Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 25

ரங்க ராஜ்ஜியம் - 25
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம் - 25

ரங்க ராஜ்ஜியம் - 25

ரங்க ராஜ்ஜியம் - 25

ரங்க ராஜ்ஜியம் - 25

Published:Updated:
ரங்க ராஜ்ஜியம் - 25
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம் - 25

‘பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப்
    பதங்களும், பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கொளி யனலும்
    பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல்மா ருதமும் குரை கடலேழும்
    ஏழுமா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்றவெம் பெருமான்
    அரங்கமா நகரமர்ந்தானே!
- பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார்.

திருவெள்ளக்குளத்தில் நீராடிக்கொண்டிருந்த குமுதவல்லி, அந்த நொடியே திருவாலி மன்னன் நீலனின் மனதில் விழுந்து, அவனை ‘இவள் எனக்குரியவள்’ என்று எண்ணும்படிச் செய்து விட்டாள். மன்னனாயிற்றே? குதிரையைவிட்டு இறங்கிச் சென்று அவளோடு பேச அவனுடைய ஸ்தானமும் கம்பீரமும் தடையாகி நின்றன.

ரங்க ராஜ்ஜியம் - 25

அவன் உள்ளக்கிடக்கையை அறிந்த அமைச்சர்தான் அவனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியவரானார். நேராகக் குமுதவல்லியின் இல்லத்துக்குத் தன் புரவி ரதத்தில் போய் இறங்கினார். வைத்தியர் அமைச்சரைத் துளியும் எதிர்பார்க்கவில்லை. அவரை வரவேற்று உபசரித்தார். வந்த காரணத்தையும் வினவினார்.

“அமைச்சர்பிரான் என் இல்லம் ஏகிய காரணத்தை நான் அறியலாமா?”

“நிச்சயமாக. தங்கள் திருமகளை நம் அரசர் திருக்குளத்தில் நீராடுகையில் கண்டுள்ளார். கண்ட நொடி முதல் தங்கள் புதல்வியை மணமுடிக்க விரும்புகிறார். அதன் பொருட்டுத் தங்கள் அனுமதிக்காகவும் அடுத்தடுத்து நிகழ வேண்டியவற்றுக்காகவுமே நான் வந்துள்ளேன்.”

அமைச்சரின் பேச்சு வைத்தியரை அதிர்ச்சிக்கு ஆளாக்கினால், அதைக் கேட்டபடி மாலவனுக்குப் பூக்கட்டிக்கொண்டிருந்த குமுதல்வல்லியை அது ஸ்தம்பிக்கவே செய்துவிட்டது.

‘இப்படிக்கூட நடக்குமா?’ - அவளுக்குள் கேள்வி விஸ்வரூபம் கொள்ள, வைத்தியர் அதிர்ந்தார். ஆனாலும் அதிலிருந்து மீண்டுதானே தீரவேண்டும்? மீண்டார்! சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு  ‘`மன்னனின் விருப்பத்தை அறிந்து மகிழ்கிறேன். உண்மையில் மன்னனை மணந்திட என் மகள் கொடுத்துவைத்திருக்க வேண்டும். ஆனாலும் இந்த விஷயத்தில் குறிப்பிட்ட கொள்கைப்பாடு உண்டு” என்று பீடிகை போட்டார்.

“என்ன?”

“திருமண விஷயத்தில் எந்த ஒரு பெண்ணையும் அவள் விருப்பத்துக்கு மாறாக மணம் முடித்து வைத்துவிடக் கூடாது...”

“நல்ல கொள்கைதானே?”

“அதை நான், இங்கே என் மகள் வரையிலும் பின்பற்றலாம்தானே?”

“தாராளமாய்...”

“எனில், என் மகள் அரசரை மணக்கச் சம்மதித்தால், எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை” - என்றார் வைத்தியர்.

ஆனால் குமுதவல்லியோ ‘`அரசருக்கு நான் இணையானவள் இல்லை. என்னை மறந்து, அவரை மிக விரும்பும் பல பெண்களில் ஒரு பெண்ணை மணக்கச் சொல்லுங்கள்” என்றாள்.

அவளது பதிலைக் கேட்ட நீலன்கூட முதலில் அதிர்ந்தான்.

“இந்தப் பெண் என்னை விரும்பவில்லை என்பதை எத்தனை நாசூக்காய்க் கூறிவிட்டாள் பாருங்கள்...” என்றான்.

“ஆம் மன்னா...” என்றார் அமைச்சர்.

“அமைச்சரே... நான் பார்க்கமாட்டேனா என்று தவிக்கும் பெண்களுக்கு நடுவில், இப்படி ஒரு பெண் மகளா?” என்று கேட்டவன்,  “இந்தத் துணிவுக்காகவும் தெளிவுக்காகவுமே நான் இவளை விடுவதாயில்லை. இவளே இனி என் மனைவி” என்று சூள்கொட்டினான்.

அத்துடன், தனது சூடல்மா என்ற புரவியின் மேலேறிச் சென்று, நேராக குமுதவல்லி முன் போய் நின்றான். அப்படியே அவள் இல்லத்தையும் ஒரு பார்வை பார்த்தான்.

திரும்பிய பக்கமெல்லாம் காவிப்பூச்சும் திருமண் சின்னங்களோடும், குங்கிலியவாசம் மணக்கப் பெருமாளின் ரூபங்கள் காட்சி தந்தன. பத்து அவதாரங்களில் ஒன்று நீங்கலாய் ஒன்பதுக்கும் ஒன்பது சந்நிதிகள் - அந்தச் சந்நிதிகளில் நெய் விளக்குகளின் ஜோதிப்பிரகாசம்!

நீலனுக்குக் கோயிலுக்குள் நுழைந்துவிட்டது போல் ஓர் உணர்வு. வெளியேயிருந்து பார்க்கும் போது, பூசணிக்கொடி பரவிக்கிடக்கும் ஒரு கூரை வீடு, உள்ளே ஸ்ரீவைகுண்டமாகவே காட்சி தந்து கொண்டிருந்தது!

நீலன் கண்களில் வியப்பின் வழிசல். 

வைத்தியரோ நடுங்கிக்கொண்டிருந்தார். எங்கே, தானும் தன் மகளும் ராஜகோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ என்று அவரின் இதயம் வேகமாய் துடித்தபடி இருந்தது. ஆனால் குமுதவல்லியிடம் எந்தப் பதற்ற மும் இல்லை, பயமும் இல்லை, மாறாக உபசரிப்பு...

“வரவேண்டும் அரசர்பிரானே!”

“மகிழ்ச்சி! ஆமாம் இது என்ன இல்லமா இல்லை கோயிலா?”

“இல்லக் கோயில்!”

“அருமையான விளக்கம். அற்புதமாக இருக்கிறது.”

“நன்றி அரசே.”

“நான் உன்னிடம் நன்றியை எதிர்பார்த்தெல்லாம் வரவில்லை. என் விருப்பத்தை நீ மறுத்த காரணம் அறியவே வந்தேன்...”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரங்க ராஜ்ஜியம் - 25

“இதற்காக தாங்கள் இவ்வளவு தூரம் வந்திருக் கத் தேவையில்லை. நான்தான் மிகத் தெளிவாக என் பதிலைக் கூறி அனுப்பியிருந்தேனே?”

“உண்மைதான். அந்த பதிலில் எங்கும் என் மேல் விருப்பமில்லை என்னும் கருத்தில்லை. நான் ஒரு சராசரிப் பெண். அரசருக்கு இணையானவள் இல்லை என்று கூறியதாக அறிந்தேன். ஆனால் எந்த சராசரிப் பெண்ணும் இத்தனை துணிவாய் தன்னிலை விளக்கம் அளிக்கமாட்டாள்.”

“அது உங்கள் கருத்து. ஆனால் நான் கூறியதே நிஜம்! நீங்கள்தான் பார்க்கிறீர்களே..?”

“குமுதவல்லி, நீ பேசப்பேச உன் மேல் எனக்கு மோகம் அதிகரிக்கவே செய்கிறது. நீ என் அருகில் இருந்தால் போதும். இந்த உலகமே என் காலடிக்குக் கீழ் வந்துவிடும் என்று நம்புகிறேன்.”

“இது செருக்கான பேச்சு. இந்த உலகமும் சரி, நீங்களும் சரி, நானும் சரி... எல்லோருமே அந்த மாலவனின் திருவடிக்குக் கீழ் கிடப்பவர்களே!”

‘`அது யார் மாலவன்?”

“என்ன விந்தை! மாலவன் யாரா? உங்களைப் படைத்து உங்களுக்கென்று ஓர் உலகைப் படைத்து, அந்த உலகோர்க்கு உணவு, உறையுள் என சகலமும் படைத்து, ஓர் அலகிலா விளையாட்டை விளையாடிக்கொண்டிருப்பவனையா யாரென்று கேட்கிறீர்கள்?''

குமுதவல்லியிடம் கோபம் வெளிப்பட்டது.

“கோபத்தில் நீ மேலும் அழகாய் ஜொலிக்கிறாய்! அது சரி... இத்தனை பெரிய படைப்பாளன் எங்கே இருக்கிறான் குமுதவல்லி. அவனை நான் காண இயலுமா?”

“உங்களையே படைத்தவன் எனும் வகையில் அவன் உங்களுக்குள்ளும் இருக்கிறான். நீங்கள் உங்களைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்வது கிடையாதா?”

“விசித்திரமான பதில். உன் பதிலின்படியே வைத்துக்கொண்டாலும் உன் மாலவன்தான் நான். அப்படியிருக்க என்னை ஏற்க ஏன் மறுக்கிறாய்?”

“என் கருத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். ஒருக்காலும் நீங்கள் அவனாக முடியாது. அவன் பரமாத்மா; நாம் எல்லோருமே ஜீவாத்மாக்கள்.”

“குமுதவல்லி! நான் ஆத்மவிசாரம் புரிய வரவில்லை. என்னை ஏற்க நீ ஏன் மறுக்கிறாய்? சரியான காரணத்தை நீ கூறிவிட்டால், நான் சமாதானம் அடைந்து திரும்பிவிடுவேன். இல்லா விட்டால் உன்னை விடமாட்டேன்.”

“நான் அரங்கன் அடிமை. தாங்களோ என் அழகுக்கு அடிமைப்பட விரும்புகிறீர்கள். அவன் அழிவற்றவன்; என் அழகோ காலத்தால் அழிந்து விடும்.”

“அதனாலென்ன? இருக்கும்வரை இன்பமாய் வாழ்வோமே...”

“நான் நிரந்தரமானதில் அடங்க விரும்புகிறேன். தாங்களோ நிரந்தரமற்றதில் மயங்க விரும்புகிறீர்.”

“குமுதவல்லி, நிரந்தரமானது - நிரந்தரமற்றது என்று ஒரு சந்நியாசி போல் எதற்குப் பேசுகிறாய். என்னை மணப்பதால் உன் பக்தி குறைவுபடும் என்று அஞ்சுகிறாயா?”

“ஆம்..!''

“குறையாது! நான் குறையவும் விடமாட்டேன். இப்போது என்ன சொல்கிறாய்?”

“அரசே! உங்கள் வார்த்தைகளால் ஒரு பயனுமில்லை. ஆசை அறுபது நாள் என்பார்கள். தாங்களும் என்னை மணந்து அறுபது நாள் நீங்கள் சொன்னது போல் வாழக்கூடும்... பிறகு?”

“உன்னோடு நான் 60 நாள்கள் அல்ல... 60 யுகங்கள் வாழ ஆசைப்படுகிறேன்..”

“இது இப்போதிருக்கும் மோகத்தில் பேசும் பேச்சு.”

“நான் என்ன செய்தால், நீ என் உறுதிப்பாட்டை நம்புவாய்?”

“மோகத்தைத் துறந்து, மாலவனின் அடிமையாக வாழ முடியுமா உங்களால்?”

“உனக்கு அடிமையாக விரும்பும் என்னை மாலவன் அடிமையாக்கப் பார்க்கிறாயே...?”

“மாலவன் அடிதொழுபவரே முழுமையான மனிதர். அப்படி ஒருவரையே என்னால் எண்ணிப் பார்க்க இயலும்.”

“உன் காதலை நான் பெற, மாலவன்பாலான பக்திதான் விலையா?”

“ஆம். நீங்கள் மாலவன் அடிமையாகச் சம்மதித்தால் நானும் உங்கள் அடிமையாகச் சம்மதிக்கிறேன்.”

