ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

'தை பிறந்தால் வழி பிறக்கும்!'

'தை பிறந்தால் வழி பிறக்கும்!'

'தை பிறந்தால் வழி பிறக்கும்!'
'தை பிறந்தால் வழி பிறக்கும்!'

ரு வருடத்துக்கு 12 மாதங்கள் என்பதை அறிவோம். அதில், தை மாதம் துவங்கி ஆனி மாதம் வரை உத்தராயனம் என்றும், ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரை தக்ஷிணாயனம் என்றும் பிரித்து அருளியிருக்கிறார்கள் ரிஷிகள்!

'கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே!’ என்கிறது கீதை. இந்தத் தத்துவத்துக்குள் இன்னொரு விஷயம் உள்ளார்ந்து கிடப்பதாகத் தோன்று கிறது. அதாவது, 'கடமையைச் செய்தால், அதற்கான பலன் கிடைத்தே தீரும்!’ ஆனால், பலனில்லாத காரியங்களைச் செய்யாதீர்கள் என்றே சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன ('ந கிர்யாத நிஷ்பலம் கர்ம).  உத்தராயன காலம் துவங்குகிற இந்தத் தை மாதத்தைப் போற்றும் வகையில் சொல்லப் பட்ட வாசகம்... தை பிறந்தால் வழி பிறக்கும்!

உத்தராயன காலத்தை தேவர்களின் பகல் பொழுது என்றும், தக்ஷிணாயன காலத்தை தேவர்களின் இரவுப் பொழுது என்றும் சொல்வர். நம் சநாதன தர்மத்தில், ஒவ்வொரு காலமும் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 'உத்தரம்’ என்றால் 'வடக்குத் திசை’ என்றும், 'பதில்’ என்றும் சம்ஸ்கிருதத்தில் அர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளன. நம் ஆன்மிகத் தேடல்களுக்கான விடைகளை உள்ளடக்கியிருப் பதால் சம்ஸ்கிருதத்தை வடமொழி என்றும், நம் சந்தேகங்களை அனுபவத்தில் உணர்ந்து தெளிவுபடுத்துகிற சிறந்த வழி என்பதால் உத்தராயனம் என்றும் ரிஷிபெருமக்கள் பெயர் சூட்டியுள்ளார்களோ என்னவோ?!

'தை பிறந்தால் வழி பிறக்கும்!'
##~##
சரி, தக்ஷிணாயன காலம் முடிந்து உத்தராயன காலம் துவங்குகிற சிறப்பைப் பார்ப்போமா? தை மாதப் பிறப்பான (15.1.12) அன்றைய தினத்தை, உத்தராயன புண்ய காலம் என்பார்கள். சூரியன், தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்வதால், அந்த நாளை 'மகர சங்கராந்தி’ என்றும் போற்றுவார்கள். இந்தப் பூவுலகம் சிறப்புற இயங்கத் தேவையான ஒளியையும், அதன் மூலம் சக்தியையும் அளிக்கும் ஸ்ரீசூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடுவதே தைத் திருநாளின் நோக்கம்! இந்த நாளை, பொங்கல் படையலிட்டு சூரிய பூஜை செய்வது மிகவும் விசேஷம்.

சூரியனை ஆராதித்துப் போற்றுகிற பொங்கல் திருநாள், இந்த வருடம் ஞாயிற்றுக் கிழமையன்று வருவது பெரும் பாக்கியம்.

ஓம் மித்ராய நம: ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம: ஓம் பாநவே நம:
ஓம் ககாய நம: ஓம் பூஷ்னே நம:
ஓம் ஹிரண்யகர்பாய நம: ஓம் மரீசயே நம:
ஓம் ஆதித்யாய நம: ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்காய நம:
ஓம் பாஸ்கராய நம

எனும் மந்திரத்தைச் சொல்லி, 'ஆதித்யஸ்ய நமஸ்காரான் யே குர்வந்தி திநே திநே:  ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷூ தாரித்ர்யம் நைவ ஜாயதே:’ என்கிற வசனப்படி, தினமும் காலையில் பன்னிரு நமஸ்காரங்கள் செய்பவர்களுக்கு இந்தப் பிறப்பு மட்டுமின்றி, இனி எடுக்கிற ஒவ்வொரு பிறப்பிலும் செல்வச் செழிப்பில் எந்தக் குறையும் ஏற்படாது என்றும், நல்ல தேக ஆரோக்கியத்துடன் வாழ்க்கை அமையும் என்றும் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றைக் கடைப்பிடித்த நம் முன்னோர்களை உதாரண புருஷர்களாகக் கொண்டு நாமும் வாழ்ந்தால், நம் வாழ்க்கை மட்டுமின்றி நம் சந்ததியினரது வாழ்க்கையும் சிறக்கும்!

'உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்’ என்பார்கள். நமக்குத் தேவையான உணவுகளுக் காக, தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் உழவர் பெருமக்களுக்கு இந்த நாளில், மனதார நன்றி செலுத்துவோம்!

அடுத்து, தை மாதத்தின் 2-ஆம் நாள் (16-ஆம் தேதி), மாட்டுப் பொங்கல். 'காவோ வை ஸர்வா தேவதா:’ என்கிற வாக்கின்படி, கோமாதாவைப் போற்றுகிற அற்புதமான நாள். ஸ்ரீமகாலட்சுமி மட்டுமின்றி அனைத்துத் தெய்வங்களும் பசுவில் வாசம் செய்வதாக ஐதீகம்! எனவே, பசுவுக்கான அனைத்து வழிபாடுகளைச் செய்வது உத்தமம். பசுவுக்கு உணவளிப்பதும் அதனைப் பராமரிப்பதும் நம் பாவங்களை விலக்கி, சகல சௌபாக்கியங்களையும் தரும் என்பதை அறிந்து, வணங்குங்கள்!

தை 5-ஆம் தேதி (19.1.12), கிருஷ்ணபட்ச ஏகாதசி. இந்த முறை வியாழக்கிழமையுடன் கூடி வருவதால், இந்த நாளில் ஏகாதசி விரதம் மேற்கொள்ள, அறிவுச் சக்தியானது தூண்டப்பட்டு, கல்வி -ஞானத்தில் சிறந்து விளங்கலாம். மறுநாள் தை 6-ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று பிரதோஷ நன்னாள். வெள்ளிக்கிழமையன்று வருகிற பிரதோஷ நாளில் விரதமிருந்து, பூஜையில் கலந்து கொண்டு ஸ்வாமியைத் தரிசிக்க, மன அமைதியான வாழ்வையும் போதுமான செல்வத்தையும் வாரி வழங்குவார் ஈசன்.

'தை பிறந்தால் வழி பிறக்கும்!'

தை 8-ஆம் தேதி (22.1.12) அன்று அமாவாசை. பொதுவாக, மாதந்தோறும் அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு, 'பித்ரு ருணம்’ என்று சொல்லக் கூடிய நம் கடனை, கடமை யைச் செய்வது சிறந்தது. குறிப்பாக, தை, ஆடி மற்றும் மஹாளயம் ஆகிய காலங்களில் வரக்கூடிய அமாவாசையையேனும் தவறாமல் கடைப்பிடித்து, பித்ருக்களுக்கு ஆராதனை செய்ய வேண்டும்.

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு... எல்லாம்வல்ல அம்பிகை, அபிராமிபட்டருக்கு அருளிய நாளும் இதுவே! எனவே, பகலில் முன்னோருக்கான கடனை நிறைவு செய்து, பிறகு குடும்பத்தாருடன் அம்பிகையின் ஆலயத்துக்குச் சென்று தரிசிப்பது சிறப்பு.

இந்த முறை, மறுநாள் (திங்கட்கிழமை) மதியம் 1.41 மணி வரை அமாவாசை திதி இருப்பதால், சோமவாரத்துடன் கூடிய இந்த நாளில், மரங்களுக்குத் தலைவனாகத் திகழ்கிற அரச மரத்தை காலையில் 108 முறை வலம் வந்து, ஏழைகளுக்கு உணவு அளிப்பது சிறப்பு. தேக ஆரோக்கியம் கூடும்; இல்லத்தில் சுபிட்சத்துக்குக் குறைவிருக்காது! குறிப்பாக, பிள்ளை பாக்கியம் வேண்டுவோர், அரச மரத்தை இந்நாளில் வலம் வருவது விசேஷம்.

தை 10-ஆம் நாள் முதல் (ஜனவரி 24-ஆம் தேதி முதல்) மாசி மாதம் 9-ஆம் தேதி வரை தினமும் காலையில் சூரிய உதயத்துக்கு முன்னர், ஸ்நானம் செய்து, பூஜைகளை முடிப்பது  கூடுதல் பலன்களைத் தரும். இதனை மாக ஸ்நானம் என்பர். புண்ணிய நதிகளில் ஏரி, குளம், கிணறு மற்றும் நம் வீட்டில் என எங்கே குளித்தாலும் கிழக்கு நோக்கியபடி நீராடுங்கள். இவற்றை எவரொருவர் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் செய்து வருகிறாரோ, அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்; நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமுமாக சந்தோஷம் பொங்க வாழ்வார்கள்!

தை 16-ஆம் நாள் (30.1.12), சுக்லபட்ச சப்தமி. அதாவது, சூரியனின் தேரானது வடக்கு நோக்கித் திரும்புவதாக ஐதீகம். அன்று, வீட்டிலுள்ள அனைவரும் ஏழு எருக்கு இலைகள், அட்சதை, அருகம்புல், பசுஞ்சாணி, மஞ்சள் பொடி ஆகியவற்றைத் தங்களது சிரசில் வைத்துக் கொண்டு, கிழக்குப் பார்த்தபடி நின்று, 'நௌமி ஸப்தமி தேவித்வாம் ஸப்தலோகைக மாதரம்! ஸப்தார்க்க பத்ர ஸ்நாநேன மம பாபம் வ்யபோஹயா’ என்று பிரார்த்தித்து ஸ்நானம் செய்ய வேண்டும். அதாவது, 'ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தையும் விலக்கி, எங்கள் துக்கத்தையெல்லாம் போக்கி அருள்வாயாக!’ என மனதாரப் பிரார்த்தியுங்கள். பிறகு, 'ஓம் திவாகராய நம:’ என்று சொல்லி, இரண்டு கைகளாலும் தண்ணீரை எடுத்து 3 முறை சூரியனை நோக்கி விடவேண்டும். முன்னோருக்கு உரிய தர்ப்பணங்கள் செய்யவும், ஏழை எளியவர்களுக்கு தான- தருமங்கள் செய்யவும் உகந்த உன்னதமான நாள்!

இதையடுத்து, மறு நாளான தை 17-ஆம் தேதி (31.1.12), பீஷ்மாஷ்டமி. இந்த நாளில், பீஷ்மர் குறித்துத் தர்ப்பணம் செய்தால், சகல ஞானங்கள் பெற்று, சத்தியபுருஷர்களாக, சந்தோஷம் நிறைந்தவர்களாக வாழலாம் என்கின்றன புராணங்கள். அடுத்து, தை 18-ஆம் தேதி (1.2.12) அன்று, முருகப் பெருமானுக்கு உகந்த கிருத்திகை தினம். எனவே, முருகனை நினைத்து கிருத்திகை விரதம் மேற்கொண்டால், நல்லறிவும் மக்கட்பேறும் கிடைக்கப் பெறலாம்!  

'தை பிறந்தால் வழி பிறக்கும்!'

தை 23-ஆம் தேதி (6.2.12) நட்சத்திரத்தின்படியும், மறுநாள் 24-ஆம் தேதி (7.2.12) பௌர்ணமி திதியின் படியும் தைப்பூசத் திருநாள் உலகம் முழுவதும் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில், ஆலயங்கள் பலவற்றிலும் உத்ஸவத் திருநாளின் நிறைவு நாளாகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும். முருகக்கடவுளை வழிபட செல்வம், ஆழ்ந்த ஞானம், தேக ஆரோக்கியம், குடும்ப ஒற்றுமை, உத்தியோகத்தில் ஏற்றம், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்!

தை 24-ஆம் தேதியான பௌர்ணமியில், அதி காலை 4.24 மணி முதல் 6 மணிக்குள் ஸ்நானம் செய்பவர்களுக்கு, மனக்குழப்பங்கள் யாவும் விலகும்; புத்தியில் தெளிவு ஏற்படும் என்பர்.

ஒரு பெரிய வீடாக, மிகப் பிரமாண்டமான மாளிகையாக இருந்தாலும், அந்த வீட்டைப் பூட்டுவதற்கான சாவி சிறிதாகத்தான் இருக்கும். வீட்டுக்குத் தகுந்தபடி சாவி இருப்பதில்லை, அல்லவா? நம் இந்த பிரமாண்டமான வாழ்க்கையை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து, ஆனந்தமயமாக வாழ நம் முன்னோர்கள் செய்து கொடுத்திருக்கிற சாவிகள்தான் சடங்குகளும் சம்பிரதாயங்களும்!

இதோ... இந்த தை மாதத்தில் இருந்து உரிய காலங்களில் வருகிற சடங்கு - சாங்கியங்களைச் செவ்வனே செய்வோம். 'தை பிறந்தால் வழி பிறக்கும்!’ என்பதை உணர்ந்து பூரிப்போம்!