Published:Updated:

ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வாருங்களேன்!

ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வாருங்களேன்!
பிரீமியம் ஸ்டோரி
ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வாருங்களேன்!

மகா சிவராத்திரி கொண்டாட்டம்!

ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வாருங்களேன்!

மகா சிவராத்திரி கொண்டாட்டம்!

Published:Updated:
ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வாருங்களேன்!
பிரீமியம் ஸ்டோரி
ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வாருங்களேன்!
ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வாருங்களேன்!

ண்வகை சிவ விரதங்களில் தலையாயச் சிறப்புகொண்டது, மகாசிவராத்திரி விரதம் என்கிறது கந்தபுராணம். பிரபஞ்சம் ஒடுங்கி சகல ஜீவன்களும் ஈசனுக்குள் அடங்கும் சம்ஹார காலத்தில், உலக மாதாவாம் உமையவள், விரதமிருந்து வழிபட்டு சிருஷ்டிகளை மீண்டும் உருவாக்கவேண்டும் என்று ஈசனைப் பிரார்த்தித்துக்கொண்ட இரவே, மகா சிவராத்திரி எனப் போற்றப்படுகிறது.

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளில் அனுஷ்டிக்கப்படும் இந்த மகா சிவராத்திரி விரத மகிமையை, புராணங்கள் மிகப் பெரிதாகப் போற்றி மகிழ்கின்றன. அம்பிகை, மால், அயன் எனத் தொடங்கி `ஈ’ வடிவில் அகத்தியர், `எறும்பு’ வடிவில் தேவர்கள் என அத்தனைபேருமே இந்தச் சிவராத்திரி விரதத்தால் பெரும்பேறு பெற்றார்கள் என்கின்றன ஞானநூல்கள்.

ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வாருங்களேன்!

பசுக்களின் தாயான காமதேனு தேவி சகல தேவர்களாலும் பூஜிக்கப்படுபவள். பாற்கடலிலிருந்து தோன்றிய காமதேனு ஒருமுறை சிவலிங்க பூஜைக்குத் தாமதம் செய்த காரணத்தால், மண்ணுலகம் வந்து பல்வேறு சிவாலயங்களில் ஈசனைப் பூசித்து வந்தது. நிறைவாக நான்முகனின் அறிவுரைப்படி ஆவூர் சென்றடைந்து, அங்குள்ள அருள்மிகு பசுபதீசுவரர் ஆலயத்தில், அமுதப் பால் சொரிந்து ஈசனை வழிபட்டு மீண்டும் தெய்வலோகம் சென்றது, ஒரு சிவராத்திரி புண்ணிய தினத்தில்தான் என்பார்கள்.

காமதேனுவும் கற்பக விருட்சமும் கேட்டதையெல்லாம் கொடுக்கக்கூடியவை. இந்தச் சிவராத்திரி நாளில் ஈசனுக்கு சமர்ப் பிக்கும் எல்லாப் பொருள்களையும் கற்பகமும் காமதேனுவும் தருவதாகவே ஐதீகம். எனவே இந்நாளில் ஈசனுக்கு சமர்ப்பிக்கும் சகலமும் பன்மடங்காகப் பெருகி நமக்குக்  கிடைக்கும் என்பதே உண்மை. 

மட்டுமின்றி... ஈ, எறும்பு, யானை முதலாக சகல ஜீவ ராசிகளும், தங்களின் மனம் விரும்பும் விதத்தில் சிவத்தைப் பூசித்து மகிழ உகந்த காலம் மகாசிவராத்திரி. அவ்வகையில், அற்புதமான இந்தப் புண்ணிய தினத்தில் எல்லாம்வல்ல சிவனாரை வழிபட்டு, உயர்ந்த பலா பலன்களை வாசகர்கள் பெற்று மகிழவேண்டும் என்ற நோக்கத்துடன், மிகச் சிறப்பான சிவ வழிபாட்டுக் கொண்டாட் டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறது உங்கள் சக்தி விகடன்.

ஆம்! வரும் மார்ச் 4-ம் தேதி (மாசி-20), திங்கள்கிழமை அன்று சக்தி விகடன் மற்றும் அகத்தியர் பசுமை உலகம் அமைப்பு இணைந்து வழங்க, திருஏகாம்பரநல்லூர் ஊர் மக்களின் ஒத்துழைப் போடு மிகச் சிறப்பாக சிலிர்ப்பாக நடைபெறவுள்ளது மகா சிவராத்திரி வழிபாடு. வைபவத்தின் சிறப்பம்சங்களும் விசேஷ வழிபாட்டுத் தகவல்களும் இங்கே உங்களுக்காக!

சிவராத்திரியில் கண்விழித்து பூஜிப்பது ஏன்?

ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வாருங்களேன்!

உலகின் ஜீவாத்மாக்கள், பிரபஞ்சம் எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவோடு எப்போதும் எங்கும் தொடர்பில் இருக்கின்றன. குறிப்பாக  உடலின் அத்தனை ஆதார சக்கரங்களும் விழித்துக் கொள்ள...  ஆன்ம சக்தி இறை சக்தியோடு எழுச்சியுடன் இணைய உகந்த காலம் சிவராத்திரி என்கின்றன ஞானநூல்கள். ஆகவே,   அந்தப் புண்ணிய தருணமான சிவராத்திரி இரவில் தூங்காமல்  விழித்திருக்க வேண்டும் என்கிறார்கள், அனுபவித்து உணர்ந்த ஆன்மிகச் சான்றோர்கள். படுத்திருக்கும் நிலையில் ஆதார சக்தியின் இருப்பிடமான முதுகுத்தண்டு மண்ணில் கிடந்தால், ஜீவசக்தி விழித்துக்கொள்ளாது. ஆகவே, அன்று முழுவதும் அமர்ந்திருக்க வேண்டுமாம்.

`படுக்காமல் அமர்ந்திருக்கவேண்டும்’ என்று வெறுமனே கூறினால், சொல்பேச்சு கேட்காது மனித மனம். ஆகவேதான், `சிவலிங்க பூஜை செய் நன்மை உண்டாகும்’ என்று கூறி, சிவராத்திரி புண்ணிய தினத்தில் சகல உயிர்களையும் விழித்திருக்க வழிவகை செய்திருக்கிறார்கள் முன்னோர்கள். ஆம், உன்னதமான வரத்தைப் பெற உயர்வானதொரு வழிகாட்டலைச் சொல்லியிருக்கிறார்கள் என்றே கருதவேண்டும்.

தத்துவங்கள் கதைகளாகச் சொல்லப் பட்டன. பாற்கடல் கடையப்பட்ட சிவராத்திரியில் சிவனைப் பூஜித்தால் அமுத நிலை வாய்க்கும் - ஆயுள் பெருகும், சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது புராணங்கள் சொல்லும் தகவல்.

இதில் ஒளிந்திருக்கும் தத்துவம் என்ன தெரியுமா?

பாற்கடல் நம் உடல், முதுகுத் தண்டு மந்தார மலை, `வாசி’ என்ற மூச்சே வாசுகி நாகம்,  இடகலை - பிங்கலை ஆகியவை தேவ - அசுரர்கள்! ஆக, புலனடக்கம் என்ற கூர்மம் மந்தார மலையைத் தாங்க, மூச்சு எனும் இடையறாத நாகம் உடலைக் கடைகிறது. அப்போது ஆதாரச் சக்கரங்கள் உச்சியை அடைந்து அமிர்தம் பெருகுகிறது. அப்போது, ஆனந்த மயத்தில் சீவன் சிவனாகிறது. பிறகென்ன சகலமும் சிவனென்று உணர்கிறது. அன்பே சிவமென்றுத் தொழுகிறது.

ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வாருங்களேன்!

இப்படி உடல் வழியாக நம் ஆன்மாவை ஈசனோடு கலக்க வைக்கும் பெரும் முயற்சிகளே மகா சிவராத்திரி விரதமும் வழிபாடும். நாம் புராணங்களை வெறும் கதைகளாகவே வாசித்துப் பழகி விட்டோம். அப்படியில்லாமல் உள்ளார்த்தங்களை உணர்ந்து, வரும் சிவராத்திரியில் சிவனை வழிபடுவோம் வரம்பெறுவோம்.

ஏகாம்பரநல்லூரில் ஏன் இந்த வழிபாடு?

உன்னதமான வழிபாட்டை உன்னதமான திருத்தலத்தில் நடத்துவதுதானே பொருத்தம். ஆகவேதான், திருஏகாம்பர நல்லூரில் நடைபெறுகிறது இந்தச் சிவராத்திரி வழிபாடு.

அப்படியென்ன சிறப்பு திருஏகாம்பர நல்லூருக்கு எனக் கேட்கத் தோன்றுகிறதா? அன்னை உமையவளுக்கு ஈசன் சிவலிங்கப் பூஜையினை முதல்முதலாக சொல்லித் தந்த திருத்தலம் இது.   அன்னை காமாட்சியோடு ஏகாம்பரநாதர் அருளாசி புரியும் இந்தத் தலத்தில் மேற்கொள்ளப்படும் எந்த பூஜையும், பன்மடங்கு பலன் அளிக்கக்கூடியது என்பது ஆன்மிகப்பெரியோர்களின் அருள்வாக்கு.அஷ்ட பைரவர்களும் சூட்சும வடிவில் வந்து சிவவழிபாடு நிகழ்த்தும் தலம் இது. இங்கு வழிபடும் அன்பர்களுக்கு, கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்பதும் நம்பிக்கை.

எனவேதான், மிக அற்புதமான ஆத்ம லிங்க அபிஷேகத்தை இந்த தலத்தில் நடத்தும்படி சிவனருள் கைகூடியது எனலாம்.

ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வாருங்களேன்!

வழிபாட்டின் சிறப்பம்சங்கள்...

* உறக்கமற்ற விழிப்பு நிலையே ஆணடவனை அடையும் வழி.  அதற்கேற்ப மகாசிவராத்திரி அன்று முறையே... இரவு 10:00, 12:00, 2:00 மறுநாள் அதிகாலை 4:00 மணி என்ற அடிப்படையில் நான்கு கால பூஜைகள் நடைபெறவுள்ளன.

* ஓவ்வொரு காலத்திலும் அந்தக் காலத்துக்கு உரிய சிவலிங்கத்தை நீங்களே செய்து, உரிய அபிஷேக திரவியங்களால் - மலர்களால் அர்ச்சித்து வழிபடப்போகிறீர்கள் என்பது சிறப்பம்சம் (விவரம் தனித் தகவலாக தரப்பட்டுள்ளது).

*  நான்கு கால பூஜைகளோடு, பிரமாண்ட ருத்ராட்ச லிங்க தரிசனம், ஏகாம்பரநல்லூர் ஏகாம்பரேஸ்வரருக்கான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஆகியவையும் காத்திருக்கின்றன.

*  பூஜைகளுக்கு இடையே உங்களின் சிந்தையை மகிழ்விக்கும் சிவ கீர்த்தனைகள், நந்தி நர்த்தனம் எனும் தலைப்பிலான களறியாட்டம், `குற்றாலக் குறவஞ்சி’ நாட்டிய நாடகம், தேவார, திருவாசக முற்றோதல்களும், கயிலாய வாத்திய இசை முழக்கம் ஆகியவையும் நடைபெறவுள்ளன.

* சொல்லின்செல்வன் பி.என்.பரசுராமன், வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன், அகத்தியர் பசுமை உலகம் நிறுவனர் சரவணன் ஐயா ஆகிய ஆன்மிகப் பெரியோர்களின் சிறப்புச் சொற்பொழிவுகளும் வழிகாட்டல்களும் விழாவின் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கவுள்ளன.அனைவரும் வாருங்கள் சிவனருளால் அகம் மகிழட்டும்; ஏகாம்பரநாதனின் திருவருளால் வாழ்வை வரமாக்கிக்கொள்ளுங்கள்.

- மு. ஹரி காமராஜ்

வாசகர்கள் கவனத்துக்கு!

* திருஏகாம்பரநல்லூர் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக் கோயிலில் மகா சிவராத்திரி விழா வைபவம் மார்ச்-4 திங்கள்கிழமை அன்று மாலை 4 மணியளவில் தொடங்கி, மறுநாள் அதிகாலை 5 மணி வரை நடைபெறும்.

நான்கு கால பூஜைகளில், ஒவ்வொரு காலத்துக்கும் உகந்தபடி,  நீங்களே நான்குவிதமான க்ஷணிக லிங்கங்களை உருவாக்கி, அந்த லிங்கத்துக்கு நீங்களே அபிஷேக ஆராதனைகள் செய்யப்போகிறீர்கள்.

* மகாசிவராத்திரி வழிபாட்டு அட்டவணை விவரப்படி நான்கு கால வழிபாடுகள் நடைபெறும். ஒவ்வொரு காலத்துக்கும் 108 பேர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.

* நான்கு கால பூஜையில் உங்கள் விருப்பத்துக்கேற்ப ஒரு கால பூஜையில் கலந்துகொள்ள முன்பதிவு செய்துகொள்ளலாம்.முந்துவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முன் பதிவு ஏற்கப்பட்டு அனுமதி வழங்கப்படும். 

* ஒருவேளை, நீங்கள் விரும்பும் காலத்துக்கான முன்பதிவு நிறைவுற்றிருந்தால், வேறொரு காலத்தைத் தேர்வு செய்யலாம்.

* வழிபாட்டுக்கு முன்பதிவு செய்து கொள்ளும் வாசகர்கள் (மார்ச்- 4) மாலை 4 மணிக்கே திருக்கோயிலுக்கு வந்துவிடவேண்டும். தவிர்க்கமுடியாத சூழல் முன்னதாக வர இயலாது எனில், நீங்கள் கலந்துகொள்வது எந்தக் காலமோ, அந்தப் பூஜைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே ஆலயத்தில் இருக்கும்படி பயணத் திட்டத்தை வகுத்துக்கொள்ளவும்.

பெரும்பாலும், அனைவருமே இரவு 8  மணிக்குள் கோயிலுக்கு வந்துவிடுவது, தங்களின் பயணத்துக்குப் பாதுகாப்பாகவும் வசதியாகவும் அமையும்.

* முன்அனுமதிக்கு எவ்விதக் கட்டணமும் கிடையாது. முன்பதிவு விண்ணப்பங்களை ஏற்பது, தவிர்ப்பதில் ஆசிரியர் முடிவே இறுதியானது.

பூஜைக்குக் கொண்டு வரவேண்டிய பொருள்கள்: மகாசிவராத்திரி ஆத்மார்த்த அபிஷேகம் சிறப்பு வழிபாட்டுக்கான சிவலிங்கத் திருமேனி செய்வதற்கான பொருள்கள், அபிஷேக-அர்ச்சனை திரவியங்கள், மலர்கள் ஆகியவை வாசகர்களுக்கு ஆலயத்திலேயே வழங்கப்படும். பூஜைக்குத் தேவையான சிறிய தாம்பாளத் தட்டு, பூஜை மணி, விளக்கு ஆகிவற்றை மட்டும் நீங்கள் எடுத்துவந்தால் போதும்.

எப்படிச் செல்வது?: வேலூர் மாவட்டம், ஆற்காடு நகரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ளது திருஏகாம்பரநல்லூர். அனைத்து ஊர்களி லிருந்தும் ஆற்காடு செல்ல பேருந்துவசதிகள் உண்டு. ஆற்காடு பைபாஸ் அல்லது பேருந்து நிலையத்தி லிருந்து திருவலம் செல்லும் பேருந்தில் ஏறி, ஏகாம்பரநல்லூர் ஆலயத்தை வந்தடையலாம். லாலாபேட்டை எனும் ஊருக்கு அருகிலுள்ளது ஏகாம்பர நல்லூர்.

முன்பதிவு செய்ய: மு. ஹரி காமராஜ் - 89390 30246