Published:Updated:

அன்பே தவம் - 18

அன்பே தவம் - 18
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம் - 18

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படம்: கே.ராஜசேகரன், ஓவியம்: பாலகிருஷ்ணன்

அன்பே தவம் - 18

றிவியல் அறிவு என்பது வேறு; அறிவியல் பார்வை என்பது வேறு. ஒரு மனிதன், தன் சிந்தனைக்கு, அறிவுக்கு முழு உரிமையும் கொடுத்து, அதன் அடிப்படையில் அமைந்த முடிவு எப்படிப்பட்டதாக இருந்தாலும், விருப்பு வெறுப்பின்றி அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையைப் பெற்றிருந்தால், அதை `அறிவியல் பார்வை’ என்கிறோம்.  

அன்பே தவம் - 18

தேவைகள்தாம் கண்டுபிடிப்புகளின் தாய். ஒரு பதப்படுத்தப்பட்ட தவளையின் கால்களில் கத்தியை வைத்தபோது அது, காலை உதறியது; அதிலிருந்து மின்சாரத்துக்கான கரு கிடைத்தது. தண்ணீர் கொதிக்கும் பாத்திரத்தின் மேலே இருந்த மூடி அதிர்ந்து மேலே தள்ளப்பட்டபோது, நீராவி எந்திரத்துக்கான யோசனை பிறந்தது. ஈரச் சட்டை காற்றில் உப்பியதைப் பார்த்துத்தான் பலூன் தயாரிக்கும் எண்ணம் ஏற்பட்டது. சிலந்தி வலையைப் பார்த்துத்தான் தொங்கு பாலத்துக்கான சிந்தனை உருவானது.

மாதா கோயிலின் கூண்டில் ஆடிய எரி விளக்கு, பெண்டுலம் உருவாவதற்கான விதையை விதைத்தது. மேலிருந்து கீழே விழுந்த ஆப்பிள், நியூட்டனுக்குப் புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிய உதவியது. பாம்பு வாலை வாயால் கடிப்பதுபோலக் கனவில் வந்த தோற்றம், பென்சீனுக்கான வடிவத்தைக் கண்டறியக் காரணம் ஆனது. திராட்சையை நரிகள் உண்ணாமலிருக்கத் தெளிக்கப்பட்ட துத்தநாகத் துகள்கள், போர்டோ கலவை உருவாகக் காரணமாகின. இவையெல்லாம் தேவைகளால் உருவானவை. இப்படிப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகுக்குத் தந்த விஞ்ஞானிகளுக்கும் சின்னதாகச் சறுக்கல்கள் நிகழ்வதுண்டு.

அன்பே தவம் - 18இடிதாங்கி, கிட்டப்பார்வை-தூரப்பார்வை இரண்டுக்குமான ஒரே மூக்குக்கண்ணாடி (Bifocals) எனப் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் பெஞ்சமின் பிராங்க்ளின். ஒருநாள் ஒரு கூட்டத்துக்குச் சென்றிருந்தார். மேடையில் பேசியவர்களெல்லாம் பிரெஞ்சு மொழியில் பேசினார்கள். அவருக்குப் பிரெஞ்சு மொழி தெரியாது; என்ன பேசுகிறார்கள் என்று புரிந்துகொள்ளவும் முடியவில்லை. ஒரு வரிசை தள்ளி, அவருக்கு அறிமுகமான ஓர் அம்மையார் அமர்ந்திருந்தார். அவருக்கு பிரெஞ்சு தெரியும். அந்தப் பெண்மணி கைதட்டியபோதெல்லாம் அதைப் பார்த்து, பிராங்க்ளினும் கைதட்டினார். நிகழ்ச்சி முடிந்தது. ஒரு சின்னஞ் சிறுவன் அவரருகே வந்தான். 

``என்ன தாத்தா... நிகழ்ச்சியில உங்களைப் பாராட்டிப் பேசினப்போ, மத்தவங்களைவிட நீங்க பலமா கைதட்டுனீங்க...’’ என்றான். இதைக் கேட்டு பிராங்க்ளின் வெட்கப்பட்டுப்போனார். ஒருவரைப் பார்த்து, அவரைப்போலவே செய்கிறபோது ஏற்படும் பிரச்னை இது.

தேசிய அறிவியல் தினத்தை நம் ஆதீனம், சுதேசி அறிவியல் இயக்கத்தின் மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடுகிறது. சுதேசி அறிவியல் இயக்கத்தின் இலக்கு, கிராமப்புறத்து இளம் விஞ்ஞானிகளைக் கண்டறிவது. கிராமப்புறப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தேசிய அறிவியல் தினத்தையொட்டி, அறிவியல் கண்காட்சிகளை நடத்துவோம். அங்கே இளம் விஞ்ஞானிகளைக் கண்டெடுக்கும் முயற்சியை  மேற்கொள்வோம்.

ஒருமுறை அறிவியல் கண்காட்சியில், ஓர் இளைஞன் ஒரு மாதிரிகிராமத்தை வடிவமைத்திருந்தான். அந்த கிராமத்தில் சர்வமத வழிபாட்டு மையங்கள் இருந்தன; அமைதி நிலவியது; ஒருவர் எல்லோருக்காகவும், எல்லோரும் எல்லோருக்காகவும் வாழ்கிற வாழ்க்கைமுறை இருந்தது. அதற்கு அவன் ஒரு பெயர் சூட்டியிருந்தான்... ‘கற்பனை கிராமம்’ (Utopia Village). 

அவனிடம், ``இந்த கிராமத்தில் எப்போது வாழப்போகிறாய்?’’ என்று கேட்டோம்.

``இங்கே இன்னும் நூறு ஆண்டுகள் கழித்துத்தான் வாழ முடியும்’’ என்று அவன் சொன்னான். அவனது லட்சியம், அமைதிப் பூங்காவாகத் திகழும் ஒரு கிராமம் என்றாலும், `அதை உருவாக்க நூறு ஆண்டுகள் வேண்டும்’ என்று தள்ளிவைத்தான்.

அன்றைக்கு நாம் ஆசிரியர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தோம்... `‘நம் மாணவக் கண்மணிகளுக்கு அறிவியலை, மறந்துபோன வரலாறுகளை, நம் மண்ணின் நிலவியலைக் கற்றுக் கொடுங்கள். அதோடு, `தன்னம்பிக்கை’ என்ற அற்புதமான ஆயுதத்தையும் சேர்த்துக் கொடுங்கள்.’’
 
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவுக்குச் சென்றபோது, வழியில் சீனாவின் ஹாங் காங் துறைமுகத்தில் இறங்கவேண்டி வந்தது. அங்கே பார்த்த காட்சி, அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சீனப் பெண்கள் படகு ஓட்டினார்கள். நடுக்கடலில் நிற்கும்  கப்பலை நோக்கிப் பயணிகளின் சுமைகளை ஏற்றிப்போனார்கள். ஒரு கையில் துடுப்பு; மற்றொரு கையில் சுக்கான்; முதுகில் அவர்களின் குழந்தைகள், ஊஞ்சல் கயிற்றில் ஆடுவதைப்போல் ஆடிக்கொண்டிருந்தார்கள். முதுகில் குழந்தை; மனதில் குடும்ப பாரம். விவேகானந்தர் சொன்னார்... ``சீனக் குழந்தை ஒரு வேதாந்தி.  இந்தியக் குழந்தை தவழக் கற்கும் முன்னரே, சீனக் குழந்தை நீந்தக் கற்றுக்கொண்டுவிடுகிறது.’’ 

ஜப்பானுக்குச் சென்றபோது, அந்த நாட்டின் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்டு பிரமித்துப்போன விவேகானந்தர், அங்கிருந்த ஒரு பொறியாளர் அமைத்திருந்த சுரங்கத்தைக் கண்டு, ``இந்திய இளைஞர்களே! நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஒரு குமாஸ்தா வேலைக்கான பட்டப்படிப்பை அல்லது ஆங்கில ஏகாதிபத்தியத்தின் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணி செய்வதற்குப் படிக்கிறீர்கள். உங்கள் பட்டங்களைக் கடலில் தூக்கி எறியுங்கள். இங்கே ஒரு ஜப்பானியப் பெண், ஜப்பானிய இளைஞன் கற்கும் கல்வியைப் பாருங்கள். எப்போது நீங்கள் முன்னேறப் போகிறீர்கள்?’’ என்று ஏக்கத்தோடு கேட்டார். ஓர் ஆன்மிகவாதியின் அறிவியல் பார்வை அது. 

நமது குன்றக்குடியில், கிராமத் தொழில் வளர்ச்சிப் பணிகளைக் குன்றக்குடி கிராமத் திட்டக்குழுத் தலைவர் டாக்டர். கி.பாலகிருஷ்ணன் தலைமையில் விஞ்ஞானிகள்  ஆற்றுகிறபோது, எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத தருணங்களும் இருக்கும். அவர் மனத்தளர்வு அடைகிறபோதெல்லாம் நம் குருமகாசன்னிதானம்,    ``ஆய்வுக்கூடத்தில் தனி முயற்சி வெற்றியடையும்.  ஆனால், மக்களுக்கான பணிக்களத்தில் அதை நடைமுறைப் படுத்துகிறபோது, பணிகளை ஒருங்கிணைப்பதிலும், மனித முயற்சிகளை இணைப்பதிலும்தான் வெற்றியைக் காண முடியும். அதற்குப் பொறுமை தேவை’’ என்று நம்பிக்கை ஊட்டுவார்கள். 
 
