Published:Updated:

ஒரு நதி... 50 நாட்கள்... 25 கோடி மனிதர்கள்! - உற்சாகம் பொங்கும் கும்பமேளா

ஒரு நதி... 50 நாட்கள்... 25 கோடி மனிதர்கள்! - உற்சாகம் பொங்கும் கும்பமேளா
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு நதி... 50 நாட்கள்... 25 கோடி மனிதர்கள்! - உற்சாகம் பொங்கும் கும்பமேளா

- ஸ்ரீகுமார் பாலகிருஷ்ணன்

பிரயாக்ராஜ் நகரம், அங்கு ஓடும் நதியைப் போலவே மனிதர்களால் நிரம்பிவழிகிறது. ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ‘அர்த் கும்பமேளா’ தைப்பொங்கல் திருநாளில் தொடங்கி, மார்ச் 5-ம் தேதி மகாசிவராத்திரி அன்றுடன் நிறைவுபெறுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவிலிருந்து 200 கி.மீ தொலைவில் இருக்கும் பிரயாக்ராஜ், தூங்கா நகரமாகவே மாறியிருக்கிறது. வெய்யில் ‘சுள்’ளென்று அடித்தாலும், உடல் உணர மறுக்கும் அளவுக்கு ‘சில்’லென்று குளிர்ச்சியும் இருக்கிறது. இரவில் 9 டிகிரி செல்சியஸுக்கு செல்லும் குளிர், மெல்லிய காற்றுடன் வருடிச் செல்லும் சுகம் அலாதியானது.

வட மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் குழந்தை குட்டிகளுடன், குடும்பம் குடும்பமாக வந்த வண்ணம் இருக்கிறார்கள். வெளிநாட்டினரையும் அதிகமாகப் பார்க்க முடிகிறது. கும்பமேளா நடைபெறும் நதியோரத்துக்கு, 5 கி.மீ நடந்தே செல்ல வேண்டும். ஆனாலும், பாவங்கள் தொலைந்து புண்ணியம் கிடைக்குமென்ற நம்பிக்கையுடன், மூட்டை முடிச்சுகளுடன் நதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இந்த நதியின் கரையில்தான், சில ஆயிரக்கணக்கான சதுர அடிப் பரப்பளவில் 5,000-க்கும் மேற்பட்ட குடில்கள் (டென்ட்) அரசு, தனியார் நிறுவனங்கள், இந்து அமைப்புகள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் எனப் பலராலும் அமைக்கப் பட்டுள்ளன. சில நூறு ரூபாய் தொடங்கி, பல ஆயிரம் ரூபாய் என வாடகை உயர்கிறது. இலவசக் குடில்களும் உண்டு. பல அமைப்புகள் உணவை இலவசமாக வழங்குகின்றன. 24 மணி நேரமும் உணவு கிடைக்கிறது.

ஒரு நதி... 50 நாட்கள்... 25 கோடி மனிதர்கள்! - உற்சாகம் பொங்கும் கும்பமேளா

சாதாரண பக்தர்கள், சாதுக்கள், துறவிகள், அகோரிகள் என நகரின் திரும்பிய திசையெங்கும் மனித வெள்ளம். வேதங்கள், ராமாயணம், மஹாபாரதம் மற்றும் இதிகாசங்கள் கொண்டாடும் இந்த பிரயாக்ராஜ் நகரின் வரலாறு நீண்ட நெடியது. 1580-ம் ஆண்டு மாமன்னர் அக்பர், இந்த ஊருக்கு “இலஹாபாத்” என்று பெயரிட்டார். காலப்போக்கில், ‘அலகாபாத்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. தற்போது உ.பி-யை ஆளும் பி.ஜே.பி அரசு, புராண காலத்தில் அழைக்கப்பட்ட  பிரயாக்ராஜ் என்ற பெயரை மீண்டும் சூட்டியுள்ளது.

ஹரித்துவாரில் முதலில் தொடங்கி, பிரயாக்ராஜ், நாசிக், உஜ்ஜயினி நகரில் கும்பமேளா நடைபெறும். பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது கிடைத்த அமிழ்தத்தின் துளிகள் விழுந்த இடம்தான், மேற்சொன்ன நான்கு இடங்கள். இதுபோலவே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாக்ராஜில் நிகழும் பூர்ண கும்பமேளா, 2013-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது, 12 கோடிப் பேர் நீராடிச் சென்றனர். இந்த கும்பமேளாவுக்கு உலகின் மிகப்பெரிய கலாசார மற்றும் சமய நிகழ்வு என்ற பெருமையை யுனெஸ்கோ அளித்துள்ளது.

மகர சங்கராந்தி (தைப்பொங்கல் தினம்) நாளன்று இரண்டு கோடிப் பேர் கும்பமேளாவில் நீராடியுள்ளனர் என்று பிரயாக்ராஜ் மேளா ஆணையத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. பிரயாக்ராஜ் நகர் முழுவதும் சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இரவைப் பகலாக்கும் பல்லாயிரம் மின் விளக்குகள் ஒளிர்கின்றன. சுமார் 35,000 போலீஸார், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துப் பணிகளில் இரவுபகலாகப் பணி செய்கின்றனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

2,000 சி.சி.டி.வி கேமராக்கள், 4,000-க்கும் மேற்பட்ட வைஃபை இணைப்புகள் நிறுவப் பட்டுள்ளன. நீண்டு செல்லும் நதியின் குறுக்கே, 25 தற்காலிகப் பாலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 250 தெருக்கள், 10 மேம்பாலங்கள் என அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியுள்ள மாநில அரசு, இந்த விழாவுக்காக ஒதுக்கியுள்ள தொகை, ரூ.4,300 கோடி.

கோடிக்கணக்கான மக்கள் கூடுகிற இந்த இந்தப் பகுதியில் எல்லா இடங்களும், கழிப்பிடங்களும் படுசுத்தமாக இருப்பது ஆச்சர்யத்தின் உச்சம். ஆன்மிகத் திருவிழாவில் அரசியலுக்கும் பஞ்சம் இல்லை. பி.ஜே.பி-யின் தலைவர்கள் பலர் கச்சைக் கட்டிக்கொண்டு நீராடி வருகின்றனர், ஏற்கெனவே சாமியாராகவே வாழ்ந்துவரும் உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்... பிரதமர் மோடி, பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித்ஷா என்று தலைவர்களுடன் சேர்ந்து நீராடிவருகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஒரு நதி... 50 நாட்கள்... 25 கோடி மனிதர்கள்! - உற்சாகம் பொங்கும் கும்பமேளா

உடலில் சாம்பல் பூசிக்கொண்டு, கையில் சூலாயுதத்துடன் பிறந்த மேனியாக நூற்றுக்கணக்கில் வரும் அகோரிகளைக் காண்பதே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. சில அகோரிகள், ருத்ராட்ச மாலைகளால் உடலை மறைத்து, வண்ண மலர் மாலைகளைக் கழுத்து, தலைகளில் சுருட்டி வலம்வருகின்றனர், பொதுவாக, பக்தர்கள் யாரும் அவர்களின் பக்கத்தில் செல்வதில்லை. தூரமாய் நின்று வணங்குகின்றனர். சாதுக்கள் தங்களுக்கு என்று உள்ள அகாடா (அமைப்பு) வழியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாள்களில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் பெரும் கூட்டமாக வந்து நீராடிச்செல்கின்றனர். ‘வீடியோ கால்’கள் தடைசெய்யப்பட்டுள்ளன. பெண்கள் குளிக்கும் இடங்களில் அதிக நேரம் படம் எடுக்க முடியாது. காவல்துறையினர், ‘இன்ச் இன்ச்’சாகப் பரவிக்கிடக்கின்றனர்.

திரிவேணி சங்கமத்தில் ஓடும் நதியின் அழகு தனியே தெரிகிறது, அது மேலே இருந்து பார்க்கும்போது பழுப்பு நிறத்தில் செல்லும் தண்ணீர், ஒரு பாத்திரத்தில் பிடித்துப் பார்த்தால், தெளிந்த நீராக இருக்கிறது. கங்கையை உண்மையிலேயே சுத்தம் செய்துள்ளனர் என்று நம்ப வேண்டியுள்ளது. இப்போது, வட இந்தியா முழுவதும் குளிரும், மூடுபனியும் உச்சத்தில் உள்ளன. அயராது ஓடிக்கொண்டிருக்கும் திரிவேணி சங்கமத்தின் தண்ணீர், பனிக்கட்டியை உருக்கியதுபோல சில்லென்று இருக்கும். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என ஒவ்வொருவரும் குளித்து எழுந்து ஆனந்த உற்சாகத்தில் திளைத்து நிற்பதைக் காண்பதே, ஒரு புதிய அனுபவம்தான்.

நதிக்கரையில் தேங்காய், பூ, ஊதுவத்தி, அகல் விளக்கு, கற்கண்டு என அனைத்துப் பொருள்களையும் விற்கின்றனர். நதிக்கரையொட்டி இருக்கும் கோயில்களில் மக்கள் பக்திப்பரவசத்துடன் தங்களுக்குப் பிடித்தக் கடவுளைக் கும்பிட்டு, வீட்டை நோக்கி நடைபோடுகின்றனர். பாவங்கள் தொலைந்த உற்சாகம் அவர்களுக்கு ஒரு புதிய உத்வேகம் தருவதாகத் தெரிகிறது. 

50 நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்வில், இதுவரை சுமார் 18 கோடி பேர் புனிதநீராடிச் சென்றுள்ளனர். இன்னும் இரண்டு வாரங்களில் மொத்தம் 25 கோடிப் பேர் புனித நீராடுவார்கள் என்பது கணிப்பு.

படங்கள்: சு.குமரேசன்