Published:Updated:

மங்கலம் நிறைந்த பங்குனி உத்திரம்!

மங்கலம் நிறைந்த பங்குனி உத்திரம்!
பிரீமியம் ஸ்டோரி
மங்கலம் நிறைந்த பங்குனி உத்திரம்!

தொகுப்பு: நமசிவாயம்

மங்கலம் நிறைந்த பங்குனி உத்திரம்!

தொகுப்பு: நமசிவாயம்

Published:Updated:
மங்கலம் நிறைந்த பங்குனி உத்திரம்!
பிரீமியம் ஸ்டோரி
மங்கலம் நிறைந்த பங்குனி உத்திரம்!

ங்குனி மாதம், பௌர்ணமியுடன் உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும் திருநாளையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம். ‘பலி விழா பாடல் செய் பங்குனி உத்திர நாள்’ என்று பங்குனி உத்திரத்தைப் போற்றுகிறார் திருஞான சம்பந்தர். ‘பலி’ என்றால் செழித்தல், கொடுத்தல், விசாரித்தல் என்றெல்லாம் பொருள் உண்டு. ஆக... பெற்ற பயனை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழும் பலி விழாவாகவும் திகழ்ந்துள்ளது பங்குனி உத்திரம். எனவே, இந்த நாளில் எல்லோருக்கும் அன்னமிட்டு பசிப்பிணியைப் போக்குவார்களாம் பக்தர்கள்.

•  பங்குனி உத்திரத்தன்று திருவிளக்கு தீபத்தில், சிவபெருமானும் பார்வதிதேவியும் ஐக்கிய சொரூபமாக எழுந்தருள்வதாக ஐதீகம். பங்குனி உத்திர பூஜை முடித்ததும் வயதான ஏழைத் தம்பதிக்கு உணவிட்டு உபசரித்தால் புண்ணியம் சேரும்.

• மேலும், முறைப்படி பங்குனி உத்திர விரதம் இருப்பதுடன், தண்ணீர்ப் பந்தல் அமைத்து, ஆலயங்களுக்கு வரும் அடியவர்களுக்கு நீர்மோர் அளிப்பதால் பாவம் நீங்கும்; பகை விலகும்; பெரும் புண்ணியம் சேரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• பனிக்காலம் முடிந்து வசந்த காலம் ஆரம்பமாகும் நாள் பங்குனி உத்திரம். இந்த மாதத்தில் பெய்யும் மழையை, ‘பங்குனிப் பழம்’ என்பர் விவசாயிகள்.

மங்கலம் நிறைந்த பங்குனி உத்திரம்!

• இந்தத் திருநாளை, ‘கல்யாண விரத நாள்’ என்றும் போற்றுவர்.  திருமணத் தடை உள்ளவர்கள், பங்குனி உத்திரத்தன்று முறைப்படி விரதம் கடைப்பிடித்து, தம்பதி சமேதராகத் திகழும் தெய்வங்களை பூஜித்து வழிபட்டால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்குமாம்.

• தெய்வத் திருமணங்கள் பல, புனிதமான இந்த பங்குனி உத்திர திருநாளில்தான் நிகழ்ந்தன என்கின்றன புராணங்கள். ஆண்டாள், ஸ்ரீரங்கநாதர்; தேவேந்திரன்- இந்திராணி; பிரம்மன்- கலைவாணி ஆகியோரது திருக்கல்யாணம் நிகழ்ந்ததும் இந்தப் புனித நாளில்தான்.

•   ஸ்ரீராமன்-சீதாதேவி; லட்சுமணன்- ஊர்மிளை; பரதன்- மாண்டவி; சத்ருக்னன்- சுருதகீர்த்தி ஆகியோரது திருமணம்... பங்குனி உத்திர திருநாளில், மிதிலை நகரில் வைத்து நடைபெற்றதாம்.

• மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஸ்ரீமீனாட்சி தேவியை மணந்து ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரராக தரிசனம் தந்ததும் பங்குனி உத்திர திருநாளில்தான்.

•   தனது தவத்தைக் கலைத்ததால், மன்மதனை எரித்துச் சாம்பலாக்கினார் ஈசன். இதனால் வருந்திய ரதிதேவி, மன்மதனை உயிர்ப்பித்துத் தருமாறு ஈசனிடம் வேண்டினாள். அதனால் மனம் இரங்கிய ஈசன், அவள் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனை உயிர்ப்பித்தார். இது நிகழ்ந்ததும் பங்குனி உத்திரத் திருநாளில்தான்.

• உத்திர நட்சத்திரத்தின் நாயகன் சூரியன்; உத்திர நட்சத்திரம் பூரணச் சந்திரனுடன் பொருந்தும் நாள் பங்குனி உத்திரம். சூரியன்- சந்திரன் இருவரது தொடர்பும் பெற்றிருப்பதால், இந்தத் திருநாளுக்கு கூடுதல் சிறப்பு உண்டு.

• பங்குனி உத்திர விரதத்தைக் கடைப்பிடித்த ஸ்ரீமகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் மார்பில் நிரந்தர இடம் பெற்றாள். பிரம்மன்- சரஸ்வதி, தேவேந்திரன்- இந்திராணி ஆகியோருக்கும் பங்குனி உத்திர விரதம் மேற்கொண்டதால், திருமணம் கைகூடியதாகப் புராணங்கள் சொல்கின்றன.

• பங்குனி உத்திர நாள் அன்று பிறந்ததால், அர்ஜுனன் ‘பல்குநன்’ என்ற பெயர் பெற்றான்.

• முருகக் கடவுளுக்கு உகந்த திருநாள்களில் பங்குனி உத்திரம் குறிப்பிடத்தக்கது. இந்திரனின் மகள் தெய்வானையை முருகப் பெருமான் திருமணம் செய்துகொண்டதும் வள்ளிக் குறத்தி அவதரித்த பெருமையும் பங்குனி உத்திரத்துக்கு உண்டு.

• முருகப்பெருமான், சிவபெருமானுக்குப் பிரணவப் பொருளை உபதேசித்த நாள் பங்குனி உத்திரம். இந்த நன்னாளை விரத நாளாக அனுஷ்டித்து முருகனை வழிபட்டால், கன்னியருக்கு விரைவில் திருமணம் நடக்கும். மணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம்.

• சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் ஸ்ரீபரமேஸ்வரன் காட்சி தந்த நாளும் இதுதான். அன்று திருமழப்பாடியில் நடைபெறும் நந்திதேவர் கல்யாணத்தை தரிசித்தால், திருமணம் ஆகாதவர் களுக்கு விரைவில் திருமணம் நடக்குமாம். ‘நந்தி கல்யாணம் கண்டால் முந்தி திருமணம் நடக்கும்’ என்பது பழமொழி!

• பங்குனி உத்திர நாளில்தான் காரைக்கால் அம்மையார் முக்தி பெற்றார்.

• திருவையாறு அருகில் உள்ளது திங்களூர். இங்குள்ள சிவாலயத்தில் பங்குனி உத்திரத்தன்று மட்டும் லிங்கத் திருமேனியை, சந்திரன் தனது கிரணங்களால் தழுவி வழிபடுவதை தரிசிக்கலாம்.

• திருவையாறு அருகே உள்ள நவக்கிரக (சந்திரன்) க்ஷேத்திரம், திங்களூர். இங்குள்ள சிவாலயத்தில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில், காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும் மறு நாள் மாலை 6 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன. அப்போது, இங்கு சூரிய- சந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த பூஜையை தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்பது பக்தர்களது நம்பிக்கை.

• மேல்கோட்டை திருநாராயணபுரத்தில்- பங்குனி மாதத்தில் வைரமுடி சேவை விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தலம் ‘தென்னக பத்ரிகாஸ்ரமம்’ எனப்படும். வடபத்ரிகாஸ்ரமம் செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து பெருமாளை
தரிசித்தால், பத்ரி தலத்துக்குப் போய் வந்த புண்ணியம் உண்டு என்பது ஐதீகம்.

• சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், ஆறகளூர் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீகரிவரதராஜப் பெருமாள். பங்குனி உத்திரத் திருவிழாவின்போது, தேரோடும் ராஜ வீதியில் உலா வரும் இந்த பெருமாளைத் தரிசிக்க கண் கோடி வேண்டும். இவருடன் பெரியநாயகி சமேத ஸ்ரீகாமநாதீஸ்வரர், பூங்குழலி சமேத ஸ்ரசோழலேஸ்வரர் தேர்களும் உடன் பவனி வரும்!

• திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையில் திருவாரூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் வரும் கிராமம் பொன்னிறை. இங்குள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலில், அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்துக்கு பங்குனி உத்திரத்தன்று, நெல்லிக் கனிப் பொடி மற்றும் அரிசி மாவால் அபிஷேகம் செய்கிறார்கள். இதனால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.

