ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 25

சிவமகுடம் - பாகம் 2 - 25
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 25

ஆலவாய் ஆதிரையான்

மீண்டும் கிடைத்த பூ வாக்கு!

சிவமகுடம் - பாகம் 2 - 25

தியற்புதமான சில சம்பவங்கள் சிறிதும் பிசகாமல் அப்படியே மீண்டும் நம்மைச் சூழ்வதாகத் தோன்றும் சில பொழுதுகளில். அந்தச் சம்பவங்கள், நம் மனதுக்கு மிக நெருக்கமாய் அமைந்துவிடுவதே அதற்குக் காரணம்!

`அடியார்க்கு அடியார் போற்றி’ என்று சிவனருள்செல்வர்களைப் போற்றித் துதித்த சுந்தரமூர்த்தி நாயனார், சேக்கிழார் பெருமான் போன்ற ஆன்றோர்களால் பிற்காலத்தில் பெரிதும் போற்றிச் சிறப்பிக்கப்பட்ட மங்கையர்க்கரசியாருக்கும், அப்படியான சம்பவங்கள் நிறையவே வாய்த்தன அவர் காலத்தில். அதிலொன்று சிவபிரானிடத்தில் அவர் `பூ வாக்கு’ கேட்ட வைபவம்.

வாருங்கள்... பாண்டிமாதேவியாராம் மங்கையர்க்கரசியாரை அடிக்கடி பேருவகையில் ஆழ்த்திவிடும் அந்தச் சிவானுபவத்தை நாமும் தரிசித்துத் திளைப்போம்.

மாமதுரையில், தோழி பொங்கிதேவிக்காக ஒதுக்கப்பட்டிருந்த புறமாளிகையின் வழிபாட்டு அறையில், சிவனாரின் திருமுன் எவ்விதச் சலனமுமின்றி  இப்போது அமர்ந்திருப்பது போன்றுதான், அன்றைக்கும் உறையூர் அரண்மனையின் பூஜாமண்டபத்துச் சிவச் சந்நிதியிலும் அமர்ந்திருந்தார் தேவியார். அன்றைய அந்தப்பொழுதில் இருந்தபடியே, இப்போதும் தந்தை மணிமுடிச்சோழரும் இங்கே அருகிலிருக்கிறார்.

காரணம் வெவ்வேறாக இருந்தபோதிலும் இரண்டு இடங் களிலும் - தருணங்களிலும் கிடைத்த பூ வாக்குகளும் ஒன்று போலவே அமைந்ததுதான், அந்தச் சம்பவங்களைச் சிறப்பித்த தோரணம் எனலாம்.

ஆம்! அப்போது தனது நிலைப்பாடு குறித்து எம்பிரானின் அருள்வாக்கை வேண்டினார். இப்போதோ பாண்டியரின் நிலை குறித்து பூ வாக்குக் கேட்டார். அப்போதுபோலவே இப்போதும் மிகச் சாதகமான பதிலை அருளிவிட்டார் சிவப்பரம்பொருள்.  அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சி, அந்தப் பேரரசியின் திருமுகத்தின் பொலிவை அதிகப்படுத்த, அவரின் திருமுக ஜோதி அருகிலிருந்த திருவிளக்குச் சுடரைக் காட்டிலும் அதிகமாய் ஜொலித்தது!

இந்த அதிகாலை வேளையிலேயே பொங்கி தேவியின் மாளிகையை நாடி வந்து, அவர் பூ வாக்குக் கேட்டதற்குக் காரணம் இருக்கவே செய்தது. ஆம்! முந்தையநாள் பாண்டிய மாமன்னரின் பேரவையில் நிகழ்ந்த விசாரணை நிகழ்வு, தேவியாரின் மனதை வெகுவாக பாதித்துவிட்டிருந்தது.

சிவமகுடம் - பாகம் 2 - 25

தான், விசாரணை பீடத்தில் அமர்த்தப்பட்டதற் காகவோ, அவையினரின் முன் பேரரசரின் பெரும் விசாரணைக்கு ஆளாகி விட்டதன் பொருட்டோ பாண்டிமாதேவியார் கலங்கவில்லை. இப்படியும் நடக்குமென்று அவர் எதிர்பார்த்தேயிருந்தார். ஆனால், மாமன்னரின் போக்கும் சித்தமும்தான் மகாராணியாருக்கு பெரும் வியப்பையும் திகைப்பையும் அளித்து, அவரைத் தவிக்கவைத்தன!