குமுதவல்லியின் பேச்சு அவள் தந்தையான வைத்தியரை மருளச் செய்தது. சோழப் பேரரசனே அச்சப்படும் பரகாலன் எனப்படும் நீலனிடம் இவ்வளவு தூரம் யாரும் பேசியிருக்கமாட்டார்கள். குமுதவல்லியோ பேசியது மட்டுமல்ல - அவனை லட்சியம் செய்யாமல், தான் தொடுத்த மாலையை மாலவனின் அவதார சொரூபங்களுக்குப் போட்டு, விளக்குத்திரியை நிமிண்டிவிட்டு, குங்கிலியத்தைப் புகையை விட்டு நறுமணம் உண்டாக்கித் தன் பக்திபூர்வமான பணியிலேயே கவனமாக இருந்தாள். நீலன் அதைக் கூர்ந்து பார்த்தபடி இருந்தான்.

“சற்று என்னையும் பார்...” என்றான். அவளும் திரும்பினாள். “நீ என்னை மிக மலிவாகக் கருதுவதுபோல் உணர்கிறேன்” என்றான் உணர்வுகள் நசுங்கிட.

“எனக்கு யாரையுமே அப்படிக் கருதத் தெரியாது” என்றாள் அவளும் பதிலுக்கு.

“அப்படியானால் நான் அருகிருக்கப் பூஜை பெரிதாகிவிட்டதா உனக்கு?” அவன் குரலில் ரௌத்திரம் தொனித்தது.

“நீங்கள் அல்ல... சப்தரிஷிகள் உள்பட நாரதரே இங்கு இப்போது இருந்தாலும் எனக்குப் பூஜைதான் பெரிது. பூஜைக்கு உரியவனே பெரியவன்!”

“ஒரு கற்சிலை மேல் இத்தனை பிரியமா?”

“பிரியமல்ல... பக்தி!”

“அப்படியென்ன இதில் இருக்கிறது?”

“நான், நீங்கள், என் தந்தை, நாம், இந்த ஊர், நாடு, பூமி, விண்ணகம், சந்திர சூரியர், நட்சத்திராதியர், வீசும் காற்று, பொழியும் மழை என்று எல்லாமும் இருக்கிறது...”

“நீ சொல்லும் சகலமும் இவனாலா தோன்றின?''

“அதிலென்ன சந்தேகம்?”

“என்னைப் பெற்றவள் என் தாய் - அதற்குக் காரணம் என் தந்தை. நான் அரசனாக இருக்கக் காரணம் என் வீரம். இதில் எங்கே இருக்கிறான் உன் திருமால்?”

“பாலில் நெய் அவன், தீபத்தில் ஒளி அவன். உம்மைப் போல் `எல்லாம் என் கையில்' என்று நினைத்தவர்கள் எல்லாம் `எதுவும் என் கையில் இல்லை' என்று உணர்ந்து அடங்கிப் போனதை இந்த உலகம் பல ஆயிரம் முறை பார்த்துவிட்டது. உங்கள் வரையிலும் அது நிகழும். உங்களுக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. தயவு செய்து விலகிச்செல்லுங்கள்.”

“குமுதவல்லி! என்னைக் குலையச் செய்கிறாய் நீ...”

“நான் எனும் செருக்கால் வந்த வினைப்பாட்டுக்கு என்னைக் காரணம் கூறாதீர்கள்.”

“நான் ஆசைப்பட்டு ஒன்றை அடையாமல் போனதேயில்லை.”

“நிச்சயம் உங்கள் ஆசையில் நீங்கள் என்னை அடையவே முடியாது.”

“சரி, உனக்காக நான் திருமால் பக்தனாகிறேன்... போதுமா?”

“எனக்காக ஆக வேண்டாம் - உங்களுக்காக ஆகிடுங்கள். அதுவே எல்லோருக்கும் நல்லது.”

“அதற்கு நான் எதாவது செய்யவேண்டுமா?”

“நிச்சயமாக...”

“என்ன அது?”

குமுதவல்லி சொல்லத் தொடங்கினாள்.

- தொடரும்

 -இந்திரா சௌந்தர்ராஜன்

படம்: என்.ஜி.மணிகண்டன்

திருத்தவே முடியாதவர்கள்!

சந்தேகப் பேர்வழிகள், நயவஞ்சகர்கள், எப்போதும் சோர்ந்துகிடப்பவர்கள், நன்றி உணர்வு இல்லாதவர்கள் ஆகியோரை, எவ்வளவு முயற்சி செய்தாலும் திருத்தவே முடியாது என்று அறுதியிட்டுக் கூறுகிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

- கோபாலன், மேவானி