Published:Updated:

`ஆண்டாள் கோயில் பக்தர்களை முகம் சுளிக்க வைத்த நிகழ்வு' - விருதுநகர் ஆட்சியரைச் சுற்றும் சர்ச்சை!

`ஆண்டாள் கோயில் பக்தர்களை முகம் சுளிக்க வைத்த நிகழ்வு' - விருதுநகர் ஆட்சியரைச் சுற்றும் சர்ச்சை!
`ஆண்டாள் கோயில் பக்தர்களை முகம் சுளிக்க வைத்த நிகழ்வு' - விருதுநகர் ஆட்சியரைச் சுற்றும் சர்ச்சை!

ஆண்டாள் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சியர் காலணி அணிந்து கலந்துகொண்டது பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது.

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 50-வது ஆண்டு நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினரும் அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர். விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் சமபந்தி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கினார். அதன் பின்னர் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.சந்திரபிரபா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராசராசன் உள்ளிட்டோர் பங்கேற்று மக்களோடு அமர்ந்து விருந்து உட்கொண்டனர்.

புனிதமான கோயிலுக்குள் யாராக இருந்தாலும் காலணிகளை வெளியே கழற்றிவிட்டு செல்வார்களே தவிர யாரும் காலணி அணிந்து செல்வதில்லை. பக்தர்கள் கோயிலை அவ்வளவு புனிதமாக கருதுகின்றனர். இந்த விருந்து நிகழ்ச்சியின் போதும் பொதுமக்கள் யாரும் காலணி அணிந்து கோயிலுக்குள் செல்லவில்லை. எப்போதும் ஷூ அணிந்தபடியே இருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூட காலணி அணியாமலேயே கோயிலுக்குள் சென்று சமபந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஆனால் மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள்ளேயே காலணி அணிந்து வந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். பிறருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய மாவட்ட ஆட்சியரே கோயிலுக்குள் காலணி அணிந்து வந்து விருந்தில் பங்கேற்றது அங்கிருந்த பக்தர்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. ஆட்சியரின் செயலைக் கண்டு பக்தர்கள் மிகுந்த அதிருப்தியடைந்தனர்.