கும்பகோணம் பள்ளிக்கூடக் கூரையின் தீ விபத்து, கூரையில்லாப் பள்ளிகளைத் தமிழகத்தில் உருவாக்கியதைப்போல, ஒவ்வொரு துன்பமும் நமக்கு நன்மையையும் தரத்தான் செய்கிறது.

`டைட்டானிக்’ கப்பல் விபத்தைச் சந்தித்தபோது, அதிலிருந்தவர்கள் நீரில் மூழ்கிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் அதை ஓவியமாக வரைந்தார். அதில், ‘இயற்கையின் பலம்; மனிதனின் பலவீனம்’ என்று எழுதிவைத்தார். அதே ஓவியத்தில் கப்பல் மூழ்குகிறபோது இன்னொரு காட்சி.  உயிர் காக்கும் படகில் சில பயணிகள் ஏறுகிறார்கள். அப்போது ஒரு நிறைமாத கர்ப்பிணி வர,  பயணிகள் அந்தப் பெண்ணுக்காக வழிவிட்டு நிற்கிறார்கள்.  அந்த இடத்தில் இன்னொருவர் எழுதிவைத்தார்... ‘இயற்கையின் பலவீனம்;  மனிதனின் பலம்.’    

அன்பே தவம் - 18

சிந்துகிற கண்ணீரைத் துடைப்பதுதான் மனிதனின் பலம். துயருற்ற இதயத்துக்கு ஆறுதல் கூறுவதும், உதவி செய்வதுமே மனிதனின் பலம். இதை அறிவியல் செய்ய வேண்டும். 

2002, ஏப்ரல் 11, மாலை நேரம். குஜராத் மாநிலத்திலிருந்த `ஆனந்த்’ என்ற நகருக்குப் போனார் டாக்டர் அப்துல் கலாம். வகுப்பு மோதல்கள் காரணமாக அங்கே ஊரடங்கு உத்தரவு. மறுநாள், அங்கிருந்த `ஆனந்தாலயா’ உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியரிடம் பேசிக்கொண்டிருந்த கலாம், ``நமது பகைவன் யார்?’’ என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள். சிநேஹல் தாக்கர் என்ற சிறுமி மட்டும், ``வறுமைதான் நம் பகைவன்’’ என்றாள். அந்த பதில் அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. அவளை கௌரவப்படுத்தவும் நினைத்தார்.

`எழுச்சி தீபங்கள்’ என்ற நூலை எழுதிய கலாம், ‘நம் அனைத்துப் பிரச்னைகளின் ஆணிவேர் வறுமை.  அதைத்தான் நாம் எதிர்த்துப் போராட வேண்டும். அதைச் சொன்ன சிறுமி சிநேஹல் தாக்கருக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

கலாம், புத்தகப் பிரியர்.  சென்னை, ஐஐடி-யில் மாணவராக இருந்தபோது, அவரின் சொந்த ஊர் ராமேஸ்வரத்தைப் புயல் தாக்கியது.  அவரின் வீடும் அப்பாவின் படகும் சேதமடைந்திருந்தன. தகவலறிந்து, ஊருக்குச் செல்ல முடிவெடுத்தார். விடுதி மாணவர்.  மாதக் கடைசி.  கையில் காசில்லை. அலமாரியில் தேடிப் பார்த்தார். ஒரு கனமான புத்தகம் கிடைத்தது. விலையைப் பார்த்தார்.  ஊருக்குப் போகும் அளவுக்குக் காசு பெறும். ஆனால், அது அவரைப் பாராட்டி, முதல் பரிசாகப் பெற்ற புத்தகம். அதை எடுத்துக்கொண்டு கடைக்குப் போனார்.

``இதை விலைக்கு எடுத்துக்குவீங்களா?’’ என்று கேட்டார். 

``எதுக்கு இதை விக்கிறே?’’  

``ஊருக்குப் போகணும். ஊர்ல புயல். அப்பா, அம்மாவைப் பார்க்கணும். கையில காசில்லை. இதை வித்துத்தான் ஊருக்குப் போகணும்.’’ 
  
``சரிப்பா. இது, நீ பரிசா வாங்கினது. அதனால நான் இதை யாருக்கும் விலைக்கு விற்க மாட்டேன்.  நீ ஊருக்குப் போக எவ்வளவு பணம் வேணும்?’’
 
``அம்பது ரூபா போதும்.’’ 

``அதை உனக்குக் கடனாகத் தர்றேன். அதைத் திருப்பித் தந்துட்டு, உன் புத்தகத்தை வாங்கிக்கோ!’’

கலாம் ஊருக்குப் போனார். அப்பா, அம்மாவைப் பார்த்துவிட்டு, தன் கடனைக் கொடுத்து புத்தகத்தைத் திரும்பப் பெற்றபோதுதான் நிம்மதியானார். 

விஞ்ஞானப் பெருந்தகை வா.செ.குழந்தைசாமி, ``அறிவியல் தொழில்நுட்பம் தாய்மொழி வழியேதான் மக்களிடம் சென்று சேர முடியும்’’ என்று சொல்வார். அதற்கு அவர் ஆணித்தரமாகத் தருகிற விளக்கம் இதுதான்...  ``வளர்ந்த நாடுகளின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இயற்கை வளம்தான் காரணம் என்று சிலர் நினைக்கலாம். அப்படிப் பார்த்தால், இஸ்ரேல் ஒரு பாலைவன நாடு. அது செல்வச் செழிப்பில் கொடிகட்டிப் பறக்கிறது.’’

சிலர், `ஒரு நாட்டின் பெரிய நிலப்பரப்பு தேசத்தின் வளத்தை உயர்த்தும்’ என்று நினைப்பார்கள். சிங்கப்பூரும் ஹாங் காங்கும் ஒரு நகர அளவில் இருக்கும் நாடுகள். ஆனால், இன்று செல்வச் செழிப்பில் கொடிக்கட்டிப் பறக்கின்றன.

வேறு சிலரோ, `மனிதவளம் நாட்டின் செல்வ வளத்தை உயர்த்தும்’ என்று நினைப்பார்கள். மனிதவளம்தான் நாட்டை உயர்த்தும் என்றால், சீனாவும் இந்தியாவும்தான் செல்வவளத்தில் முதல் நாடுகளாக இருந்திருக்க வேண்டும். 

ஆக, மக்கள் பேசுகிற, எழுதுகிற மொழியில் எந்த நாடு செயல்படுகிறதோ, அதுதான் செல்வ வளத்தில் உயரும். எனவே, அறிவியல் தொழில்நுட்பம் தாய்மொழிவழியே பரவ வகை செய்திடல் வேண்டும்.

அறிவு, மனிதத்தை நோக்கியது; அன்பை நோக்கியது; மனிதகுலத்தின் விடியலை நோக்கியது. அந்த விடியலை நோக்கிப் பயணிக்க, மனிதகுலத்தின் மேன்மைக்காகப் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு நாம் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்.

- புரிவோம்...  

றிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் இரவு பகலை, தூக்கத்தை, பசியை மறந்து, மனிதகுல மேன்மைக்காக ஆய்வுக்கூடத்தில் தவம் கிடந்தார்கள். அப்படித் தவம் கிடந்தவர்களில் ஒருவர் சர்.சி.வி.ராமன். நம் மண்ணைச் சேர்ந்த மகத்தான இயற்பியல் விஞ்ஞானி.

உடல் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும், அவருடைய ஆராய்ச்சி, அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. அது, `ராமன் விளைவு’ (Raman Effect) என்ற அவருடைய ஆய்வுக்குக் கிடைத்த பரிசு. 

நோபல் பரிசு பெறுவதற்கான கடிதங்கள் அவருக்குக் கிடைப்பதற்கே அன்றைய ஆங்கில ஏகாதிபத்தியம் பல வழிகளில் முட்டுக்கட்டை போட்டுப் பார்த்தது. கடைசியில் அவர் நோபல் பரிசு பெறுவதற்கு அனுமதித்துவிட்டு, `வேறு எதைப் பற்றியும் பேசக் கூடாது. நோபல் பரிசு மட்டும் பெற்றுவர வேண்டும்’ என்று உத்தரவு போட்டது.

சி.வி.ராமன் நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார். அதோடு விடவில்லை. ``இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடும் விடுதலை வீரர்களுக்கு இந்தப் பரிசை நான் அர்ப்பணிக்கிறேன்’’ என்று தைரியமாகச் சொல்லிவிட்டு வந்தார். அதனால்தான், `ராமன் விளைவு’ ஆய்வு முடிவை அவர் வெளியிட்ட தினமான பிப்ரவரி 28-ஆம் தேதியை, அவரைப் பெருமைப்படுத்தும்விதமாக இந்தியா, ‘தேசிய அறிவியல் தின’மாக அறிவித்தது; கொண்டாடி வருகிறது.