Published:Updated:

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...
பிரீமியம் ஸ்டோரி
பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

அரவிந்த் சுப்ரமண்யம்

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

அரவிந்த் சுப்ரமண்யம்

Published:Updated:
பூதநாத புராணம்! - தொடர்ச்சி...
பிரீமியம் ஸ்டோரி
பூதநாத புராணம்! - தொடர்ச்சி...
பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

வன்புலி வாகனன்!

கிஷி வதம் நிறைவேறியதும் தேவர்கள் பூமாரிப் பொழிந்து ஐயனை துதித்து வணங்கினார்கள். மணிகண்ட பிரபு அவர்களிடம் கேட்டார்: ``அரண்மனைக்கு திரும்பப்போக புலிப் பால் வேண்டாமா?’’

உடனே, இந்திரன் புலியாக மாறினான். அவனைத் தொடர்ந்து தேவர்கள் பெண் புலிகளாக மாறினார்கள். மணிகண்டன் புலியின் மீது ஏறி உட்கார்ந்துகொள்ள, அனைவரும் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டனர்.

பந்தள தேசம் புலிக்கூட்டத்தைக் கண்டு நடுநடுங்கியது. அரண்மனை அலறியது. மணிகண்டன்  அழிந்திருப்பான்  என்று  எண்ணிய அமைச்சரும், `அவரின் பேச்சைக்கேட்டு இப்படி நடந்துகொண்டோமே’ என்று அரசியும் பதறிப்போனார்கள்.

“அம்மா! உன் பொய்த் தலைவலிக்கு எத்தனை புலிகளின் பால் வேண்டும்” என்று கேட்டார் மணிகண்டன்.

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தங்களின் தவறை உணர்ந்த மந்திரியும் ராணியும் மணிகண்டனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். ராஜசேகர பாண்டியனோ உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தான். வேரற்ற மரம் போல ஐயனின் காலில் வீழ்ந்தான்.

“ஐயனே! நீர் காட்டில் கிடைத்த சாதாரணக் குழந்தை அல்ல!  சாட்சாத் தெய்வமேதான். பன்னிரெண்டு வருடங்கள் கடந்ததும் உங்களது அவதார ரகசியம் வெளிப்படும் என்று முனிவர் ஒருவர் சொன்னார். நீங்கள் யார் என்று எனக்கு உணர்த்தியருள வேண்டும்” என்று கண்ணீர்மல்க வேண்டினான்.

உடனே, பகவான் மணிகண்டன் மானசீகமாக அகத்தியரை அழைக்க,  பாண்டிய குலகுருவான அகத்தியர் அங்கே வந்தார்.

“மன்னவா! இந்தப் பாலகன், ஹரிஹர புத்திரனான சாட்சாத் தர்மசாஸ்தாவின் அவதாரம். தாரகப் ப்ரம்மமான அவனைச் சரணடைவதே உய்யும் ஒரே வழி” என்று கூறி மணிகண்டனின் அவதார ரகசியங்களை எடுத்துரைத்தார்.

பூதநாத கீதை

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

அகத்தியர் காட்டிய வழியில் ராஜசேகரனும் மணிகண்டனை சரண்புகுந்து, தனக்கு முக்தி அளிக்குமாறு வேண்டிக்கொண்டான். அப்போது, ராஜசேகர பாண்டியனுக்கு மணிகண்ட பகவான் `பூதநாத கீதை’ என்றோர் அற்புத ஞானோபதேசத்தை வழங்கினார்.

``மாயையை விலக்கினாலே ப்ரம்மத்தை அடைய முடியும்...’’ எனத் தொடங்கி, ஞானோபதேசம் வழங்கிய குருவின் குருவைப் பணிந்து போற்றினான் ராஜசேகர பாண்டியன்.

“நடந்தது அனைத்தும் என் அவதாரத்தின் ஒரு விளையாட்டு. பூதநாத கீதையின் உண்மைப்படி என்னைப் பணிந்து உலகப்பற்றை விடுத்து, பிறவிப்பிணி நீங்கி என்னை அடைவாயாக. இனி, நான் பொன்னம்பலத்துக்குத் திரும்புவேன்!” என்று அருள்பாலித்தார் மணிகண்ட பிரபு.

சபரிமலை ஆலயம்

தர்மசாஸ்தாவின் திருவடிகளில் விழுந்து வணங்கிய மன்னன் “ஐயனே! இப்படி ஒரே முடிவாக எங்களை நீங்கிச் செல்லலாகாது. உங்கள் பிரிவை எங்களால் தாங்க இயலாது. நீங்கள் என்னையும் உலகத்தோரையும் ஆட்கொள்ளும் வகையில், உங்களுக்காக ஓர் ஆலயம் அமைக்க எண்ணுகிறேன். நீங்கள் அக்கோயிலில் எழுந்தருளி, காலமெல்லாம் எங்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டான்.

