Published:Updated:

பிரமாண்டமான சுவாமிசிலைகள் ஆகம விதிகளுக்கு முரணானவையா?

பிரமாண்டமான சுவாமிசிலைகள் ஆகம விதிகளுக்கு முரணானவையா?
பிரமாண்டமான சுவாமிசிலைகள் ஆகம விதிகளுக்கு முரணானவையா?

ர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுராவில் உள்ள கோதண்டராமர் கோயிலில் நிறுவுவதற்காக, 64 அடி உயரமும், 24 அடி அகலமும் 420 டன் எடையும் கொண்ட பெருமாள் சிலை ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது. ஆனால், அங்கு எடுத்துச் செல்வதற்கான பயணம் தொடங்கியதிலிருந்து பல்வேறு தடைகள். ஒவ்வோர் ஊரிலும் லாரிகள் நிறுத்தப்பட்டு, சிலையைக் கொண்டு செல்ல சாலையை விரிவாக்கம் செய்த பின்பே பயணம் தொடர்கிறது.

இன்னொரு சம்பவம்... நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 18 அடி உயரம் கொண்ட பிரமாண்ட ஆஞ்சநேயர் விக்கிரகத்துக்கு பக்தர் ஒருவர் அளித்த துளசி மாலையை அணிவித்துவிட்டு, மேடையில் நின்றுகொண்டிருந்தார் அர்ச்சகர் வெங்கடேஷ். திடீரென நிலைதவறித்  தடுமாறி, எட்டடி உயரத்திலிருந்து தலைக்குப்புற விழுந்தவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

பொதுவாக சுவாமியின் விக்கிரகம் பற்றிக் கூறும்போது, `மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது' என்பார்கள். ஆனால், இப்படி பிரமாண்ட சிலைகளை அமைக்கும்போது சுவாமியின் சாந்நித்யம் பாதுகாக்கப்படுமா? இவ்வளவு இடையூறுகளுக்கு உள்ளாகும் நிலையில், இப்படிப்பட்ட சிலைகள் தேவைதானா? பிரமாண்ட சிலைகளை அமைப்பது ஆகம விதிகளுக்கு உட்பட்டதுதானா? எனப் பல சந்தேகங்கள் ஆன்மிக அன்பர்களின் மனங்களில் எழுந்துள்ளன. இதற்கான விளக்கம் பெறுவதற்காக, `ஆன்மிகச் செம்மல்' அனந்தபத்மநாப சுவாமிகளிடம் கேட்டோம்.

``பிரமாண்டமான சுவாமி சிலைகள் ஆகம விதிகளுக்கு உட்பட்டவைதான். அதன் வழிபாட்டு முறைகளும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக் கின்றன. பகவானுடைய விசுவரூப திருமேனியைப் பற்றி நம் புராண இதிகாசங்களில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. 

அந்தக் காலத்தைப் பொறுத்தவரை அந்தந்தப் பகுதிகளில் என்ன வகையில், எந்த அளவில் பாறைகள் கிடைக்கின்றனவோ அவற்றைக் கொண்டே சிலைகள் செய்யப்பட்டன. இப்போது இருப்பதுபோல் போக்குவரத்து அத்தனை எளிதானதாக இல்லை. 

ராஜராஜ சோழன் தஞ்சைப் பெரிய கோயிலை ஒரே கல்லில் கட்டுவதற்காக, மிகப் பெரிய அளவில் சாரம் கட்டி அந்தக் கல்லைக் கொண்டு வந்ததாக நாம் படித்திருக்கிறோம். அவன் பேரரசனாக இருந்ததால், அது சாத்தியமாயிற்று. எல்லோராலும் அப்படிச் செய்ய முடியாது. அதனால், மரத்தினாலும், சுதை எனப்படும் கட்டுமானப் பொருளினாலும் கம்பீரமான பெரிய சிலைகளை அமைத்தனர். 

நாமக்கல்லில் இருக்கும் ஆஞ்சநேயர் சிலை நம் புராண கால தொடர்புடையது. காலத்தால் பல ஆயிரம் ஆண்டுகள் முந்தையது. நாமக்கல் மலையை இங்கே கொண்டுவந்து வைத்தவர் அனுமன். நாமகிரி, சாளக்கிராமம் என்ற வேறு பெயர்களும் நாமக்கல்லுக்கு உண்டு. சாளக்கிராமம், என்பது மகாவிஷ்ணுவுக்கு மிகவும் உகந்த தெய்விகக் கல்லாகும்.

ராம, ராவண யுத்தத்தில் சஞ்சீவி மலையைக் கொண்டுவரும் வழியில் விடியற்காலை நேரம் வந்துவிட்டது. நாமக்கல்லுக்கு மேலாகப் பறந்து கொண்டிருந்த அனுமன், இங்கே சஞ்சீவி மலையை இறக்கி வைத்துவிட்டு `சந்தியா வந்தனம்' செய்தார். பின்னர், தான் இமயமலையிலிருந்து கொண்டு வந்த சாளக்கிராமத்தை வைத்து பூஜை செய்தார். பூஜை முடிந்து கண்களைத் திறந்து பார்த்தபோது, அனுமன் கீழே வைத்த சாளக்கிராமக் கல் பெரிய அளவில் வளர்ந்து விட்டிருந்தது. அதுவே தற்போதிருக்கும் நாமக்கல் மலை.

நாமக்கல் கோயிலில் அர்ச்சகர் கீழே விழுந்து இறந்தது எதிர்பாராத வருந்தத்தக்க நிகழ்வு. இதுமாதிரியான சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க எல்லோரும் இணைந்து பிரார்த்திப்போம். 

பிரமாண்டமான சிலைகள் அமைக்கும்போதும் சரி, கொண்டு செல்லும்போதும் சரி அவற்றுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்வதுடன், போக்குவரத்து வசதிகள் உள்ளனவா என்பதையும் முன்பே உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். பெங்களூரு கோதண்டராமர் சிலைக்கும் இது பொருந்தும்., பெருமாளின் சிலை பெங்களூருக்குக் கொண்டு செல்வதில் இத்தனை இடையூறுகள் ஏற்படுவது வருத்தமாகத்தான் இருக்கிறது. இது போன்ற சம்பவங்களும் நடக்கக்கூடாதென்று இறைவனைப் பிரார்த்திப்போம். முடிந்த அளவு அந்தந்தப் பகுதியில் உள்ள மூலப்பொருள்களைக் கொண்டே ஆலயம் அமைக்கவேண்டும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

`மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பது, பகவானின் அருள் சற்றும் குறைவுபடாது என்பதற்காகச் சொல்லப்பட்டது. அதற்காக மூர்த்தி சிறிதாகத்தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லப்படவில்லை. விசுவரூப திருமேனி என்பது ஆகம விதிகளுக்கு எதிரான செயல் அல்ல என்று திட்டவட்டமாகக் கூறலாம்'' என்று தெளிவுபடுத்தினார்.