Published:Updated:

‘மக்களுக்கு மட்டுமில்ல, காட்டு ஜீவராசிகளுக்கும் காவல் எல்லைக் கருப்பன் தான்!' - பரவசப்படுத்தும் வழிபாடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘மக்களுக்கு மட்டுமில்ல, காட்டு ஜீவராசிகளுக்கும் காவல் எல்லைக் கருப்பன் தான்!' - பரவசப்படுத்தும் வழிபாடு!
‘மக்களுக்கு மட்டுமில்ல, காட்டு ஜீவராசிகளுக்கும் காவல் எல்லைக் கருப்பன் தான்!' - பரவசப்படுத்தும் வழிபாடு!

‘மக்களுக்கு மட்டுமில்ல, காட்டு ஜீவராசிகளுக்கும் காவல் எல்லைக் கருப்பன் தான்!' - பரவசப்படுத்தும் வழிபாடு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"அம்பது வருசம் இருக்கும். அப்பல்லாம் ஒட்டன்சத்திரம், பாச்சலூருக்கு நடுவுல இப்ப இருக்கிற மாதிரி ரோடெல்லாம் கிடையாது. மலைப்பாதைதான். ஒட்டன்சத்திரம் சந்தைக்குப் போயிட்டு, பாச்சலூருக்குத் திரும்பி வந்துகிட்டிருந்தாரு ஒரு பெரியவர். நடுச்சாமம் ஆயிடுச்சி. அந்தப் பெரியவர காட்டு நரிங்க துரத்த ஆரம்பிச்சிடுச்சி. தலை சுமையோட மனசுல எல்லைக்கருப்பன நெனச்சிகிட்டே ஓடுனாரு. எல்லைக்கருப்பன் தான் நரிகள விரட்டி அந்தப் பெரியவர காப்பாத்தி, விட்டாரு..."

"ஒரு புதுமணத் தம்பதி கல்யாணம் முடிஞ்சு இந்த வழியா வந்துகிட்டு இருந்தாங்க. அப்போல்லாம் ஏது பஸ்சு, சைக்கிளு... கட்ட வண்டி மட்டும்தான். அவுகள நாலைஞ்சு திருடனுங்க வழி மறிச்சிட்டானுங்க. புருஷனும் பொண்டாட்டியும் பதறிட்டாக. அப்பவும் திருடனுங்கள விரட்டி அடிச்சு அந்த புதுமணத் தம்பதிகள காப்பாத்தினது,  இந்தப் பகுதிய காவல் காக்குற எல்லைக் கருப்பன் தான்" 
இப்படி எல்லைக் கருப்பண்ண சாமியைப் பற்றி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கதை இருக்கிறது. 

ஒட்டன்சத்திரத்திலிருந்து பாச்சலூர் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது வடகாடு மலைக் கிராமம். இந்தக் கிராமத்தின் எல்லையில்தான் எல்லைக் கருப்பன் குடிகொண்டு, காவல் காத்துக்கொண்டிருக்கிறான். 

'எல்லைக் காவலனாகிய இந்தக் கருப்பனை வணங்கிவிட்டுச் சென்றால் செல்லும் காரியம் எந்த வித தடங்களும் இல்லாமல் நிறைவேறும்’ என்பது இந்தப்பகுதி மக்களின் நம்பிக்கை.  இந்தச் சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மலைச் சாலையின் எல்லையைத் தொடும்போது சில நிமிடங்கள் நின்று கருப்பனை வணங்கிவிட்டு அவனது அனுமதி பெற்றே செல்கின்றன. அந்தப் பகுதியில் வரும் பேருந்துகள்கூட விதிவிலக்கில்லை. சில நிமிடங்கள் நின்று எல்லைக் கருப்பு சாமி கோயில் திருநீற்றை வாங்கிப் பூசிய பிறகே பயணிக்கின்றன. 

எல்லைக் கருப்பன் வடக்கு நோக்கி கையில் வீச்சரிவாளுடன் மரத்தடியில் அமர்ந்து காவல் காக்கிறான். கோயிலுக்கு மேற்கூரை கிடையாது. வாசலுக்குக் கதவும் கிடையாது. கருப்பனுக்கு எதிரே, சாலையின் அந்தப்பக்கத்தில் குதிரை, நாய் ஆகிய வாகனங்களும், மகாமுனிவர்களும் இருக்கிறார்கள். கருப்பனுக்குப் பின்னால் விநாயகர் மற்றும் கன்னிமார் தேவதைகளின் சந்நிதிகள் இருக்கின்றன. கருப்பனுக்கு முன்பு பக்தர்கள் இட்டுக் கொள்வதற்குத் சட்டி முழுவதும் திருநீறு எப்போதும் தயாராக இருக்கிறது. கோயில் பூசாரி கோயிலுக்குள் இருக்கும் நேரத்தை விடச் சாலையில் நின்று, பயணிகளுக்குத் திருநீறு கொடுக்கும் நேரம்தான் அதிகம். 

“இவருதான் எங்களோட எல்லைச் சாமி. நாங்க எங்க போறதா இருந்தாலும் முதல்ல கையெடுத்துக் கும்புடுற சாமி இவரு தான். எல்லைக் கருப்பனோட திருநீறு நெத்திக்கு ஏறுனா அந்த காரியம் எந்த தடங்களும் இல்லாம முடிஞ்சிடும்” என்று பக்திப் பரவசத்துடன் சொல்லியபடி கைநிறைய திருநீற்றை அள்ளிப் பூசிக்கொள்கிறார் அந்த வயதான பெண். 

கருப்பண சாமி கோயில் வழிபாடுகள் குறித்து பூசாரியிடம் பேசினோம். 

“1989-க்கு முன்னாடி கருப்பன் மண்சுதை வடிவாத்தான் இருந்தான். அதுக்கப்புறம்தான் கல்லுல செஞ்சு வெச்சாங்க. படிப்படியா கோயில் வளர்ந்துச்சு. மண்டபமெல்லாம் கட்டிட்டாக. இங்க, மூணு வேளையும் பூசை நடக்கும். கருவறைக்கு உள்ளேயே தலவிருட்சமான வீரமரம் இருக்கறதால கோயிலுக்கு மேற்கூரை கிடையாது. கதவும் கிடையாது. ராத்திரி பகல்ன்னு எந்த நேரத்துலயும் யாரு வேணும்னாலும் கருப்பனைக் கும்புட்டுக்கலாம். நல்ல காரியத்துக்குப் போறவுக, சாமிக்கு எறிதேங்கா ஒடச்சிட்டு, வண்டிச்சக்கரத்துக்கு எலுமிச்சங்கா வச்சிட்டுத்தான் போவாங்க. எந்த மதமா இருந்தாலும் சரி, பஸ் ஓட்டுற டிரைவருங்ககூட, கோவில் முன்னாடி வண்டிய நிறுத்தாம போக மாட்டாங்க. நானும் முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் திருநீறு கொடுத்திடுவேன். நான் இல்லேன்னாலும் பஸ்சுல வர்றவங்க காணிக்கைகளை ரோட்டுல போட்டுட்டு போயிருவாங்க. நான் வந்து அதையெல்லாம் எடுத்து சாமி உண்டியல்ல போட்டிருவேன்.

இங்க தினமும் விசேசம்தான். நாள் கிழமையெல்லாம் கிடையாது. கருப்பங்கிட்ட வேண்டுதல் வெச்சிட்டு போனவங்களுக்கும், பூ கேட்டுட்டு போனவங்களுக்கும் கருப்பனோட வாக்கு தவறினது இல்ல. அவங்க நெனச்சது நல்லபடியா நடந்தா, கோவிலுக்கு வந்து பொங்கல் வெச்சு கிடாயோ, சேவலோ பலிகொடுத்து சாமி கும்பிட்டுப் போவாங்க.  வருசா வருசம் சித்திரை மாசம், ஊர்மக்கள்லாம் சேர்ந்து காவடி எடுத்து கெடாவெட்டி, கொடை விழா கொண்டாடுவோம்.

இதுவரைக்கும் இந்த மலைப்பாதையில பெரியளவில எந்தவொரு அசம்பாவிதமும் நடந்தது இல்ல. இங்க இருக்கிற மக்களுக்கு மட்டும் இல்ல, வனத்துல இருக்கிற ஜீவராசிங்களுக்கும் கருப்பன் தான் காவலா இருக்கான்!” என்று பரவசத்துடன் தெரிவித்தார். 

பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து, வேண்டுதல்களை நிறைவேற்றிச் செல்கிறார்கள். சிறுகோயிலாக இது இருந்தபோதிலும், இயற்கை சூழ்ந்த ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது இந்தக் கோயில்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு