ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 22 - தஞ்சையின் காவல் தெய்வம்!

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 22 - தஞ்சையின் காவல் தெய்வம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 22 - தஞ்சையின் காவல் தெய்வம்!

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 22 - தஞ்சையின் காவல் தெய்வம்!

ண்ணெடுத்துக் கோயில் கட்டுதல், கிராம தெய்வ வழிபாட்டில் மிக முக்கிய மரபு.  தங்கள் பூர்வீகக் கிராமத்திலிருந்து அறுபட்டு வேறு பகுதிகளுக்கு பிழைக்கச் சென்று, சீரும் செழிப்புமாக வாழும் மக்கள், தங்கள் தலைமாடு காக்கும் மூத்தோனுக்கு வாழும் நிழலிலேயே கோயில் கட்ட விரும்பினால், பூர்வீகக் கோயிலி லிருந்து மண்ணெடுத்து வரவேண்டும். அதையே மூல மண்ணாகக் கொண்டு கோயிலை எழுப்ப வேண்டும்.

திருச்சி காவிரிக்கரையில் பிறந்த காத்தவராயன் நெல்லைச் சீமையின் குக்கிராமத்தில் கோயில் கொண்டாலும், தென்மாவட்டத்தைப் பூர்வீக மாகக் கொண்ட கருப்பன் கொங்கு மண்டலங்களில் கோயில் கொண்டாலும், பாண்டிய நாட்டுக் காவல் தெய்வமான பெரியாச்சி தஞ்சை மாவட்டத்துக் கிராமங்களில் காவல் தெய்வமாக வீற்றிருந்தாலும் அவர்கள் அமர்ந்திருக்கும் பீடத்தினடியில் பூர்வீக மண் உறைந்திருக்கவேண்டும். 

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 22 - தஞ்சையின் காவல் தெய்வம்!

கிராமக் கோயில்களில் பூசாரி என்பவர் ஓர் ஏவலாள். அவர் வழி, உத்தரவிடுவதும் செயலாற்று வதும் தெய்வங்கள்தான். வேறொரு நிழலில் வாழும் குஞ்சுகளை, துஷ்ட உயிரிகளிடமிருந்தும் எதிர்மறை சக்திகளிடமிருந்தும் காத்து, தலைமுறை செழிக்கச் செய்யும் தேவையை உணர்ந்து பிடிமண் அள்ளிக்கொடுக்கின்றன தெய்வங்கள்.  

அப்படி, தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில், பிடிமண் கொடுத்து பல்லாயிரம் குடும்பங்களின் காவல் தேவதையாக வேர்விட்டுப் பரவிக் கிடக்கிறாள் கோடியம்மன். கோடியம்மன் பற்றி புராணங்களில் சில செய்திகள் உண்டு. இந்த அம்மனின் பிரதானக் கோயில் தஞ்சாவூர்-கும்ப கோணம் சாலையில் கருத்திட்டைக்குடி அருகே அமைந்துள்ளது. இவளே தஞ்சையின் முக்கியக் காவல் தெய்வம்.

‘தஞ்சை தலமான்யமியம்’ எனும் நூல், கோடியம்மன் குறித்து நிறைய செய்திகளைத் தாங்கியிருக்கிறது. ஆதியில் கோடியம்மன், தஞ்சைக்கு வடமேற்கில் பொந்திரிப்பாளையம் என்ற இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் அந்தத் தலத்திலிருந்து மண்ணெடுத்து வந்து கருந்திட்டையில் வெண்ணாங்கரையில் இந்தக் கோயில் அமைக்கப்பட்டதாகவும் சொல்கிறது மான்மியம்.

மேலும், விஷ்ணுவிடம் வரம்பெற்ற தஞ்சகனை யும் தண்டகனையும் அழிக்க, அம்பிகை பச்சையும் பவளமும் கொண்ட கோடிக்காளியை உருவாக்கி பூமிக்கு அனுப்பியதாகவும், கோடிக்காளி பச்சைக்காளி, பவளக்காளியாக உருவெடுத்து அரக்கர் களை அழித்ததாகவும் மான்மியம் சொல்கிறது. தஞ்சகனின் பெயராலேயே ‘தஞ்சாவூர்’ என்றானது அந்நிலப்பரப்பு என்றும் சொல்வார்கள்.

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் பெரும்பாலும் தாய் தெய்வங்களையே தங்கள் குலதெய்வங் களாகக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் சோழர்களின் குலதெய்வம், நிசும்பசூதனி. தாங்கள் வாழும் நிலத்தில் நான்கு புறங்களிலும் நிசும்பசூதனியை நிறுவி வழிபட்டதோடு போர் களுக்குச் செல்வதற்கு முன்பு அவளை வணங்கி வாக்குப் பெற்றுச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் சோழர்கள். போரில் உயிர்நீக்கும் வீரர்களுக்காக நந்தா விளக்கும் இந்தக் கோயில்களில் ஏற்றப்படுவதுண்டு. அதற்கென மானியம் ஒதுக்கப்பட்ட செய்திகள் தஞ்சை பெரியகோயில் கல்வெட்டு களில் காணக்கிடைக்கின்றன. 
 
தென்னகத்தின் சரித்திரத்தை மாற்றிய திருப்புறம்பியம் போருக்குப் பிறகு, பிற்காலச் சோழர்களின் எழுச்சி தொடங்கிய காலத்தில், தஞ்சை தங்கள் வசமானதும்... விஜயாலயன் தங்கள் மூத்தார் வழக்கப்படி நகரைச் சுற்றிலும் நிசும்பசூதனிக்கு கோயில்கள் எடுத்தான். இதுகுறித்த தரவுகள் திருவேலங்காட்டுச் செப்பேடுகளில் இருக்கின்றன. அவ்விதம் உருவாக்கப்பட்ட ஒரு நிசும்பசூதனிதான் கோடியம்மனாக பெயர் பெற்று வெண்ணாற்றங்கரையில் குடியிருக்கிறாள் என்றும் சில தரவுகள் இருக்கின்றன.

கோடியம்மன் குறித்து புராணங்கள், வரலாறுகள் சொல்லும் செய்திகள் தவிர்த்து, வாய்வழியாக வழக்காற்றுக் கதையொன்றும் உலவுகிறது. சிறுதெய்வ வழிபாட்டு ஆராய்ச்சியாளர் கோ.பழனி என்பார் அக்கதையை ஆவணப் படுத்தியிருக்கிறார்.

‘அக்காலத் தஞ்சையில் மேல்தட்டு மக்களும் அடித்தட்டு மக்களும் நிறைந்து வாழ்ந்து வந்தார்கள்.  இரு தரப்புக்கும் எவ்வித ஓட்டும் உறவும் இருப்பதில்லை.

இந்தச் சூழலில் மேல்தட்டைச் சேர்ந்த ஒருவருக்கும், அடித்தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருத் திக்கும் காதல் அரும்புகிறது. அந்தக் காதல் வெளிச்சத்துக்கு வந்தபோது மேல்தட்டு மக்கள் மிகக் கடுமையாக அந்தக் காதலை எதிர்த்தார்கள். அந்த எதிர்ப்புக்கு அஞ்சி அந்த மனிதன் தன் காதலியை கைவிட்டு விலகுகிறான். ஆனால், அதற்குள் அந்தப் பெண் கருவுறுகிறாள்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 22 - தஞ்சையின் காவல் தெய்வம்!

அந்தப் பெண்ணின் குடும்பமும் அவளைக் கைவிடுகிறது. வேலைக்குச் செல்லும் சூழலில்லை. பசியும் பட்டினியுமாக நாள்களைக் கடத்துகிறாள். ஆண் குழந்தை பிறந்து வளர்கிறது. தன் தாய் படும் வேதனையையும் சமூகம் உமிழும் அவச் சொற்களையும் கேட்டு மனம் குமைந்த அந்தச் சிறுவன், தன் தாயை வேலைக்குச் செல்லவேண்டாம் என்று கூறிவிட்டு, அவனே பொருளீட்டச் செல்கிறான்.

இதை, அந்தச் சிறுவனின் தந்தை அறிகிறான். எப்படியிருந் தாலும் தன் ரத்தத்தில் விளைந்த குழந்தை. நிச்சயம் அது மேலானது. அதைப் போய் வேலை செய்ய அனுப்பிவிட்டு அந்தப் பெண் வீட்டில் அமர்ந்திருக்கிறாளே என்று கோபமுற்று, அவளது வீட்டுக்குச் சென்று அடித்து உதைக்கிறான். ஊர்ப் பெரியவர்களின் கவனத்துக்கும் கொண்டு செல்கிறான்.  ‘இனி, இந்தப் பெண் ஊருக்குள் இருக்கக்கூடாது. ஊர்க்கோடியில் எங்கேனும் சென்று தங்கிக் கொள்ளட்டும்’ என்று உத்தரவிடுகிறது ஊர். 

பாவம் அந்தப் பெண்... ஊரின் எல்லையில், ஆள் அரவமற்ற, பாழடைந்த பழங்கட்டிடம் ஒன்றின் நிழலில் குடிலமைத்துத் தங்குகிறாள். சிறுவன் அச்சத்தில் அவள் மடியில் முடங்கிக் கிடக்கிறான். உழைக்க இருவருக்கும் மனதிலும் உடலிலும் திராணியில்லை. அவள் பெரியவள்... பசியடக்கிக் கொள்கிறாள். அந்தப் பாலகனால் முடியவில்லை.

`அம்மா பசிக்கிறது' என்று அவன் கதறும் போதெல்லாம் சிறிது தண்ணீர் மட்டுமே அவளால் தரமுடிகிறது. குழந்தை துடிக்கிறது.

எல்லாத் துயரையும் சகித்துக்கொண்ட அந்தத் தாயால் தன் பிள்ளையின் பசியாற்றமுடியாத துயரைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இறுதியாக அவள் அந்த முடிவை எடுத்தாள்.

வேலியிலிருந்த அரளி விதையை பறித்து அரைத்து, தானும் அருந்தி மகனுக்கும் கொடுக் கிறாள். பிறகு கதவைத் தாளிட்டுக்கொண்டு படுத்துக்கொள்கிறாள். இரண்டு நாள்களாக அந்த வீடு அடைந்தே கிடக்கிறது.

அந்த வழியாக வேலைக்குச் செல்லும் மனிதர்கள், அந்த வீடு அடைந்தே கிடப்பதைக் கவனிக்கிறார்கள்.  சில இளைஞர்கள், சந்தேகம் கொண்டு கதவை உடைத்துத் திறக்க, உள்ளே தாயும் பிள்ளையும் இறந்துகிடக்கிறார்கள். ‘தங்களில் ஒருத்தி தவித்து நின்றபோது கைகொடுத்து உதவாமல் போனோமே’ என்ற குற்ற உணர்வில் எல்லோரும் தலைகவிழ்ந்து நிற்கிறார்கள்.

காலம் ஓடியது. அந்தத் தாயும், மகனும் இருந்த வீடு காலத்தால் சிதைந்தது. ஆனால், அந்தச் சாலை விபத்துகளால் நிறைகிறது. இரவுப் பொழுதுகளில் அலறலும் அழுகையும் அந்த வெளிகளில் பட்டுத் தெறிக்கிறது. அந்த திசையில் செல்லவே மக்கள் அஞ்சுகிறார்கள். இறந்த தாயும் மகனும் அங்கு உலவித் திரிவதாக  வதந்திகள் உலவின.

அவர்கள் தெய்வப் பிறவிகள் என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள். இருவருக்கும் சிலை எடுத்து வழிபடத் தொடங்கினார்கள். சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அந்த இடத்தில் நின்று காணிக்கை செலுத்தி வழிபட்டுச் செல்ல, கோயில் வளர்ந்தது.

ஊருக்குக் கடைக்கோடியில் இருந்ததால் அந்தத் தாய்க்குக் ‘கோடியம்மன்’ என்று பெயர் வந்தது’ என்று முடிக்கிறார் பழனி.

புராணம், வரலாறு, நாட்டார் வழிக்கதையென எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் கோடியம்மன், இன்று தஞ்சைக்கே காவலாளி. பலநூறு குடும்பங் களுக்கு குலசாமி. தஞ்சாவூரில் வசிப்போருக்கு மட்டுமல்ல... தமிழகம் கடந்தும் கோடியம்மன் வழிபாடு பரவியிருக்கிறது.

அப்படியொரு வேறுபட்ட வழிபாட்டையும் கோடியம்மனுக்கே உரித்தான பச்சைக்காளி-பவளக்காளி என்ற உக்கிர கலையாடலையும் அடுத்த இதழில் பார்ப்போம்!

- மண் மணக்கும்...

- வெ.நீலகண்டன்

படங்கள்: ம.அரவிந்த்