
இறையருள் நிறைந்திருக்கும் இல்லத்தை எவ்வித துன்பமும் அணுகாது; அந்த இல்லத்தைச் சேர்ந்தவர்களுக்கு நவகோள்களாலும் நன்மைகள் விளையுமே தவிர, தீமைகளோ தடைகளோ ஏற்படாது. இதன் அடிப்படையில், நம் இல்லத்தில் எப்போதும் தெய்வகடாட்சம் நிறைந்திருக்க வகை செய்யும் எண்ணற்ற வழிகளை-வழிபாடுகளை நம் முன்னோர்கள் அருளியுள்ளார்கள். அவற்றில் சிறப்பானது ஸ்ரீவித்யா தியானம்.
அம்பிகையை தியானித்து வழிபடுவதால் சகல நன்மைகளும் உண்டாகும். அத்துடன், `ஸ்ரீ’கோல வழிபாட்டையும் இல்லத்தில் செய்து வந்தால், சகல தோஷங்களும் நீங்கும்; சந்தோஷம் பெருகும். அந்த வீட்டில் செல்வகடாட்சம் பெருகும்; வறுமைப்பிணிகள் நீங்கும். அற்புதமான இந்த வழிபாட்டைச் செய்வது எப்படி எனத் தெரிந்துகொள்வோமா?


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஸ்ரீகோல வழிபாடு செய்வதற்கு உகந்த நாள்: வெள்ளிக்கிழமை
உகந்த நேரம்: காலை அல்லது மாலையில் எப்போது செய்தாலும், 6 முதல் 7 மணிக்குள் செய்வது விசேஷம்.
`ஸ்ரீ’கோலம் வரைவது எப்படி?: முதலில் பச்சரிசி மாப்பொடியால் அஷ்டதள கோலம் ஒன்றை (படத்தில் உள்ளபடி), பூஜையறையில் தரையில் வரைந்துகொள்ள வேண்டும். மஞ்சள் பொடியுடன் சுண்ணாம்பு சேர்த்துப் பிசைந்தால், அது சிவப்பு நிறமாக மாறிவிடும். அதைக்கொண்டு எட்டு இதழ்களையும் நிரப்பவேண்டும்.
பிறகு உள்வட்டத்தில் மஞ்சள் பொடி தூவி, அதில் சிவப்பு நிறத்தால் அறுகோணம் வரையுங்கள். அதன் நடுவில் `ஸ்ரீம்’ என்று எழுதவேண்டும்.
வழிபாடு: `ஸ்ரீ’கோலம் தயாரானதும் பச்சரிசி மாவுடன் நெய், தேன், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து, எட்டு அகல் விளக்குகள் தயாரிக்கவேண்டும். அந்த விளக்குகளில் நெய் விட்டு பஞ்சுத்திரி போட்டு வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அந்த விளக்குகளை, கோலத்தின் எட்டு இதழ் நுனிகளிலும் வெளிமுகம் பார்த்து இருக்கும்படி தீபமேற்றி வைக்கவேண்டும்.

பின்னர் `ஸ்ரீ’கோலத்தின் எதிரில் கிழக்குமுகமாக அமர்ந்து, எட்டு விளக்குகளிலும் முறையே அஷ்டலட்சுமிகளை தியானம் செய்து, லட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யவேண்டும். அதன்பின்னர் தனாகர்ஷண மூல மந்திரத்தை 108 முறை ஜபிக்கவேண்டும். பின்னர், பால் பாயசம் நைவேத்தியம் செய்து மகாலட்சுமிக்குத் தீபாராதனை செய்யலாம். தொடர்ந்து எட்டு வாரங்கள் இந்த வழிபாட்டைச் செய்துவந்தால், சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.
தனாகர்ஷண மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஓம் குபேர லக்ஷ்ம்யை
கமலதாரிண்யை தனாகர்ஷிண்யை
சிம்மவாஹின்யை ஸ்ரீயை நம: