Published:Updated:

அன்பே தவம் - 17

அன்பே தவம் - 17
பிரீமியம் ஸ்டோரி
அன்பே தவம் - 17

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படம்: கே.ராஜசேகரன், ஓவியம்: பாலகிருஷ்ணன்

அன்பே தவம் - 17

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படம்: கே.ராஜசேகரன், ஓவியம்: பாலகிருஷ்ணன்

Published:Updated:
அன்பே தவம் - 17
பிரீமியம் ஸ்டோரி
அன்பே தவம் - 17
அன்பே தவம் - 17

பெண் என்பவள்,  நாம் அழும்போது அரவணைக்கும் அன்னை; பசிக்கும்போது உணவூட்டும் அன்புத் தாய்; இன்பதுன்பங்களில் கலந்து கரைந்து நிற்கும் நிலையில் வாழ்க்கைத்துணை; தளரும்போது தாங்கிப்பிடிக்கும் தமக்கை; தவிக்கும்போது பாசம் காட்டும் தங்கை. ஒரு பெண், நம் சமூகத்தில் வகிக்கும் பொறுப்பு பிரமிக்கத்தக்கது. நம் பெண்களைப் பற்றிப் பேசிப் பேசித் தீர, சில சொற்கள், வாக்கியங்கள், பக்கங்கள் போதாது. பெண்ணைப் பற்றி `பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ எனக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். `பெண்ணைவிடப் பெருமையுடையது வேறு என்ன இருக்க முடியும்?’ என்பது அதன் பொருள்.   

அன்பே தவம் - 17

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`யாயும் ஞாயும் யாரா கியரோ...’ எனத் தொடங்கும் பாடலில், `என் தாயும் உன் தாயும் யார் யாரோ... என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையிலும் உறவினர்கள் அல்லர்... நானும் நீயும்கூட ஒருவரையொருவர் அறிந்தவர்களில்லை... ஆனாலும், செம்மண்ணும் தண்ணீரும் இரண்டறக் கலந்து உடன் பிரிக்க முடியாததைப்போல அன்புடைய நம் நெஞ்சங்கள் கலந்துவிட்டனவே...’ என்கிறார் செம்புலப் பெயனீரார் என்கிற சங்ககாலப் புலவர்.

இதயத்து அன்பு, அறமாக மலர்கிறது. அது சாதி அடையாளங்களைத் தாண்டிய அன்பு; சங்ககாலம் காட்டுகிற காதல் வாழ்வு; இதயத்தில் தொடங்கி, இல்லத்து அன்பாக மலர்ந்து, அறமாக விரிந்து மணம் பரப்புகிறது.

`முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்...’ எனத் தொடங்கும் பாடலில் அப்பர் பெருமான், இறைவனைத் தலைவனாகவும், தன்னைத் தலைவியாகவும் எண்ணிப் பாடுகிறார். பக்தி வாழ்வில் இறைவன் திருவடிகளில் சரணாகதி அடைவதாகப் பாடும் இந்தப் பாடல், அன்பு வாழ்க்கைக்கும் பொருந்துவதுபோல் தோன்றுகிறது.  

தன்னை மறத்தல்; தன்னலம் துறத்தல்; தன் கணவனுக்காகவோ அல்லது காதல் தலைவனுக்காகவோ தன் சுகத்தை, இன்பத்தை, மகிழ்ச்சியைத் துறந்து தலைவனுக்காகவே வாழ்தல்... அவள்தான் பெண்! 

`உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு’

என்கிறார் திருவள்ளுவர். காதல் வாழ்வில், ஒருவர் மற்றவருக்காக வாழும் வாழ்க்கைதான் உண்மையான அன்பு கலந்தது. அது, `Made for each other’ என்ற நிலைப்பாடு. 

அன்பே தவம் - 17இந்த நிலைப்பாட்டை அமெரிக்க எழுத்தாளர் ஓ.ஹென்றி, `தி கிஃப்ட் ஆஃப் தி மேகி’ (The Gift of the Magi) என்ற சிறுகதையில் அழகாக விவரிக்கிறார். எல்லோருக்கும் தெரிந்த கதைதான். டெல்லா, ஜிம் என்கிற தம்பதி.  பண்டிகை நாள். பரிசுப் பொருள்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டிய தருணம்.  இருவரிடமும் பணம் இல்லை. டெல்லாவுக்கு முழங்கால்வரை நீளும் நீண்ட, அழகான கூந்தல்; அதைச் சீவுவதற்குப் பொருத்தமான சீப்பு இல்லை. ஜிம், ஒரு தங்க வாட்ச் வைத்திருந்தான்; அதற்குக் கை செயின் இல்லை. ஜிம், வாட்ச்சை விற்று, டெல்லாவின் அழகிய கூந்தலைச் சீவுவதற்கு ஆமை ஓடுகளால் செய்யப்பட்ட, ரத்தினக் கற்கள் பதித்த விலையுயர்ந்த சீப்பு ஒன்றை வாங்கி வந்தான். டெல்லா, தன் கூந்தலை விற்று, ஜிம்மின் கைக்கடிகாரத்துக்கு பிளாட்டினத்தால் ஆன கை செயின் ஒன்று வாங்கி வந்தாள். இருவரும் பரிசுகளைப் பரிமாறிக்கொண்டார்கள். பரிசுப் பொருள்களால் இருவருக்கும் பயனில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், அன்பின் ஆணிவேரில் இருவரின் அன்பும் உயர்ந்து நின்றது. 

ஒரு விளக்கைக்கொண்டு, ஆயிரம் விளக்குகளைப் பிரகாசிக்கச் செய்ய முடியும். அதனால், அந்த விளக்குக்கு எந்த இழப்பும் இல்லை. அதைப்போல அன்பை மற்றவர்களுக்குத் தருவதால், நாம் எதையும் இழக்கப்போவதில்லை. அன்பின் அடித்தளத்தில் ஏற்பட்ட வாழ்க்கையைத்தான் திருவள்ளுவர் `அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை’ என்கிறார். இன்பதுன்பங்களில் இணைந்திருக்கிற சக துணையை `வாழ்க்கைத் துணைநலம்’ என்று சொன்ன திருவள்ளுவர்தான் `மனைவி’ எனப்படும் பெண்ணுக்கு `மாண்பு’ என்ற அடைமொழியையும் தருகிறார். 

`மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை’

என்கிறார். `மாண்பு’ என்ற சொல் இன்றைக்கு உயர்பதவியில் இருப்பவர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதை முதலில் பெண்ணுக்குத் தந்தவர் திருவள்ளுவர். 

கோவலன் கொலை செய்யப்பட்டபோது, அவனை மடியில் கிடத்தி, `இந்த ஊரில் பெண்கள் இருக்கிறார்களா?’ என்று கேட்டாள் கண்ணகி. ஏன் அப்படிக் கேட்டாள்? பெண் என்பவள் பிறரைப் பேணுபவள்; பேணத்தக்கவள். வீட்டிலிருந்து ஒரு மனிதனைச் சமூகத்துக்கு உருவாக்கித் தருபவள்.  உடலிலும் உள்ளத்திலும் எப்போதும் சோர்வில்லாதவள். அடுக்களையிலும் அலுவலகத்திலும் இடைவிடாமல் பணி செய்தாலும், இதயத்தில் சோர்வில்லாமல் பணியாற்றுபவள். அப்படிப்பட்ட பெண் இருக்கிற வீட்டில் குடும்ப விளக்கு, குவலயத்து விளக்காகச் சுடர்விட்டுப் பிரகாசிக்கும். குற்றங்கள் குறையும். களவுகள் இருக்காது.  காவல் மன்றங்களுக்கு வேலை இருக்காது. வழக்கு, சண்டை சச்சரவுகள் இருக்காது. ஆக, உலகம் அமைதிப் பூங்காவாக இருப்பதற்குக் காரணம் பெண்மை என்ற அற்புத மலர். அதைத்தான் திருவள்ளுவர் `மாட்சிமை தாங்கிய பெண்’ என்று சொன்னார்.  
 
ஓர் அலுவலகம். அங்கே பம்பரம்போல் பணியாற்றுகிற ஒரு பெண். சிறு சிறு தவறுகளுக்காக மேலதிகாரி அவளைத் திட்டும்போதெல்லாம், அவள் தன் மேஜைக்குள்ளிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்துப் பார்ப்பாள். பிறகு, இயல்பாகத் தன் பணியைத் தொடர ஆரம்பித்துவிடுவாள். ஒருநாள் பக்கத்து இருக்கைத் தோழி கேட்டாள்... ``அவர் திட்டுறப்பல்லாம், ஒரு போட்டோவை எடுத்துப் பார்க்குறே... அப்புறம் உற்சாகமா வேலை பார்க்க ஆரம்பிச்சுடுறே... அது எப்படி? என்கிட்ட காட்டேன்... அது எந்த சாமியோட படம்?’’

``அது சாமி படமில்லை. என் கணவரோட புகைப்படம்.’’
 
``ஓஹோ... அப்போ உனக்குக் கணவனே கண்கண்ட தெய்வம்னு சொல்லு...’’

