள். வன்முறை, உச்சக் கட்டத்துக்குச் சென்றது. பல உயிர்கள் பலியாகின. ஒரு கட்டத்தில் மகாசன்னிதானம் அமைதிப் பணி ஆற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குமரி மாவட்டத்துக்குச் சென்றார்கள். 

கலவரத்தின் காரணமாக அங்கிருந்த மீனவ மக்களால் மீன்களை விற்க முடியவில்லை. ஒரு சாரார் வாங்க மறுக்க, மீனவர்களின் பிரச்னையைத் தீர்க்க மகாசன்னிதானம் முடிவெடுத்தார்கள். களத்தில் இறங்கி அனைத்து மக்களையும் ஒன்றுகூட்டினார்கள். தம் வாழ்வில் ஒருமுறைகூடத் தொட்டுப் பார்த்திராத மீன்களை, கூவிக் கூவி ஏலம் போட்டு விற்க ஆரம்பித்தார்கள். அவ்வளவு தான்... வாங்க மறுத்தவர்களெல்லாம் ஓடிவந்து வாங்கினார்கள். மீனவ மக்கள் நெகிழ்ந்துபோனார்கள். இரு பிரிவினருக்குமிடையே சமாதானத்தை ஏற்படுத்தவேண்டிய நிலை. அந்நாளைய குமரி மாவட்டப் பேராயர் ஆரோக்கியசாமி, வழக்கறிஞர் அகமதுகான், தவத்திரு பாலபிரஜாபதி அடிகள், சிவத்திரு தாணுலிங்க நாடார், அருமனை குமார் எனப் பலரையும் சந்தித்து, ஒருங்கிணைத்து, சமய நல்லிணக்கத்துக்கு வித்திட்ட நம் மகாசன்னிதானம், கலவரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

அந்நாளைய முதல்வர் எம்.ஜி.ஆர்., சட்டமன்றத்தில் மண்டைக்காட்டு மதக்கலவரத்தை அமைதிக்குக் கொண்டுவர மகாசன்னிதானம் ஆற்றிய பணியை திறந்த மனதோடு பாராட்டினார். ``அடிகளார் செல்கிற பாதையில் தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் செல்ல வேண்டும். அந்த நல்லிணக்கப் பாதை அனைவருக்கும் உரியது’’  என்று சொன்னார்.

நம் குன்றக்குடிக்கு அருகே கொரட்டி என்ற குக்கிராமம். ஒருமுறை அங்கிருந்த குடிசைகள் திடீர் திடீரெனத் தீப்பிடித்தன. காரணம் தெரியாமல் மக்கள் தடுமாறினார்கள். மந்திரவாதிகளைத் தேடிப் போனார்கள்.  `கொள்ளிவாய்ப் பிசாசின் வேலை’ என்றார்கள். மகாசன்னிதானம் கொரட்டி கிராமத்துக்குச் சென்றார்கள். அந்த மக்களின் பயத்தைப் போக்க, காரைக்குடியிலுள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகளை அழைத்து, தீப்பிடிப்பதற்கான காரணத்தைக் கண்டறியச் சொன்னார்கள். விஞ்ஞானிகள் ஆராய்ந்துவிட்டு, ``ஒரு நச்சு வேதிப்பொருள் யாராலோ குடிசைக் கூரைக்குள்ளே வைக்கப்பட்டிருக்கிறது. இரவு நேரத்தில் வைக்கப்பட்ட அந்த வேதிப்பொருள், காலையில் கதிரவனின் ஒளி பட்டவுடன் வினைபுரிந்து தீப்பிடிக்கிறது’’ என்றார்கள். 

 அவர்கள் விடைபெற்றபோது, மகாசன்னிதானம் ``நீங்கள் வந்த வேலை இன்னும் முடியவில்லை. இனிமேல்தான் இருக்கிறது’’ என்று சொன்னார்கள்.
 
 ``என்ன வேலை?’’

  ``குடிசைக்கு மேல் இருக்கிற கூரைகள் எரிவது எதனால் என்று கண்டறிந்த நீங்கள், குடிசைக்குள்ளிருக்கும் அடுப்பு ஏன் எரியவில்லை என்பதைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.’’ 

குடிசை அடுப்புகளை எரியவைக்கிற, வறுமையை எதிர்க்கிற பணி. அதற்காக, குன்றக்குடி ஆதீனமும், காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகமும் இணைந்து பணியாற்றின. விளைவு, இந்திய நாடாளுமன்றத்தில், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, இந்த வளர்ச்சித் திட்டத்தைப் பாராட்டி, `Kundrakudi Pattern’ என்று குன்றக்குடி கிராமத்துக்குப் பெயர் சூட்டினார். ``இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் குன்றக்குடிபோல வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும். இதுதான் மற்ற கிராமங்களுக்கு ஒரு முன்மாதிரி’’ என்று சொன்னார். இந்திய நடுவண் அரசுத் திட்டக்குழு (Planning Commission) குன்றக்குடி கிராம நலப்பணிகளைப் பாராட்டி
`Kundrakudi Model’ என்று சிறப்பித்தது.

 `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பேசும் திருக்குறளைப் பரப்புவதற்காகவே `உலகத் திருக்குறள் பேரவை’-யை அமைத்தார்கள் மகாசன்னிதானம். அவர்கள் எழுதுகிற கடிதத்தாள்களில் `திருக்குறளே நமது பொதுமுறை. திருமுறைகளே நமது மறை’ என்ற வாசகம் அச்சிடப்பட்டிருக்கும். இன்று, உலகத் திருக்குறள் பேரவை, பட்டிதொட்டிகளிலெல்லாம் இருக்கிறது. மாணவச் செல்வங்கள் திருக்குறளைக் கற்பதற்கும், உலகம் முழுக்க திருக்குறள் பேரவை அமைப்புகள் தோன்றியதற்கும் காரணம், உலகத் திருக்குறள் பேரவையே. 

 ஒருபுறம், ஆன்மிகப் பணிகளை வளர்த்தார்கள். மறுபுறம், அறிவியல் தமிழை வளர்த்தார்கள். `அறிக அறிவியல்’ என்ற மாத இதழ் தொடங்கப்பட்டு வெளிவரத் தொடங்கியது. ஆய்வுக் கட்டுரைகள், வேதியியல், இயற்பியல், உயிரியல், மருத்துவ இயல் என அனைத்துக் கட்டுரைகளும் தமிழில்தான் பிரசுரிக்கப்பட்டன. 

  `சுதேசி விஞ்ஞான இயக்கம்’ என்ற அறிவியல் தமிழ் வளர்க்கும் அமைப்பைத் தொடங்கி, காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்துடன் இணைந்து ஆண்டுதோறும் பல்கலைக்கழகங்களில் கருத்தரங்குகளை நடத்தி, தமிழ்வழி ஆய்வுக் கோவைகளாக வெளியிடுவதற்கும் வழிவகை கண்டார்கள். கிராமந்தோறும் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சிகளை நடத்தினார்கள். இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை (Department of Science and Technology), மகாசன்னிதானத்தின் அறிவியல் பரப்பும் பணிக்கு `சிறந்த அறிவியல் பரப்புநர்’ என்ற தேசிய விருதை வழங்கிச் சிறப்பித்தது.  

நாம் இளைய சன்னிதானமாக, மகாசன்னிதானத்திடம் இருந்த காலம் அது. ஒருநாள் நள்ளிரவு. நம் திருமடத்தின் வாசலில் உயிருக்குப் போராடும் நிலையில் இளைஞர் ஒருவரை நான்கு பேர் அழைத்துக்கொண்டு வந்தார்கள். ``இவரை நகர மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இங்கே வாகன வசதி இல்லை. கார் கொடுத்து உதவுங்கள்’’ என்று கேட்டார்கள். அப்போது, குன்றக்குடியில் மகாசன்னிதானத்தின் பயன்பாட்டுக்கு மட்டும்தான் கார் இருந்தது. `இந்த இரவு நேரத்தில் மகாசன்னிதானத்தைத் தொந்தரவு செய்வதா... அல்லது காரைக் கொடுத்துவிட்டு காலையில் சொல்லிக்கொள்ளலாமா... அது முறைதானா?’ என்று நாம் ஒரு கணம் யோசித்தோம். உயிருக்குப் போராடிய இளைஞரைப் பார்த்தோம். காரை எடுத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டோம்.

அன்றைக்கு அந்த இளைஞருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் ``சரியான நேரத்தில் இவரை அழைத்து வந்தீர்கள். அதனால்தான் பிழைத்தார்’’ என்று சொல்லியிருக் கிறார்கள். இன்று அந்த இளைஞர் நலமாக இருக்கிறார். அவருக்கு இருபது வயதில் ஒரு மகனும் இருக்கிறார். 

ஆனால், அன்று இரவு முழுதும் `மகா சன்னிதானத்தின் அனுமதி இல்லாமல் காரைக் கொடுத்துவிட்டோமே...’ என்று உறங்காமல் நாம் விழித்திருந்தோம். 

அதிகாலை எழுந்தவுடன், மகா சன்னிதானத்திடம் விழுந்து வணங்கி நடந்தவற்றைச் சொன்னோம். அதுவரை மகாசன்னிதானம் பயன்படுத்தும் காரை எதற்கும், எந்தத் தனிநபரும் பயன்படுத்தியதில்லை.  அனுமதியின்றிச் செய்த காரியத்துக்காக மன்னிப்புக் கேட்ட நம் கண்களில் கண்ணீர்; மகாசன்னிதானத்தின் கண்களில் பிரகாசம்.

 ``இப்படி ஒரு பணியைச் செய்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். என் பாதையில் நீங்களும் நடந்துவருகிறீர்கள்’’ என்று சொல்லி ஆசி வழங்கினார்கள். `இருபதாம் நூற்றாண்டின் அப்பரடிகள்’, `காவி உடுத்திய காரல்மார்க்ஸ்’, `காவி கட்டிய பெரியார்’, `மனிதநேய மாமுனிவர்’ என்றெல்லாம் அவர்கள் அழைக்கப்பட்டதற்குக் காரணம், தம் ஆன்மிக நெறியில் அன்பையும் மனிதநேயத்தையும்  முன்னிறுத்தியதுதான். அந்த மனிதநேய மாமுனிவர் பாதையில் நாம் அனைவரும் நடைபோடுவோம்.

குருபூஜைத் திருநாளில், திருமடத்தின் முந்தைய மகாசன்னிதானங்கள் பட்டினப் பிரவேசத்தன்று பல்லக்கில் பயணிப்பார்கள். ஆனால், 45-ஆவது  மகாசன்னிதானம், பொறுப்பேற்ற அன்று நடந்த பட்டினப் பிரவேசத்துக்குப் பல்லக்கில் ஏற மறுத்துவிட்டார்கள். வாழ்நாள் முழுவதும் அவர்கள் பல்லக்கில் ஏறவில்லை. இறுதி யாத்திரையில்தான் பல்லக்கில் பயணம் செய்தார்கள்.

- புரிவோம்...

அன்பே தவம் - 16

அடிகளாரைக் கேளுங்கள்!

வத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடம் பகிர்ந்துகொள்ளவும், கேட்கவும்  நமக்கு ஏராளமான கருத்துகளும் கேள்விகளும் உள்ளன. அவற்றையெல்லாம் நேரடியாகவே கேட்க நீங்கள் தயாரா... அன்பே தவம் தொடர்குறித்த உங்கள் கருத்துகள், ஆன்மிகம், வாழ்வியல் சார்ந்த சந்தேகங்கள் எதையும் கேட்கலாம். உங்களுடைய கேள்விகளுக்கான பதில்களை அடிகளார் வழங்குவார்.

அன்பே தவம் - 16நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உடனடியாக உங்கள் மொபைலை எடுத்து முப்பது விநாடிகளில் உங்கள் கேள்விகளை செல்பி வீடியோவாக பேசி 7358202444 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க...

சிறந்த கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பதில்கள் வரும் வாரங்களில், `அன்பே தவம்' தொடரில் வெளியிடப்படும்.

அன்பே தவம் - 16

துரையில், அவ்வை சண்முகம் சகோதரர்கள் `ராஜராஜ சோழன்’ நாடகம் நடத்தினார்கள். மகாசன்னிதானமும் பெரியாரும் கலந்துகொண்ட நிகழ்வு அது. நாடகத்தில் தஞ்சைப் பெரிய கோயில் காட்சிகள் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
 
பெரியார் ஆதங்கப்பட்டுச் சொன்னார்... ``நாடகம் சிறப்பாகத்தான் இருந்தது. ஆனால், அது வௌவால்கள் அடையும் கோயிலைப் பற்றி அமைந்துவிட்டதே.’’   

``பெரியாரைப் போன்றோர் கோயிலுக்குள் நுழைந்துவிட்டால், வௌவால்கள் தாமாக வெளியேறிவிடும்’’ என்றார்கள் மகாசன்னிதானம். 

``அடிகளார் குறிப்பிடுகிற மாதிரி ஆன்மிகம் இருக்குமேயானால், அங்கு செல்லும் முதல் மனிதன் நானாகத்தான் இருப்பேன்’’ என்றார் பெரியார். ஆன்மிகத்துக்கும் பகுத்தறிவுக்கும் இடையே ஏற்பட்ட இணைப்புப் பாலம் அது.