Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - 21 - தொடர்ந்தன அற்புதங்கள்!

திருவருள் செல்வர்கள்! - 21 - தொடர்ந்தன அற்புதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 21 - தொடர்ந்தன அற்புதங்கள்!

சதாசிவ பிரம்மேந்திராள் - தொடர்ச்சி...

திருவருள் செல்வர்கள்! - 21 - தொடர்ந்தன அற்புதங்கள்!

சதாசிவ பிரம்மேந்திராள் - தொடர்ச்சி...

Published:Updated:
திருவருள் செல்வர்கள்! - 21 - தொடர்ந்தன அற்புதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 21 - தொடர்ந்தன அற்புதங்கள்!
திருவருள் செல்வர்கள்! - 21 - தொடர்ந்தன அற்புதங்கள்!

முழுமையான மனத்துறவு பூண்டிருந்த ஸ்ரீப்ரம்மேந்த்ராள், முறையாகத் துறவுபூண குருநாதரைத் தேடிப் புறப்பட்டார்.

அப்போது, காஞ்சி காமகோடி பீடாதிபதியாக இருந்த ஸ்ரீபரமசிவேந்த்ர சரஸ்வதி சுவாமிகள் கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தார். அவரின் திருவடிகளில் போய் விழுந்த ஸ்ரீசதாசிவ ப்ரம்மேந் திராள், தன்னைச் சீடனாக ஏற்று அருளும்படி வேண்டினார் (மாறான கருத்தும் உண்டு).

சீடராக விரும்புபவரின் தகுதியையும் தீவிர பக்குவத்தையும் ஒருசில விநாடிகளிலேயே உணர்ந்துகொண்ட குருநாதர், ஸ்ரீப்ரம்மேந் த்ராளுக்கு மந்திர உபதேசம் செய்து, ‘சதாசிவர்’  என்று தீட்சா திருநாமமும் செய்வித்தார்.

ஸ்ரீசதாசிவ ப்ரம்மேந்திராள் மௌனவிரதம் பூண்டார் என்பது மிகவும் பிரபலமானது. அதைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களில் ஒன்று...

அப்போதைய மன்னர் ஒருவர், வேதாந்த வித்வான்களுக்குத் தகுந்த முறையில் பரிசளித்து வந்தார். ஆனால், அந்த வித்வான்கள் பரிசு பெறுவதற்கு முன்னால், ஸ்ரீசதாசிவ ப்ரம்மேந்த்ராளிடம் போய், தங்கள் திறமையை நிரூபித்தாகவேண்டும். வேதாந்த வித்வான்களும்  ஸ்ரீப்ரம்மேந்த்ராளைத் தேடி வருவார்கள். வருபவர்களை வாயடைக்கச் செய்துவிடுவார் ஸ்ரீப்ரம்மேந்த்ராள்.

திருவருள் செல்வர்கள்! - 21 - தொடர்ந்தன அற்புதங்கள்!

அவரால் பாதிக்கப்பட்டவர்கள் - அவரின் குருநாதரிடம் சற்று சுதந்திரம் உள்ளவர்கள், “தங்கள் சிஷ்யர் இப்படியெல்லாம் செய்கிறார். தாங்கள் ஒரு வார்த்தை சொல்லி, அவரைக் கண்டிக்கக் கூடாதா?” என குருநாதரிடம் வேண்டுகோள் வைத்தார்கள்.

அவர்களின் உள்ளத்தில் உள்ளது ஸ்ரீபரம சிவேந்திரருக்குத் தெரிந்தது. அவர் ஒருநாள் ஸ்ரீப்ரம்மேந்த்ராளை அழைத்து, “உன் வாய் மூடாதா?” எனக்கேட்டார்.

அவ்வளவுதான்! கற்பூர மலையில் கனல் பற்றியது என்பார்களே, அதுபோல் அதே விநாடியில் ஸ்ரீப்ரம்மேந்த்ராள் வாய்மூடி மௌனி யாகி விட்டார். அதன்பிறகு அவர் பேசவே இல்லை என்பர் (ஒரு சில சந்தர்ப்பங்களில் பேசியதாகவும் குறிப்புகள் உண்டு).

பேச்சை நிறுத்திய ஸ்ரீப்ரம்மேந்த்ராள், ஆடையையும் நீத்தார். ஆம், அவதூதராகவே திரிந்தார். முகம் சுளிக்க வேண்டாம்! அவர் செய்தது சரியா தவறா? எனத் தேவையில்லாத ஆராய்ச்சியில் இறங்கவேண்டாம். இருந்தாலும், நம் மனம் சற்று தெளிவுபெற, திருவள்ளுவரிடம் போய்த் திரும்பலாம்.

மற்றும் தொடர்ப்பாடு எவன் கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை

பிறப்பை நீக்க வேண்டும்; அதாவது, முக்தியை அடையவேண்டும் என்று செயல்படு பவர்களுக்கு உடம்பே அதிகம்; சுமை.  மற்ற தொடர்புகள் எதற்காக என்பதே இந்தக் குறளின் கருத்து. அப்படியிருக்க, தான் மட்டும் பிறவிப் பெருங்கடலைக் கடந்தால் போதாது; மற்றவர்களும் பிறவிப் பெருங்கடலைக் கடக்கவேண்டும் என்பதற்காகவே வாழ்ந்த ஸ்ரீப்ரம்மேந்த்ராள், ஆடையின்றி - அவதூதராகவே திரிந்ததில் வியக்கவோ - வேறு நினைக்கவோ என்ன இருக்கிறது?

காடு - வனாந்தரங்கள் எனச் சுற்றித்திரிந்த ஸ்ரீப்ரம்மேந்த்ராளை பனி, மழை, வெயில் என எதுவுமே பாதிக்கவில்லை. இன்ப-துன்பமற்ற சமாதி நிலையில் இருப்பது, அவருக்கு வழக்கமானது.

ருமுறை, கொடுமுடிக்கு அருகில் நதிக் கரையில் ஸ்ரீப்ரம்மேந்த்ராள் சமாதிநிலையில்   இருந்தபோது, `இப்படிப்பட்ட பிரம்ம நிஷ்டரை, நாம் தீண்ட வேண்டும்' என எண்ணியதைப் போன்று, திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்து அவரை மூடிவிட்டது!

பார்த்தவர்கள் வருந்தினார்கள். வேறென்ன செய்ய முடியும்? அதுமட்டுமல்ல! சில நாள்களில் மறந்தும்விட்டார்கள். மூன்று மாத காலம் கழிந்தது. வெள்ளம் வடிந்து கோடை காலம் தலை நீட்டியது. வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட மணல் திட்டுகள் ஆங்காங்கே தம் இருப்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தன.

அவற்றைச் சரிசெய்ய அரசாங்கப் பணியாளர்கள், மண்வெட்டி - கூடை முதலான கருவிகளோடு வந்தார்கள். மணல் மேட்டை வெட்டத்தொடங்கிய  சற்றுநேரத்தில், மண் வெட்டி எதன் மீதோ மோதித் தடைப்பட்டதைப்போல இருந்தது. மண்வெட்டியை வெளியே எடுத்துப் பார்த்தால்... அதன் நுனியில் ரத்தம் தோய்ந்து இருந்தது. நடுங்கினார்கள்! மெள்ள மெள்ள மணலை விலக்கிப் பார்த்தால், நடுங்கியவர்கள் வியந்தார்கள்!

திருவருள் செல்வர்கள்! - 21 - தொடர்ந்தன அற்புதங்கள்!

அங்கே ஸ்ரீப்ரம்மேந்த்ராள் சமாதிநிலையில் இருக்க, அவர் திருமேனியில் மண்வெட்டி பட்ட காயமும் அதிலிருந்து ரத்தம் வழிவதும் தெரிந்தது. பயபக்தியுடன் அவரைச் சமாதி நிலையிலிருந்து வெளிப்படுத்தினார்கள். வெளிப்பட்ட ஸ்ரீப்ரம்மேந்த்ராள், எழுந்து போய்விட்டார்.எதுவுமே அவரைப் பாதித்ததாகத் தெரியவில்லை.

இப்படிப்பட்ட ‘தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சு அவிழ்ப்பார்கள்’ என்று திருமூலர் சொன்னதற்கு ஏற்ப, தத்துவ ஞானிகள் என்னதான் உயர்ந்தவர் களாக இருந்தாலும், அவர்களைக் கேலி செய்து அவமானப்படுத்தும் வழக்கம் என்றும் உண்டு; எங்கும் உண்டு. ஸ்ரீப்ரம்மேந்த்ராள் மட்டும் விதி விலக்கா என்ன?

மக்கள் என்னதான் செய்தாலும், ப்ரம்மம் தன் நிலையிலிருந்து மாறாததைப்போல், ஸ்ரீப்ரம்மேந்த்ராளும் தம் நிலையிலிருந்து மாற வில்லை. அடுத்தவர் செய்யும் கேலி - அவமானம் என எதையுமே, அவர் பொருட்படுத்தவில்லை.

இருந்தாலும் ப்ரம்மத்தின் முன்னிலையில், லீலா விநோதங்கள் பலவும் அரங்கேறுவதைப் போல, ஸ்ரீப்ரம்மேந்த்ராளின் வாழ்விலும் பல அற்புதங்கள் நடந்தன. அவமானப்படுத்தியவர்கள் ஒருபக்கம் இருந்தாலும், அன்போடு பக்தி செலுத்தியவர்களும் இருக்கத்தான் இருந்தார்கள். அவர்கள் ஏதாவது தந்தாலும், தன்னைச்சுற்றி இருப்பவர்களுக்குக் கொடுத்துவிடுவார் ஸ்ரீப்ரம்மேந்த்ராள். 
    
கள்ளம் கபடு இல்லாத குழந்தைகள் பட்டாளம், ஸ்ரீப்ரம்மேந்த்ராளைத் தங்களில் ஒருவராகவே கருதி, அவருடன் விளையாடியது. ஸ்ரீப்ரம்மேந்த்ராளும் அந்தக் குழந்தைகளுடன், தானும் ஒரு குழந்தைபோல விளையாடினார்.

ஒருநாள், குழந்தைகள் எல்லாம், “மதுரைல திருவிழா நடக்கறதாம். பெரியவங்க எல்லாம் வாய் ஓயாம சொல்றாங்க. பிரமாதமா இருக்குமாம். எங்களையும் கூட்டிண்டு போய்க் காமிக்கணும் நீ’’  என ஸ்ரீப்ரம்மேந்த்ராளிடம் சொன்னார்கள்.

சொன்ன சிறுவர்களைத் தன் தோள்களிலும் முதுகிலுமாக ஏற்றிக்கொண்ட ஸ்ரீப்ரம்மேந்த்ராள், “சரி! விநாடி நேரம் கண்களை மூடிக்கொள்ளுங்கள்!'' என்றார்.
 
அதன்படியே கண்களை மூடிய சிறுவர்கள், கண்களைத்திறந்து பார்த்தபோது, மதுரையில் ரிஷப வாகன மகோத்சவத்தில் இருந்தார்கள்; மகிழ்ச்சி தாங்கவில்லை!

சிறுவர்களின் சந்தோஷத்தை அதிகரிக்கும்விதமாக, அவர்கள் விரும்பிய சிற்றுண்டி முதலான வற்றையும் வேண்டும் வரையில் கொடுத்தார் ஸ்ரீப்ரம்மேந்த்ராள். அதுமட்டுமல்ல! விடிவதற்குள் அவர்களை மறுபடியும் அவர்கள் இருப்பிடத்திலேயே கொண்டுவந்து சேர்த்தார்.

பொழுது விடிந்ததும், சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் நடந்தவற்றையெல்லாம் சொல்லி, சிற்றுண்டிகளையும் காண்பித்தார்கள்.

ஊரில் இருந்தவர்களில் சிலர், ஸ்ரீப்ரம்மேந்த்ராள் ஒரு சித்த புருஷர் என்பதை உணர்ந்திருந்தார்கள். அவர்கள் இந்நிகழ்ச்சியை அறிந்ததும், “இந்தக் குழந்தைகளுக்குக் கிடைத்த பாக்கியம் நமக்குக் கிடைக்கவில்லையே” என்று வருந்தினர்.

திருவருள் செல்வர்கள்! - 21 - தொடர்ந்தன அற்புதங்கள்!

இந்நிகழ்ச்சி,  ஸ்ரீப்ரம்மேந்த்ராள் திருமாநிலையூரில் இருந்தபோது நடந்ததாக, ஒருநூல் கூறுகிறது.

ஸ்ரீசதாசிவ ப்ரம்மேந்திராள், மகாசிவராத்திரி - கோகுலாஷ்டமி முதலான புண்ணிய காலங்களில், ஒரே காலத்தில் பல தலங்களில் இருந்து காட்சி கொடுத்த வரலாறுகளும் உண்டு. குழந்தைகளுக்கு அருள்புரிந்ததைப் போலவே, இளைஞர் ஒருவருக்கு ஸ்ரீரங்கத்தில்  தரிசனம் செய்து வைத்த வைபவமும் உண்டு. காற்றைப்போல எல்லா இடங்களிலும் சுற்றித் திரிந்துகொண்டிருந்த ஸ்ரீப்ரம்மேந்த்ராளின் நிழல்போல, அவர் பின்னாலேயே பிரம்மசாரி ஒருவரும் சுற்றித்திரிந்தார். எப்படியாவது இந்த பிரம்ம நிஷ்டரின் அருளைப் பெற்றுவிட வேண்டும் என்பதே, அந்தப் பிரம்மசாரியின் குறிக்கோள்.

அந்தப் பிரம்மசாரி, படிப்பின் வாசனைகூட அறியாதவர். அதனால் என்ன? படிப்பின் பலன், தெய்வ அருளை உணர்வதும் மகான்கள் - ஞானிகள் - பிரம்ம நிஷ்டர்கள் ஆகியோரின் அருளைப் பெறுவதும்தானே?

தெய்வத்தின் தரிசனமோ, அருளோகூடக் கிடைத்துவிடும். ஆனால் ஞானிகளின் தரிசனமோ-அருளோ, சுலபத்தில் கிடைக்காது. எந்தப் பிறவி புண்ணியமோ? அந்தப் பிரம்மசாரியிடம் ஸ்ரீப்ரம்மேந்த்ராள் இரக்கம் கொண்டார். சைகைகள் மூலமாகப் பிரம்மசாரியிடம் பேசியும் வந்தார். பிரம்மசாரிக்கோ மிகவும் மகிழ்ச்சி!

ஒருநாள், பிரம்மசாரி தன் வேண்டுகோளை ஸ்ரீப்ரம்மேந்த்ராளிடம் சமர்ப்பித்தார்.

“ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீரங்க நாதரை தரிசிக்கவேண்டும். அடியேனின் இந்த ஆசையைத் தாங்கள்தான் நிறைவேற்றி வைக்க வேண்டும்” என வேண்டினார். அவரிடம், கண்களை மூடிக்கொள்ளுமாறு சைகையிலேயே உத்தரவிட்டார்  ஸ்ரீப்ரம்மேந்த்ராள். அப்படியே செய்த பிரம்மசாரி, கண்களைத் திறந்தபோது, ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் சந்நிதியில் தான் இருப்பதை உணர்ந்தார்; வியந்தார். தரிசனம் முடித்து ஸ்ரீப்ரம்மேந்த்ராளைத் தேடினார்; ஊஹூம்! கிடைக்கவே இல்லை.

தேடியவாறே நெரூருக்கு வந்த பிரம்மசாரி, அங்கே தன்னை மறந்த நிலையில் சமாதிநிலையில் இருந்த ஸ்ரீப்ரம்மேந்த்ராளை தரிசித்து வியந்தார். அதன்பிறகு, கொஞ்சகாலம் பழையபடியே ஸ்ரீப்ரம்மேந்த்ராளுடன் இருக்கத் தொடங்கினார். அவர் மீது கருணைகொண்ட ஸ்ரீப்ரும்மேந்த்ராள், அந்தப் பிரம்மசாரிக்குச் சில மந்திரங்களைத் தன் முறைப்படி உபதேசித்தார்.

உபதேசம் பெற்ற பிரம்மசாரி, தான் பெற்ற மந்திரத்தை உருவேற்றத் தொடங்கினார். பலன்? புராண- இதிகாசங்கள் எனச் சகலவிதமான ஞான நூல்களிலும் கரைகண்டவராக ஆனார்; அறிவாளிகள் நிறைந்த சபையில் ஞானமயமாகச் சொற்பொழிவும் செய்தார். ஊரே வியந்து பாராட்டியது.

வளர்த்துவானேன்! ஸ்ரீப்ரம்மேந்த்ராளைப் பற்றிச் சொல்லி முடிப்பது என்பது பரந்து கிடக்கும் கடலினை உள்ளங்கையில் அடக்குவதைப் போல். புதுக்கோட்டை மன்னரே ஸ்ரீப்ரம்மேந்த்ராளின் பின்னால், எட்டு ஆண்டுகள் சுற்றித்திரிந்து, அவர் அருளை வேண்டிப் பெற்றார்!

 ஸ்ரீப்ரம்மேந்த்ராள் நெரூரில் ஸித்தியடைந்தார் என்று சொல்லப்பட்டாலும், கராச்சி -மானா மதுரை - நெரூர் என்று மூன்று இடங்களில் ஸித்தியடைந்ததாகவும் அம்மூன்று இடங்களிலும் ஸ்ரீப்ரம்மேந்த்ராளின் சமாதிகள் உள்ளன என்றும் வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. அந்த மூன்று இடங்களிலும் மிகவும் புகழ் வாய்ந்தது, ‘நெரூர்’ திருத்தலமே!

ஞானநூல்கள் பலவற்றையும் கீர்த்தனைகள் பலவற்றையும் நமக்காக அருளிச்செய்த ஸ்ரீப்ரம்மேந்த்ராளை துதித்து, சிருங்கேரி ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவ ந்ருஸிம்ஹ பாரதி மஹா ஸ்வாமிகள் ஓர் அற்புதமான நூலை அருளியிருக்கிறார். ‘ஸ்ரீசதாசிவேந்த்ர ஸ்தவம்’ எனும் அந்த நூல், நம் ஒவ்வொருவர் மனதிலும் பதியவேண்டியது. அதிலுள்ள பாடல்களை அப்படியே சொன்னாலும் - படித்தாலும் போதும்; நம் வாழ்க்கை வளம் பெறும் நாம் நலம் பெறுவோம் என்பதில் சந்தேகமேயில்லை.

மகான்களை மனதில் வைப்போம்; மனக் கவலைகள் நீங்கிப்போம்!

- திருவருள் பெருகும்...

- சொல்லின்செல்வன் பி.என்.பரசுராமன்