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. நம்ம மேலதிகாரி திட்டுறப்போ, என் வீட்டுக்காரரோட படத்தை எடுத்துப் பார்க்குறேன்ல... அப்போ அவர் வீட்டுல திட்டுற வார்த்தைகளெல்லாம் ஞாபகத்துக்கு வரும். அதுக்கு முன்னால இவரோட திட்டெல்லாம் சாதாரணமாத் தெரியும். நானும் உற்சாகமா வேலை பார்க்க ஆரம்பிச்சிடுவேன்...’’

ஒரு வீட்டில் அப்பா, தன் மகளுக்கு வரன் பார்த்தார். ஜோதிடரிடம் தன் மகளுக்குப் பொருத்தம் பார்க்கச் சொல்லி இரு ஜாதகங்களைக் கொடுத்தார். வாங்கிப் பார்த்த ஜோதிடர், ``ரெண்டுமே பெண்களோட ஜாதகமா இருக்கே!’’ என்று கேட்டார்.

“ஆமாம்.  ஒண்ணு, என் மகளோட ஜாதகம். இன்னொண்ணு, மாமியார் ஜாதகம். ரெண்டும் பொருத்தமா இருந்தாதான் என் மக வாழ்க்கை நல்லா இருக்கும்.’’  

இது யதார்த்தம். ஆனால், பெண்ணின் முக்கியத்துவம் காலங்காலமாகப் போற்றப்பட்டும் வந்திருக்கிறது. சமூகம், புரட்சிப் பெண்களை அடையாளம் காட்டிவந்திருக்கிறது. இதிகாச காலத்தில் பாஞ்சாலியின் பெண்மை, ஆன்றோர்களும் சான்றோர்களும் கூடியிருந்த அரச சபையில் அவமானப்படுத்தப்பட்டது. `என் பெண்மைக்கு அவமானம் தேடித்தந்த அரசை அழித்தே தீருவேன்’ என்று சபதமெடுத்தாள் பாஞ்சாலி. அதை நிறைவேற்றியும் காட்டினாள். 

காப்பிய காலத்தில் ஒரு புரட்சிப் பெண்மணி... அவள் கணவன்மீது `கள்வன்’ என்று பழி சுமத்தப்பட்டது. `குற்றமற்ற என் கணவனைக் கொலைசெய்த அரசை அழித்தே தீருவேன்’ என்று சபதமெடுத்தாள். அதை நிறைவேற்றியும் காட்டினாள் `கண்ணகி’ எனப்படும் புரட்சிப் பெண்மணி.

திருமுறை காலத்தில், வீழ்ந்துகிடந்த தமிழினத்தை நிமிரச் செய்த, `இசையும் தமிழும் எங்கும் பரவ வேண்டும்’ என்று புரட்சிசெய்த ஒரு மங்கை தோன்றினாள். `வீழ்ந்துகிடந்த தமிழ்ப் பண்பாட்டை உயர்த்திப் பிடித்த அந்தப் பெண்ணின் பெயரை எவரெல்லாம் உச்சரிக்கிறார்களோ, அவர்களின் பாதங்களை என் தலை தாங்கும்’ என்று சேக்கிழார் சொன்னார். அந்தப் பெண்மணி, `மங்கையருக்கு அரசி’ என்று போற்றப்பட்ட மங்கையர்க்கரசி அம்மையார். 

அன்பே தவம் - 17

அதனால்தான் நம் மகாசன்னிதானம், மங்கையர்க்கரசியார் பெயரில் மன்றங்களைத் தோற்றுவித்தார்கள். `மங்கையர்க்கரசியார் மன்றங்கள்’ தமிழ் வழிபாடு, திருமுறை அர்ச்சனை, திருவிளக்கு வழிபாடு, கல்விப் பணி என ஒரு சமூகப் பணிக்களமாக இன்றைக்கும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

குன்றக்குடியைச் சேர்ந்த லலிதாம்பாள் அம்மையார் ஏழைப் பெண்களின் துயரம், துன்பம் நீக்க ஓடி ஓடி உழைப்பவர். ஐம்பது வயது நிறைந்த தன் ஒரே மகனை இழந்துவிட்ட துன்பத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்றிவருபவர். குன்றக்குடியிலிருக்கும் `மங்கையர்க்கரசியார் குழந்தைகள் காப்பக’த்தைச் சிறப்பாக நிர்வகித்துவருபவர். மகாசன்னிதானம் காலம் தொடங்கி இன்றுவரை பெண் கல்வி முன்னேற்றம், பெண்களின் குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணுதல், பெண்களைத் தொழில்துறையில் ஈடுபடுத்துதல் எனப் பொதுப் பணிகள் அனைத்தையும் ஆற்றுகிற, ஊதியம் பெறாத மக்கள்நலப் பணியாளர்; திருமடத்தின் தொண்டர். 2013-ஆம் ஆண்டு உலக மகளிர் தினவிழாவையொட்டி, `டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழ், எழுபது வயதான லலிதாம்பாள் அம்மையாரை நேர்காணல் எடுத்து, சிறப்பித்தது. 

`குடும்ப விளக்காகச் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் குடும்பப் பெண்கள், குவலயத்து விளக்காகச் சுடர்விட்டுப் பிரகாசிக்க வேண்டும். பெண்களின் அடிமைத்தனம் ஒழிய வேண்டும்’ என்றான் பாரதி. தேசத்தின் விடுதலையோடு, சமூகத்தின் விடுதலையாக பெண்ணினத்தின் விடுதலையும் வேண்டும் என்று பிரகடனம் செய்தான். `குழந்தைத் திருமணம் கூடவே கூடாது’ என்றான். உரிய வயதில், தான் விரும்புகிற கணவனைப் பெண்கள் திருமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினான். குறிப்பாக, இளம் விதவைப் பெண்கள் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்றான். `பெண்களுக்குக் கல்வி அவசியம். ஆட்சி அதிகாரத்திலும் பெண்களின் பங்களிப்பு தேவை’ என்றான். அந்த உண்மையான பெண்ணுரிமைச் சமூகம் மலர வேண்டும். எனவே,

அன்பு உயிர்பெற்று எழுந்து அன்னையானது.
பண்பு உயிர்பெற்று எழுந்து தமக்கையானது.
காதல் உயிர்பெற்று எழுந்து வாழ்க்கைத் துணைவியானது.   
எல்லாம் ஓருருவாகப் பெண்மையானது;
பெண்மையே தாய்மையானது,
தாய்மையே இறைமையானது.

- புரிவோம்...

அன்பே தவம் - 17

அடிகளாரைக் கேளுங்கள்!

அன்பே தவம் - 17வத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடம் பகிர்ந்துகொள்ளவும், கேட்கவும்  நமக்கு ஏராளமான கருத்துகளும் கேள்விகளும் உள்ளன. அவற்றையெல்லாம் நேரடியாகவே கேட்க நீங்கள் தயாரா... `அன்பே தவம்’ தொடர்குறித்த உங்கள் கருத்துகள், ஆன்மிகம், வாழ்வியல் சார்ந்த சந்தேகங்கள் எதையும் கேட்கலாம். உங்களுடைய கேள்விகளுக்கான பதில்களை அடிகளார் வழங்குவார்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உடனடியாக உங்கள் மொபைலை எடுத்து முப்பது விநாடிகளில் உங்கள் கேள்விகளை செல்ஃபி வீடியோவாகப் பேசி 7358202444 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க... 

சிறந்த கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றுக்கான பதில்கள் வரும் வாரங்களில், `அன்பே தவம்' தொடரில் வெளியிடப்படும்.

அன்பே தவம் - 17

ன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிக்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் `மலர்வதி’ என்கிற மேரி ஃபுளோரா. ஏழைத் துப்புரவுத்  தொழிலாளியின் மகள். 2012-ஆம் ஆண்டுக்கான, சாகித்ய அகாடமியின், இளம் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் `யுவ புரஸ்கார்’ விருது இவருடைய `தூப்புக்காரி’ நாவலுக்கு வழங்கப்பட்டது. 

தாயின் முந்தானையைப் பிடித்து நடைபழகியபோது, மனிதக்கழிவுகளின் துர்நாற்றத்தை நுகர்ந்து, வறுமையின் கொடுமையைப் போராடி வென்ற தாயின் கதையை நாவலாக்கியிருந்தார் மலர்வதி. உண்மை, கதையாகும்போது காப்பியமாகிறது.

அவள் விகடனுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில் அவர் சொன்னது கவனிக்கத்தக்கது... ``பெண்மையை வெறும் அழகியலாகவே பார்க்கிறார்கள். அவளை நளினம், மென்மை என்ற கோணங்களிலேயே அணுகி, அழகுப்பதுமையாக்கி ஆராதனை செய்கிறார்கள். அவளுக்குள் சக்தி இருக்கிறது. சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ்கிற உத்வேகம் இருக்கிறது. அதற்காகவே தூப்புக்காரியாக அவதாரம் எடுத்த என் அம்மாவின் வாழ்க்கைதான், இந்த ‘தூப்புக்காரி’ ’’