Published:Updated:

பசுக்களின் பிணிகள் நீங்கும் அதிசயம்!

பசுக்களின் பிணிகள் நீங்கும் அதிசயம்!
பிரீமியம் ஸ்டோரி
பசுக்களின் பிணிகள் நீங்கும் அதிசயம்!

திருக்கொழம்பியம் கோகர்ணேஸ்வரர் திருக்கோயில்படங்கள்: ஜி.சதிஷ்குமார்

பசுக்களின் பிணிகள் நீங்கும் அதிசயம்!

திருக்கொழம்பியம் கோகர்ணேஸ்வரர் திருக்கோயில்படங்கள்: ஜி.சதிஷ்குமார்

Published:Updated:
பசுக்களின் பிணிகள் நீங்கும் அதிசயம்!
பிரீமியம் ஸ்டோரி
பசுக்களின் பிணிகள் நீங்கும் அதிசயம்!

திருக்கயிலையில் ஒருநாள் சிவபெருமானும் பார்வதிதேவியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆட்டத்தில் தொடர்ந்து தேவியே வெற்றி பெற்று வந்தாள். அம்பிகையின் வெற்றியைக் காரணமாகக் கொண்டு, மண்ணுலக மாந்தர்தம் நலனுக்காக ஓர் அருளாடல் நிகழ்த்த விரும்பினார் சிவபெருமான்.

பசுக்களின் பிணிகள் நீங்கும் அதிசயம்!

அதன்படி, தேவியின் தொடர் வெற்றியைக் கண்டு சினம்கொண்டவர் போல் நடித்து, ‘`தேவி, கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். அப்போதுதான் வாழ்க்கை இன்பமாக இருக்கும். ஆனால், ஆட்டமே ஆனாலும் ஒருமுறைகூட எனக்கு விட்டுக்கொடுக்காமல், நீயே வெற்றி பெற்று வருகிறாய். எனவே, நீ பூமியில் பசுவாக மாறக்கடவது’’ என்று சபித்துவிட்டார்.

ஐயனின் திருவுள்ளத்தை அம்பிகை அறியமாட்டாளா என்ன?!

அவளுமே மண்ணுலகுக்கு வந்து தன் குழந்தைகளைக் காணவும் அவர்களுக்கு அருள்புரியவும் திருவுள்ளம் கொண்டாள். எனவே, ஐயனின் சாபத்தை ஏற்று, பசுவாக மாறி பூமிக்கு வந்து சேர்ந்தாள். பல தலங்களுக்கும் சென்று ஈசனை வழிபட்ட அம்பிகை, நிறைவாக திருக் கொழம்பியம் என்று அழைக்கப்படும் தலத்துக்கு வந்து சேர்ந்தாள்.  அனுதினமும் அங்கிருந்த பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு வந்தாள். பசு வடிவில் இருந்த அம்பிகைக்குச் சாப விமோசனம் அருளத் திருவுள்ளம் கொண்டார் ஈசன்.

ஒருநாள், சிவபெருமானை வழிபடச் சென்றபோது, பசுவின் குளம்படி சிவலிங்கத்தின் மீது பட்டுவிட்டது. அம்பிகையின் ஸ்பரிசம் பட்டதும், நெகிழ்ந்துபோன சிவபெருமான், சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்டு அம்பிகைக்கு தரிசனமும் சாப விமோசனமும் அருளினார். சிவலிங்கத் திருமேனியின் பாணப் பகுதியில் பசுவின் குளம்படி பதிந்திருப்பதை இன்றும் நாம் தரிசிக்கலாம். இதையொட்டி, இங்குள்ள சிவபெருமான் கொளம்பநாதர் என்றும், ஊர் திருக்கொளம்பியம் என்றும் அழைக்கப்பட்டது. திருக்கொளம்பியம் என்ற பெயரே மருவி, தற்போது திருக்கொழம்பியம் என்று அழைக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பசுக்களின் பிணிகள் நீங்கும் அதிசயம்!

கொளம்பநாதருக்கு அருள்மிகு கோகர்ணேஸ்வரர் என்ற திருப்பெயரும் உண்டு; அருள்மிகு சௌந்தரநாயகி சமேதராகக் காட்சி அருள்கிறார். சாபத்தின் காரணமாக குயிலாக மாறித் திரிந்த கந்தர்வன் ஒருவனுக்குச் சாப விமோசனம் அளித்ததால், கோகிலேஸ்வரர் என்றொரு பெயரும் இந்த ஸ்வாமிக்கு உண்டு.

இந்தத் தலத்திலுள்ள தீர்த்தத்தின் பெயர்  பிரம்ம தீர்த்தம். தாழம்பூவைச் சாட்சியாக வைத்து, ஈசனின் திருமுடியை தரிசித்ததாகப் பொய் சொன்ன பிரம்மதேவர், ஈசனின் கோபத்துக்கும் அதன் விளைவான சாபத்துக்கும் ஆளான திருக்கதையை அறிவோம். அவ்வாறு சாபம் பெற்ற பிரம்மன், இந்தத் தலத்துக்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி அதில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.

வெண்குஷ்டம் நீக்கிய கோகணேஸ்வரர்

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற இந்தத் தலத்துக்கு, ராஜராஜ சோழன், செம்பியன் மாதேவி போன்றோர் திருப்பணிகள் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. புராதனச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட இந்தத் திருக்கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. காலப்போக்கில் கோயிலில் நித்திய பூஜைகள் மற்றும் விழாக்கள் நடைபெறுவது தடைப் பட்டுப்போயின. தற்போது, திருவாவடுதுறை ஆதீனகர்த்தர், மகாலிங்கம் என்பவரை நித்திய பூஜைகள் செய்யப் பணித்திருக்கிறார்.

மகாலிங்கத்திடம் கோயிலின் சிறப்புகள் குறித்துக் கேட்டோம்.

“இறைவன் அருளால், குருமகாசன்னிதானம் கட்டளைப்படி, தினந்தோறும் ஒரு கால பூஜை செய்து வருகிறேன். ஈசனுக்குத் தொண்டு செய்வதை எனது பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தக் கோயிலின் வரலாறு, மாந்தை, தேரழுந்தூர், திருவாவடுதுறை, குத்தாலம், திருவேள்விக்குடி, எதிர்கொள்பாடி,  திருமணஞ்சேரி,  குணதலப்பாடி என 9 கோயில்களுடன் தொடர்புடையது.

பசுக்களின் பிணிகள் நீங்கும் அதிசயம்!

இக்கோயிலின் தலவிருட்சம் மல்லிகை. இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, மல்லிகை மலரைக் கொண்டு ஈசனை அர்ச்சித்து வழிபட்டு, செம்பியன்மாதேவி வெண்குஷ்ட நோய் நீங்கப் பெற்றார் என்பது வரலாறு. முருகனுக்கு வேல்  கொடுத்த திருத்தலம் இது என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. எனவே, இங்கு ஆடிக் கிருத்திகையில் காவடி எடுத்து வழிபடுவது, ரொம்ப விசேஷமானதாகும். திருமண பாக்கியம், குழந்தைப் பேறு முதலாக, வேண்டும் வரங்களை வேண்டியபடி வாரிவழங்கும் அற்புதத் தலம் இது. இங்குள்ள ஈசன்பால் பெரும்பக்திகொண்ட, திருவாவடுதுறை குருமகாசன்னிதானம் அடிக்கடி வந்து தரிசனம் செய்கிறார். ஏராளமான பக்தர்களும் வந்து ஈசனை வழிபடுகிறார்கள்’’ என்றார்.

பசுக்களின் நோய் தீர்க்கும் தலம்...

பசுவாகி வந்து ஈசனை வழிபட்டு அம்பிகை விமோசனம் பெற்ற இந்தத் தலம், பசுக்களின் இனத்துக்கே நோய் தீர்க்கும் தலமாகத் திகழ்கிறது.

ஈசனுக்கு எதிரில் உள்ள நந்திதேவரின் திருமுன், ஒரு குவளை தண்ணீரும் அறுகம்புல்லும் வைத்து, அர்ச்சனை செய்து மனமுருக வேண்டிக்கொள்ளவேண்டும். பிறகு புல்லையும் தண்ணீரையும் நோய்த் தாக்கியுள்ள பசுவுக்குக் கொடுத்தால், எத்தகைய நோயாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

எப்படிச் செல்வது?:  மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் (ரயில் அல்லது பேருந்து மார்க்கத்தில்) ஆடுதுறை நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். இந்த நிறுத்தத்திலிருந்து தெற்கே சுமார் 8 கி.மீ.தொலைவில் உள்ள திருக்கொழம்பியம் கோயிலுக்குச் செல்ல மினி பஸ் மற்றும் ஆட்டோ வசதியுண்டு.

-எம்.ராகவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism