Published:Updated:

திருநாங்கூரில் 11 கருட சேவை வைபவம்... ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருநாங்கூரில் 11 கருட சேவை வைபவம்... ஏராளமான பக்தர்கள் தரிசனம்
திருநாங்கூரில் 11 கருட சேவை வைபவம்... ஏராளமான பக்தர்கள் தரிசனம்

நாகை மாவட்டம், சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூரில் நேற்று (5.2.19) கருட சேவை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

வைணவ சம்பிரதாயத்தில் 'பெரிய திருவடி' என்று பக்தர்களால் அழைக்கப்படும் கருடாழ்வார் மீது இறைவன் எழுந்தருளும் திருக்கோலமே `கருட சேவை' எனப்படும். கருட சேவையை தரிசித்தால் பல புண்ணிய பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை. 


திருநாங்கூரைச் சுற்றி 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. இந்தத் திருத்தலத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசையைத் தொடர்ந்து கருட சேவை வைபவம் நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்துக்கான கருட சேவை நேற்று விமர்சையாக நடைபெற்றது. ஒரே நாளில் 11 திவ்ய தேசத்துப் பெருமாள்களும் எழுந்தருளி சேவை சாதிப்பதே இதன் சிறப்பாகும். 

நேற்று மதியம் 1.30 மணியளவில், திருநாங்கூரைச் சுற்றியுள்ள 11 திருக்கோயில்களிலிருந்து 11 பெருமாள் உற்சவமூர்த்திகள் திருநாங்கூரில் எழுந்தருளினர். ஸ்ரீநாராயண பெருமாள் (மணிமாடக் கோயில்),  ஸ்ரீகுடமாடு கூத்தர் (அரியமேய விண்ணகரம்), ஸ்ரீசெம்பொன்னரங்கர் (செம்பொன்செய் கோயில்), ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள் (திருத்தெற்றியம்பலம்), ஸ்ரீஅண்ணன் பெருமாள் (திருவெள்ளக்குளம்), ஸ்ரீபுருஷோத்தமப் பெருமாள் (வண் புருஷோத்தமம்), ஸ்ரீவரதராஜன் (திருமணிக்கூடம்), ஸ்ரீவைகுந்த பெருமாள் (வைகுந்த விண்ணகரம்), ஸ்ரீமாதவ பெருமாள் (திருத்தேவனார் தொகை), ஸ்ரீபார்த்தசாரதி (திருபார்த்தன்பள்ளி), ஸ்ரீகோபாலன் (திருக்காவளம்பாடி) ஆகிய பதினொரு திவ்ய தேசங்களைச் சேர்ந்த இறைமூர்த்திகளும் மணிமாடக் கோயில் உள்ள பந்தலில் எழுந்தருளினர். பிறகு திருமங்கையாழ்வார் தனது தேவியான குமுதவல்லி நாச்சியாருடன் பந்தலில் எழுந்தருளி ஒவ்வொரு பெருமாளிடம் சென்று மங்களா சாசனம் செய்தார்.

இதைத் தொடர்ந்து இரவு 11 மணியளவில் 11 பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர். திருமங்கையாழ்வார் நாச்சியாருடன் ஹம்சவாகனத்தில் எழுந்தருளினார். பின்பு வெண்குடையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெற்றது. இன்று (6.2.19) மாலை திருவெள்ளக்குளம், திருத்தேவனார்தொகை, திருவாலி ஆகிய தலங்களில் திருமங்கையாழ்வார் எழுந்தருள, திருப்பாவை, திருமஞ்சன சாற்றுமறையும் நடைபெற உள்ளன. பின்னர், ஆழ்வார் திருநகரியை அடைந்த பிறகு ஸ்ரீவயலாலி மணவாளன் கருட சேவையும், திருமங்கையாழ்வார் மங்களா சாசனமும் நடைபெறும்.