மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்?

வழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்?
பிரீமியம் ஸ்டோரி
News
வழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்?

வழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்?

வழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்?

? மனிதர்களுக்குப் பயன் தரும் பல மிருகங்கள் உள்ளன. ஆனால்,  வழிபாடுகளில் நாம் பசுக்களுக்கு மட்டும் சிறப்பிடம் தருகிறோமே ஏன்?

-எம்.ராம்சுந்தர், சென்னை-26

இந்த உலகத்தில், பல பொருள்கள் கடைகளில் விற்பனை செய்யப் படுகின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் வேறு வேறு விலையை வைத்து விற்பதையும் நாம் அறிவோம். இதிலிருந்து அனைத்து பொருள்களும் ஒன்றல்ல என்பதும் ஒவ்வொன்றும் ஒரு தன்மை, ஒரு குணம் உடையது என்பதும் நமக்குத் தெரியவருகிறது. பொருள்களின் தன்மை நம்முடைய பயன்பாட்டின்படி வேறுபட்டு இருக்கிறது.

அதேபோல் மிருகங்கள் பல இருந்தாலும், ‘கோமாதா’ என்று நாம் அழைக்கும் பசு, புனிதத்துவம் நிறைந்ததாகப் போற்றப்படுகிறது.

வழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்?

ஒரு தாய் தன் குழந்தையைப் பாலூட்டி வளர்க்கிறாள். ஆனால், பசுவோ உலகத்திலுள்ள பல உயிர்களுக்கும் பால் வழங்கிக் காப்பாற்றி வருகிறது. ‘கவாம் அங்கேஷு திஷ்டந்தி புவனானி சதுர்தச’ என்றபடி பசுவின் அங்கங்களில் சூட்சும வடிவில் ஈரேழு பதினான்கு உலகங்கள் உள்ளன என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

‘கோ ப்ராஹ்மனேப்யோ சுபம் அஸ்து நித்யம் லோகா: ஸமஸ்தா: சுகினோபவந்து' என்று பசுவும் அந்தணரும் மகிழ்ச்சியாக இருந்தால், உலகில் உள்ள அனைவரும் சுகத்தை அடைகின்றனர் என்பதும் சாஸ்திரங்களின் கூற்று.

பசுவிடமிருந்து  கிடைக்கும் பால், கோசாணம், கோஜலம் போன்ற அனைத்தும் புனிதமானவை. நிறைய மருத்துவ குணம் உடையவை. பாலில் இருந்தே தயிர், வெண்ணெய், நெய் என மனிதகுலத்துக்கு வேண்டிய அனைத்தும் கிடைக்கின்றன.

ஒரு பசு இருக்கும் இடத்தில்  வியாதிகள் வருவது பெருமளவு தடுக்கப்படும்.

இப்படி இன்னும் பல காரணங்களை நாம் சொல்லலாம். இவை அனைத்துக்கும் மேலாக,  நமக்கு அன்றாடம் கிடைக்கும் உணவுக்குக் காரணமாக விளங்கும் விவசாயிகளின் உற்ற நண்பனாக விளங்கி, அவனுக்கு  உதவி செய்வது பசு இனமே. இப்படி வேதங்களிலும், ஆகமங் களிலும், புராணங்களிலும் மிகவும் உயர்வாகப் போற்றப்படும் பசு, நமது அன்றாட வாழ்விலும் தாய் போன்ற அன்பை அளித்து வருவதால், பசுவைப் பாதுகாப்பதும் பூஜிப்பதும் நமது கடமை ஆகும்.

? கோயிலில் பிராகாரம் சுற்றி வரும்போது, சிலர் கர்ப்பக்கிரகத்தின் பின்பக்கம் நின்று வணங்கு கிறார்களே, இது சரியா?

-உ.கோமதி சங்கர், திருநெல்வேலி

ஆலயங்களில் எப்படி வழிபடவேண்டும், எப்படி வழிபடக்கூடாது என்று ஆகமங்கள் விளக்கியுள்ளன. செய்யவேண்டியவற்றைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும்; செய்யக் கூடாதவற்றை கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும். இவை இரண்டையும் முறைப்படிக் கடைப் பிடிக்கவில்லை என்றால், கோயில் வழிபாட்டினால் ஒரு பலனும் இல்லை.

ஆனால், பக்தர்கள் என்று வரும்போது, அது அவர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் ஆகிவிடுகிறது. இன்ன இடத்தில் இன்ன முறையில் பூரண நம்பிக்கையுடன் வழிபட்டால், தங்களின் விருப்பம் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் அவர்கள் அவ்வாறு செய்வது ஏற்கத்தக்கதே.  ஆனால் அவர்கள் அப்படிச் செய்வது, மற்ற பக்தர்களின் பூஜை, வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் இருக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

? சமீபத்தில் சென்னையில் ஒரு சிவன் கோயிலுக் குச் சென்றிருந்தபோது, பிராகாரம் முழுக்க பூனைகள் நடமாடிக்கொண்டிருந்தன. கோயிலில் பூனை வளர்ப்பது சரியா?

- எம்.சங்கரலிங்கம், பாளையங்கோட்டை

பூனைகள் போன்றவற்றை ஆலயங்களில் வளர்ப்பது கூடாது. அதேநேரம், அவை வெளியி லிருந்து வந்தால், அவற்றை வரவிடாமல் செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இதுபோன்ற பிராணிகளை ஆலயங்களில் வளர்ப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

ஆலயம் என்பது பொதுவான இடம்தானே? அப்படியிருக்க, அங்கு அனைத்து ஜீவராசிகளும் வருவதில் என்ன தவறு என்று சிலர் விதண்டா வாதம் செய்யலாம். அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை ஏற்படவேண்டும் என்று பூஜை, வழிபாடுகள் செய்யக்கூடிய புனிதத் தலங்களாக விளங்குபவையே ஆலயங்கள்.

நாம் நம் வீடுகளில் மின்சாரத்தை உபயோகிக் கிறோம். ஆனால், மின்சாரம் உற்பத்தியாகும் இடத்துக்குச் செல்ல நமக்கு அனுமதி இல்லை. அதேபோல், ஆலயங்களில் செய்யக்கூடிய பூஜைகள் அனைத்தும் உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளின் நன்மைக்காக இருந்தாலும், அங்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அந்தக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால்தான், கோயில்களில் தெய்வ சாந்நித்தியம் நிலைத் திருக்கும். எனவே, விதிகளில் தளர்வு கூடாது.

? நம்மைப் படைத்த இறைவனுக்குப் பூஜை, வழிபாடுகள் செய்கிறோம். ஆனாலும், நவகிரகங் களுக்குப் ப்ரீதியாக தனியே பிராயச்சித்தங்கள் செய்வது ஏன்?

-சிவசைலம், சென்னை-18

வழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்?

ஓர் அரசன், தன் மக்களைக் காப்பாற்றி, அவர்கள் எந்தக் குறையும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக, மந்திரிகளையும், அதிகாரிகளையும் நியமித்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்கிறார். அதேபோல்தான், எல்லாம்வல்ல இறைவன், நம்முடைய முன்வினைகளுக்கு ஏற்ப நம்மைச் சுக-துக்கங்களை அனுபவிக்கவைத்து, வினைகளைப் போக்கிக்கொள்ள ஏதுவாக நவ கிரகங்களைப் படைத்திருக்கிறார்.

ஒரு தாய், தன் குழந்தைக்கு உடல் நலம் குன்றினால், கஷாயம் போன்ற மருந்துகளைக் கொடுத்து, குழந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படச் செய்கிறாள். அதேபோல், நமக்குப் பலவித போகங்களை அளித்து, இந்தப் பிறவியி லேயே நம்முடைய கர்மபலனை அனுபவிக்கச் செய்கிறார் இறைவன். இதை விடவும் நம்முடைய வளர்ச்சிக்கு வேறு என்ன வேண்டும்?

ஒரு மனிதன் எப்போது இந்தப் பூமியில்  பிறக்கிறாரோ, அப்போது இருக்கும் நட்சத்திரத் துடன் அவர் சம்பந்தப்பட்டுவிடுகிறார். சூரியன் நாயகராக விளங்கி, மற்ற கிரகங்களுடன் இணைந்து அளிக்கக்கூடிய பலாபலன்களை, அந்த ஜாதகர் அனுபவித்தே ஆகவேண்டும். நம் பூர்வ ஜன்ம வினைப்பயனாக நாம் அனுபவிக்கக் கூடிய பலாபலன்கள், நமக்குக் கஷ்டத்தைத் தருவதாக இருந்தால், அந்தக் கஷ்டத்திலிருந்து நாம் ஓரளவு நிவாரணம் பெறவே நவகிரகங்களை வழிபடுவ துடன், நவகிரக ப்ரீதியும் செய்துகொள்கிறோம்.

கொட்டும் மழையைத் தடுத்து நிறுத்துவது இயலாது. ஆனால், மழையில் நனையாமல் நம்மைக் காத்துக்கொள்ள குடை போன்ற சாதனங்கள் உதவுவதுபோல், நவகிரக வழிபாடுகள் நமக்கு உதவிசெய்யும். அவ்வாறு, நவகிரகங்களின் தாக்கத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள அவர்களை வழிபடுவதுடன் நின்றுவிடாமல், நல்லொழுக்கத்துடன் வாழவும் முயற்சி செய்ய வேண்டும். இறைவனிடமும் பரிபூரணச் சரணாகதி அடைந்துவிடவேண்டும்.

நவகிரக வழிபாடுகள் உயர்ந்த தத்துவங்களைக் கொண்டிருப்பதுடன், நமக்குப் பயன் தரும் வகையிலும் அமைந்திருப்பதை, நாம் அனுபவப் பூர்வமாக அறிந்திருக்கிறோம். ஆகவே, நவகிரகங்களுக்குச் செய்யக்கூடிய பிராயச்சித்த கர்மாக்களும், இறைவனால் அளிக்கப்பட்டவையே என்று அறிந்து அவற்றை உரிய முறைப்படி செய்து வருவது, ஏற்றுக்கொள்ளத் தக்கதுதான்.

? ஊதுவத்தி, சாம்பிராணி போன்றவற்றின் வாசனைப் புகையை வழிபாடுகளில் பயன்படுத்துவது ஏன்?

-ஆர்.பிரபாவதி, சென்னை - 26

கடவுளை வழிபட்டு அவருடைய அருளைப் பெறுவதற்குப் பல வழிமுறைகளை நம் ரிஷிகள் அருளியுள்ளனர். தூபம், தீபம், நைவேத்தியம் பொதுவான உபசாரங்கள். பதினாறு உபசாரங் களை ஷோடசோபசாரம் என்று கூறுவர்.

மற்றவர்களைத் தொடர்புகொண்டு பேசு வதற்கு செல்போன் பயன்படுவதைப் போல், இறைவனுடன் நாம் தொடர்பு கொண்டு அவரது அனுக்கிரகத்தைப் பெறுவதற்கு, இந்த உபசாரங்கள் உயர்ந்த கிரியைகளாக விளங்குகின்றன. நறுமணம் என்பது நாசியின் மூலமாக நம்முடைய மனதை ஒருமுகப்படுத்துகிறது. பூஜையில் மனம் ஒருமைப் பட உதவுகிறது. வாசனை என்பது நம்முடைய கர்மவினைகளையும் குறிப்பதாகும். கடவுளுக்குச் சாம்பிராணி, அகில் போன்ற வாசனை பரப்பும் பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய வினைகள் களையப்பட்டு, நாம் இறை வனின் திருவருளைப் பெற முடிகிறது. மேலும் தூபமானது தெய்வ சாந்நித்யத்தை அதிகரிக்கச் செய்வதாகவும் விளங்குகிறது.

இறைவனின் அருளைப் பெறவேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்டு, நம்முடைய வழிபாடுகள் அனைத்தையும் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் செய்யவேண்டும்.

- பதில்கள் தொடரும்...

 `காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ  சண்முக சிவாசார்யர்

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்'  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002