Published:Updated:

பகைவரும் போற்றிய பண்பாளர் சதுரானன பண்டிதர் - திருவொற்றியூரில் வாழ்ந்து மறைந்த ஞானி!

`போரில் இளவரசன் அருகே தான் இருந்திருந்தால் அவன் மரணத்தைத் தவிர்த்திருக்கலாம், அல்லது அவனோடு மடிந்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் உயிர்பிழைத்திருப்பது எத்தனை அவமானம்' என்று கருதினான். மீதமிருக்கும் வாழ்வை சுகமாகக் கழிப்பதில்லை என்று முடிவெடுத்தான்.

பகைவரும் போற்றிய பண்பாளர் சதுரானன பண்டிதர் - திருவொற்றியூரில் வாழ்ந்து மறைந்த ஞானி!
பகைவரும் போற்றிய பண்பாளர் சதுரானன பண்டிதர் - திருவொற்றியூரில் வாழ்ந்து மறைந்த ஞானி!

ழந்தமிழ் இலக்கியங்களிலும் தமிழர் வரலாற்றிலும் நட்பின் பெருமையைப் பேசும் நிகழ்வுகள் ஏராளம். 'செயற்கரிய யாவுள நட்பின் ' என்கிறார் வள்ளுவர். 'ஒருவர் மற்றவரிடம் தூயநட்புக் கொள்வதைவிடச் சிறந்த செயல் எது இருக்க முடியும்?' என்பது இந்தக் குறளின் பொருள்.

சோழ இளவரசன் ஒருவன் போரில் இறந்துபோனான். போரில் இறத்தல் என்பது போர்கள் சூழ்ந்திருந்த காலகட்டங்களில் ஒன்றும் பெருந்துயரமான செய்தியல்ல. மாறாக அதை வீரமரணம் என்று போற்றுவதும் உண்டு. ஆனால், அதைத் தன் வாழ்நாள் துயரமாகக் கொண்டான் அவன் நண்பன். அவன் அருகில் இல்லாத தருணத்தில் நிகழ்ந்துவிட்ட அந்தத் துயரை எண்ணி, இனி வாழ்வில் கொண்டாட என்ன இருக்கிறது என்று மனம் வருந்தித் துறவறம் மேற்கொண்டான். 

சதுரானன பண்டிதர் குறித்த கல்வெட்டுப் பலகை, Image Credit : VVS

சோழப் பேரரசன் பராந்தகச் சோழனின் மகன் ராஜாதித்தன். அவன் நண்பன் வெள்ளையங்குமரன். சேர நாட்டைச் சேர்ந்த வெள்ளையங்குமரன் சிறுவயதிலேயே சோழ தேசத்துக்கு வந்துவிட்டான். போர்க் கலையில் வல்லவன். இளவரசன் ராஜாதித்தன், வெள்ளையங்குமரனைத் தன் படைக்குத் தளபதியும் ஆக்கிக்கொண்டான்.

அப்போது சோழர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமையுற்ற 'இரட்டப்பாடி ஏழரை இலக்கம்' என்ற நாட்டைச் சேர்ந்த ராஷ்ட்டிரகூடர்களும் கங்கர்களும் சோழர்களின் மீது போர் தொடுத்தனர். தக்கோலம் என்னும் இடத்தில் போர் நடந்தது. ராஷ்ட்டிரகூட மன்னன் கன்னரத் தேவனும் கங்க மன்னன் பூதுகனும் சேர்ந்து போருக்கு வந்தனர். போர் தொடங்கிய தருணத்தில், வெள்ளையங்குமரன் இளவரசன் ராஜாதித்தனின் அருகில் இல்லை. ஆனாலும், வீரனான ராஜாதித்தன் போருக்குத் தலைமை தாங்கி வீரமாகப் போரிட்டான். போரில் கங்க மன்னன் பூதுகன், ராஜாதித்தனை நெருங்கி அவன் யானையின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான். ராஷ்ட்டிரகூடப் படைகள் வெற்றிபெற்றன. 

போரில் தோற்ற செய்தியும் நண்பன் ராஜாதித்தன் இறந்த செய்தியும் அறிந்து மனம் உடைந்தான் வெள்ளையங்குமரன். `போரில் இளவரசன் அருகே தான் இருந்திருந்தால் அவன் மரணத்தைத் தவிர்த்திருக்கலாம், அல்லது அவனோடு மடிந்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் உயிர்பிழைத்திருப்பது எத்தனை அவமானம்' என்று கருதினான். மீதமிருக்கும் வாழ்வை சுகமாகக் கழிப்பதில்லை என்று முடிவெடுத்தான்.  

கங்கை வரைக்கும் நடந்தே சென்று நீராடித் துறவுபூண்டுப் பின் தமிழ்நிலம் திரும்பினான். திருவொற்றியூர் மகாதேவரைச் சரணடைந்து வெள்ளையாடை உடுத்தித் தனது பெயரை 'சதுரானனன்' என்று மாற்றிக்கொண்டான். அவனுக்கு ஞான தீட்சை வழங்கியவர் நிரஞ்சன குரு. அவர் திருவொற்றியூர் கோயிலுக்கு அருகே இருந்த ஒரு மடத்தின் தலைவர். சதுரானனனை அந்த மடத்துக்குத் தலைவராகவும் நியமித்தார். மடத்தின் மூலம் மாணவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பது, ஒற்றியூர் மகாதேவருக்குப் பூஜைகள் செய்வது என மன அமைதி பெற்றுத் தனது எஞ்சிய காலத்தைக் கழித்தார் சதுரானனர். கல்வி கற்பிக்கும் சேவையைப் புரிந்ததால் அவருக்கு 'சதுரானன பண்டிதர்' என்ற பெயர் வழங்கலாயிற்று. 

சதுரானன பண்டிதர் குறித்து இரு கல்வெட்டுச் செய்திகள் திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில் உள்ளன. ஒன்று வடமொழியிலும் மற்றொன்று தமிழிலும் உள்ளன. 

‘சிவபெருமானிடத்தில் குகன் பிறந்ததைப் போன்று மலை நாட்டுத் தலைவனான ராஜசேகர் என்பானுக்கு வல்லபவன் (வெள்ளையன் ) தோன்றினான். இளவரசனின் இறப்பின் மூலம் இழந்த புகழை, தனது தலைமைப் பொறுப்பினாலும், தன்னைப் பின் தொடர்பவர்களாலும் மீண்டும் பெற்றான். சதுரானன பண்டிதன் எனும் பெயர் பூண்டு தான் பிறந்த அவிட்ட நட்சத்திர நாளில் திருவொற்றியூரில் சிறப்பு வழிபாடு நடத்த நரசிங்க மங்கலத்தாரிடம் 100 பொன் வழங்கினார். இவரே கோயிலுக்கு 16 காடி நெல், ஒரு நாழி நெய், சர்க்கரை, வாழைப்பழம், காய்கறி, தயிர், பெருங்காயம், பூக்கள் ஆகியவற்றையும் சமையல், விறகிடல் மற்றும் துப்புரவாளர்களை நியமித்தார்’ என்று திருவொற்றியூரில் காணப்படும் கல்வெட்டு ஒன்று தகவல் தெரிவிக்கின்றது. 

இதில் சிறப்பான செய்தி என்னவென்றால் சதுரானன பண்டிதரின் துறவறத்தைப் பற்றிக் கூறும் கல்வெட்டுகள் இரண்டும் நிறுவப்பட்டது ராஷ்டிரகூட வேந்தன் கன்னரதேவன் காலத்திலேயே ஆகும். நண்பனுக்காகத் தன் வாழ்வின் இன்பங்களையெல்லாம் துறந்த சதுரானனைக் கண்டுவியந்து அவரைக் கௌரவிக்க அவர்கள் இக்கல்வெட்டுக்களைச் செதுக்கியிருக்க வேண்டும்.

திருவொற்றியூர் ஆலயம் பழைமையும் பெருமையும் வாய்ந்தது. இக்கோயிலுக்குள் இறைவனார் ஆதிபுரீஸ்வரர், தியாகராஜர், திருவொற்றீஸ்வரர் என்று பல்வேறு திருநாமங்களோடு பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இங்கு, காளியின் அம்சமான வட்டப்பாறை அம்மன் பக்தர்களுக்கு அருளாசி புரிகிறாள். இந்த வட்டப்பாறை அம்மன்தான் கம்பர், ராமாயணம் எழுதிய நேரங்களில் அணையாத தீபம் ஏந்தியவள் என்று தலவரலாறு கூறுகிறது.  

அடுத்த முறை கோயிலுக்குச் செல்லும்போது ஆதிபுரீஸ்வரரை வணங்குவதோடு மட்டுமல்லாமல் பலருக்கு ஆசானாகத் திகழ்ந்த சதுரானன பண்டிதரையும் நினைத்துத் தொழுதுவிட்டு வாருங்கள்.