ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

கோயில்களில் துவாரபாலகர்கள் எதற்காக?

கோயில்களில் துவாரபாலகர்கள் எதற்காக?
பிரீமியம் ஸ்டோரி
News
கோயில்களில் துவாரபாலகர்கள் எதற்காக?

கோயில்களில் துவாரபாலகர்கள் எதற்காக?

கோயில்களில் துவாரபாலகர்கள் எதற்காக?

? அனைத்துக் கோயில்களிலும் கருவறைக்கு முன்பாக துவார பாலகர்கள் அருள்பாலிப்பார்கள்.  இதற்குக் காரணம் ஏதேனும் இருக்கிறதா?

- சங்கரி சிவராமன், சென்னை-33

‘பாலனம்’ என்றால் காப்பாற்றுதல் என்று பொருள். அந்தக் காலத்தில் அரசர்களுக்கு மெய்க்காப்பாளர்கள் இருந்ததைப் போலவும், தற்போது `செக்யூரிட்டி' என்ற பெயரில் காவலர் இருப்பதைப் போலவும், ஆலயத்தின் சாந்நித்தியத் தைக் காப்பாற்றுவதையே முதன்மையான கடமையாகக் கொண்டவர்கள் துவார பாலகர்கள். துவார பாலகர்களின் அருள் இருந்தால்தான் நாம் இறைவனின் அருளைப் பெற முடியும்.

கருவறையில் எழுந்தருளியிருக்கும் இறைவன் அனைத்தும் அறிந்தவர். நம்முடைய முன்வினைகள் என்னென்ன,  நாம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதையெல்லாம் அறிந்து, முன்வினைகளுக்கு ஏற்ப சுக-துக்கங்களை அனுபவிக்கச் செய்து, நம்மைப் பக்குவப்படுத்தி, நிறைவாக இறைவனை அடைவதற்கு உரிய நிலையை நாம் பெறச் செய்யும் புனித இடம்தான் ஆலயம்.

கோயில்களில் துவாரபாலகர்கள் எதற்காக?

எப்படி ஒரு சி.சி.டி. கேமரா மூலம் அது பொருத்தப்பட்டிருக்கும் இடத்தில் நடக்கக்கூடிய காரியங்கள் பதிவு செய்யப்படுகின்றனவோ, அதேபோன்று ஆலயத்தில் நடைபெறக்கூடிய அனைத்து நிகழ்வுகளும் துவாரபாலகர்களினால் கண்காணிக்கப்பட்டு, இறைவனிடம் தெரிவிக்கப் படுகின்றன.

எப்படி கடவுச்சொல்லைப் பயன்படுத் தினால்தான் வங்கி ஏ.டி.எம்மிலிருந்து பணம் எடுக்க முடியுமோ, அப்படியே துவார பாலகர் களை வழிபட்டு, அவர்களின் அனுமதி எனும் கடவுச்சீட்டைப் பெற்ற பிறகே கருவறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை நாம் வழிபட வேண்டும். இதுவே ஆகமங்கள் கூறும் வழிபாட்டு முறை.

? நாள்காட்டிகளில் மரணயோகம், கரிநாள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் தினங்களில்கூட நல்ல நேரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் நல்ல காரியங்களைச் செய்யலாமா?

- ரா.ராமகிருஷ்ணன், தஞ்சாவூர்

ஒருவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த நாள் மரணயோகம் அல்லது கரிநாளாக இருந்திருக்கலாம். அதற்காக அவர் மருந்து உட்கொள்ளக் கூடாது என்று சொல்ல முடியாது. அந்த நாளில் நல்ல நேரம் பார்த்து மருந்து உட்கொள்ளுவது சரியானது. தவிர்க்க முடியாத காரியங்கள் மேற்கொள்ள வேண்டுமெனில், இதுபோன்ற நாள்களிலும் தென்படும் நல்ல நேரத்தில் நமது காரியத்தைச் செய்துகொள்வது சரியே.  ஆனால், காரியம் தள்ளிப் போடக்கூடியதாக இருந்தால், அப்போது நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து செய்வது சிறந்தது.

தினமும் செய்யக்கூடிய காரியங்களை நாம் எந்தக் காரணத்தைக் கொண்டும் தள்ளிப்போட வேண்டிய அவசியமில்லை. முக்கியமாக ஏதேனும் தொடங்கவேண்டும் என்றாலோ, முக்கியமான முடிவுகள் எதேனும் எடுக்கப்படவேண்டும் என்றாலோ... இதுபோன்ற விஷயங்களுக்கு நல்ல நாள் பார்ப்பது சரி. அவசரமான காரியங்களைப் பொறுத்தவரையிலும், கிடைத்த நாளில் எந்த நேரம் சரியாக உள்ளதோ அந்த நேரத்தில்  செய்யலாம்; தவறு ஏதும் இல்லை.

? சமீபத்தில் சிவாலயம் ஒன்றில், அகல் விளக்கில் நெல்லிக்காய் வைத்து, அதில் துளையிட்டு திரிபோட்டு விளக்கேற்றியிருந்தனர். இது எதற்கான பரிகாரம்?

- மல்லிகா அன்பழகன், சென்னை 78

இப்படி ஒரு செய்தியை நீங்கள் சொல்லித்தான் கேள்விப்படுகிறேன். எல்லாம்வல்ல இறைவன், அனைத்து ஆத்மாக்களுக்கும் நற்கதி அருள வேண்டும் என்பதற்காக, மகரிஷிகளின் மூலமாக நல்வழிகளை சாஸ்திரங்கள் மூலம் நமக்கு அருளியிருக்கிறார். அத்தகைய சாஸ்திரங்கள் மிகுந்த சக்தி கொண்டவை. சநாதன தர்மம் இயற்கையானது. அதில் கூறப்பட்டிருக்கும் அனைத்துமே இயற்கைக்கு இசைந்ததாகத்தான் இருக்கும். எந்தவொரு வழிபாட்டுக் கிரியையாக இருந்தாலும் இயற்கைக்கு எதிராக இருக்காது.

நெய் அல்லது நல்லெண்ணெயில் தீபம் ஏற்றுவது, நம் அக இருளைப் போக்கி, ஞான ஒளியை அளிக்கவல்ல ஆற்றலைத் தரும்.

கோயில்களில் துவாரபாலகர்கள் எதற்காக?

சிலர் எலுமிச்சை, தேங்காய், பூசணிக்காய் போன்றவற்றில் தீபம் ஏற்றுவது வழக்கத்தில் உள்ளது. மற்றபடி நெல்லிக்காயில் தீபம் ஏற்றுவது என்பது புதிய தகவலாக உள்ளது. தக்கச் சான்றுகளோ, பெரியோரின் வழிகாட்டுதல்களோ இல்லாமல் புதிய பழக்கவழக்கங்களை மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

? பரிகார பூஜைகளை யார் மூலம் எப்படிச் செய்தால் நிவர்த்தியாகும்?

- எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்

நம்முடைய முற்பிறவிகளில் செய்த வினை களின் தொடரினாலோ, இப்பிறவியில் செய்த தவறுகளினாலோ தோஷங்கள் ஏற்படுவது இயற்கை.

அப்படியான தோஷங்களில் சிலவற்றைப் புனித நீராடுதல், ஆலயங்களை தரிசித்தல், மகான்களின் ஆசிபெறுதல், பிராயச்சித்த பூஜைகளைச் செய்தல், விரதங்களைக் கடைப்பிடித்தல் போன்றவற்றினால் போக்கிக்கொள்ளலாம். சிலவற்றை நாம் அனுபவித்தே தீர்க்கவேண்டி இருக்கும். பல நூல்கள் இந்தப் பரிகார பூஜைகள் குறித்த நியதிகளை விளக்கமாகக் கூறியிருக்கின்றன. அவற்றை அவரவர் சக்திக்கு உட்பட்டு, தகுந்த ஆசார்ய பெருமக்கள் மூலம் செய்வது சிறந்தது.

முதலில் நாம் அனைவரும் தூய்மையானவர்கள் என்பதையும், மிக உயர்ந்த காரியங்களைச் செய்யக்கூடிய ஆற்றல்  பெற்றவர்கள் என்பதை யும் உணர்ந்துகொள்ளவேண்டும். நாம் செய்யக் கூடிய பரிகாரங்களினால் நம்முடைய முன்வினைகள் அனைத்தும் விலகிவிடும் என்று நம்பிக்கையுடன் செய்ய வேண்டியது முக்கியம்.

தகுதி வாய்ந்த ஆசார்யரின் பூஜையும், தங்களின் நம்பிக்கையும் கண்டிப்பாக நல்ல பலன்களை அளிக்கும். ஒருவருக்கு எப்படிப்பட்ட தோஷங்கள் இருந்தாலும், தெய்வத்தின் துணையோடு அவற்றைப் போக்கிக்கொண்டு அமைதியான வாழ்வைப் பெறலாம்.

? கோயில் சுவர்களில் வெள்ளையும் காவியும் அடிப்பது ஏன். ஒரே வண்ணத்தைப் பயன்படுத்தக் கூடாதா?

- ஸ்ரீநிவாசமூர்த்தி, சென்னை - 12

உலகத்தின் தாய் தந்தையராக விளங்கும் சிவ - சக்தியரின் நிறங்களாக வெள்ளையும் சிவப்பும் போற்றப்படுகின்றன. அவர்களின் அருளால்தான் இந்த உலகம் சிருஷ்டி செய்யப்பட்டது. உலக மக்கள் உய்வு பெறவேண்டும் என்பதற்காக அவர்கள் ஆலயங்களில் எழுந்தருளியுள்ளனர். சிவ சக்தியர் எழுந்தருளியிருக்கும் இடம் என்பதால், ஆலயச் சுவர்களில் சிவப்பும் வெள்ளையும் பயன் படுத்தப்படுகின்றன எனச் சொல்லலாம்.

ஆண் தெய்வங்கள் அனைத்தும் வெண்மை நிறத்தையும் பெண் தெய்வங்கள் சிவப்பு நிறத்தை யும் குறிப்பதாகவும் கொள்ளலாம். மேலும், இறைவனும் இறைவியும் எண்ணம் ஆற்றல் என இரண்டு சக்திகளாக விளங்குகின்றனர். இந்தத் தாத்பர்யத்தை உணர்த்தும்விதமாகவும், ஆலயங்களில் சிவப்பும் வெள்ளையும் பயன் படுத்தப்படுகின்றன எனவும் சொல்லலாம்.

- பதில்கள் தொடரும்...

 -`காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ  சண்முக சிவாசார்யர்

படம்: கே.ராஜசேகரன்

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்'  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002