Published:Updated:

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 23 - வீரன் வாளுக்கு வேலி

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 23 - வீரன் வாளுக்கு வேலி
பிரீமியம் ஸ்டோரி
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 23 - வீரன் வாளுக்கு வேலி

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 23 - வீரன் வாளுக்கு வேலி

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 23 - வீரன் வாளுக்கு வேலி

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 23 - வீரன் வாளுக்கு வேலி

Published:Updated:
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 23 - வீரன் வாளுக்கு வேலி
பிரீமியம் ஸ்டோரி
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 23 - வீரன் வாளுக்கு வேலி

தென் தமிழ்நாட்டின் செம்மண் பூமியான சிவகங்கை மாவட்டத்தில், ஆதித்தமிழ் மரபுகளும் வழிபாடுகளும் இன்னும் கலப்புகளில்லாமல் மிச்சமிருக்கின்றன. இனக்குழுக்களுக்குக் காவலர் களாகவும் தலைவர்களாகவும் வாழ்ந்தவர்கள், வேட்டையாடித் தம் மக்களின் பசியாற்றியவர்கள்... ஏன்... தேசத்துக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களைக்கூடத் தெய்வங்களாக நிலைநிறுத்தி, மரபுப்படி வழிபாடு செய்து தெய்வங்களாகப் போற்றி வருகிறார்கள்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டாரத்தில், சொக்கநாத புரம்-மதகுப்பட்டி பிரதான சாலையில், வலதுபுறம் பிரியும் சிறிய பாதையொன்று அழைத்துச் செல்கிறது தொட்டியத்துக் கருப்பையா கோயிலுக்கு.

அடர் மரங்கள் சூழ, குதிரைகள் காலுயர்த்தி அணிவகுக்க, கோயிலின் சூழலே மனதை ஈர்க்கிறது. முகப்பில் விரிந்து கிடக்கிறது ஒரு குளம். அதன் கரையில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது ஒரு கற்சிலை.  நீண்டு மடிந்த மகுடத் தலைப்பாகை, நிமிர்ந்த நெஞ்சு, கம்பீரப் பார்வை, உரைமீண்ட வாள்களைப் போல வீரம் ததும்பும் மீசை, காதுகளிலாடும் அழகு தொங்கட்டான்கள், கையில் வீரத்தின் அடையாளமாக ஈட்டி... பார்க்கும்போதே மனதில் வீரமும், ஈரமும் துளிர்க் கச் செய்யும் அளவுக்கு அத்தனை நுட்பமாகப் படைக்கப்பட்டிருக்கிறது அந்தச் சிலை.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 23 - வீரன் வாளுக்கு வேலி

தொட்டியத்துக் கருப்பனுக்கு, ஐயனாருக்கு நடக்கும் முறைப்படியான வழிபாடுகள் இந்த வீரனுக்கும் நடக்கின்றன. கிராமத்துத் தெய்வங்களோடு தெய்வமாக, அணி வகுத்து நிற்கும் இந்த வீரன் யார்? தங்கள் குலம் தழைக்க, வாழ்க்கை வளம்பெற மக்கள் இவரிடம் வந்து மன்றாடி வேண்டுதல் செய்வது ஏன்?

குறுநிலத் தலைவனின் திருக்கதை

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு பாகனேரி என்ற குறுநிலத்தின் தலைவன் வாளுக்கு வேலி என்பவரே, தெய்வமாகி இங்கே நின்று தம் மக்களைக் காக்கிறார். வாளுக்கு வேலியின் வரலாறு தீரமிக்கது. வெள்ளையர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி, இங்கிருக்கும் வளங்களைச் சுரண்டியதோடு எதிர்த்து நிற்கும் தலைவர்களையெல்லாம் தூக்குக்கயிற்றில் தொங்கவிட்டுக் கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்த மகாவீரன் இவர்.

பெரிய பெரிய சீமைகளை ஆட்சி செய்தவர்களே வெள்ளையர்களுக்கு அடிபணிந்து நின்ற சூழலில் சமஸ்தானங்களை ஆண்ட மன்னர்கள் அவர்களை ஏற்க மறுத்தனர். அவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். தொடக்கத்தில் சமாதானம் பேசிய வெள்ளையர்கள், எதிர்ப்பு வலுப்பதைத் தடுக்க தங்கள் படைபலத்தைக் கொண்டு அடக்க முற்பட்டார்கள்.

மருது சகோதரர்கள் வளநாட்டுத் தலைவர்களையும் படைகளையும் சேர்த்துக் கொண்டு வெள்ளையர்களை எதிர்த்தார்கள். கடும் போராட்டத்துக்குப் பிறகு, மருது சகோதரர்களை வெள்ளையர்கள் கைது செய்தார்கள். இனி தென்னிந்தியாவில் தங்களுக்கு எதிரிகளே இல்லை என்று வெள்ளையர்கள் கொக்கரித்த நேரத்தில்தான் பாகனேரி குறுநிலத்தின் தலைவனான வாளுக்கு வேலி வெகுண்டெழுந்தார்.

தன் தளபதிகளை அழைத்தார். “ஊமைத்துரையைக் கைது செய்துவிட்டார்கள் வெள்ளையர்கள். சின்ன மருதுவையும் பெரிய மருதுவையும் திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடத் திட்டமிட்டிருப்பதாக நம் ஒற்றர்ப்படை தகவல் தந்திருக்கிறது. மருது சகோதரர்கள் நம் சொத்து. அவர்களை இழக்கக்கூடாது. பாகனேரி பட்டமங்கல நாட்டுப் படைகள் தயாராகட்டும். திருப்பத்தூர் கோட்டையைத் தாக்கி மருது சகோதரர்களை விடுவிப்போம். பிறகு காளையார்கோவிலை மீட்போம்...” என்றார். தளபதிகள் யுத்தத்துக்குத் தயாரானார்கள். 

படைகள் பாகனேரியில் அணிவகுத்து நின்றன. முதல் வரிசையில் வாளுக்கு வேலி குதிரையிலேறி கம்பீரமாக வர, அவருக்குப் பின்னால் யானை, குதிரையெனப் படைகள் நடந்தன. உள்நாட்டில் வெள்ளையர்களோடு கைகோத்து பாதகம் செய்த சிலர், மருது சகோதரர்களை மீட்க, வாளுக்கு வேலி படை நடத்தி வரும் செய்தியை வெள்ளையர் கவனத்துக்குக் கொண்டு சென்றார்கள். அவர் களை வழியிலேயே அழிக்கவும் வழிவகை செய்தார்கள்.

அதற்கென ஓர் இடம் தேர்வு செய்யப்பட்டது. மரங்கள் அடர்ந்த கத்தப்பட்டு... அங்கே பிரமாண்டமான ஒரு புதைகுழி தோண்டினார்கள். மேலே இலைதழைகளைப் பரப்பி  வெளியில் தெரியாதவாறு மூடி வைத்திருந்தார்கள்.

படைகளுக்குத் தலைமை ஏற்று வந்த வாளுக்குவேலியின் குதிரை மின்னல் வேகத்தில் பறந்து வந்துகொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த புதைகுழிக்குள் விழுந்தது. தம் தலைவனின் அடியொற்றி வந்த படைகள் திகைத்து நின்றன. அசுர வேகத்தில் புதைகுழியைத் தோண்டி வாளுக்கு வேலியை மீட்டனர். ஆயினும் அதற்குள் மண், அந்த மாவீரனது உயிரைத் தின்றுவிட்டது. எந்த இடத்தில் வாளுக்கு வேலியின் உயிர் பிரிந்ததோ அந்த இடத்தில் ஒரு சிலை வைத்து வழிபடத் தொடங்கினார்கள் மக்கள்.

ஐயனார் கோயிலில்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 23 - வீரன் வாளுக்கு வேலி

வாளுக்கு வேலி குடியிருக்கும் ஐயனார் கோயில் குறித்து பல்வேறு அமானுஷ்ய கதைகள் உலவுகின்றன. கோயிலின் முகப்பில் புளி, இலுப்பை, ஏரழஞ்சி மரங்கள் மூன்றும் ஒன்றோடொன்று பிணைந்து வித்தியாச வடிவத்தில் இருக்கின்றன. இந்த மரங்களுக்கு அருகிலிருக்கிற கல்லில்தான் தொட்டியத்துக் கருப்பர் உறைந்திருக்கிறார் என்கிறார்கள் கத்தப்பட்டு மக்கள்.

“இப்போ கோயில் இருக்கிற இடம், ஒரு காலத்தில் நடைபாதையா இருந்திருக்கு. இந்தப் பகுதியில பெரும்பேருக்கு பால் விக்கிறதுதான் தொழில். இந்தப் பகுதியைக் கடந்துபோகும்போது தினமும் சிலபேர் கால்தவறி விழுந்து பாலைக் கொட்டிருவாங்களாம். ஊர்ப் பெரியவுகள்லாம் வந்து இந்த இடத்தை அகழ்ந்து பாத்தப்போ ஒரு லிங்கம் இருந்திருக்கு. வழக்கமா, பெரிய வீரனோ, அரசனோ இறந்தா அந்த இடத்துல லிங்கம் வைக்கிறது தமிழர்களோட மரபா இருந்திருக்கு. அதனால, இந்த லிங்கம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததா இருக்கலாம்ன்னு முடிவு செஞ்சு, கும்பிட ஆரம்பிச்சாங்க...” என்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெரியவர்.

கருப்பனை அழைத்து வந்த கதை

 இந்தக் கோயிலில் வேளார் ஒருவர் வழிபாடு செய்து வந்திருக்கிறார். அவர் வேளாண் பணிகளுக்காக மாடுகள் வாங்க விரும்பினார். வேறு சிலரும் மாடு வாங்க விரும்பியதால், எல்லோருடைய பணத்தையும் பெற்றுக் கொண்டு நெடுந்தூரம் பயணித்திருக்கிறார் வேளார். இறுதியாக மலையாள நாட்டில் உள்ள வையம்பட்டியை வந்தடைந்தார்.

அவ்வூரைச் சுற்றி வாழ்ந்த தொட்டியத்தார் என்ற நாடோடி சமூக மக்களின் நட்பு வேளாருக்குக் கிடைத்தது. அந்தத் தருணத்தில், தொட்டியர்கள் தங்கள் குல தெய்வமாகிய கருப்பனுக்கும் மலையாளச் சின்னானுக்கும் திருவிழா வழிபாடு செய்துகொண்டிருந்தார்கள். அந்த வழிபாட்டு முறைகளிலும் சின்னானின் அருளிலும் மனம் கரைந்த வேளார், தொட்டியத்துக் கருப்பனை தன்கூட அனுப்பிவைக்கும்படி தொட்டியத்தாரிடம் கோரிக்கை விடுத்தார்.

“கருப்பன் எங்கள் காவல் தெய்வம். அவனை நாங்கள் அனுப்ப முடியாது. அவன் உங்களோடு வர விரும்பினால் அழைத்துச் செல்லுங்கள்” என்று சொல்லிவிட்டார்கள் தொட்டியத்தார்கள்.  தானறிந்த மந்திர வேலைகளைக் கொண்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினார் வேளார். மண்பானை, செப்புக்குடம் ஆகியவற்றில் கருப்பனை அடைத்துக் கொண்டுவரும்போது அவை உடைந்து தெறித்தன. இறுதியில், தன் மனதுக்குள்ளையே கருப்பனை இருத்தி கத்தப்பட்டுக்குக் கொண்டு வந்தார் வேளார். கத்தப்பட்டு திரும்பி, அங்கிருந்த கல்லொன்றில் கருப்பனை இறக்கிவைக்க, அதையே குடிலாகக் கொண்டு, மக்களுக்குக் காவல் இருக்கிறார் கருப்பன்.

கருப்பனுக்குச் செய்யும் வழிபாட்டைப் போலவே வீரன் வாளுக்கு வேலிக்கும் வழிபாடுகள் நடக்கின்றன. வாளுக்கு வேலியை குலதெய்வமாகக் கொண்ட மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஆண்டுக்கொருமுறை கோயிலுக்கு வந்து தங்கள் மரபுப்படி வழிபாடு செய்து திரும்புகிறார்கள்.

தன்னைப் பணிந்து நிற்கும் மக்களுக்கு அன்பு, கருணை, கனிவு, உற்சாகம் என அனைத்து வளங்களையும் அள்ளி வழங்கும் வாளுக்கு வேலி, வீரத்தையும் உள்ளத்தில் விதைத்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்!

- மண் மணக்கும்...

-வெ.நீலகண்டன்

படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism