Published:Updated:

அழைத்தால் வருவேன்... அற்புதங்கள் நிகழ்த்துவேன்! - மந்த்ராலய மகான்

காலச் சுழலிலிருந்து காக்கும் கருணை யானை - குரு ராகவேந்திரர்

அழைத்தால் வருவேன்... அற்புதங்கள் நிகழ்த்துவேன்! - மந்த்ராலய மகான்
அழைத்தால் வருவேன்... அற்புதங்கள் நிகழ்த்துவேன்! - மந்த்ராலய மகான்

துங்கபத்ரா நதி எத்தனை புனிதமானதாகவும் தன்னில் நீராடுபவர்களுக்கு அளவற்ற புண்ணியம் சேர்ப்பதாகவும் திகழ்கிறது! கலியுகத்தின் துன்பங்கள் எல்லாம் தீர்க்கும் கற்பக விருட்சமாகப் போற்றி வணங்கப்படும் ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனம் கண்ட புண்ணிய பூமியைத் தழுவியபடிச் செல்வதால்தான் துங்கபத்ரா நதிக்கு அத்தகைய புனிதம் சேர்ந்தது போலும்!

நாளும் தன்னில் நீராடும் பக்தர்கள், ஸ்ரீராகவேந்திரரின் அருள்திறனைப் போற்றிப் பாடியபடியும், ஒவ்வொரு நாளும் மகான் நிகழ்த்திய அற்புதங்களைப் பகிர்ந்துகொண்டபடியும் நீராடுவதால், அவற்றையெல்லாம் கேட்டுக் கேட்டுத்தான் துங்கபத்ரா சிலிர்ப்பும் பூரிப்புமாகத் தவழ்கிறாள் போலும்!

அது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு மழைக்காலம். அந்தக் காலத்தில் துங்கபத்திரை அடிக்கடி வெள்ளப்பெருக்கு கொள்ளும். ஆனால், ஏனோ அன்று சாதாரணமாக, சாதுவான குழந்தைபோல சத்தமின்றி பயணித்துக்கொண்டிருந்தது. கர்பூர் என்னும் ஊரைச் சேர்ந்த ஆனந்ததாஸர் என்னும் கமலேஷ விட்டலா என்னும் அடியவர் ஒருவர் மந்த்ராலயம் வந்திருந்தார். பிருந்தாவன தரிசனத்தை திவ்வியமாக முடித்துக் கொண்டவருக்கு, மந்த்ராலய மகான் தவமியற்றிய பஞ்சமுகி குகையைக் காண வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அந்தக் குகை, நதியின் அக்கரையில் இருந்தது. நதியைக் கடந்து செல்ல பல ஓடக்காரர்களும் இருந்தார்கள்.

ஆனந்ததாஸர் ஓர் ஓடக்காரனின் துணையுடன் அக்கரைக்குச் சென்று சுவாமிகள் தவம் செய்த பஞ்சமுகி குகையை வணங்கினார். பின்பு மந்த்ராலயம் திரும்புவதற்காக நதிக்கரை வந்தபோது துங்கபத்ரை இப்போது ஏதோ ஆவேசம் வந்துவிட்டதுபோல் பிரவாகம் எடுத்து ஓடிக் கொண்டிருந்தது. 

நிமிடத்துக்கு நிமிடம் உயரும் அதன் நீர் மட்டம் எல்லோரையும் மிரட்டியது. பரிசல்காரர்கள் பரிசல் ஓட்டுவதை நிறுத்திவிட்டார்கள். ஆனந்ததாஸருக்கோ சீக்கிரம் திரும்பியாக வேண்டும் என்ற இக்கட்டான நிலைமை. வேறு வழியில்லாமல் அவர் ஒவ்வொரு பரிசல்காரரிடமும் போய் வேண்டிக்கொண்டார். ஆனால், யாரும் பரிசல் ஓட்ட முன்வரவில்லை. ஒரு கல்லின் மீது கவலையோடு அமர்ந்தார். ஸ்ரீராகவேந்திரரைத் தியானித்தார். 

அவரின் கவலை படிந்த முகத்தைப் பார்த்த ஒரு பரிசல்காரர், ``ஐயா, அவசர வேலையென்றால் நான் வேண்டுமானால் உங்களை மறுகரை கொண்டு விடுகிறேன்’’ என்று சொன்னான். ஆனந்ததாஸரும் மனம் மிக மகிழ்ந்தவராக, உடனே சம்மதித்து பரிசலில் ஏறிக்கொண்டார். நதியின் மையத்துக்கு வரும்போது வெள்ளம் மேலும் அதிகரித்தது. பரிசல் தடுமாறியது. ஒரு கட்டத்தில் பரிசல் நீரில் மூழ்கியும்விட்டது. நீச்சல் தெரிந்த ஓடக்காரன் அவரைக் காப்பாற்ற இயலாத வருத்தத்துடன் ஆற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்தி மறுகரை அடைந்தான். ஆனந்ததாஸர் ஒரு சுழலில் சிக்கிக்கொண்டார். அது எங்கும் நகர விடாமல், ஒரே இடத்திலேயே சுழற்றி மூழ்கடிக்கும் சுழல்.

இந்த உலகமும் அப்படித்தானே... தொடர்ந்து நம்மை இந்த உலகத்தின் சுழல்களிலேயே சிக்க வைத்து பின் அதிலேயே நம்மை ஆழ்த்திவிடுவதுதானே. சுழலில் சிக்கிவிட்டால் பின் கரையேறுவது எப்படி?

ஆனந்ததாஸர் ஒரு கணம் சிந்தித்தார். 

``குருநாதா, நான் இந்தச் சுழலில் மட்டுமல்ல, இந்த உலக இன்பங்களின் சுழலிலும் மாட்டிக்கொண்டு தவியாய்த் தவிக்கிறேன். என்னை இந்தச் சுழலிலிருந்து விடுவித்துவிடுவீர்’’ என்று வேண்டிக்கொண்டு, மந்த்ராலய மகானின் திருநாமங்களை ஜபம் செய்யத் தொடங்கிவிட்டார். 

மகானை விடவும் அவருடைய நாம ஜபம் அளவற்ற ஆற்றல் கொண்டது என்பதை நிரூபிப்பதைப்போல் மெள்ள மெள்ள சுழலில் மூழ்கிக் கொண்டிருந்த ஆனந்ததாஸரின் தலைமுடியை ஒருவர் பிடித்து இழுத்தார். மின்னல் வேகத்தில் அவரை நீரில் இருந்து தூக்கி, ஒரு பரிசலில் போட்டார். 

ஆனந்ததாஸருக்கு நடப்பதெல்லாம் நினைவா, கனவா என்று தெரியவில்லை. தன்னை ஆற்று வெள்ளம் அடித்துச் செல்வதிலிருந்து காப்பாற்றிய அந்தப் பரிசல்காரனை அவர் வணங்கினார். அவரோடு இன்னொருவரும் இருந்தார். இருவரையும் வணங்கியபடியே கரைக்கு வந்து சேர்ந்தார்.

``ஐயா, தாங்கள் எனக்கு உயிர்ப்பிச்சை அளித்தீர்கள். தாங்கள் யார் எனத் தெரிந்துகொள்ளலாமா?’’ என்று கேட்டார். 
``என் பெயர் ராகப்பா, இவன் பெயர் வாதப்பா. ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றுவதே எங்கள் வேலை’’ என்று சொன்னார் ஒருவர். இதைக் கேட்டு சிலிர்த்த ஆனந்ததாஸர், பிருந்தாவனம் இருக்கும் திசை நோக்கி வணங்கிவிட்டுத் திரும்பிப் பார்த்தார். அந்த பரிசல்காரர்களையும் பரிசலையும் காணவில்லை. ஆனந்ததாஸரின் கண்கள் கலங்கின. 

குருநாதர் ராகவேந்திரரே பரிசல்காரன் உருவம் கொண்டு வந்து தன்னைக் காப்பாற்றியதை உணர்ந்தார். ராகவேந்திர ஸ்வாமியை சப்தமிட்டுத் துதிக்க ஆரம்பித்தார். பிருந்தாவனம் ஓடிச் சென்று மகானின் சந்நிதியில் விழுந்து வணங்கினார்.
எல்லோரும், `என்ன ஆனது’ என்று விசாரித்தார்கள். அவர் நடந்ததைச் சொன்னார். ஆனால் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்களுக்கு இதெல்லாம் வெகு சகஜம் போலும்!

``இதெல்லாம் இந்த மண்ணில் சகஜமய்யா. நீர் வெளியூரிலிருந்து வந்திருக்கிறீர். அதனால்தான் இது உங்களுக்கு வியப்பாக இருக்கிறது’’ என்றார்கள். அப்போது குறுக்கிட்ட ஒருவர், ஆனந்ததாஸரிடம், ``ஐயா, இப்படித்தான் முன்பொரு தருணத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஓர் இளைஞன் பாறையின் மீது அமர்ந்துகொண்டு, நீரில் கால்களை நனைத்துக்கொண்டிருந்தான். திடீரென்று வழுக்கிவிட்டது. ஆற்றில் விழுந்துவிட்டான். நதியோ பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்தது. இந்த ஊர்க்காரர்கள் ஆபத்தான வேளைகளில் 'ஐயோ, அம்மா' என்றெல்லாம் அலறுவதில்லை. 'ராகவேந்திரா, ராகவேந்திரா' என்றுதான் மகானிடம் அடைக்கலம் கேட்டு அலறுவார்கள். அப்படி எல்லோரும் அலறியபோது, ஸ்ரீமடத்து யானை நதியை நோக்கி ஓடிவந்தது. யானையா அல்லது குதிரையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதுபோல் புயல் பாய்ச்சலில் ஆற்றை நெருங்கியது. ஆற்றில் இறங்கி, நீரில் மூழ்கிக்கொண்டிருந்தவனை தன் தும்பிக்கையால் தூக்கிக் கரையில் சேர்த்துக் காப்பாற்றியது. இதற்கு என்ன சொல்கிறீர்? காப்பாற்றியது யானை என்றா நினைக்கிறீர்கள்? எல்லாம் குருநாதன் கருணை. அந்தக் கருணை யானை துணை இல்லாமல் யார்தான் கரையேற முடியும்?’’ 

ஆனந்ததாஸர் சந்நிதியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.