Published:Updated:

ராஜேந்திர சோழனுக்கு ஆசி தந்த சோழீஸ்வரர்!

ராஜேந்திர சோழனுக்கு ஆசி தந்த சோழீஸ்வரர்!
பிரீமியம் ஸ்டோரி
ராஜேந்திர சோழனுக்கு ஆசி தந்த சோழீஸ்வரர்!

ராஜேந்திர சோழனுக்கு ஆசி தந்த சோழீஸ்வரர்!

ராஜேந்திர சோழனுக்கு ஆசி தந்த சோழீஸ்வரர்!

ராஜேந்திர சோழனுக்கு ஆசி தந்த சோழீஸ்வரர்!

Published:Updated:
ராஜேந்திர சோழனுக்கு ஆசி தந்த சோழீஸ்வரர்!
பிரீமியம் ஸ்டோரி
ராஜேந்திர சோழனுக்கு ஆசி தந்த சோழீஸ்வரர்!

ன்று தென்காசி விஸ்வநாதர் கோயிலின் குடமுழுக்ந்த் திருநாள். ஆலயமே பெரும் பரபரப்பில் இருந்தது. ஒரு நாமம் ஓர் ஊர் ஒன்றுமிலானை ஆயிரம் திருநாமம் சொல்லித் தொழுது கொண்டிருந்தார்கள் பக்தர்கள். பூஜைக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

வேத விற்பன்னர், சிவாசார்யர், மந்திரி பிரதானிகள், சிறப்பு விருந்தி னர்கள் என அத்தனைபேரும் கூடி மாமன்னன் பராக்கிரமப் பாண்டிய னுக்காகக் காத்திருந்தார்கள்.

ராஜேந்திர சோழனுக்கு ஆசி தந்த சோழீஸ்வரர்!

வடக்கே காசியில் அந்நியரின் ஆதிக்கத்தால் வழிபட முடியாமல் போனதால், ஈசனின் திருவாக்குக்கு அடிபணிந்து குற்றாலத்துக்கு அருகில் வடகாசிக்கு நிகரான ஒரு தலத்தை தென்காசி என நிர்மாணித்தான் பராக்கிரமப் பாண்டியன்.

விஸ்வநாதரும் உலகம்மையும் ஆட்சி செய்யும் இடம், ஈசனின் ஆணைக்காக  கங்கையே பொங்கி வந்த தலம் என்பதால், பாண்டியன் பக்தியோடு பார்த்துப் பார்த்துக் கட்டியது, தென்காசி ஆலயம்.

ஆனால் இந்தப்  பாண்டியருக்கு  இப்போது என்ன வந்தது? குடமுழுக்கு நேரத்தில் இப்படி ஈசனையே காக்க வைக்கிறாரே என்று எல்லோருக்கும் குழப்பம்.

ஒருவழியாக, மன்னரின் ஆபத்துதவிகள் அவர் இருக்குமிடத் தைக்  கண்டறிந்தனர். ஆம், ஈசனின் ஆலயத்துக்காக மண் சுமந்த, சாந்து குழைத்த, இடத்தைச் சுத்தம் செய்த எளிய மக்களின் இடத்துக்குச் சென்று அவர்களையும் அழைத்து வந்து கொண்டிருந்தான் மன்னன்.அவர்களைச் சாஷ்டாங்கமாக வணங்கவும் செய்தான். எல்லோருக்கும் அதிர்ச்சி! அதுகுறித்து மன்னனே விளக்கினான்.

‘மன்னன் என்ற என் செல்வாக்கும், மக்கள் பணமும் இந்தக் கோயிலை எழுப்பி இருக்கலாம். ஆனால் என் ஈசன் இங்கு வந்து அமர இந்த மக்களே காரணம். அது மட்டுமல்ல, இன்னும் திருப்பணிகள் அதிகம் செய்யப்பட வேண்டிய இந்த ஆலயத்துக்கு வருங்காலத்தில் எவர் தனது பங்களிப்பை அளிக்கிறாரோ அவர்களுக்கெல்லாம் இந்த அடியேனின் வணக்கம் போய்ச் சேரட்டும்’ என்று அறிவித்தான்.

ராஜேந்திர சோழனுக்கு ஆசி தந்த சோழீஸ்வரர்!

அதைப் பாட்டாகவும் ஆலயத்தில் பொறித்துவைத்தான்:

ஆராயினும் இந்தத் தென்காசி மேவும்பொன் ஆலயத்து
வாராததோர் குற்றம் வந்தால்; அப்போதங்கு வந்ததனை
நேராகவே திருத்திப் புரப்பார் தமை நீதியுடன்
பாரார் அறியப் பணிந்தேன் பராக்கிரம  பாண்டியனே


ஆம்! ஆலயத் திருப்பணிகளை ஆன்ம வளர்ச்சிப் பணியாகக் கருதி போற்றிச் செய்த பாரம்பர்யம் நம்முடையது. அவ்வழியில், இந்த இதழில் நாம் காணவிருக்கும் அற்புத ஆலயம், சோழர்கள் பெருமை சொல்லும் பெரியநாயகி உடனுறை சோழீஸ்வரர் திருத்தலம்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் - வீரசோழபுரம் கிராமத்தில் மாமன்னர்களாலும் ரிஷிகளாலும் கொண்டாடப்பட்ட நம் ஈசன் கவனிப்பாரின்றிக் கிடக்கிறார் என்றதும், உடனடியாகக் கிளம்பினோம். தாயினும் சாலப் பரிந்து தயை காட்டும் தகப்பனை அந்த வெட்டவெளியில் கண்டதுமே மனம் துணுக்குற்றது. சோழர் காலத்தில், விண்ணை முட்டும் விமானத்தின் கீழ் வீற்றிருந்த ஐயன், இப்போது என்ன காரணமோ, திருவிளையாடலோ... இப்படி மௌனம் சாதிக்கிறாரே என்ற சிந்தையோடு கண்ணீர்மல்க வணங்கிய பின்னர், ஊர்ப் பெரியவர்களிடம் பேசினோம்.

“மகாபாரதத்தில் சொல்லப்படும் முசுகுந்த சக்கரவர்த்தி காலத்தில் இருந்தே இந்த சோழீஸ்வர பெருமான் சோழர்களின் இஷ்ட தெய்வமாக இருந்து வந்துள்ளார். வரலாற்றுப் பதிவின்படி 1178- ம் ஆண்டு இந்த வீரசோழபுரத் தில் வீற்றிருக்கும் சோழீஸ்வர பெருமான் ஆலயத்துக்குச்  சோழ மாமன்னர் வீரகேசரி மூன்றாம் குலோத்துங்கனும் அவரின் பட்டத்தரசி திருபுவன மாதேவியும் இணைந்து திருப்பணிகள் செய்தார்கள் என்று கல்வெட்டு சாசனங்கள் கூறுகின்றன.

கங்கைப்  படையெடுப்பின்போது, ராஜேந்திர சோழரின் தளபதிகள் இவ்வூரில் தங்கியிருந்து பாசறை அமைத்துப்  போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டனர் என்பதால் இது வீரசோழபுரம் என்றானது என்கிறார்கள். சோழீஸ்வர பெருமானே ஆசீர்வதித்து, வடபுலத்து வெற்றியை அளித்து சோழர் குலத்தை ஆசிர்வதித்தார் என்றும் இங்கு வெளியாகியிருக்கும் சாசனங்கள் கூறுகின்றன.

சோழர் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இந்தப் பெருமானின் ஆலயம் காலப்போக்கில் இயற்கைச் சீற்றத்தாலும், பராமரிப்பு இல்லாமலும் சிதிலமாகிவிட்டது. பின்னர் காலம் கனிந்ததும் கண்ணுதல் பெருமானின் திருவருளால் சோழீஸ்வரரின் மூலத் திருமேனி பூமியிலிருந்து கிடைக்கப்பெற்றது. ஆம், ஏற்கெனவே இருந்த ஓர் ஆலயத்தைப்  புனரமைக்க முற்பட்டபோது சோழீஸ்வரர் ஆலயமும் கிடைத்தது. கண்டவர் துதிக்கும் அந்தக் கற்பகக் கனியின்  ஆலயத்தைக் கைவிட்டுவிட முடியுமா? இதோ எங்கள் ஊரே கூடி ஆலயம் எழுப்பும் திருப் பணியைத் தொடங்கியுள்ளோம்” என்றார்கள்.

ஒரு சிலர் கூடிச்  செய்யும் பணியல்லவே ஆலயத் திருப்பணி, எனவே இயன்றவர்கள், இதயம் கனிந்தவர்கள், ஈசனின் பிள்ளைகள் எல்லோரும் கூடி ஆலயத்தை எழுப்பித் தர வேண் டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.

ராஜேந்திர சோழனுக்கு ஆசி தந்த சோழீஸ்வரர்!

ஆலயத் திருப்பணிக் குழுவில் இருக்கும் அன்பர் ரகுநாத் பேசும்போது, ‘`நான் இந்த ஊரைச் சேர்ந்தவன், இங்கு முன்பிருந்த பழைமையான சிவன் கோயிலைத் திருப்பணி செய்யத் தோண்டி னோம், அப்போது ஆலயத்துக்கு அருகிலேயே மற்றொரு கற்றளி புதையுண்டுக் கிடந்ததைக் கண்டு அதிசயித்தோம். அதுவே சோழீஸ்வரர் ஆலயம். சோழீஸ்வர பெருமான் லிங்கத் திருமேனியாகக் கிடைத்தபோது, கூடவே கல்வெட்டுகளாக இந்த ஊரைப் பற்றியும் சோழர்களுக்கு தாம் செய்த அருளாடல்களைப் பற்றியும் அறியச் செய்து விட்டார்.

ஆயிரம் காலத்து ஆலயத்தை எழுப்பியே ஆகவேண்டும் என்று இப்போது ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் முனைப்போடு பணியாற்று கிறோம். பூமிக்கு அடியில் கிடைத்த பழைமையான கற்களைக் கொண்டே இப்போது கட்ட ஆரம்பித் துள்ளோம்'' என்றவர் தொடர்ந்து பேசினார்.

``எனக்குத் திருமணமாகி 8 ஆண்டுகள் கடந்தும், மழலை பாக்கியம் கிட்டாமல் இருந்தது. இந்த ஆலயத்தைக் கண்டறிந்துத் திருப்பணி செய்யலாம் என்று ஆரம்பித்த சில நாள்களிலேயே எனக்கு மழலை வரம் கிடைத்துவிட்டது. இப்போது எனக்கு 4 மாத குழந்தையும் உள்ளது. இதனால் மழலை வரமருளும் மகேஸ்வரர் இவர் என்று உறுதியாக நான் சொல்வேன்.  அது மட்டுமல்ல, தேசம் கடந்த வெற்றிகளைச் சோழர்களுக்கு அருளிய இந்த மகாதேவனை மனமார வழிபட்டால் கிட்டாத வெற்றிகள் யாவும் கிட்டும்’’ என்றார் மெய்ச் சிலிர்ப்புடன்.

இயற்கை எழில் சூழ தகரக் கொட்டகைக்குள் அமர்ந்திருக்கிறார் ஈசன்.  ‘என்ன விளையாட்டய்யா இது? நீ விரும்பி னால் நடக்காததும் உண்டோ? ஏழைக்கு ஏழையே, எளியோர்க்கு எளியோனே... எங்களின் அன்பைத் தெரிந்துகொள்ள நீ காத்திருக்கிறாய். காத்திரு! நிச்சயம் இந்த ஆலயம் எழும்பும். இந்த ஊர் முழுக்க உன் திருத்தேர் ஓடும். அதனால் இந்த ஊரும் நாடும் செழிக்கும்’ என்று உறுதி சொல்லி வழிபட்டோம். கண்ணில் உதிரும் மலரெடுத்து, பக்தி நாரில் சரம் தொடுத்து ஐயனுக்குச் சூட்டினோம். அகமகிழ்ந்து அப்பனும் நம்மை ஆசீர்வதித்தார் என்று நம் உள்ளுணர்வு உணர்த்த, ஐயனிடம் மானசீகமாக விடைபெற்றுக் கிளம்பினோம்.

மனிதனும் தெய்விக நிலைக்குச் செல்ல முடியும் என்பதை உணர்த்தவே ஆலயங்களும் வழிபாடுகளும் உண்டாக்கப்பட்டன.  அன்பர்களே! ஆண்டவனின் அருளால் உங்களின் எல்லா விருப்பங்களும் நிறைவேற, ஆன்ம சாந்தி பெற இந்த ஆலயத்தின் திருப்பணிக்கு உதவுங்கள். ஈசனுக்கு ஒன்று ஈந்தால் ஆயிரமாகப் பெருகும். இது நம்பிக்கை மட்டுமல்ல; பல வாசகர்கள் சொல்லும் சத்திய சாட்சி. மன்றாடிக் கேட்கிறோம் மகேசனுக்கு நிழல் கொடுங்கள்; வரப்போகும் உங்கள் சந்ததியினர் அனைவருமே அனைத்து வளங்களுடன் சிறப்புற வாழ்வார்கள். இது சத்தியம்!

- மு. ஹரி காமராஜ்

படங்கள்: தே. சிலம்பரசன்

உங்களுக்காக...

ஸ்வாமி: ஸ்ரீசோழீஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீபெரியநாயகி

பிரார்த்தனைச் சிறப்பு: மழலை வரம் கிட்டும். எல்லா துறைகளிலும் வெற்றி பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வார்கள். குறிப்பாக அரசாங்க பதவி, அரசியல் ஆளுமை மேலோங்க இந்தச் சோழீஸ்வரரை
வணங்கவேண்டும்.

எப்படிச் செல்வது..?: விழுப்புரம் - திருக்கோயிலூர் சாலையில் (ஆயந்தூர் ஆற்காடு வழியாகச்  செல்லும் பாதை) வீரசோழபுரம் உள்ளது. விழுப்புரத்திலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ளது.

வங்கிக் கணக்கு விவரம்:

 T.M. கிருஷ்ணமூர்த்தி
- K. சீனுவாசன்
A/c.No: 6645885930
Bank Name: Indian Bank
Branch: Sennakunam
IFSC No: IDIB000S254

தொடர்புக்கு: ரகுநாத் - 80729 83987