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

அதனால் மனம் மகிழ்ந்த மணிகண்டன் “பூபாலனே! நான் பூலோகத்துக்கு வந்திறங்கிய பம்பையாற்றின் அருகில் மகா யோக பீடமான சபரி பர்வதத்தின் மேல் எனக்கோர் ஆலயம் அமைப்பாயாக. அங்கே, கலியுக மக்களுக்காக நான் நைஷ்டீக ப்ரம்மசர்ய யோகத்தில் ஆழ்ந்து தவம் புரிவேன்’’ என்றதுடன், ஆலயம் அமைக்கும் வழிமுறைகளையும் கூறினார்.

‘‘சபர குலத்தில் உதித்த என் பக்தையான யோகினி வசித்த காரணத்தால் இம்மலைக்குச் சபரிமலை என்ற பெயர் உண்டா னது. பக்தர்கள், ப்ரம்மசார்யாதி விரதங்களை ஒரு மண்டல காலம் அனுஷ்டித்து என்னைக் காண வரவேண்டும். அப்போது, மகிஷிமாரிகா வனத்தில் காவலிருக்கும், என் உயிர் போன்ற அங்கரக்ஷகனான என் பூதப்படை நாயகன் வாபுரனை வணங்கி விட்டு, எனது பூங்காவனமான காட்டுக்குள் வருதல் வேண்டும்.

“வரப்போகும் காலங்களில் என் ஆலயமே மகா க்ஷேத்திரமாக கலியுக மக்களுக்கு விளங்கும். சபரிமலையே இனி காசிக்குச் சமமாக விளங்கும். பம்பையே கங்கைக்குச் சமமாகும். நானே விச்வநாதனாகி நிற்பேன். என் ஆலயத்தின் அருகேயிருக்கும் மஞ்சாம்பிகையே அன்னபூரணி ஆவாள். கடுசப்தனே பைரவன் ஆவான்” என்று அருள்பாலித்த ஐயன், “உன் குலகுருவான அகத்தியர் மற்ற விபரங்களைக் கூறுவார். என்னருள் என்றும் உனக்கும் உன் வம்சத்துக்கும் உண்டு” என்று ஆசி கூறி மறைந்தார்.

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

ஐயன் அருளியபடியே,  ராஜசேகரபாண்டியனும் மற்றவர்களும் ஆலயத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில், ராஜசேகரனுக்கு மணிகண்டனைக் காண வேண்டும் என்ற தாபம் மேலிட்டது. அதன்பொருட்டு, சரம்குற்றி ஆல் மரத்தின் கீழ் தியானித்துக்கொண்டிருந்த அரசனின் முன்,  பிரகாசமான ஒளி தோன்ற, சல்லடங்களின் ஓசையும் கேட்டது.

ஆம்! பூதகணத் தலைவனான வாபுரன் மன்னன் முன் தோன்றினான். “பாண்டியகுல திலகனே நீ புண்ணிய புருஷன். பொன்னம்பலத்தில் ஜோதி ரூபனாக அமர்ந்திருக்கும் ஐயன் அந்த இடத்தில் உனக்கு தரிசனம் தரும்பொருட்டு, உன்னை அழைத்துவரும்படி கட்டளையிட்டிருக்கிறார். ஆகவே, ஊனக் கண்களை மூடிக்கொண்டு, ஞானக்கண்களை திறந்துவைத்துக் கொண்டு, என் தோள்களில் அமர்வாய்’’ என்றான்.

அப்படியே, பூதகணத்தின் மீதேறிய மன்னவன் நொடிப்பொழுதில் பொன்னம்பலத்தை அடைந்தான். அங்கே, பலவிதமான வாசல்களைக் கடந்து, ஐயன் சந்நிதிக்கு வந்தான் ராஜசேகரன். முனிவரும் அமரரும் ஏகாந்தமாய் தொழும் பொன்னம்பலத்தில், கம்பீரமாக வீற்றிருந்தார் ஐயன். எட்டாப்பொருள் கிட்டியது போல மெய்சிலிர்த்து கண்ணீர் பெருகிய மன்னன் ஓடோடிச் சென்று ஐயன் காலடியைத் தழுவிக்கொண்டான்.

“தேவருக்கும் மூவருக்கும் கிடைக்காத பாக்கியம் உன் தவப் பயனால் உனக்குக் கிட்டியது. எஞ்சியிருக்கும் உன்னுடைய கடமைகளை முடித்துவிட்டு என்னை வந்தடைவாய். நீ வேண்டிக்கொண்டபடியே நீ உருவாக்கும் ஆலயத்தில் தவக்கோலத்தில் என் உருவை பிரதிஷ்டை செய்வாய். அதற்கு வேண்டிய விக்கிரகம் உரிய காலத்தில் உன்னை வந்துசேரும். அங்கே குடிகொண்டு உன்னையும், உன் வம்சத்தவரையும், ஏனைய பக்தர்களையும் காப்பது என் கடமை.

பிரதிஷ்டையை நடத்த அகத்தியனும் பரசுராமனும் வருவார்கள். கோயிலை உருவாக்கும் நேரத்தில் உனக்குச் சிற்சில இன்னல்கள் உண்டாகும். அவற்றை வெல்ல என் ஆசிகள் உனக்கு உண்டு” என்று கூறி ஒரு க்ஷூரிகையை (வாள்) அவனிடம் அளித்தார்.

பின்னர் அவரது ஆணைப்படி, மன்னவனைச் சபரி மலைச் சாரலில் கொண்டு சேர்த்தான் வாபுரன். விரைவிலேயே ஆலயப் பணி துவங்கியது.

பரசுராமனும் அகத்தியரும்

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

ஐயன் சொன்னபடியே இடையூறும் வந்துசேர்ந்தது மானுடன் ஒருவன் உருவாக்கிய இந்தக் கோயிலுக்குள் ஐயன் வந்து எழுந்தருள்வதா என எண்ணிய தேவேந்திரன் ராஜசேகரனைப் போருக்கு அழைத்தான். அதன்பொருட்டு சண்டையிட வந்த ராஜசேகரன் மீது வஜ்ராயுதத்தை ஏவினான். உடனே, ஐயனை மனதால் சரணடைந்த ராஜசேகரன், அவர் அளித்த க்ஷூரிகை ஆயுதத்தை இந்திரன் மீது ஏவினான்.

அந்த ஆயுதம் தேவேந்திரனை விரட்டத் தொடங்கியது. எங்கு சென்றும் தப்பிக்க முடியாத தேவேந்திரன், நிறைவில் ராஜ சேகரனிடமே சரணடைந்தான்; காப்பாற்றப்பட்டான். பின்னர், தனது செயலுக்காக வருந்திய தேவேந்திரன், ‘`மன்னா! உனது பக்தியின் மகிமை தெரியாமல் பிழை செய்துவிட்டேன். பொறுத்தருள்வாய். இனி, எந்தத் தடையும் இல்லாமல் ஆலயப் பணி நிறைவடையும். விஸ்வகர்மாவையும் உனக்குத் துணையாக அனுப்புகிறேன். மகர ஸங்க்ரமத்தன்று பூர்ண சாந்நித்தியத்துடன் பகவான் இங்கு எழுந்தருளுவார்” என்று வாழ்த்தி விடைபெற்றான்.

பின்னர் அனைத்தும் இனிதே நடந்தேறின. கோயில்பணிகள் தொடர்ந்தன, பதினெட்டாம்ப் படி, நீர்நிலைகள் ஏற்படுத்தப்பட்டன. இந்நிலையில் ராஜசேகரனுக்கு, ‘ஐயன் விரும்பியபடியே அவரின் விக்கிரகத்தை  அமைக்கவேண்டுமே’ என்ற கவலை உண்டானது.

அன்றிரவு அவன் கனவில் பரசுராமன் தோன்றினார். ‘நான் கேரள க்ஷேத்திரத்தை உருவாக்கியபோது ஐயன் எனக்களித்த வரத்தின்படி, இந்தப் பூவுலகில் பதினெண் தலங்களில் அவர் கோயில்கொள்வார். அவை அனைத்துக்கும் தலைமை பீடமாக சபரிமலை திகழும். இந்தக் கோயிலில் யோக மூர்த்தியாக அவரைப் பிரதிஷ்டை செய்வாயாக. அன்றைய தினம் நானும் அகத்தியரும் வருவோம்’ என்று அருளினார். அதன்படியே சகலமும் நடைபெற்றன. சனிக்கிழமையும், கிருஷ்ணபட்சத்து பஞ்சமியும், உத்திரநட்சத்திரமும்கூடிய சுப வேளையில், பரசுராமரும், அகத்தியரும் வந்து பிரதிஷ்டை நடத்த, மகர ஸங்க்ரமம் உதிக்க பகவான் தர்மசாஸ்தாவின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருக்கோயிலுக்கான பூஜை வழிமுறைகளை பரசுராமர் அருள, அகத்தியர் கோயிலுக்கு வருவோர் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகளை அருளி, தாமே முதல் பூஜையை நடத்தினார். ஐயனின் திருவடி தியானத்திலேயே காலம் கழித்தான் மன்னன். ஒருநாள் ஓர் அசரீரி ஒலித்தது.

"ராஜசேகரனே! பிறவிப்பயனை அடைந்தாய். உனக்கும் உன் வம்சத்துக்கும் என் அருளும் ஆசியும் உண்டு. ஆலயத்தின் பூஜைகளை முறையாக நடத்துங்கள்.  இனி, வருடம்தோறும் உன் பரம்பரையைச் சேர்ந்தோர், எனக்கான திருவாபரணங்களுடன் வந்து என்னை தரிசிக்கட்டும்.  என்னைக் காண வரும் பக்தர்களின் ஆனந்தத்துக்காக. நான், இனி இங்கு நிலையாக இருந்து என் அன்பர்களை அனுக்கிரகிப்பேன்!’’

மன்னன் பேருவகை அடைந்தான். பந்தளம் சென்று பொறுப்புகளைத் தன் மகனிடம் ஒப்படைத்துத் திரும்பியவன், அதன் பிறகு ஐயனையே தியானித்து அவருள் ஐக்கியமானார்.

(நிறைவுற்றது)

ஐயன் அருளிய பூதநாத கீதை!

* நான் குணங்களுக்கு அப்பாற்பட்டவன். அப்படி என்னை அறிபவன் ஜீவன் முக்தனாகிறான். ஸகுணமாக என்னை ஆராதிப்பவன் என் லோகத்தை அடைகிறான். ஆனால் குருவின் துணயால் மட்டுமே என்னை அறிய முடியும்.

* ஜகதீச்வரன், ஜீவர்கள் சேர்த்து வைத்துள்ள கர்மாவின் அடிப்படையில் பிறவிகளை அருளுகிறார். ஆயின் ப்ரம்மத்தை உணரும் வாய்ப்பு மானிட ஜன்மத்துக்கு மட்டுமே உண்டு.

* ஸத்குருவை அடைந்து, மனத்தை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அப்போதே மாயை அகன்று சஞ்சலமில்லாத மனம் உருவாகிறது.

* கர்மாவாலேயே மீண்டும் மீண்டும் பிறவி உண்டாகிறது. மனம் எப்போது இறைவனுடன் லயிக்கிறதோ அப்போது தான் கர்மாவும், பிறவிகளும் முடிவுக்கு வரும் இது பக்தி இருந்தால் மட்டுமே முடியும்.

* பக்தியால் மட்டுமே என்னை நெருங்க முடியும். உத்தம பக்தர்களின் இதயத்தில் நான் குடி கொள்கிறேன். மத்தியம பக்தர்களுக்கு அவரவர் கர்மக்கணக்கை தீர்த்து பின்னர் வீடுபேற்றினை அளிக்கிறேன். அதம பக்தர்கள் கோரும் நியாயமான எல்லா கோரிக்கைகளையும் அளிக்கிறேன்.

* ஒருவனது மனம் ப்ரம்மத்தில் லயித்திருக்கும் போதும் அவனால் எந்த பாதிப்பும் இல்லாமல் உலகியல் வாழ்வில் ஈடுபட முடியும். உலகில் அனைத்தும் மாயை தான் என்ற உண்மையை உணர்ந்தவன் எதனாலும் பாதிக்கப்பட மாட்டான்.

* என்ன சாஸ்திரங்களை கற்றாலும், சிந்தித்தாலும், நற்செயல்களைச் செய்ய முடியாத மனத்தால் ப்ரம்மத்தை நெருங்கக் கூட முடியாது. எல்லா தர்மங்களையும் விட்டு, எல்லாமுமான என்னை நினை! உன் ஸகல துக்கங்களையும் நீக்கி மோக்ஷத்தை நான் தருவேன்.

பூதநாத புராணத்தைப் படிப்பதால்...

பூதநாத புராணம்! - தொடர்ச்சி...

தாரகப்பிரம்மமாம் தர்மசாஸ்தாவின் இந்தத் திவ்விய சரிதத்தைப் படிப்பவர்களும் கேட்பவர்களும் பெரும் பாக்கியம் பெற்றவர்கள். அவர்களுக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்; நினைத்தது நிறைவேறும். அவர்களுக்குப் பக்தியும் முக்தியும் அருள்வார் பூதநாதன்.

படங்கள்: சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism