Published:Updated:

திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழா! - பரிகாரம் செய்யும் 8 ராசிக்காரர்கள்

திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழா! - பரிகாரம் செய்யும் 8 ராசிக்காரர்கள்
திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழா! - பரிகாரம் செய்யும் 8 ராசிக்காரர்கள்

கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு ராகு பகவான் இடம் பெயரும் ராகுபெயர்ச்சி விழா வரும் 13-ம் தேதி திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ராகு பகவான் தனது இரு தேவியருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்யும்போது பாலானது நீல நிறமாக மாறுவது, இந்தக் கோயிலுக்குப் பெருமை சேர்க்கக்கூடிய ஆச்சர்யமான விஷயமாகும். இத்தகைய பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் வரும் 13-ம் தேதி புதன்கிழமை பிற்பகல் 1.24 மணிக்கு ராகு பகவான் கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

ராகு பெயர்ச்சியை முன்னிட்டு 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை முதல்கட்டமாகவும்,14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ராகு பெயர்ச்சிக்காக எதிர்வரும் 11-ம் தேதி மாலை 6 மணிக்கு ராகு பகவானுக்கு முதல் யாகசாலை பூஜை தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து 13-ம் தேதி காலை 10 மணிக்கு யாக பூஜைகளும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.

அன்று பிற்பகல் 1.24 மணிக்கு ராகு பெயர்ச்சி நடைபெறுவதையொட்டி சிறப்பு யாகங்கள், தயிர் பள்ளயம், சந்தனக்காப்பு அலங்காரம், அன்னதானம் உட்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. ராகு பெயர்ச்சியால் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் இக்கோயிலில் வந்து ராகு பகவானுக்கு அர்ச்சனை செய்து பரிகாரம் செய்து கொள்வது நல்லது என ஜோதிட வல்லுநர்கள் கூறுகிறார்கள். விழாவுக்கான விரிவான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.