தமது காய்நகர்த்தல் ஒவ்வொன்றும் சிவமகுடத்தைக் காப்பாற்ற அல்ல; மாமன்னரின் மணிமகுடத்தைக் காப்பாற்ற என்று தேவியார் சொன்னதைத் தொடர்ந்து, ‘‘என்ன சொல்கிறாய் மானி’’ என்று இடியாய் முழங்கிய மாமன்னர், அடுத்தடுத்து கேட்ட கேள்விகளும், அவர் நடந்துகொண்டவிதமும் மாமன்னரின் எதிர்காலத் திட்டம் குறித்து தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரமுடியாதபடி, தேவியாரைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டன என்றே சொல்ல வேண்டும்.

அதையொட்டிய சிந்தனையிலேயே... பாண்டிமாதேவியாருக்கு தூக்கம் இல்லாமல் கழிந்தது முந்தையநாள் இரவு.

‘‘அப்படியென்ன பேராபத்து எமது மணிமுடிக்கு?’’

‘‘பகைவரின் படை நகர்வுகள் விபரீதமாயிருக் கின்றன!’’

‘‘ஓஹோ... இந்தத் தென்னவனின் கவனத்தையே சிதறடித்துவிட்டு நகர்கிறார்களா பகைவர்கள்?’’

‘‘கிடைக்கும் தகவல்களைக்கொண்டு நோக்கினால்... அப்படித்தான் தோன்றுகிறது’’

‘‘சரி போகட்டும்... இவ்வளவு விஷயங்கள் மகாராணியாரின் கவனத்துக்கு வந்திருக்கின்றன என்றால், அதுபற்றி எம்மிடம் தெரிவிக்காதது ஏனோ..?’’

‘‘மிகத் துல்லியமான ஆதாரங்களுக்காகக் காத்திருந்தோம்’’

‘‘அப்படியான ஆதாரங்கள் இப்போதுவரை கிடைத்திருக்காது என்றே நம்புகிறேன். சரி... விபரீதமான படைநகர்வுகள் என்று சொன்னீர்களே... அதுபற்றி தற்போதாவது இந்த அவையிலேயே பகிர்ந்துகொள்ளலாம் அல்லவா?’’

‘‘முடியாது. அதுபற்றி இப்போது சொல்வதற்கில்லை.’’

‘‘காரணம்?’’

‘‘அதுகுறித்து வெளிப்படும் ரகசியமே தங்களின் உயிருக்குப் பேராபத்தை விளைவித்துவிடும் என நிச்சயமாக நம்புகிறேன்’’

இவர்கள் இருவரது அழுத்தம்திருத்தமான - ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்த இந்த உரையாடலைத் தவிர்த்து, பெரும் நிசப்தத்தில் ஆழ்ந்துவிட்டிருந்த அந்த மகாமண்டபத்தில், ஒருவர் மட்டுமே எவ்வித வியப்போ திகைப்போ இல்லாமல்,  அரச தம்பதியின் விசாரணை வாக்குவாதங்களை வெகுவாய் ரசித்துக்கொண்டிருந்தார்.

அவர், பேரமைச்சர் குலச்சிறையார்!  இருவரது வல்லமையையும் அவர் அறிந்திருந்தார் என்பதே அதற்குக் காரணம்.

பாண்டிமாதேவியார் ரகசியத்தைச் சொல்ல முடியாது என்று உறுதிபட தெரிவித்த மறுகணம், விசாரணையை ஒத்திவைத்து விட்டு ஆவேசத்துடன் மண்டபத்தில் வெளியேறினார் மாமன்னர், அதன் பிறகு வெகுநேரம் கழித்து அந்தப்புரத்தில்தான் சந்தித்தார்  தன் தேவியாரை.

அப்போது, காலைப்பொழுதின் ஆவேசம் கொஞ்சமும் இல்லை அவரிடத்தில். நிலாமணி மாடத்தில் நின்றிருந்த தேவியாரை அணுகியவர், சிரம் தாழ்த்தி வணங்கினார். அதைக் கண்டு பதைபதைத்துப் போனார் பாண்டிமாதேவியார்.

சிவமகுடம் - பாகம் 2 - 25

‘‘என்ன செயல் இது?’’

உரிமையுடன் கோபித்துக்கொண்ட தேவியாருக்குப் பதிலைச் சொல்லாமல் மெள்ள புன்னகைத்தார் மன்னர்பிரான்.

‘‘எப்பேர்ப்பட்ட இல்லாள் வாய்த்திருக்கிறாள் எனக்கு...’’ என்றவரின் முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது. தேவியாரோ, மன்னவரின் பேச்சுக்கு அர்த்தம் புரியாதவராக புருவச்சுழிப்புடன் கணவரின் முகத்தை நோக்கினார். விண்ணின் பால்நிலவை விடவும் பொலிவுற்றுத் திகழ்ந்தது, பாண்டிய மாமன்னரின் திருமுகம்.

தன் பேச்சு குறித்து தேவியாருக்கு சற்றே புரிதல் எழும்படியாகச் சொன்னார் மாமன்னர்: ‘‘பேரரசனுக்கு இணையான பேரரசி இப்படித்தான் இருக்கவேண்டும்!’’

மாமன்னர் எதுபற்றி குறிப்பிடுகிறார், சற்றுமுன் அவர் முகத்தில் பொலிந்த பெருமிதத்துக்குக் காரணம் என்ன என்பது, இப்போது தெளிவாகப் புரிந்தது பாண்டிமாதேவியாருக்கு.

ஆம்! பேரரசரையே வியக்கவைக்கும் வகையிலான அரசியாரின் காய்நகர்த்தல்களும், ஓர் அணுக்கப்படையையே திரட்டிவைத்திருக்கும்  அவரது வல்லமையையும் குறித்தே பெருமிதம் கொண்டு அவரை வணங்கவும் வாழ்த்தவும் செய்தார் கூன்பாண்டியர். அதைப் புரிந்து கொண்டதால், பதிலுக்குத் தானும் புன்னகைத்தார் பேரரசி மங்கையர்க்கரசியார்.

சில கணங்கள் நீடித்தது இந்தச் சூழல். பிறகு சட்டென்று மாமன்னரின் முகம் இறுகியது. தேவியாரிடம் கேட்டார்: ‘‘ஏன் தேவி... பகைவரின் நகர்வுகளைக்கூட அறியமுடியாத நிலையிலா இருக்கின்றன, என் ஆட்சியும் ஆளுமையும்?’’

இந்தக் கேள்விக்கு தீர்க்கமானதொரு பதிலைச் சொன்னார் மங்கையர்க்கரசியார்: ‘‘நான் வெளிப்படையாக பகைவர் என்று விழித்தது சில துரோகிகளை. பகைவரை அறிந்துகொண்ட அளவுக்கு , அணுக்கர்களாய் தங்களைச் சூழ்ந்திருக் கும் துரோகிகளை இனம் கண்டுகொள்ளவில்லை தாங்கள்!’’

‘‘யாரைச் சொல்கிறாய்?’’

‘‘நான் சொல்ல மறுத்த ரகசியத்தில் இதுவும் அடங்கும். தக்க தருணத்தில் தாங்களே அறிந்து கொள்வீர்கள்!’’

மன்னரின் முகத்தில் மீண்டும் மலர்ச்சி! ரகசியத்தை அறிய முடியாத தவிப்பு உள்ளுக்குள் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தத் தேவையில்லாதபடிக்குத் தேவியாரின் அன்பும் அணுக்கமும் தனக்கு வாய்த்திருப்பதை நினைத்து அவர் உவகை அடைந்திருக்கவேண்டும்!

ஆகவே, புன்னகைத்தவாறு மீண்டுமொருமுறை தேவியாரைப் பாராட்டும்விதம் அவருக்கு வந்தனம் செய்து, அதன் விளைவாக அவரைத் தவிக்கவிட்டுவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.

``மனையாளை மணாளன் வணங்குவது என்ன மரபோ’’ என்று வெளியே முணுமுணுத்துக் கொண்டாலும், உள்ளுக்குள் மன்னர்பிரானின் செய்கையால் உவகைகொண்ட தேவியாரின் மனம், அடுத்த கணமே வேறு வேறு சிந்தனைகளால் தவிக்கத் தொடங்கியது. அந்தச் சிந்தனைகளில் பிரதானமானவை இரண்டு.

‘சிவமகுடம் குறித்து மாமன்னர் அறிந்து வைத்திருப்பது எந்த அளவுக்கு? துரோகிகளிட மிருந்து அவரையும் பாண்டிய தேசத்தையும் எப்படிக் காப்பாற்றப் போகிறோம்?’

- இப்படியானச் சிந்தனைகளால் தூங்காமல் கழிந்த இரவைத் தாண்டி பொழுதுவிடிந்ததும், விரைந்தோடி வந்துவிட்டார் எம்பிரானின் சந்நிதிக்கு. இறை அவரைக் கைவிடவில்லைதான்.சரக்கொன்றை மலர் ஒன்றை திருமுடியிலிருந்து உதிர்த்து, பாண்டிமாதேவியாரின் அடுத்த நகர்வுக் கான அனுமதியை தந்துவிட்டது!

ஆனாலும், அந்த நகர்வு அத்தனை எளிதாய் அமைந்துவிடவில்லை. காரணம்... இளங்குமரன் கொண்டுவந்த அந்தத் தகவலும் சேரன் கொட்டிய போர்முரசும்!

- மகுடம் சூடுவோம்...

ஓவியங்கள்: ஸ்யாம்