Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 24

ரங்க ராஜ்ஜியம் - 24
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம் - 24

ரங்க ராஜ்ஜியம் - 24

ரங்க ராஜ்ஜியம் - 24

ரங்க ராஜ்ஜியம் - 24

Published:Updated:
ரங்க ராஜ்ஜியம் - 24
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம் - 24

ங்க அரசன் தன்னை மையமாக வைத்தே சிந்தித்தான். இறையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்திருந்தால், `அரங்கன் சித்தம்' என்று துணிந்திருப்பான். அந்தத் துணிவு அவனுக்கு வரமறுத்தது. தடுமாறினான், தவித்தான் - பின் அரை மனதாய் அரங்கன் அனுமதிக்குச் சம்மதித்தான்.

திருச்சந்நிதியின் முன் அவன் வந்து நின்ற நிலையில் ஸ்தானீகர்கள், சோழ அரசனின் சார்பாய் ஆலயத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட காப்பாளர்கள், அன்றாடம் அரங்கன் முன் வேதம் ஓதிடும் வைணவ தாசர்கள், அவர்களை நெறிப்படுத்திடும் ஜீயர் என்று எல்லோரின் முன்னமும் உத்தரவும் கேட்கப்பட்டது. தாமரைக்குப் பதில் துளசி வந்து மறுப்பைச் சொன்னது. அரங்கனே `வேண்டாம்' எனும் எதிர்மறை பதிலை அந்த உத்தரவில் கூறிவிடவும் வங்காளத்தான் உடைந்துபோனான்.

பல மாதங்கள் யாத்திரையாய், வழியெங்கும் ஜம்பமாய், அரங்கனுக்கே தான் படியளக்கப் போவது போல் காட்டிக்கொண்டு வந்ததெல்லாம் ஒரு துளசி இலையால் இல்லை என்றானதை எண்ணிக் கலங்கி நின்றான். அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.

ரங்க ராஜ்ஜியம் - 24

அவன் கலங்கி நின்றதைக் கண்டு சிலர் அவனுக்கு ஆறுதல் கூறினர்.

“அரசர் பிரானே! எம்பெருமான் வேண்டாம் என்று கூறிவிட்டதற்காகக் கலங்கிவிடாதீர்கள். இப்போது வேண்டாம் என்றவன், நாளையே சரி ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறலாம் அல்லவா?” என்றார் ஒருவர்!

“ஆம் அரசே! தங்கள் பக்தியை பரிசோதிப்பதற் காகக்கூட அரங்கப் பெருமான் மறுத்திருக்கலாம். எனவே பொறுமையோடு இருங்கள். அவனையே எண்ணுங்கள் - உருகுங்கள் - நிச்சயம் நல்வழி பிறந்திடும்” - என்றார் இன்னொருவர்.

வங்காள அரசனும் காத்திருக்கத் தொடங் கினான். `இன்னொரு முறை உத்தரவு கேட்போம்' என்று ஆலய நிர்வாகிகளைத் தொடர்புகொண்ட போது, அவர்கள் `ஆண்டுக்கு ஒருமுறைதான் இதுபோல் கேட்க இயலும்' என்று கூறி விதியை நினைவூட்டினர்.

இந்த நிலையில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். தான் நாடு திரும்பவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதைக் கூறினான். அத்துடன், தான் கொணர்ந்த செல்வம் எதனையும் திரும்ப எடுத்துச் செல்வது தனக்கு அழகில்லை என்பதால், அவற்றை நம்பிக்கைக்கு உரிய தன் வைதீக பட்டார்கள் வசம் ஒப்படைத்து, அவர்களை அரங்கன் அனுமதிக்காக அவர் கோயிலின் வாசலில் இடையறாது காத்து நிற்கப் பணித்தான்.

அவர்களும் திருமண் காப்பு தரித்து அந்த வாசல் அருகே சென்று அரங்கனை வேண்டி நின்றனர். அதேவேளையில், தங்களைக் கோயில் காவலர்களாய் ஆக்கிக்கொண்டு கோயிலை இரவில் வலம் வந்து சேவையும் செய்யத் தொடங்கினர். அவர்களின் பக்தியையும் சேவையையும் யாராலும் குறை கூறவும் முடிய வில்லை. காலத்தால் மிகக் கனிந்த அவர்கள் துளியும் செருக்கின்றி ‘அரங்கா நீ எங்களுக்கு அருளியதை, நாங்கள் உனக்கு அளித்து மகிழ அருள்  செய்’ என்று விண்ணப்பித்துக்கொண்டனர்.

காலத்தால் அரங்கனும் கருணை செய்ய சித்தமானான். வங்காள அரசனால் ஆலயத்துக் கென அளிக்கப்பட்ட பொருள்கள் ஏற்கப்பட்டன. அதன் பிறகும், அந்தப் பட்டர்கள் வங்கதேசம் திரும்பிட விரும்பவில்லை.

‘இங்கேயே இப்படியே அரங்கன் சேவையில் எங்கள் வாழ்வை அமைத்துக்கொள்கிறோம் - எங்கள் வழியில் எங்கள் வம்சாவளிகளும் சேவை புரியட்டும்’ என்று அரங்கனிடம் விண்ணப்பித்துக் கொண்டனர். வடக்கே இருந்து வந்ததால் ஆர்யர் என்ற அடைமொழியோடு, `காப்பாளர்' என்பதே பட்டர்கள் என்பதன் பொருளாக கொள்ளப் பட்டதால், இரண்டும் இணைந்து ஆர்யபட்டர்கள்  என்றாகி, அவர்களின் பக்தி மற்றும் தியாகத்தைப் போற்றும் விதத்தில், அவர்கள் காத்து நின்ற வாயில் பகுதி ‘ஆர்யபட்டாள் வாயில்’ என்று அழைக்கப்படலாயிற்று.

பின்னர், எம்பெருமானின் புறப்பாட்டுக் காலங்களில், இவ்வாசலை எம்பெருமான் கடக்கும் தருணங்களில், வங்கதேச மன்னனுக்கு அருளப்பாடு சாதிப்பதும் காலத்தால் வழக்கமாயிற்று.

ரங்க ராஜ்ஜியம் - 24

பின் காலத்தால் எவ்வளவோ மாற்றங்கள்!

ராஜ்ஜியங்களில் ராஜாக்கள் மாறினர். சோழர்கள் கரம் வலுத்திருந்தது ஒரு காலம் - பின் பாண்டியர் கரம் வலுத்தது - சேரனும் சில காலம் தென்னகமே தன்னகம் என்று ஆண்டான். இப்படிப்பட்டக் கால மாற்றங்கள் கோயிலின் நிர்வாகத்திலும் மக்களின் கலாசார மாற்றத்திலும் எதிரொலித்தன.

எது எப்படி இருந்தபோதிலும் அரங்கனுக்கான வழிபாட்டு முறைகளும் அவர் மீதான பக்தியும் நிலையாய் நின்று உலகையே காத்து ரட்சித்தன.

அரங்கனின் ஆலய வரலாறும் `கோயிலொழுகு' எனும் பெயரில் பதிவு செய்யப்படலாயிற்று. அதனை ஒரு சமூக கடமையாக ஆலய ஸ்தானீகர் களும் செய்தனர். அந்தக் கோயிலொழுகுவில் காணப்படும் குறிப்புகளை வைத்தும், ஏனைய இதர சாறுகளை வைத்துமே அரங்கமாநகரின் வரலாறு உருவானது.

அந்த வகையில் தர்மவர்மாவில் தொடங் கும் வரலாறு கிளிச்சோழனைத் தொட்டு, ராஜமகேந்திரசோழன், நந்தசோழன், குலசேகரப் பெருமாள், ஆர்யபட்டர்கள் என்று நீண்டு `நீலன்' எனப்படும் மறவர் குலத்து திருமங்கை மன்னனிடம் சென்று நிற்கிறது.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகவும் கருதப்படும் இந்தத் திருமங்கை மன்னன் மற்ற ஆழ்வார்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர். குறிப்பாக மற்ற ஆழ்வார்கள் எம்பெருமான் திருவடிகளைத் தேடித்தேடி பக்தி செலுத்தினர் எனில், எம்பெருமானின் திருவடியே இவரைத் தேடி வந்தது என்பது எத்தனைப் பெரிய செயல்? இவரது பக்தியே வரச்செய்ததது. இவரால் அரங்க மாநகர் பெரிதும் பொலிந்து அன்றும் இன்றும் என்றும் போற்றப்படுவதாய் உள்ளது!

இந்த மங்கை மன்னன் வரலாற்றை அறிந்து கொள்ளுதல் அவசியம்.  ஆச்சர்யமும் அதிசயமும் அளிப்பது திருமங்கை மன்னனின் வரலாறு.

இவரொரு மறவர்! முரட்டு மீசையும், பிசைந்து பிடித்தார் போன்ற தோள்களும், புஜபல பராக்ரமும், யானையைக்கூடத் தனித்து நின்று அடக்கும் கேண்மையும் உடைய ஒரு சிற்றரசர் இவர். சோழப் பெரு நாடு அன்று பல சிறுசிறு நாடுகளை தன்னகத்தே கொண்டிருந்தது. அதில் திருவாலி நாடும் ஒன்று. சோழவள நாடனும் சிற்றரசர்களை இங்கு நியமித்து, அவர்களை கப்பம் கட்டச் செய்து, தனது சோழவள நாட்டை நிர்வகித்து வந்தான்.

அப்படியான சிற்றரசர்களில் ஒருவரே நீலன். அதேநேரம் எவருக்கும் கட்டுப்படாத ஆண்மையும் வீரமும் நீலனுக்கு இருந்தன.

அவரைக் கண்டு பேரரசர்களே கூட நடுங்கினர். அதனால் அவருக்குப் பல பட்டங்கள். அவற்றில் ஒன்று பரகாலன். எமனே இவரைக் கண்டு நடுங்கும்படியானவர் என்பது உட்பொருள்.

இந்தப் பரகாலனிடம் ‘ஆடல்மா’ என்றொரு வெண்ணிறப்புரவி இருந்தது. அதன் மேல் ஏறிக் கொண்டு நீலன் வீதிவலம் வந்தால், திருவாலி நாடே குலுங்கிடும். வீதிகளில் புழுதியும் பறந்திடும். எதிரிகள் ஓடி ஒளிவர். நீலனைத் தங்களின் சுந்தர புருஷனாய் எண்ணிடும் சில பெண்களோ, இவன் பார்வை தங்கள் மேற்படாதா என்று வீதி ஓரங்களில் காத்திருப்பர்.

ஆனால் நீலன் அவ்வளவு சுலபத்தில் அவர் களிடம் மயங்கமாட்டார். அவர்களை ஏங்கவிட்டு அலைக்கழிப்பார். அப்படிப்பட்ட நீலன், ஒருநாள் வெள்ளக்குளம் எனும் ஊரின் திருக்குளத்தில் நீராடிக்கொண்டிருந்த குமுதவல்லி என்பவளைக் கண்டு சிலையாகி நின்றுவிட்டார்!

- தொடரும்...

- இந்திரா சௌந்தர்ராஜன்

படம்: என்.ஜி.மணிகண்டன்

இறைவனே பயந்தார்!

ரண்யகசிபு மற்றும் பிரகலாதனின் விவாத தருணத்தில் இறைவனுக்கே பயம் வந்ததாம்! `தான்' எனும் அகந்தை கொண்டிருக்கும் இரணியன், தன் நெஞ்சைத் தொட்டுக்காட்டி, `என் நெஞ்சில் இறைவன் இருக்கிறானா' என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து  பயந்தாராம். காரணம்... அவன் அப்படிக் கேட்டு, பிரகலாதனும் `ஆம்' என்று சொல்லிவிட்டால் இரண்யகசிபுவின் நெஞ்சில் தான் எழுந்தருளவேண்டும். அப்படி அவர் புகுந்துவிட்டால் இரண்யகசிபு பக்தன் ஆகிவிடுவானே. அவன் செய்த தவறுகளுக்கெல்லாம் தண்டனை அளிக்க முடியாதே என்று எண்ணி பயந்தாராம்.

- கே. அருள், சென்னை-23