 

• நாகை மாவட்டம் திருப்புகலூரில் உள்ள அருள்மிகு அக்னீஸ்வர சுவாமி திருக்கோயிலின் மூலவர் சுயம்பு மூர்த்தி. இறைவி: அருள்மிகு கறுத்தார் குழலி. ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார், பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு நிதி வேண்டி திருப்புகலூர் வந்தார். இரவில் அவர், ஆலய வளாகத்தில் செங்கற்கள் சிலவற்றை தலைக்கு வைத்துத் தூங்கினார். மறு நாள் காலை அவர் எழுந்து பார்த்தபோது, அந்தக் கற்கள் பொன்னாக மாறியிருந்தன. அதனால் இன்றும் புது வீடு கட்டுவோர், செங்கல்லை இங்கு கொண்டு வந்து பூஜித்து, மனை முகூர்த்தம் செய்கின்றனர். இதனால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம்.

• பங்குனி உத்திரமே சாஸ்தாவின் அவதாரமான சுவாமி ஐயப்பனின் பிறந்த நாள். இந்தத் திருநாளன்று சபரி மலையில், சுவாமி ஐயப்பனுக்கு ருத்ராபிஷேகம் நடைபெறும்.

• திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகிக் உள்ளது இலத்தூர். இங்குள்ள ஸ்ரீமதுநாத சுவாமி கோயிலில் மட்டுமே சாஸ்தாவை, லிங்க வடிவில் தரிசிக்கலாம். இங்கு லிங்கத்தின் முன்பு 18 படிகள் அமைக்கப்பட்டு, அதன் அருகில் இரண்டு பெரிய யானை வாகனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பங்குனி உத்திரத்தன்று லிங்க வடிவ சாஸ்தாவை வழிபடுவது மிகவும் விசேஷம் என்கிறார்கள்.

• நெல்லை மாவட்டம், கருங்குளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில், பங்குனி உத்திர விழாவன்று ஆண்கள் தங்கள் வாயில் துணியைக் கட்டிக் கொண்டு, 63 கிலோ பச்சரிசியை உரலில் இடித்து, அந்த மாவால் ஒரே கொழுக்கட்டை தயாரித்து, ஐயப்பனுக்குப் படைத்து வழிபடுகிறார்கள்.

தொகுப்பு: நமசிவாயம்

திருமயிலையில்...

ஸ்வரனுக்கு இணையாக தனக்கும் ஐந்து தலைகள் என்று கர்வம் கொண்ட பிரம்மனின் ஒரு சிரத்தைக் கொய்து, அந்தக் கபாலத்தை கையில் ஏந்தியதால், கபாலீஸ்வரர் எனும் திருப்பெயருடன் சிவனார் அருளும் மிக உன்னதமான தலம் திருமயிலை. அம்பாள் மயிலாக வந்து சிவபூஜை செய்த க்ஷேத்திரமும்கூட. இங்கே, ஸ்வாமி மேற்கு நோக்கி அருள்வது கூடுதல் விசேஷம்!

இந்தத் தலத்தின் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பது பங்குனிப் பெருவிழாவும், அதிலும் பிரதானமான அறுபத்து மூவர் திருவிழாவுமே! பங்குனிப் பெருவிழாவின் எட்டாம் நாளன்று காலையில், ‘பூம்பாவை உயிர்ப்பித்தல்’ நிகழ்ச்சி நடைபெறும். கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் பதிகம் பாடி பூம்பாவையை உயிர்ப்பித்த பின்னர், மண் குடுவையில் உள்ள வெல்லம் பிரசாதமாகத் தரப்படும். அஸ்தியில் இருந்து பூம்பாவையை ஞானசம்பந்தர் உயிர்ப்பித்ததை ஐதீகமாகக் கொண்டு இந்தப் பிரசாதம் வழங்கப்படுகிறது.


தொடர்ந்து மாலையில் 63 நாயன்மார்களுடன் விநாயகர், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், முருகப் பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகியோர் நான்கு மாடவீதிகளில் நள்ளிரவு வரை வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பக்தர்கள் தங்களால் இயன்றளவு தானம் வழங்குவது இவ்விழாவின் தனிச்சிறப்பு.

பத்தாம் நாள் காலை விழாவில்,  கபாலீஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறும். பிறகு, அம்பாள் மயில் உருவில் புன்னை மரத்தின் அடியில் இருக்கும் பெருமானை வழிபடுவார். பௌர்ணமி தினம் இரவு மயில் உருவம் நீங்கி சிவபெருமானைக் கரம் பிடிப்பாள் அம்பிகை. கல்யாணத் தடைகளால் வருந்தும் அன்பர்கள், இந்த வைபவத்தைத் தரிசித்து ஸ்வாமியையும் அம்பாளையும் வழிபட்டால், விரைவில் கல்யாணம் கைகூடும்

திருவரங்கத்தில்...

ங்குனி மாதம் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் ‘ஆதி பிரம்மோற்சவம்’ விபீஷணனால் தொடங்கப்பட்டது. இதன் ஆறாம் நாள் உற்சவத்தில், உறையூரில் அருள்பாலிக்கும் சோழகுல வல்லியான கமலவல்லி நாச்சியார் சந்நிதிக்குச் செல்கிறார் நம்பெருமாள்.

மங்கலம் நிறைந்த பங்குனி உத்திரம்!

அப்போது புத்தாடை, சந்தனம், திலகம், மாலை ஆகியவற்றுடன் புது மாப்பிள்ளை போல் காட்சி கொடுப்பார். பின்னர், தான் அணிந்த மலர் மாலையை கமலவல்லி நாச்சியாருக்கு அணிவித்து, நாச்சியாரின் மாலையை, தான் வாங்கி அணிந்து கொள்கிறார். பிறகு இருவரும் திருமணக் கோலத்தில் சேவை சாதிப்பார்கள்.

இதன் பின்னணியில் சுவாரஸ்யமான ஒரு கதை உண்டு. ஸ்ரீரங்கநாதரான அழகிய மணவாளன், ஒரு பங்குனி மாதத்தில் உறையூர் அருகே வேட்டையாடச் சென்றார். அப்போது அவர் கமலவல்லியைச் சந்தித்தார். ஸ்ரீமகாலட்சுமியே, நந்தசோழனின் மகள் கமலவல்லியாகப் பிறந்திருந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினர். பின்னர் கமலவல்லி யைத் திருமணம் செய்த ஸ்ரீரங்கநாதர், இரண்டு நாள்கள் உறையூரில் தங்கிவிட்டு, ஸ்ரீரங்கம் திரும்பினார். அன்று பங்குனி உத்திரம்- ரங்கநாயகி தாயாரின் ஜன்ம நட்சத்திரத் திருநாள்!

ஸ்ரீரங்கநாதர்- கமலவல்லி திருமணத் தகவல் ஸ்ரீரங்கநாயகி தாயாரை எட்டியது. எனவே, ஸ்ரீரங்கநாதர் மீது கோபம் கொண்ட தாயார், கதவை மூடிக்கொண்டார். காவிரியைக் கடக்கும்போது மோதிரம் தவறி விழுந்துவிட்டது. அதைத் தேடிக் கண்டெடுக்க தாமதம் ஆனதாகக் கூறினார் ஸ்ரீரங்கநாதர். எனினும் கோபம் தணியாத தாயார், மலர்கள் மற்றும் மலர்ச் செண்டுகளை ஸ்ரீரங்க நாதர் மீது ஆத்திரத்துடன் வீசியெறிந்தார்.

இந்த ஊடலை அறிந்த நம்மாழ்வார், அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். பின்னர், ஸ்ரீரங்கநாதர் உண்மையை ஒப்புக்கொண்டதால், நம்மாழ்வாரது சொற்படி ஸ்ரீரங்கநாயகி, பெருமாளை ஏற்றுக் கொண்டார். இதையட்டி கொண்டாடப்படும் வைபவத்தையே ‘சேர்த்தி’ என்கிறார்கள்.

ஆதி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளான பங்குனி உத்திரத்தன்று நம்பெருமாள் சித்திரை மற்றும் உத்திர வீதிகளில் வலம் வந்து, தாயார் சந்நிதிக்கு எழுந்தருள்வார். அப்போதுதான் மேற் கண்ட ‘சேர்த்தி’ நடைபெறும். பிறகு திருமஞ்சனம் முடிந்தபின் ஸ்வாமியும் தாயாரும் தம்பதி சமேதராக சேவை சாதிப்பார்கள். இந்த உற்சவத்தை ‘மட்டையடி உற்சவம்’ என்றும் சொல்வார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism